Social Icons

Pages

Saturday, 16 March 2013

இலங்கையின் பிணைச்சட்டம் ஓர் பார்வை



01.பிணை என்றால் என்ன ?

பிணை என்பது குறித்த ஒரு நாட்டின் குற்றவியற் சட்ட முறைமையின் கீழ் குற்றவாளி என கருதப்படக்கூடியவாறான சட்டத்தால் தடுக்கப்பட்ட செயலை புரிந்த ஒருவரை அரசின் சட்டப்படியான தடுப்பிலிருந்து சில நிபந்தனைகளுடன் தற்காலிகமாக விடுவிக்கும் ஓர் செயன்முறை எனலாம்.

அத்தோடு இச்செயன்முறை ஆனது எதேத்சதிகார கைதுகளின் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் நீதித்துறை பொறியாகவும் காணப்படுகின்றது. எதேச்சதிகார கைதிலிருந்து விடுபட்டு சுகந்திரமாக வாழ்வதன்ற உரிமையானது எமது நாட்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 13(1) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை ஏற்றுள்ள “குடியியல் மற்றும் அரசியற் உரிமைக்கான அகில பிரகடனத்துவம் 1966 இன் உறுப்புரை 9 இன் மூலமும் மனித உரிமைகள் அனைத்துலக பிரகடனத்துவம் உறுப்புரை 9 மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கோடிட்டு காட்டக்கூடியதாகும்.

இதற்கு மேலதிகமான ஓர் காரணமாக பொருளதார காரணியையும் சமூக்க காரணியையும் காட்டலாம். முதலாவதாக சிறைச்சாலை பராமரிப்பு என்பது ஓர் உச்ச கட்ட பாதுகாப்பு பழுவாகும் ஏற்னகவே போதுமான அளவு பாதுகாப்பு சர்ச்சைகள் உள்ள இடத்தில் இவ்விடயம் நேரடியாகவே பாதுகாப்பு எனும் மறைவிடத்தினுள் பெரும் பணத்தொகையை பாதீட்டில் நேரடியாகவே விழுங்கிவிடும்.

இரண்டாவது காரணியை நோக்கின் பெரும்(Grave) அல்லது வழமை(Habitual) யான குற்றவாளிகளுன் சிறு குற்றவாளிகளை ஒன்றாக சிறைப்படுத்துவது சிறு குற்றவாளிகளை பெரும் குற்றவாளிகளாக ஆக்குவதற்கான ஓர் தளஇடமாக அல்லது பயிற்சி கூடமாக மாறிவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை. இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டே குற்றவியல் நியாயாதிக்கம் பிணையை ஓர் நடைமுறையாக கொண்டுள்ளது.

02.) இலங்கையில் பிணை தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் யாவை ?

குற்றவியல் நடவடிக்கைக் கோவை இல 15 இன் 1979. Code of Criminal Procedure Act No 15 of 1979.

பிணைச்சட்டம் இல 30 இன் 1997. Bail Act no 30 of 1997.

விரிவான விளக்குகையில் மேற்குறிப்பிட்ட பிணைச்சட்டம் 3(2) இன் படி எந்த எந்த குற்றங்கள் குற்றவியற் நடவடிக்கையின் கீழ் பிணைக்கான வகுதிகளை கைக்கொண்டு காணப்படுகின்றதோ அவை யாவும் இப்பிணைச்சட்டத்திற்கு பிணைக்காய் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

03.) 1997 இன் பிணைச்சட்டத்தின் உட்கூறுகள் பற்றி ?

இதுவே தற்போது இலங்கையில் பிணை தொடர்பாக ஏற்புடைய சட்டமாகும். இது பிணை வழங்கக்கூடிய குற்றம் (Bailable Offence) பிணை வழங்க முடியாத குற்றம் ( Non-Bailable Offence) எனும் எண்ணப்பாடுகளை எல்லாம் யதார்தத ரீதியில் தகர்த்து இன்று குற்றங்கள் அனைத்திற்குமே பிணை வழங்கக்கூடிய நிலைமை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் முற்பிணை எனும் அம்சத்தை உள்வாங்கியமை, இது இந்திய பிணைச்சட்டத்தின் நகலெடுப்பு என்றாலும் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் சில ஜனநாயக பண்புகளிற்கு உரித்துடையவர்கள் என்பதை இச்சட்டம் வெளிப்படுத்துவதாக எண்ணுகின்றேன்.

