இன்று
நாட்டின் நீதிக்கட்டமைப்பு முறைமையில் முதனிலை குடியியில் நியாயாதிக்கத்தை கொண்ட மாவட்ட
நீதிமன்றங்கள் திருமண பிணக்குகளால் நிரம்பி வழிகின்றமை கண்கூடு. “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்”
எனும் வாக்கியம் இன்றளவும் பொருள்நோக்கப் பதிந்தாக எல்லா மதங்களினதும் வழிகாட்டிக்
கோட்பாடுகளில் உள்ள விடயம். 17ம் நுாற்றாண்டு வரை பிரித்தானிய நீதிமன்றங்கட்கு கூட
திருமண பந்தத்தை பிரிப்பதற்கான ( விவாகரத்து ஆணை வழங்குவதற்கான ) அதிகாரம் காணப்படவில்லை.
அதன் பிறகு நவீன நாகரீக வளர்சியாலும் வியப்புறும் தொழினுட்ப தோற்றத்தாலும், தனிமனித
சுகந்திரம் எனும் பரந்து பட்ட எண்ணக்கரு நலன்புரி அரசுகளிடையே ஏற்படுத்திய தாக்கத்தாலும்
மிக வரையறுக்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டும் விவாகரத்து வழங்குவதற்கான அனுமதி
Matrimonial Causes Act of 1807 இன் மூலம் வழங்கப்பட்டது. இதன் முக்கிய காரணம் அன்று சட்டமும்
சமயமும் ஒன்றாகவே சமூகளவில் நோக்கப்பட்டது. அதில் சமயம் எனும் காரணி சற்று மேலான ஸ்தானத்தை
வகித்து வந்தது. குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தின் செல்வாக்கும் சமயத்தலைவர்களின் அதிகாரமும்
பிரித்தானிய சட்டங்களை கட்டுக்குள் கொணர்ந்து திருமண உறவை புனிதத்திற்கு உரிய ஒன்றாக
மாற்றி உயர்வு படுத்தியிருந்தது. இங்கிலாந்தின் காலணித்துவ நாடான இலங்கையின் நடைமுறை
சட்டங்கள் கூட திருமண ஆளுகை விடயத்தில் அன்றைய திருச்சபை உலகின் கோட்பாடுகளை உள்ளடக்கி
காணப்படுகின்றது. ஆனால் சமகால உலகம் இந்த நிலையை என்றோ கடந்து விட்டது. ஏனெனில்
5000 வருடங்கட்கு முன்பே கிறிஸ்தவ சமயத்தை அதிகார சமயமாக உலகில் முதலாவதாக தழுவிக்கொண்ட
ஐரோப்பிய தேசமான ஆர்மேனியாவில் இன்று திருமண பந்தம் ஆனது ஒரு பகுதியின் சுயவிருப்பின்
பேரில் சட்டரீதியான மணமுறிவிற்கு அனுமதிப்பதானது தனிமனித சுகந்திரத்தின் உச்சக்கட்ட
வெளிப்பாட்டின் நியதி என்ற நியாயப்படுத்தல்களுக்குள் இன்று அடங்கிவிடுகின்றது.
இலங்கையின்
சட்டத்தளத்தினுள் திருமணம் (Marriage) அல்லது திருமண விடுப்பு (Matrimonial Relief)
எனும் பதங்கள் நடைமுறை பிரயோக அடிப்படையில் (Procedural Issues) பொதுமக்களிடையே பிரபல்யப்பட,
சட்ட புலமையாளர்களிடையே தத்துவார்த்த ரீதியில் (Substantial Aspects) திருமண விடயங்கள்
தொடர்பான இலங்கைச் சட்டங்கள் அல்லது சட்டக்கொள்கைகள் புலமைத்துவரீதியில் சர்ச்சைப்படவும்
பிரபல்யமடையவும் தொடங்கியுள்ளன.
திருமணம்
என்பது திருமண ஒப்பந்தத்திற்கு தகுதி எனக்காணும் ஓர் ஆணும் ஓர் பெண்ணும் சமூக கோட்பாட்டின்
உறுதி மொழி ஒன்றினடிப்படையில் இணைந்து சமூகத்தின் ஓர் அலகான குடும்பத்தை சட்டரீதியில்
உருவாக்குவது எனலாம். ஆனாலும் இங்கே என்னால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது விரைவில்
இலங்கையிலும் மிக விரைவில் தவறு என சுட்டப்படுமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஓரினத்தவர்களின்
திருமண தளப்பரப்பு, அதற்காக நெகிழ்கின்ற சட்டத் தத்துவார்த்தங்கள் மற்றும் அண்மையில்
பிரித்தானியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் என்பன இவ்வாதத்திற்கு வலு
சேர்ப்பனாக உள்ளது.
