உலகின்
பொருளாதார அம்சங்கள் அல்லது வடிவங்கள் ஒவ்வொரு நாளும் தன்னை தானே புதுப்பித்து கொள்கின்றன.
அந்த புதுப்பித்தவில் தக்கன பிழைத்தல் எனும் விதி தொடர்ச்சியாக நிலை கொண்டு காணப்படுகின்றது.
அவ்வகையில் வறுமை ஒழிப்பிற்கென நுண்பாக நிதித்துறையும் (Micro fiancé) அதன் தலைப்பிள்ளையான
நுண்பாக கடன்களும் (micro credit) உருவம் பெற்றுள்ளதாக உலக அளவில் அங்கீகாரம் பெற்று
வருகின்றன. அத்துடன் இந்த நுண்பாக நிதியிடலானது மூன்றாம் உலக நாடுகளை பொறுத்த வரை அதன்
அரசாங்கங்களினாலும் சர்வதேச நிறுவனங்கள் மற்றம் நிதியுதவி வழங்கும் நிறுவனங்களாலும்
இது “வறுமை ஒழிப்பின்” ஓர் முக்கிய பொருளாதார
கருவியாக இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியானது நுண்பாக நிதி என்பதை
“குறைந்த வருமான வழங்குதல்” என வரையறை செய்கின்றது. அத்துடன் இது குறைந்த வருமானம்
பெறும் மக்களின் வருமான உருவாக்க நடவடிக்கைகளையும் இயலாற்றலையும் விரிவுபடுத்தவும்,
மேம்படுத்தவும் எதிர்பார்க்ககின்றது.
இவ்வறான
நுண்பாக நிதிக்கட்டமைப்புக்கள் கட்டமைப்பு ரீதியான நிதி நிறுவனங்களின் (Organized
financial institutions) உருவாக்கத்திற்கு முன்னரே தோற்றம் கண்டுள்ளன என்பதோடு அவற்றில்
சில முறைமைகள் இன்று வரை கையாளப்பட்டு வருகின்றது.
உதாரணமாக
இலங்கையில் “சீட்டு” பிடித்தால் முறைமையானது
இவ்வாறான ஒரு நுண்பாக நிதியிடல் செயற்பாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இச்செயற்பாட்டை
ஒழுங்கமைக்க இலங்கை அரசாங்கம் சீட்டுக் கட்டளைச்
சட்டம் (Chtetus Ordinance No 61 of 1935, as amended by Act No 34 of 1935) ஒன்றை பாராளுமன்றம் மூலம் ஏற்படுத்தியும் கூட அதன்
விதி முறைகட்கு கட்டுப்படாமல் மக்கள் நடப்பது குறிப்பாக நுண்பாக நிதியிடல் செயற்பாடுகளில்
மக்களின் ஆர்வத்தை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆரம்ப வரலாறு
நுண்பாக
நிதிப்பணிகள் வெளிப்படுத்தப்பட்ட தரவுகள் படி 1970ம் ஆண்டுகளில் பங்களாதேஸ் நாட்டின் சிற்றக்காங் பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான முகமட் யூனுஸ் என்பவரின் சிந்தனையின் படி ஒரு கிராமத்தவர்களை சிறு குழுக்களாக
பிரித்து ஒரு சிறிய தொகையை (சுமார் 30 அமெரிக்க டாலர்கள்) அவர்களுக்க கடனாக வழங்கி
அவர்களை தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்படுத்தி வெற்றி பெற வைத்தார்.
எனவே
இம்முயற்சியானது உலகின் மிகப்பிரம்மாதமான வறுமை ஒழிப்பு எண்ணக்கரு என ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்
அது யூனுசிற்கு நோபல் பரிசை வெல்லும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. அத்துடன் பல அபிவிருத்தி
அடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகட்கு நிதியளிக்கும் நடைமுறையில்
MFT (Micro Finance Institutions) என்பவற்றுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. நுண்பாக நிதியிடல்
திட்டங்களானது ஒரு வியாபார செயன்முறை என்பதை தாண்டி கீழ்வரும் விடயங்களிற்கு முன்னுரிமை
அளிக்கின்றது.
v வறுமைக்
கோட்டிற்குட்பட்டோருக்கான முன்னேற்றம்.
v ஆதனங்கள்
மற்றும் பிணைகள் அற்றோருக்கும் வாய்ப்பளித்தல்.
v பெண்களை
சுய சார்பில் வலுவூட்டல்.
v கிராமிய
குழுக்களுக்கு சுய பொருளாதாரத்தை ஏற்படுத்தல்.