இதன் பிரிவு 02 ஆனது பிணை விண்ணப்பம் அனுமதிக்கப்படுவதை விதி என்றும் பிணை மறுக்கப்படுவது விதிவிலக்கு என்றும் எடுத்துரைக்கின்றது.


04. இச்சட்டதின் விதிவிலக்குகள் அல்லது செயற்பாட்டு வரம்பெல்லைகள் பற்றி ?

இச்சட்டம் இலங்கை தண்டனை சட்டக்கோவையில் உள்ள அனைத்து குற்றங்கட்கும் பயன்படுத்த கூடிய நிகழ்தன்மையை கொண்டதுடன்  பல்வேறு நீதித்துறை விவாதங்கட்கு பின்பு இரண்டு சட்டங்களின் கீழ் உ்ள்வாங்கப்படும் குற்றங்கட்கு மட்டும் விலக்குடையதாக நீதித்துறை முற்றீர்ப்புக்கள் மூலம் இன்று அறியக் கிடைத்துள்ளது. ஆனால் நீதித்துறையில் இந்நிலைமை 1997 தொடக்கம் 2004 வரை ஓர் குழப்ப நிலைமையை பின்வரும் சட்டங்கள் மூலம் ஏற்படுத்திக்கொண்டது.

(a).Offensive Weapons Act—-தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம்
(b). Customs Ordinance—சுங்கக் கட்டளைச் சட்டம்
(C . Bribery Act – இலஞ்ச ஊழல் சட்டம்.
(d), Firearms Ordinance.—சுடுகலன்கள் கட்டளைச்ச சட்டம்
(e). the Antiquities Act- தொல்பொருள்கட் சட்டம்
(f) Poisons, Opium and Dangerous Drugs Ordinance.—நச்சுப்பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டம்.
(g) The immigrants and Emigrants Ordinance.---குடிவரவு குடியகல்வுச் சட்டம்

விதிவிலக்கு சட்டங்கள்

1.   பயங்கரவாத தடுப்புச் சட்டம் இல 48 இன் 1979 ( Prevention of Terrorism Act No 48 of 1979 )

2.   பொதுமக்கட் பாதுகாப்பு பிரேரணையின் பெயரிலான சட்டங்கள் ( Public Security Ordinance )

இச்சட்ட நிலைமை ஆனது பின்வரும் இரு அண்மைய வழக்குகள் மூலம் நிரூபணமாகின்றது.

01.திலங்க சுமதிபால எதிர் சட்டமா அதிபர் (2004) மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு . (Thilanga Sumathipala V Atternoy General (2004) Court of Appeal judgement.)

02.றுவான் குணசேகர எதிர் ரவி கருநாநாயக்க (2005) (Ruwan Gunasekara and another V Ravi Karunanayake.)



இதன் சுருக்க அர்த்தம் இன்று பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பொதுமக்கட் பாதுகாப்பு சட்டம் எனும் இரண்டு சட்டங்களை தவிர வேறு எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் பிணைச்சட்டத்தின் மூலமாக பிணையை பெற்றுக்கொள்ளலாம்.


05.) சமூகத்தால் பாரதுாரமான குற்றங்களாக கருதப்படுகின்ற கொலை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கட்கு பிணைச்சட்டத்தின் வழியாக பிணை பெற முடியுமா ?

ஆம் முடியும். ஆனால் குற்றம் ஒன்றிற்காக மரண தண்டனை பெற்ற கைதி எனில் அவரை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கே உண்டு.


06.பிணையின் வகைகள் எவை ?

இது பிணைச்சட்டத்தின் பிரிவு 07 உடன் மேலோட்ட வாசிப்பின் பயனாக அறியக்கூடியதாகும்.

(அ). காசுப்பிணை ( காசை பிணையாக வைப்பது )
(ஆ). உறுதிப்பிணை ( உறுதியளித்து பிணை பெற்று செல்லல்)
(இ). தனிப்பட்ட பிணை ( தனக்கு தானே பிணை வைப்பது “காசு”)
(ஈ). சரீரப்பிணை (வேறோர் நபர் எதிர்வாதிக்காக காசுக்கு பொறுப்பு நிற்றல்)
(உ). பொலிஸ் பிணை (சட்டத்தினடிப்படையில் பொலிஸார் சில குற்றங்கட்கு பிணை வழங்க முடியும்.)


07.பிணையில் விடுபட்டு வெளியே வந்தவரின் கடமைப்பாடுகள் எவை?

(அ). நீதிமன்றம் கட்டளை இடுமாயின்
     01.பொலிஸ் நிலைய பதிவேட்டில் தினமும் ஒப்பமிடல்.
     02.மன்று குறித்துரைத்த தினத்தில் மன்றற்கு சமூகமளித்தல்.
     03.குறிப்பிட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லையை விட்டு வெளியேற அவசியம் ஏற்படின் நீதிமன்ற முன் கட்டளையொன்றை பெற்றுக் கொள்ளல்.

(ஆ). வழக்குடன் சம்மந்தப்பட்ட எதிர் தரப்பினருடன் ஊடாடுவதையோ சாட்சிகளை குழப்பவோ முயற்சிக்காது இருத்தல்.

(இ). சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது வழக்கை கையாளும் பொலிசாருடன் தனிப்பட்ட ஊடாட்டங்களை மேற்கொள்ளாதிருத்தல்.


08.பிணையாளரின் ( பிணை வைத்தவரின்) சட்ட கடமைப்பாடுகள் எவை ?

(அ). சந்தேக நபரை ( பிணை யாருக்காக வைக்கப்படுகின்றதோ) நீதிமன்ற கட்டளைகளின் படி அவரை மன்றின் முன் சமர்ப்பித்தல்.

(ஆ). சந்தேக நபரை மன்றில் ஒப்படைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் வைத்த பிணையை தளர்த்தி சட்ட கடப்பாடுகளில் இருந்து விடுபடலாம்.

(இ). சந்தேக நபர் மன்றில் தோன்ற முடியாத தருணங்களில் அதற்குரிய தகுந்த காரணங்களை மன்றின் முன் சமர்ப்பித்தல்.

(ஈ). சந்தேக நபரை பிணையாளி மன்றிற்கு சமூகம் தர வைக்க முடியவில்லை என்றால் வைக்கப்பட்ட தொகையை அரசுடமையாக்க மன்றிற்கு அதிகாரம் உண்டு.

உ). சந்தேக நபர் சமூகமளிக்காவிடின் பிணையாளிக்கு அறிவித்தல் வழங்கப்படும். அவ்வறிவித்தலுக்கு பிணையாளி தகுந்த துலங்கலை காட்டாது விடின் அவர் பெயரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது  செய்யப்படுவார்.


09. நீதிமன்றமொன்று பிணை விண்ணப்பம் ஒன்றை பரீசீலிக்கும் போது ஏற்புடையதாகும் காரணங்கள் எவை ?

(அ). குற்றசாட்டுக்கள் எவையும் மறையாக சுமத்தப்படாமல் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டிருந்தால் ( Attorney general V Ethiri Weera 2005)

(ஆ). கடும் சுகவீனத்திற்கு எதிரி ஆட்பட்டிருப்பின்

(இ). மனைவி, பிள்ளை மற்றும் நெருங்கிய இரத்த சொந்தங்கட்கு ஏற்பட்டிருக்கும் கடும் சுகவீனம்.

(ஈ). பிள்ளையின் பராமரிப்பிற்கு வேறு வழிகள் இல்லாத போது

(உ).சந்தேக நபருக்கு எதிரான வழக்கு நடைமுறைகள் மிகவும் பலவீனமாக உள்ள போது  CA 310/92 ( Thamathina Thero V O.I.C , C.I.D )

(ஊ). பிணைச்சட்டம் ஏற்புடையதாக மாட்டாது என தீர்க்கப்பட்ட வழக்கின் தண்டனைகளிலும் கூட வழக்கு விசாரணைகள் நியாயமற்ற தாமதத்தை ஏற்படுத்தின்  (( Subramaniyam Saraswathy V Attorney General )

ஆனால் மேற்குறித்த காரணங்கள் யாவும் நீதிபதியின் தற்றுணிபின் பெயரிலேயே அதிசிறப்பு காரணங்கள் என ஏற்கப்படுவதுண்டு. இவை சட்டத்தினால் எங்கும் இவை இவை என வரையறுக்கப்படவில்லை என்பதை கோடிட விரும்புகின்றேன்.