திருமண
விடயங்கள் என்று நோக்கும் போது திருமணத்திற்காக தகைமை, திருமண ஆதனங்கள், திருமண விளைபேறான
குழந்தைகள், திருமண குலைவு அத்தோடு திருமண நிலையிலான பராமரிப்பு என்பன சட்டத்தளத்தில்
முக்கியத்துவம் பெறுபவை. இதில் திருமணக்குலைவு அல்லது திருமண தீர்வுகள் எனும் விடயம்
பற்றியே .இலங்கை சட்டத்தளத்தில் நாம் பயணிக்கவுள்ளோம். இலங்கையில் திருமணங்கள் நியதிச்சட்டப்படியோ
அல்லது கலாச்சார முறைமையின் கீழோ சட்டப்படி வலிதுடையதாகும். இலங்கையின் சுதேச சட்டங்களாக
கண்டியச்சட்டம் திருமண அந்தஸ்தை கண்டிய திருமண மற்றும் விவாகரத்து சட்டம் இல 44
இன் 1952 மூலமும் முஸ்லீம் சட்டம் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம்
இல 13 இன் 1951 மூலமும் பெற்றுக்கொள்கின்றது. தேசவழமைச்சட்டத்தால் ஆளப்படுவோரும்,
சுதேச சட்டங்களால் ஆளப்படாத மற்றைய இலங்கையரும் திருமண பதிவு கட்டளை சட்டம் இல 19 இன் 1907 படியும் திருமண விடயங்களில் ஆளப்படுகின்றனர். இப்போது நாம் இச்சட்டப்படியே
மேற்கொண்டு திருமண தீர்வுகள் எனும் பகுதிக்குள் செல்வோம்.
திருமணம்
எனும் பந்தத்தினுள் உட்புகும் அனைவருமே வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும்,
துணையாகவும் இருப்போம் எனும் உறுதிமொழியுடனேயே தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர். ஆனால்
பல்வேறு சமூக, பொருளாதார காரணிகளின் தாக்கத்தால் தமது உறுதிமொழியை புறந்தள்ளவும் அவர்கள்
நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேற்குறித்த கட்டளைச்சட்டம் விவாகரத்திற்கு மூன்று வழிகளை
( திருமணக் குற்றங்களை ) அறிமுகம் செய்கின்றது. இவற்றுள் ஏதேனும் ஒன்றின் வழியாகவே
அதாவது குறிப்பிட்ட திருமண குற்றத்தை நிரூபிப்பதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பு தனக்கான
நிவாரணமாக விவாகரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம்
ஓர் திருமணக்குற்றம் (Matrimonial fault )ஒரு தரப்பிடம் இருந்தால் மட்டுமே மற்றைய தரப்பு
நிவாரணம் பெற முடியுமென்பதாகும். இது திருமண பதிவுக் கட்டளைச்சட்டம் பிரிவு 19 இன்
ஊடாக பின்வருமாறு வகையிடப்படுகின்றது.
முதற்குற்றம் சோரம் போதலாகும்
(Adultery) இது எம்மவர்
சமூகத்திடையே கணக்கிலெடுக்கக்கூடிய அளவில் வேரூன்றிவிட்ட ஒன்று. அதாவது திருமணம் ஆன
ஆணோ, பெண்ணோ திருமண ஒப்பந்தத்திற்கு புறம்பாக வெளிநபர் ஒருவருடன் பாலியல் ரீதியான உடற்தொடர்பை
கொண்டிருப்பதாகும். இது இருமணதாரத்திலிருந்து (Bigamy) வேறுபட்டது. இருதாரமணம் இலங்கை
தண்டனைச்சட்டக் கோவையின் பிரிவு 362 (அ) இன்
மூலம் 7 வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமாகும்.
ஆனால் சோரம் போதல் ஆனது திருமணக்குற்றம் மட்டுமே. அதாவது விவாகரத்திற்கு ஆன ஓர் வழியே
அன்றி தண்டிக்கப்பட கூடிய குற்றமல்ல. இச்செயற்பாடு திருமணத்திற்கு முன்னரோ அல்லது ஓர்
தடவை நடந்த உடற்றொடர்பு என்ற ரீதியிலோ திருமணக்குற்றமாக கருதப்பட மாட்டாது. மாறாக திருமணத்தின்
பின் தொடர்ச்சியாக வேறோருவருடன் உடல் சார்ந்த உறவை பேணி வருவதே இக்குற்றமாகும். ஆனால்
தாய் அத்தகைய உறவை பேணுகின்ற போதிலும் தந்தைமை நிரூபிக்கப்பட்ட பிள்ளையின் பராமரிப்பு
கடமைப்பாட்டில் இருந்து தந்தை தப்பிக்க முடியாது. ஆனால் நடைமுறைச் சிக்கல் என்னவெனில்
சோரம் போதலை நிரூபிப்பது நிகழ்தகவளவில் கடினமானதொன்று. உடல் உறவு (Sexual Intercourse)
இன்று நிகழ்தகவளவில் (Balance of Probabilities) நிரூபிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது
குற்றம் சாட்டும் தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் இத்தவறை செய்தார் என எண்பிக்கும்
(Burden of Proof) பொறுப்பை சட்டத்தின் பால் ஏற்க கடமைப்பட்டவர். அவ்வாறு நிரூபிக்க
தவறும் பட்சத்தில் விவாகரத்து விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவது யதார்த்த சாதாரணமாகும்.
இரண்டாவது குற்றமாக வன்ம உறவறுப்பை
(Malicious Desertion) காட்டலாம்.
இது இன்று வரை நீதித்துறையின் தொடர் பொருள்கோடற் பணிக்கு வாய்ப்பளித்து வரும் ஓர் கோட்பாடாகும்.
அதாவது குறிப்பிட்ட ஓர் வாழ்க்கை துணை மற்றைய துணையுடன் வாழ்வது பொறுத்துக்கொள்ள முடியாத
(Intolerable) துன்பத்தையும் வாழ்விற்கே ஆபத்தானதாகவும் (endanger to Life) ஆகவும்
அமையும் எனில் அதை நாம் வன்ம உறவறுத்தலுக்கு உதாரணமாக காட்டலாம். எவ்வாறெனிலும்
அத்துன்பத்தை
விளைவிக்கும் நபர் திருமண பந்தத்ததை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் (Intention)
அதனை செய்திருக்க வேண்டும். இன்று பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் இப்பகுதியினுள்ளேயே
தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் அனைத்து திருமண குற்றங்களும் திருமணத்தை முடிவுறுத்தும்
நோக்கத்துடன் செய்யப்படின் அது இலகுவாக வன்ம உறவறுப்பு என்ற விடயத்தினுள் அடங்கிவிடும்.
ஏனெனில் சோரம் போதல் எனும் ஓர் திருமணக்குற்றத்தை புரியும் ஓர் ஆண் தனது மனைவியுடனான
திருமண பந்தத்தை முடிவுறுத்த விரும்புவதாக காட்ட முடியும். இவ்வன்ம உறவறுப்பு இரண்டு பகுதிகளாக காட்சிப்படுத்த
பட முடியும். முதலாவதாக சாதாரண உறவறுப்பு ( Simple Malicious desertion) இதில் துன்பத்தை
விளைவிக்கும் துணை மற்றைய துணையை திருமண இல்லத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையாகும்.
துன்பம் தாங்காது அப்பாவி துணை வீட்டை விட்டு வெளியேறுவதையே இது காட்டுகின்றது.
அடுத்த
வகை ஊகித்தறியக்கூடிய வன்ம உறவறுப்பாகும் (Constructive malicious desertion) என்பதாகும்.
இதில் பாதிக்கப்பட்ட தரப்பு திருமண இல்லத்தில் தங்கியிருக்க குற்றமுள்ள தரப்பு பந்தத்தை
முறிக்கும் எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி செல்லலை குறிக்கும்.
திரும்பவும்
ஞாபகப்படுத்தக் கூடிய விடயம் யாதெனில் வெறும் உடல் ரீதியான பிரிவு மட்டும் ஒரு போதும்
வன்ம உறவறுப்பாக சட்டத்தின் முன் காட்டப்படமாட்டாது. தொழில் அல்லது பொருளாதார காரணிகளின்
தாக்கத்தால் இன்று தம்பதியினர் பிரிந்து வாழ்வது தவிர்க்க இயலாதது. எனவே குற்றமுள்ள
துணையின் திருமண பந்தத்தை முடிவுறுத்தும் எண்ணம் உறுதியாக நீதிமன்றின் முன்பு எண்பிக்கப்படும்
வரை விவாகரத்து பெறுவது சாத்தியமானதன்று.
மூன்றாவதாக நாம் சுட்டுவது,
தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடிய தகைமை இழப்பாகும். இதை ஆங்கிலத்தில் Impotency என வரையறுப்பர்.
இது ஆண்களின் தந்தைமையையோ அல்லது பெண்களின் மகப்பேற்று தகைமையையோ குறிப்பதில்லை. மாறாக
ஓர் ஆண் பெண்ணுடன் பாலுறவொன்றை ஏற்படுத்தக்கூடிய விடயம் என நம்பப்பட்டாலும் இன்றைய
சட்ட கருதுகோள் பெண்களும் பாலியல் ரீதியில் உறவை பேணமுடியாதவாறு உடல், உள பிணிகளால்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மருத்துவ வளர்ச்சியின் உதவியோடு நிரூபித்துள்ளது. எனவே
இன்று இருபாலாரும் இந்த தகுதியீனத்திற்கு ஆளாகின்றார்கள். இதற்கு ஓர் முன்நிபந்தனையாக
நிரூபிக்க வேண்டியது இந்த குறிப்பிட்ட தகுதியீனம் திருமணத்திற்கு முன்னிருந்தே குறிப்பிட்ட
துணையை பாதித்திருக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பாதிப்புக்களால் உதாரணமாக
திருமணத்தின் பின்னர் ஏற்படும் விபத்து மற்றும் மன உளைச்சல் என்பவற்றால் ஏற்பட்ட தகுதியீனத்தை
காட்டி விவாகரத்து பெற முடியாது.
ஆச்சரியமான விடயமாக பொது மக்களிடையே உள்ள கருத்து
யாதெனில் விவாகரத்தை பொறுத்த மட்டில் திருமணம் ஆகி ஒரு வருட காலம் சென்ற பின்பே விவாகரத்திற்கு
நீதிமன்றில் விண்ணப்பிக்க முடியும் என்பதாகும். ஆனால் இது முற்றிலும் தவறான ஓர் தகவலாகும்.
ஏனெனில் அவ்வாறானதொரு சட்டத்தேவைப்பாடு எந்த ஒரு நியதிச்சட்டத்திலோ, நீதிமன்ற நடைமுறை
கோவைகளிலோ இன்று வரை வெளியிட்டிருக்கப்படவில்லை.
அத்தோடு
மேற்கூறிய மூன்று காரணிகளுமே திருமணக்குற்றம் என்ற அடிப்படையில் விவாகரத்தை வழங்கும்.
ஆனால் இருதரப்பிலும் திருமணக்குற்றம் இல்லாவிடின் விவாகரத்து இலங்கையில் இன்றைய சட்டப்பரப்பில்
சாத்தியமில்லை. ஆனால் சமகால உலகம் இன்று மீளமைக்க
முடியாத அளவு உடைவு பெற்ற (Irretrievable Break down marriages) திருமணபந்தத்தை
திருமணக்குற்றம் என்ற எண்ணக்கருவை தாண்டி சட்ட ரீதியாக முறிவு பெற அனுமதிக்கின்றது.
இதன் நியாயப்பாடு என்னவெனில் திருமணக்குற்றங்கள் எதுவும் இல்லாத போதிலும் தம்பதியினர்
இருவரினதும் திருமண நம்பிக்கை அல்லது பந்தம் முற்றாக மீளமைக்கமுடியாதவாறு உடைவு பெற்றிருப்பின்
அதன் பின்பும் அத்திருமணத்தை சட்டப்படி செல்லுபடியற்ற தாக்குவதில் நீதித்துறை காணும்
நேரெதிர்த்தன்மை என்ன ? வெறுமையாக கட்டுக்களை அவிழ்த்து தனி மனித சுகந்திரத்திற்கு
ஏன் நலன்புரி அரசு என்ற ரீதியில் வலுச்சேர்க்க கூடாது ? ஆனாலும் இறுக்கமான சமூக கலாச்சாரத்தை
திருமணத்தில் கொண்டுள்ள இலங்கையரால் இன்று வரை திருமணக்குற்றம் எனும் எண்ணக்கருவை தாண்டி
விவாகரத்திற்கு காரணமியற்ற இயலவில்லை. அதோடு இருபக்க சம்மதம் ( Mutual Consent) மூலம்
விவாகரத்து கோர முடியாது என்பதும் குறிப்பிடக்கூடியது.
திருமண
தீர்வுகள் எனும் விடயத்தில் விவாகரத்து எனும் கருவினை தாண்டி “நீதிமுறைப்பிரிவு”
(Judicial Separation) என்பது இலங்கை சட்டப்படி திருமண தம்பதிகள் விவாகரத்திற்கு தோதான
அல்லது அதற்கு மேலதிகமான திருமண உறவில் சகிக்க முடியாத காரணிகளை மன்றின் முன் நிரூபித்து
மாவட்ட நீதிமன்றில் சட்டமுறைப்பிரிவை பெறலாம். இதனால் மன்றின் உத்தரவின் பேரில் தம்பதிகள்
வேறு வேறு சட்டநபர்காளக இனங்காணப்படுவார்கள். இலங்கையை பொறுத்த மட்டில் திருமண வல்லுறவு
என்பது சட்டப்படி குற்றமற்றது. ஆனால் நீதிமுறைப் பிரிவில் இருக்கம் போது கணவன் மனைவியின்
சம்மதம் இன்றி உடலுறவை மேற்கொ்ண்டிருப்பின் அது பாலியல் வல்லுறவு குற்றமாக இலங்கை தண்டனை
சட்டக்கோவையின் கீழ் கருதப்படும். ஆனால் திருமணம் சட்டப்படி வெறிதாகமாட்டாது. பிரிவினை
காலத்தில் தம்பதிகள் சேர்ந்தால் ஆணை ரத்தாக்கபடும். அல்லாவிடின் பின்னர் விவாகரத்திற்கு
விண்ணப்பிக்க முடியும்.
இலங்கை
குடியியல் நடைமுறை சட்டக்கோவை (1889) திருத்தப்பட்டது இல 20 இன் 1977 (Civil
procedure code in 1889 as amended of 20 in 1977). இதன் பிரிவு 602 (2) (அ) நீதிமன்று
மூலம் இரு வருடங்கட்கான பிரிவாணையை பெறலாம் என்பதோடு ஏழு (7) வருடங்கள் தம்பதியினர்
ஊனிலும் உறக்கத்திலும் (Bed and Board) அதாவது உடல் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ தாம்
தம்பதிகள் என்ற நிலைப்பாட்டை வெளிக்காட்டாவிடின் இச்சட்டத்தின் பிரிவு 602 (2) (ஆ)
மூலம் விவாகரத்து கோரமுடியும்.
இந்த
சட்டநிலைமை நீதியரசர் தம்பையா அவர்களால் மிகச்சரியாக முத்துராணி எதிர் துரைசிங்கம்
எனும் வழக்கில் திருமணக்குற்றம் எதுவுமின்றி இப்பிரிவு என்பது விவாகரத்து பெற ஓர் காரணி
என தீர்ப்பளித்தார். ஆனால் பின்பு உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா, இச்சட்ட பிரிவுகளை
முழுமையாக பொருள்கோடல் செய்து
தென்னக்கோண் எதிர் தென்னக்கோண் எனும் வழக்கில்
இலங்கையில் எந்த நியதிச்சட்ட பிரிவுகளால் விவாகரத்து அனுமதிக்கப் படினும் அதற்கு திருமணக்குற்றம்
இன்றியமையாதது என தீர்த்தார். இதுவே இன்றைய பிணிக்கும் முற்றீர்ப்பாக கருதப்படுவதால்
இலங்கையின் சட்டக்கோட்பாடும் விவாகரத்தில் திருமணக்குற்றம் எனும் நிரூபித்தலுக்கு உட்பட்டதே.
இறுதியாக
இலங்கையில் திருமண தீர்வுகளாக விவாகரத்து மற்றும் நீதிமுறைப்பிரிவு என்பன காணப்படுகின்றன.
இதில் எந்த நிவாரணத்திற்கும், நிவாரணம் பெற விரும்பும் பகுதி மற்றைய தரப்பின் திருமணக்குற்றத்தை
நீதிமன்றின் முன் நிரூபிப்பது கட்டாயமானதாகும். இதில் நான் குறிப்பிட்ட மீளிணைக்கமுடியாத
உடைவுக்கோட்பாடு மிகவிரைவில் இலங்கை சட்டத்தளத்தில் அறிமுகமாகும் போல எண்ணத்தோன்றுகின்றது.
இதற்கு இன்று மாவட்ட நீதிமன்றங்களின் திருமண தீர்வு வழக்குகளின் பழுச்சுமையே ஆதாரமாகும்.