அத்துடன்
ஐக்கிய நாடுகள் சபை தனது மில்லேனியம் இலக்குகளில் (Millennium Development
Goals-MDG) நுண்பாக நிதித்திட்டங்களை தனது 53/197 அறிக்கை மூலம் 2005ம் ஆண்டின் முதன்மைத்
திட்டமாக ஏற்று அறிவித்திருந்தது.
எது
எவ்வாறிருப்பினும் எதிலும் நன்மை தீமை காணப்படுவது போல நுண்பாக நிதியியல் திட்டங்களிலும் தீமைகள் காணப்படுகின்றது.
அவையாவன
1)
பணம் எடுக்கும் தேவைக்கும் அதன் பயன்பாட்டிற்கும்
இடையிலான நோக்க வேறுபாடு
(உதாரணமாக முதலீட்டு தேவைகளுக்காக எடுக்கப்படும்
நுண் கடன் நுகர்வுத் வேவைக்காக பயன்படுத்தப்படல்)
2)
அதி கூடிய வட்டி வீதங்கள்
(இதில் குறித்த கடன் தொகையை முதலீட்டு பெறக்கூடிய
வருவாயை விட கடன் தொகைக்கான வட்டித்தொகை அதிகமாக இருத்தல்)
3)
திருப்பி செலுத்தல் திட்டம் பற்றிய புரிந்துணர்வின்மை.
(பல
நிறுவனங்கள் மீளகட்டும் முறைகளை சிக்கலானவையாக மாற்றியுள்ளன.)
4)
ஒரே வாடிக்கையாளர் ஏககாலத்தில் பல நிதி நிறுவனங்களிடமிருந்து
கடன் பெறல்.
5)
குறித்த தவணைக்கட்டணங்களை மீள் செலுத்த இயலாததால்
தண்ட வட்டி உட்பட்ட பொருளாதார நெருக்கடிகட்கு ஆளாதல்.
6)
மீள் திருப்பல் சாத்தியம் அற்ற சந்தர்ப்பத்தில்
கடன் அறவீடு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளல்.
நுண்பாக
நிதியிடலும் வாடிக்கையாளரும்
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து
வரும் ஒரு நாடு 20 மில்லியன் மக்கள் தொகையையும் 4.8% வேலையின்மை வீதத்தை கொண்டு செயற்படும்
போது வறுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. அது
எப்போதும் மக்களை நிதியியல் உட்பாய்ச்சல் எனும் தேவையில் இருந்து தப்ப முடியாததாக்கின்றது.
எனவே அப்படிப்பட்ட மக்கள் பலர் பாரிய நிதியியல் உட்பாய்ச்சலுக்கு முன்தேவையான நிரந்தர
வருமானம் சொத்துக்கள் அல்லது பிணையங்கள் போன்ற எவற்றையும் பூர்த்தி செய்ய இயலாத குடிமக்களுக்கு
நுண்பாக கடன்கள் உண்மையில் ஓர் வரப்பிரசாதமாகவே காணப்படுகின்றது. ஆனால் அதை கடன் பெறும்
வாடிக்கையாளர்கள் (மக்கள்) அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு எனும் அமுத மொழிக்கேற்ப
பயன்படுத்த வேண்டும்.
நுண் என்ற சொல்லே சிறிது எனும்
பொருளை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. எனவே அந்த அளவைப் பொறுத்தே வருவிளைவுகள் தீர்மானிக்கப்படும்
என்பதை மக்கள் உணர வேண்டும் நுண்பாக நிதியிடல் செயற்பாடுகள் சேமிப்பு மற்றும் கடன்
எனும் இரு பகுதிகளை கொண்டதாவே உருவாக்கப்பட்டிருந்தாலும் கடன் என்ற ஒன்றே மக்களின்
ஆர்வத்தை துாண்டுகின்றது. சேமிப்பு கடனிற்கான ஓர் கட்டாய முன்னேற்பாடு என்றால் மட்டுமே
அது மக்களால் ஏற்கப்படுகின்றது.
ஆனாலும் மக்கள் பெரும்பாலும்
தாம் நுண்பாக கடனுடாக பெற்ற பணத்தை
1)
தமது கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்த.
உ+ம்
:- திருமணம் /இறப்பு/ பிறப்பு/ ஏனைய சமய சடங்குகள்.
2)
தனிப்பட்ட தேவைகள்
உ+ம்:- நோய் வாய்ப்படல்/ விபத்து /பண நெருக்கடி.