10. நீதிமன்று பிணை விண்ணப்பம் ஒன்றினை நிராகரிக்கும் சந்தர்ப்பங்கள் எவை ?

இச்சந்தர்ப்பங்கள் பிணைச்சட்டத்தின் பிரிவு 14 இன் வாயிலாக காட்டப்பட்டுள்ளது.

(அ).நீதிமன்ற விசாரணைக்கோ அல்லது வழக்கு விசாரணைக்கோ சமூகமளிக்கமாட்டார் என மன்று கருதும் போது

(ஆ). எதிரிக்கு எதிரான சாட்சியத்தை குழப்புவாரன்றோ அல்லது நீதிக்கு பங்கம் விளைவிப்பார் என்றோ மன்று கருதுமிடத்து

(இ).பிணையில் உள்ள போது ஓர் குற்றத்தை புரிவார் என மன்று கண்டால்

(ஈ). குறிப்பிட்ட எதிரியை விடுதலை செய்வது பொதுமக்களிம் பாரிய எதிர்ப்பலைகளை அல்லது சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என மன்று கண்டால்.  பிணை மனு நிராகரிக்கப்படும்.


11. பொதுவாக பிணைச்சட்டத்தைப் பற்றிய கருத்தோட்டம் ?

இலங்கையின் பிணைச்சட்டமானது 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அது முழுமையாக இந்திய ஒப்புவிப்பு என்பதை மேலோட்ட வாசிப்பிலேயே விளங்கி கொள்ள கூடியதாக உள்ளது. ஆனாலும் முற்பிணை எனும் புதிய அம்சத்தை இச்சட்டம் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளத. இது அபிவிருத்தியடைந்த பல நாடுகளின் குற்றவியல் நியாயாதிக்த்தில் இல்லாத ஓர் எண்ணக் கருவாகும்.

இந்திய அரசியல் வரலாறு ஊழலுக்கு பெயர் போனதால் அரசியற் பழிவாங்கல்களிலிருந்து அரசியல்வாதிகளை காப்பாற்றவே இந்த முற்பிணை என்ற அம்சம் அங்கு அறிமுகப்படுத்தபட்டது. அதை நாம் இன்று பல்வேறு காரணங்கட்காக பயன்படுத்துகின்றோம். ஆனாலும் தொடர்ச்சியாக இப்பிணைச்சட்டம் செயற்பட மன்றின் தற்றுணிபு பெருமளவு பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

அத்தோடு மிக குழப்பகரமாக அண்மைய மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் (CA Bail No: 260-262/2009) எனும் வழக்கில் தொல்பொருட் சட்டம் (Antiquities Ordinance) இன் பிரிவு 15 படி அச்சட்டம் பிணை பற்றிய தனியான சட்டப்பிரிவை கொண்டிருப்பதானது பிணைச்சட்டத்தின் செயற்படுதகைமையை அச்சட்டத்தின் மேல் கொண்டிராது என தீர்த்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டு திலங்க சுமதி பால வழக்கு நேர் எதிர் சட்டக்கருவை வெளிப்படுத்தியமை கவனிக்கத்தக்கது. எனவே இது ஒரு முறைமைக்குள் அல்லது சீர்தன்மைக்குள் வரும் வரை இந்த வெற்றிடம் அல்லது குழப்பத்தன்மை தொடர்வது தவிர்க்க இயலாதது. ஏனென்றால் இதில் எதையும் பிணிக்கும் முற்றீர்ப்புக்களாக கொள்ள முடியாது. 

அடுத்த பதிவு முற்பிணை பற்றியதாகும் ( Anticipatory Bail )
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது