Social Icons

Pages

Thursday, 6 September 2012

சிவப்பு சந்தை----மனித உறுப்புக்களின் சந்தை


ஆங்கிலத்தில்  பிரசுரமாகியுள்ள  RED MARKET எனும் நாவல் ஆனது இன்றைய நவநாகரீக உலகின் போர்வையை கழற்றி விட்டு அதன் இயல்பையும் உண்மைத்தன்மையையும் உலகிற்கு பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. இன்று உலகின் தொழில்களில் தொழிலாண்மையோடு பணம் கொட்டும் துறை மருத்துவ துறை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

 என் சொந்த அனுபவம் என் அம்மாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை கொழும்பு தேசிய வைத்தியசாலை தவிர வேறு எந்த அரச வைத்தியசாலைகளிலும் மாற்றீட்டு வசதிகள் இன்மை காரணமாகவும் தேசிய வைத்தியசாலையில் முழு பரிசோதனைகள் திருப்பதிபடுத்தப்பட்ட பின்னரும் சுமார் 02 வருட காலங்கள் காத்திருப்பு வரிசையை அணைத்திருக்க வேண்டிய துர்பாக்கியத்தாலும் தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. காத்திருப்பு காலத்தில் அதாவது சிறுநீரக மாற்றீடு காலம் வரை இரத்த சுத்திகரிப்படும். வாரத்திற்கு இரு முறையேனும் இச்சுத்திகரிப்பை மேற்கொள்ளின் மட்டுமே நோயாளி மூச்சு விட அவஸ்தையை எதிர் நோக்க வேண்டி ஏற்படாது. இவ்வாறன காலத்தில் மனித உறுப்பு மாற்றீட்டிற்காக சந்தித்த சட்ட வதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பின்னர் வெற்றிகரமாக சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டது.

நான் அம்மாவுடன் வைத்தியசாலையில் தங்கியிருந்த போது அவதானித்த ஒன்று அம்மாவிற்தகு இரத்தம் தேவை என கூறி ஆட்களை அழைத்து வரும் படி எங்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கூறியது. ஆனாலும் எந்த இரத்தப்பிரிவு என்றாலும் பரவாயில்லையாம். ஆனால் பற்றுச்சீட்டை பார்த்த போது இரத்தம் ஒரு பைன் என பட்டியலிட்டு அதாவது சுமார் 350 மில்லி லீட்டர் மனித இரத்தத்தின் விலை ரூபா.6000. இதை பார்த்த பின்பு நான் இரத்தம் வழங்க யாரையும் அழைத்து செல்லவில்லை. எந்த கெடுபிடியும் இன்றி மனித இரத்தம் ரூபா.6000 ற்கு கிடைத்தது. இதை ஏன் சட்டம் தடுக்கவி்ல்லை எனும் வினா அன்று பாடசாலை உயர்தர மாணவனாக ஏற்பட்ட எனக்கு இன்று 3ஆம் வருட சட்ட மாணவனாக கூட விடையை எட்ட முடியவில்லை. வைத்திய துறையில் சட்டம் தலையிடாதாற்கு ஓர் காரணம் என தீங்கியற் சட்டத்தில் படித்த ஞாபகம் அதாவது மருத்துவ பாவனையாளர்களை சட்டம் கட்டுப்படுத்தின் மருத்துவ துறையின் ஆராய்வுத்தகமை அல்லது விரிவெல்லை மட்டுப்படுத்தப்ட்டு  அதன் விளைவாக புதிய கண்டுபிடிப்புகளோ பிணி தீர்ப்பனவுகளையோ இடம் பெறாது என்பதே சார்பான வாதம். ஆனால் சட்டவாய்வாளர்கள் செய்த மிகுந்த அறிவியற் தனத்தையும் நான் மறக்கவில்லை. முதலில் ஒரு தராதரமுள்ள மருத்துவ பாவனையிலலாளரின் கருத்துக்களை அதே தரமுள்ள இன்னொரு மருத்துவ பாவனையியலாளரின் கருத்துக்கள் புறந்தள்ள மாட்டா என கூறிய நீதித்துறை பின்னைய நாட்களில் இரண்டு வித கருத்துக்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பின் மன்றே  அதில் எது நியாயமானது என தீர்மானிக்கும் என்ற பிணிக்கும் தீர்ப்பை இன்று வரை பிணிக்க செய்துள்ளது. இதை விட மன்றின் அதிபதிகட்கும் வழக்குரைஞர்கட்கும் கூட இதேயளவு விடுபாட்டு மற்றும் சிறப்புரிமைகள் மன்றின் மாதிரியில் கிடைப்பது  கண்கூடு.

டெனிங் பிரபுவின் கூற்று இதற்கு சான்று. நான் அதிகமாக சட்டம் பற்றி அறுப்பதாக எண்ண வேண்டாம். சட்டம் என்பது ஓர் புத்தக பாடம் மட்டுமல்ல  அது மனித சமுதாயத்தின் அனைத்து தொழிலாண்மைகளுடன் தொடர்பை கொண்டது. ஏனெனில் எங்கெல்லாம் சமூக அமைதியின்மை ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் அமைதி(தீ)யை ஏற்பட வழி சமைப்பதே சட்டத்தின் கடப்பாடு. உயரிய தொழிலாண்மைகள் ஒன்றுடனொன்று என்றும் முட்டி மோத விரும்புவதில்லை. ஆனாலும் சட்டமும் மருத்துவமும் ஒன்றுடனொன்று உராய்ந்தாவது செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது. உதாரணமாக குற்றவியற் சட்டம் தீங்கியற் சட்டம் என்பன குறிப்பிட்டு கூறத்தக்கன.

ஆனால் எந்த வித தொழிலாண்மையும் மருத்துவம் உட்பட தன்நிலை பிறழ்விற்கு உட்படும் போது சட்டம் தலையிடுவது தவிர்க்க இயலாதது. மனித உயிரின் மதிப்பையும் சமூக வாழ் மாண்புகளையும் ஒருசீரில் பராமரிப்பது சட்டத்தின் கடப்பாடு.

இனி நேரடியாக புத்தகத்தினுள் நுழைவோம்

அந்த வகையில் மனித உடல் உறுப்பு விற்பனை எனும் விடயத்தில்  சட்டம் இன்னும் மூன்றாம் நாடுகளில் இலங்கை உட்பட கண்மூடி வாய் பொத்தி நிற்பதை SCOTT CARNEY எழுதிய THE RED MARKET எனும் புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இப்புத்தக எழுத்தாளர் சர்வதேச புலன் விசாரணை அமைப்பை சார்ந்த ஓர் ஊடகவியலாளர். இதை எழுத வெளியிட  ஆராய்ச்சிக்காக மட்டுமே சுமார் ஐந்து வருட காலத்தை தம் வாழ்நாளில் அவர் இழக்க வேண்டி ஏற்பட்டது. அதிலும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து ஐரோப்பிய வளர்ச்சி அடைந்த நாடுகட்கு கள்ளச்சந்தையூடாக கடத்தப்படும் மனித உடல் உறுப்புக்கள்  மனித எலும்புகள் மனித இரத்தம் பற்றியதாகவே பெரும்பகுதி ஆக்கிரமித்திருந்தது. குறிப்பாக ஆசிரியர் இந்தியாவை மையப்படுத்தி தனது முடிவுகளை பெரும்பாலும் பகுப்புரைப்பதை அறிய முடிகின்றது. 

கட்டற்ற சனத்தொகை மட்டற்ற வறுமை பசி பரந்த புவியியற் பரப்பின் தொடர்பாடல் தடைகள் வெளியுலக அறிவை பெறுவதில் கூட காணப்படும்  வசதியீனம் அல்லது அசட்டுத்தனம் அல்லது மரபு என்பன இந்திய ஜனநாயக அரசை காப்பாற்றவோ அல்லது சட்ட மீறுகையை  கட்டுப்படுத்தாத கையாலாகாத தனத்தை நியாயப்படுத்தி காட்டவோ பயன்படக்கூடும். இருப்பினும் உண்மை உண்மை தான் .

இந்தியாவின் ஒரு எல்லையோர கிராமத்தின் பெயர் கிட்னிவாகம் அதாவது இந்த ஊரில் பெரும்பாலும் அனைவருமே ஓர் கிட்னியை வழங்கியவர்கள் ( விற்றவர்கள் அல்லது பறிக்கப்பட்டவர்கள் ) .

பல தனியார் வைத்தியசாலைகள் எப்படியாவது தமது நோயாளியை பல லகரங்கள் கறந்து கொண்டு பிழைக்கவைத்து விடுகின்றன. அதன் சூட்சுமம் வைத்தியருக்கும் நிர்வாகத்திற்கும் மட்டுமே வெளிச்சம். ஆனால் பல தளியால் வைத்தியசாலைகள் வைத்தியர்களின் கூட்டாண்மைகளால் இயங்கிக் கொண்டிருப்பவை என்பதை அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாட்டின் வியாபார சட்டங்கள் கம்பனி கூட்டிணைவுகளையே இறுக்குவதால் இவை உயர் தொழிற்கூட்டாண்மைகள் என்ற வகுதிக்குள் அடங்கி தப்பிவிடுகின்றன. ( இலங்கையின் வியாபார சட்டப்படி 20 உறுப்பினர்களுக்கு மேல்  ஓர் தொழிலில் சேர்ந்து ஈடுபட்டால் இதை கம்பனியாக கூட்டிணைக்க வேண்டும். ஆனால் உயர்தொழில்கள் என வர்ணிக்கப்படும் முயற்சியாண்மைகட்கு விதி விலக்கு உண்டு ).

சில  தனியார் வைத்தியசாலைகள் நோயாளிகளின் அனுமதியின்றி ஏன் தகவல் கூட இன்றி மனித உறுப்புகளை மாற்றீடுசெய்து விடுகின்றனர். இவை பெரும்பாலும் சிவப்பு சந்தையில் இருந்து பெற்றுக்கொண்டதாகவே காணப்படுகின்றது. இந்த முழு தொகையையும் நோயாளியிடம் பன் மடங்காக கறந்து விடுகின்றார்கள்.

அடுத்து புற்றீசல்கள் போல் முளைவிட்டுள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள். எனது பல நண்பர்கள் பங்களாதேஷின் ஓர் தனியார் மருத்துவ கல்லுாரியில் ஐந்து வருட படிப்பிற்குமாக சுமார் 65 இலட்சம் வரை அள்ளி தெளித்தவர்கள். அவர்களின் பயிற்சிக்காக கல்லுாரி மனித உடல் உறுப்புக்கள் மற்றும் என்புகளை வழங்கியிருந்தது. அவற்றை இருப்பிடங்கட்கு எடுத்து வரும் பலர் மீள ஒப்படைப்பதில்லையாம் ஆனாலும் தொடர்ச்சியாக அவை மாணவர்கட்கு வழங்கப்படுகின்றன. ஆனால் பங்களாதேஷ் ஓர் மிக பெரும்பான்மை இஸ்லாம் சார் நாடு. பொதுவாக இஸ்லாமியர்கள் தங்கள் உடலங்ளை மரணத்தின் பின்பு ஆராய்ச்சி மற்றும் பிற தேவைகட்காக ஒப்படைப்பது மதப்படி தடுக்கப்பட்டள்ள ஒன்று.

இவை எல்லாம் எப்படி சாத்தியம். இதற்காக மனித உறுப்பு ஏஜெண்டுகள் இந்திய கண்ட நாடுகளில் காணப்படுகின்றார்கள். அவர்களின் உறுப்புகள் பாடங்கட்காகவும் உறுப்பு மாற்றீட்டு சிகிச்சை  முறைமைகட்காகவும் பயன்படுகின்றன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் மிகக்கடுமையாக மருத்துவர்கள் கண்காணிக்கப்படுவதும் உயர்தொழிலாண்மை என்ற வாதம் உதிர்வடைந்து வருவதும் மனதிற்கு நிம்மதியளிப்பினும் அதை சமப்படுத்த ஆசிய நாடுகளில் இவை உறுதியடைவதும் மனதிற்கு மகிழ்வை அளிக்க கூடியவையல்லவே. எனவே வைத்தியர்கள் தமது வாழ்வை மட்டும் கருத்தில் கொள்ளாது தம் மருத்துவ கல்லுாரியில் எடுத்த சத்தியத்தின் படி அனைத்து உயிர்களையும் சம தன்மையாக பாவிக்க வேண்டும். ஏனெனில் இக்குற்றங்களை நிகழ்த்த மருத்துவ தொழிலாண்மை தவிர்ந்த ஏனைய அறிவு சாராரால் முடியாது. அதோடு சட்டத்தை ஆக்குவோரும் நடைமறைப்படுத்துவோரும் இயற்கை சட்டவியலை பின்பற்றும் ஓர் நடைமுறைப்போக்குமே இன்று இவ்வவலத்தை தடுக்கும் என நிறைவு செய்கின்றேன்.   

புத்தகத்தை PDF ஆக தரவிறக்க இங்கு சொடுக்குங்கள்
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது