சட்டம் என்ற சொல் ஏனோ எம்மவர்கட்கு ஓர் அந்நியப் பதம் போலவும் அல்லது தண்டனையை மட்டுமே நினைவு படுத்தும் ஓர் குறிகாட்டி போலவும் மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் சட்டம் சமூகத்தை வழிநடாத்தவும் வழிதவறியோரை நெறிப்படுத்தவும் குறிப்பிட்ட சமூகத்தவராலேயே ஆக்கப்பட்ட சமூகத்தை கட்டுப்படுத்தி வழிப்படுத்துகின்ற ஓர் தொகுதி விதிகள் தானே தவிர வேறொன்றுமில்லை.
சட்டங்களின்
வீச்செல்லையை வைத்து அது குடியியற் சட்டம் அல்லது குற்றவியற் சட்டம் என பொதுவாக வகுக்கப்படும்.
ஆனால் இந்த வகுப்பெல்லை ஆனது இவ்விரு சட்டங்களின் கீழும் நீண்டு செல்லும் ஓர் தொடரை
ஒத்தது. ஏனெனில் சட்டம் ஓர் பௌதீக விஞ்ஞானம் அன்று அது ஓர் சமூக விஞ்ஞானம் சமூகத்தின்
நடவடிக்கைகட்கேற்பவே அது விளைவுகளை கொடுக்கின்றது. சமூக மாற்றங்களுக்கேற்ப அது பரிமாணமாற்றத்திற்கு
உட்படக்கூடியது.
இலங்கை
போன்ற பல்வகைமை சட்ட ஆளுமை கொண்ட ஓர் நாட்டில் பணியாற்றுவது என்றுமே சட்டவல்லுணர்கட்கு
சவாலான ஒன்று என்பது மறுக்க முடியாததாகும். ஏனெனில் நாம் பல்வகைமையான பலவேளைகளில் உள்ளக
முரண்பாடுகளுடைய சட்டங்கள் மூலம் இன்று வரை ஆளப்படுகின்றோம். அவற்றை நாம் அந்நிய சட்டங்கள்
(Foreign laws), சுதேச சட்டங்கள் (Indigenous laws) மற்றும் நியதிச்சட்டங்கள் (Statutory
Enactments) என தேவைக்காக வகுத்து காட்ட முடியும்.
அந்நிய
சட்டங்கள் என நோக்கும் போது நாம் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின்
காலணித்துவ நாடாக விளங்கியிருந்தோம். இவ் அந்நிய நாட்டவர் தமது நிர்வாக தேவைகட்காக
தமது சட்டங்களை இலங்கையில் அமுல்படுத்தினர். இதன் படி போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட
உரோம டச்சு சட்டமும் (Roman Ducth Law) ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலச்சட்டமும்
(English law) இன்றைய இலங்கை தளத்தில் முக்கியத்துவம் பெறுபவை. உரோம டச்சு சட்டம் பெரும்பாலும்
குடியியல் விடயங்களில் (Civil Matters) செல்வாக்கு செலுத்துகின்றது. உதாரணமாக திருமண
விடயங்கள் (Matrimonial Issues), திருமணக்குலைவு (Dissolution lf Marriage), காணி விடயங்கள்
மற்றும் கடல்சார் ஆளுகை (Admiralty Jurisdiction) விடயங்கள். ஆங்கிலச்சட்டம் நவீன சட்டங்கள்
என வர்ணிக்கப்படுவதோடு பெரும்பாலும் குற்றவியற் சட்ட பரப்பு (Criminal Law), வியாபாரச்
சட்டம் (Business Law) மற்றும் ஒப்பந்த சட்டங்கள் (Contract law) என்பவற்றில் பயன்படுகின்றது.
சுதேச
சட்டங்கள் எனப்படுபவை எமது பரம்பரைக்கு உரிய எம்முடைய சட்டங்களாகும். இவை இலங்கை வாழ்
மக்களால் ஆரம்ப காலம் தொட்டே மரபுகள் மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழமைகளாகும்.
இவை அந்நிய சட்டங்களுடன் ஒப்புநோக்குகைக்கு உட்படின் செல்வாக்கு குறைந்தவையாகவும் மட்டுப்படுத்தப்பட்ட
தளப்பரப்பை உடையதாகவும் காணப்படுகின்றன. சுதேச சட்டங்களை மூன்று வகையான சமூகத்தவர்க்கு
உடைய மூன்று வகை சட்டங்களாக காட்ட முடியும்.
0 1. தேசவழமைச் சட்டம்- Thesawalamai Law
0 2. கண்டியச் சட்டம்- Kandiyan law
0 3. முஸ்லீம் சட்டம்-Muslim Law
தேசவழமைச்
சட்டம் வடமாகாண தமிழர்களின் தனிச்சட்டமாகும். அதாவது முன்னர் வடமாகாண தமிழர்கள் மலபார்
என அழைக்கப்பட்டனர். தேசவழமை மலபார்கட்கு மட்டுமே உரித்தான சட்டமாகும். இச்சட்டம் ஆள்சார்
சட்டமாகவும் (Personal law) இடம் சார் (Geographical Law) சட்டமாகவும் தொழிற்படுகின்றது.
சுதேச சட்டங்களில் இவ்விரு வகையான ஆளுகைகளையும் உடைய சட்டம் தேசவழமை மட்டுமே !
நபர்சார்
சட்டம் எனில் மலாபார் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் (வடமாகாணத்திற்கு உள்ளேயும்
வெளியேயும்) அவர்கள் தேசவழமையால் ஆளப்படுவார்கள். இடம்சார் சட்டம் என்பது வடமாகாண நிலங்கள்
யாவும் இச்சட்டம் மூலம் ஆளப்படும். அந்நிலங்கள் யாருக்கும் சொந்தமாக காணப்படலாம் உதாரணமாக
சிங்களவர், முஸ்லீம் நபர்கள் யாராவது காணியை வடமாகாணத்தில் கொண்டிருந்தாலும் அவர்கள்
அக்காணி தொடர்பில் தேசவழமையினால் ஆளப்படுவார்கள், இது இடம் சார் ஆளுகை எனப்படும். பெரும்பாலும்
காணி, திருமணம் மற்றும் வழியுரிமையில் ஆளுகையை கொண்டிருப்பதோடு சில வியாபார வழக்கங்களிலும்
குறிப்பிட்ட ஆளுகையை கொண்டுள்ளது.
அடுத்து
கண்டிய சட்டம், இச்சட்டம் கண்டிய மாகாணங்களில் வசிக்கும் கண்டிய சிங்களவர்கட்கு மட்டும்
ஏற்புடையதானது. இது ஓர் இடம் சார் சட்டமாகும். அதாவது கண்டிய மாகாணத்திற்கு வெளியே
இச்சட்டம் ஏற்புடையதாக மாட்டாது. பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமை விடயங்களில்
ஆளுகையை உடையது.
முஸ்லீம்
சட்டம், ஓர் நபர் சார் சட்டமாகும். அதாவது முகமதீன்கள் (முஸ்லீம்கள்) இலங்கையில் எங்கு
வசிப்பினும் அவர்கட்கு இச்சட்டம் ஏற்புடையதாகும். இச்சட்டம் திருமணம் மற்றும் வழியுரிமை
என்பவற்றில் குறிப்பிட்ட ஆதிக்கம் உடையது.
அடுத்து
நியதிச்சட்டம், அச்சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிகழளவு தேவை கருதி ஆக்கப்படும் சட்டங்களாகும்.
இச்சட்டங்களே இன்று பெருமளவில் எம்மை பிணிக்கின்றன. 1972ஆம் ஆண்டு முதல் சுகந்திரமான
அரசியல் யாப்பின் கீழ் இப்பணி இன்று வரை இலங்கை சட்டவாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.
அடுத்து
நாம் நீதிமன்ற முற்றீர்ப்புக்களை (Judicial Preceding) பார்க்கலாம். இவை சட்டங்கள்
இல்லை எனினும் நீதித்துறையின் ஒரு உறுதிப்பாட்டினை பேணும் நோக்கோடு நீதிமன்றங்களால்
பின்பற்றி வரப்படுபவை. எனவே நீதிமன்ற பதவணியில் உயர் நிலையிலுள்ள நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பானது கீழ் நிலை நீதிமன்றங்களை பிணிக்கும். எனவே இவை நீதிமன்றங்களை கட்டுப்படுத்துவதால்
மக்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் போலவே செயற்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட
விடயங்கள் யாவும் ஓர் அறிமுகத்திற்காகவே வரையப்பட்டது. இச்சட்டங்களின் அமுலாக்கத்தன்மை
பற்றி அறிய அச்சட்டங்களின் சட்டமூலங்களையும் குறிக்கப்பட்ட வழக்கு தீர்ப்புகளையும்
ஆராய்வது அவசியமாகும். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் அவற்றை விரிவாக ஆராய்வோம்……
No comments:
Post a Comment