ஓர் உயர்தர
பாடசாலை மாணவனாக சட்டத்தரணி என்ற ஓர் உயர்தொழிலை அடைய அவா கொண்டதற்கு முழு காரணமுமே
தொழிற்சுகந்திரம் தான். யாருக்கும் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. என் விருப்பப்படி
வேலை நேரம், வேலை பிரிப்பு என்பது தான். ஆனால் இன்று அன்று எனக்குள் ஏற்பட்டிருந்த
அந்த அவா, அடங்கி தணிந்து விட்டதென்றே கூறலாம். சட்டத்தளத்தினுள் நுழையாமல் வெளிப்பார்வையில்
தென்பட்ட மாயைகள் எனக்குள் இன்று இல்லை.
நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவர்க்கும் சட்டம்
ஒன்று தான். இலங்கையின் 1978ம் ஆண்டு யாப்பு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவர்க்கே
நீதிமன்ற பொறி முறைமையில் இருந்து முழு பாதுகாப்பை தனது 35வது பிரிவினுாடாக வழங்குகின்றது.
இதில் அவர் பதவிக்காலத்தில் செய்தமை அல்லது செய்யாமை ( Commission and Omission ) தொடர்பாக
நீதிமன்ற பொறி முறைக்கு அப்பாற்பட்டவர். செய்யாமை கூட சட்டக்குற்றமே, அதாவது சட்டம்
குறித்த ஒருவனுக்கு அளித்த பொறுப்பை நிராகரித்தான் எனும் குற்றமாகும். ஆனால் அதே யாப்பினுாடாக
ஜனாதிபதி தனது அமைச்சரவை செயற்பாடுகள் தொடர்பாக
அவர் நீதிமன்ற செயன்முறைக்கு உட்பட்டவரே ! . நிகழவு ஜனாதிபதி தன் வசம் முக்கிய மூன்று
அமைச்சுகளை கொண்டிருக்கின்ற போதும் என் அறிவிற்கெட்டிய வரைக்கும் ஒரு குற்றச்சாட்டேனும்
அவ் அமைச்சுக்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டதாக அறியேன்.
நிலை இவ்வாறிருக்க வலு வேறாக்க
கோட்பாட்டை ( Separation Of Powers ) தன்னுள் ஈர்த்த இலங்கையின் நடைமுறை அரசியல் யாப்பு அதன் மூலத்தை ( Nature of Origin
) எங்கோ தவற விட்டது போல தோன்றுகின்றது. இலங்கையின் அரச பொறிமுறை மூன்று உட்யந்திரங்களை
கொண்டது. முதலாவதாக ஜனாதிபதியை தலைவராக கொண்ட நிறைவேற்றுத்துறை ( Executive), இரண்டாவதாக
சபாநாயகரை தலைவராக கொண்ட சட்டவாக்கத்துறை ( Legislature) , மூன்றாவதாக பிரதம நீதியரசரை
தலைவராக கொண்ட நீதித்துறை(Judiciary) . இவை மூன்றும் ஒன்றை ஒன்று சரிபார்த்து சீராக்க
( Check and Balance) வேண்டும் என்பதுதான் கோட்பாட்டு நியதி.
இப்படம் ஆனது நீதித்துறை மற்ற
இரு துறைகளையும் கண்காணிப்பது போல காட்ட வரையப்படடதேயின்றி வலுவேறாக்க கோட்பாட்டை விபரிப்பதென்று.
அதாவது சட்டவாக்கத்துறை உருவாக்கும்
சட்டங்கள் நாட்டின் மீயுயர் சட்டமான ( Supremacy Of Law ) அரசியல் யாப்புடன் முரண்படுமிடத்து
அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடல். அதே போன்று சட்டத்துறையினால் உருவாக்கப்பட்ட சட்டங்களை
அமுல்படுத்தும் துறையான நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கட்கு
தக்க நிவாரணம் அளிப்பதும் நீதித்துறையின் கடப்பாடு.
ஆனால் இலங்கையில் சட்டவாக்கத்துறையும்
நிறைவேற்றுத்துறையும் இன்று ஒன்றே என்பது நுட்பங்கட்கு அப்பால் தெளிவாக புலப்படுகின்றது.
சட்டத்துறை நபர்களிடையே இருந்தே நிறைவேற்று துறைக்கான அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படுகின்றனர். அமைச்சரவையின் தலைவர் நிறைவேற்று துறையின் தலைவரான ஜனாதிபதி அவர்களே
! அப்படி எனில் இரு துறைகட்கும் ஒரே தலைவர் தானே ? நீதித்துறை செயற்பாட்டை பார்த்தால்
உச்சநீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிக்கும் அதிகாரம்
கொண்டவர். அடுத்த நிலை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம், பதவி நீக்கம் மற்றும்
ஒழுக்க கோவை விடயங்கட்கு நீதிச்சேவை ஆணைக்குழு ( Judicial Service Commission ) பொறுப்பானது. இவ்வாணைக்குழுவில் உச்சநிதிமன்ற நீதிபதிகள்
மூவர், பிரதம நீதியரசர் உள்ளடங்கலாக பதவி வகிப்பார்கள். (உறுப்புரை 112.)
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின்
கீழ் உறுப்புரைகள் 105 முதல் 147 வரை இரு அலகுகள் XV மற்றும் XVI என்பன நீதித்துறையுடன்
சம்மந்தப்பட்டு காணப்படுகின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி
நீக்கம் செய்ய உறுப்புரை 107(2) இன் படி ஜனாதிபதி பாராளுமன்றிற்கு அவ்விடயத்தை தெரியப்படுத்தி
பின்பு பெரும்பான்மை வாக்குகளால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பதவி நீக்க
காரணமாக பிறழ்நடத்தை அல்லது தகுதியீனம் ( Misconduct or Incapacity ) நிரூபிக்க படவேண்டும்.
ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால்
ஜனாதிபதியே பிரதம நீதியரசரை நியமிப்பார். பிரதம நீதியரசர் மற்ற நீதித்துறை அலுவலர்களை நியமிப்பார். இது நிலத்தின்
மீது மேசை, மேசை மீது பூனை எனவே நிலத்தின் மீது பூனை கதைதான்.
அதோடு பாராளுமன்ற சிறப்புரிமைகள்
(Parliamentary Privileges ) என்ற பெயரில் அங்கு என்ன பேசப்பட்டாலும் அதற்கெதிராக நடவடிக்கை
எடுக்கும் சுகந்திரம் அல்லது அதிகாரம் அரசியலமைப்பின் மூலமாகவே நீதிமன்றிடம் இருந்து
பிடுங்கப்பட்டுள்ளது. இதற்கான நியாயப்பாடு பேசப்படா பொருளாக ஒன்று அமைய கூடாது
என்பதோடு பாராளுமன்று ஆனது ஓர் திறந்த வெளி நாட்டின் விவாத அரங்கு என்பது தான்.
ஏனைய முன்னைய அரசியலமைப்பு சட்டங்களை
விட 1978ம் ஆண்டு யாப்பு ஆனது பரந்தளவு பாதுகாப்பை எழுத்தியல் ரீதியில் நீதித்துறைக்கு
ளவழங்கியுள்ளது. ஆனால் ஜே.ஆர் அன்று இதே யாப்பை நிறைவேற்று அதிகாரம் எனும் தோற்றுவாயிற்காகவே
கொணர்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அது இன்று பதினெட்டாவது திருத்தச்சட்டம்
மூலம் இன்னும் வலுவூட்டப்படுகின்றது. பதினேழாவது திருத்தத்ததை நிர்மூலப்படுத்தியதன்
மூலம் சிறுபான்மையினரின் ஒரே ஒளிக்கீற்றான 13ம் திருத்தமும் ஆட்டங்காண ஆரம்பித்துள்ளது.
தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்க இன்று பிறழ்நடத்தை பிரிவின் கீழேயே குற்ற விசாரணைகட்கு உட்படுத்த பட்டிருக்கிறார்.
மொத்தமாக 7 கோடி ரூபா வரையிலான வருமானத்திற்கு மீறிய கணக்கில் வராத சொத்துகட்கான குற்றத்தின்
கீழே விசாரணைகட்கு முகம் கொடுத்துள்ளார். ஆனால் திவி நெகும சட்ட மூலத்திற்கு ஆட்சேபனை
தெரிவித்து கொணரப்பட்ட வழக்கில் ஆட்சேபனையை ஆட்சேபிக்காததன் விளைவுதான் இவை என உலாவும்
கதைகளையும் நான் மறக்கவில்லை. அவரது கணவர்
பிரசாத் காரியவம்சம் வங்கி மோசடி ஒன்றில் ஈடுபட்டமையும் குற்ற பிரேரணையில் குறிப்பிட்டு
காட்டப்பட்டிருப்பது எந்தளவு துாரம் சரியானது என என்னால் ஊகிக்க முடியவில்லை. அதே நேரம்
பதிலி தளங்களால் மட்டுமே இப்போது அணுகக்கூடிய தளமொன்றில் 6000 கோடி ரூபாய்கள் தரகென்ற
பெயரில் இலஞ்சமாக யாரோ பெற்றுக் கொண்டிருப்பதாக வந்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு
விட்டது போலும்……..
பொதுவாக இலங்கையின் பிரதம நீதியரசர்
பதவியை பெற அனுபவமும் படிமுறை பதவி நகர்வுகளுமே தேவை என்பது ஓர் வழக்காற்று சட்டமாகவே
உள்ளது. ஆனால் முன்னைய பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா மூப்படிப்படையில் பதவி துறப்பதற்கு
சொற்ப காலத்திற்கு முன்னமே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பீடாதிபதியாக
கடமை புரிந்து கொண்டிருந்த தற்போதைய நீதியரசர் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியால்
நேரடியாக சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
மேகங்கள் என்றும் ஒன்று போல் இருப்பதில்லை.
அதிலும் இன்றைய இலங்கையின் அரசியல் மேகங்களின் நகர்வுகள் அரசியல் விஞ்ஞான வித்தகர்களாலேயே
கணிக்க முடியாதவை. நாடாளுமன்றில் இன்று விஷேட பெரும்பான்மையை விஞ்சிய சக்தியடன் எதையும்
செயற்படுத்த வல்ல நிறைவேற்றுத்துறை இதிலும் வெற்றி பெறும் என கணிக்க அதீத ஞானம் தேவைப்படாது.
அண்மையில் பொது நிகழ்வு ஒன்றில்
முன்னைய பிரதம நீதியரசரை சந்தித்த ஜனாதிபதி நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என
கேட்க அவரோ குற்றப்பிரேரணை விடயத்தை துவக்க கையமர்த்திய ஜனாதிபதி தவறான முறைமைகட்கு
சரியாக இறுதியே முடிவு என கூறினார். இதைத்தான் SUNDAY TIMES பத்திரிகை “WHATEVER
THE CHIEF JUSTICE MAY SAY, GOVT WILL HAVE ITS WAY” என வர்ணித்தது போல் உள்ளது.
முடிவாக அமெரிக்காவை ஒப்பு நோக்கின்
அங்கு மூன்று அரச துறைகளுக்கிடையிலும் மிக நேர்த்தியான பிரிப்பு உள்ளது. பிரித்தானியாவை
நோக்கின் அங்கு துறைகளுக்கிடையில் பிரிப்பு என்பது இல்லை. ஆனால் இலங்கையில் மூன்றாக
பிரிந்து செயலாற்ற வேண்டிய அரச பொறிமுறை இரண்டிற்கு ஒன்றாக உள்ளதால் தான் இன்று நீதித்துறை
இவ்வாறு அல்லல் பட வேண்டி உள்ளது. இவ்வாறாக நடைமுறை ரீதியாக மட்டுமல்லாது யாப்படிப்படை
ரீதியாக கூட இலங்கை நிறைவேற்றுத்துறையை பலப்படுத்தி உள்ளது. இதற்கு ஓர் அரசாங்க மாற்றம்
( (Government ) மட்டும் போதுமானதாக இருக்காது அரச பொறிமுறை (
State Mechanism ) மாற்றம் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமைய முடியும்.