3)
நுகர்வு கலாச்சாரம்
உ+ம்:- L.E.D தொலைக்காட்சி பெட்டி/ அலை பேசிகள்
/குளிரூட்டிகள்
போன்றவற்றில் ஈடுபடுத்துவதால் முதலீட்டு வருவாய்
(Investment Return) என்ற ஒன்றை ஒரு போதும் பெற முடியாமல் போகின்றது இது அவர்களை மேலும்
மேலும் கடன் சுமைக்குள் தள்ளி விடுகின்றது.
தாம் நுண்பாக நிதியிடல் திட்டங்களினுடாக பெறுகின்ற கடனை முதலீட்டு நடவடிக்கைக்கு பொருத்தமாக
பயன்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனுாடாக முதலீட்டு வருவாயை பெற்று கடன் மற்றும் அதற்கான
வட்டி என்பவற்றை செலுத்துவதன் மூலம் தமது பொருளாதார ஸ்திரித்தன்மையையும் வளப்படுத்த
முடியும்.
மாறாக
தொடர்ச்சியான நுகர்வு கலாச்சாரம் அத்திட்டத்தின் நன்மைகளை அதன் பாதகங்களை மட்டும் பெற
வழி உண்டாக்கும்.
நுண்பாக நிதியிடலும் நிதி நிறுவனங்களும்
இலங்கையில்
கட்டமைக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் தோற்றப்பாட்டிற்கு முன்னரே நுண்பாக நிதியியல் சேவைகள்
மக்களிடையே தோற்றம் பெற்றிருப்பினும் பரந்த விஸ்தரிப்பு கொண்ட சேவைகள் யாவும் கட்டமைக்கப்பட்ட
நிதிநிறுவனங்களின் ஊடாகவே நிகழ்கின்றன. நிதி நிறுவனங்கள் எனும் பதம் நுண்பாக நிதியி்லை
பொறுத்த வரை பின்வருவனவற்றை உள்ளடக்கி காணப்படுகின்றது.
1)
உரிமம் பெற்ற வங்கிகள்
2)
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்
3)
கூட்டுறவு கிராமிய வங்கிகள்
4)
சிக்கன கொடுகடன் கூட்டுறவு சங்கங்கள்
5)
திவிகம வங்கிகள்
குறிப்பிட்ட
நிறுவனங்களில் முதலிரண்டு நிறுவனங்களே அதிக நிதியையும் சேவைப்பாட்டு விஸ்தீரணத்தையும்
கொண்டு காணப்படுகின்றன. இவை வர்த்தக நிறுவனங்கள் எனும் ரீதியில் “இலாப நோக்கை” மையமாக கொண்டு இயங்குகின்றன
என்பதை எந்தவொரு முதலாமாண்டு நிதியியல் கற்கைநெறி மாணவரும் நன்கு அறிந்துள்ளார். எனவே
இந்த இலாப நோக்கு கொள்கையானது சட்டத்திற்கு மாறாக வைப்புத்திட்டங்கள் மிகையான வட்டி
வீதம் மற்றும் ஒழுக்கவியல் சாராத அறவீட்டு முறைகள் என்பவற்றினுாடாக மக்களை மேலும் அகல
பாதாளத்தில் தள்ளுகின்றன.
மறுபுறம் மோசமான இச்செயற்பாடுகள்
1)
குறைந்தளவு மீள் கொடுப்பனவு வீதங்கள்
2)
உயர்ந்த பரிமாற்றல் செலவுகள்
3)
மீண்டெமும் செலவுகள் உயர்தல் எனும் சிக்கல்கள்
ஊடாக நிறுவன நிதி முறிகைக்கு இட்டுச் செல்கின்றது. இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்க
பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இவற்றை
கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கியானது வட்டி வீதங்கள் உட்பட்ட பல கட்டுப்பாடுகைளை
விதித்திருப்பினும் பெரும்பாலும் இந்நிறுவனங்களின் பரப்புரையானது முரணாகவே காணப்படுகின்றது.
நுண்பாக நிதியிடலும் மக்களும்
நுண்பாக
கடன்களை பெற்றுக்கொள்ளும் மக்கள் அந்த தொகை எந்த முதலீட்டு தேவைக்காக தம்மால் பயன்படுத்தபட
போகின்றது எனும் வினாவிற்கு பணத்தை பெற முன்னரே விடை காண்பது மிக அத்தியாவசியமானனது
என்பதுடன் அது அவர்கள் அக்கடன் மூலம் பின்தொடரும் பல சிக்கல்களிடமிருந்தும் காப்பாற்றும்
என்பதே முதன்மையானதாகும். ஏனெனில் நுண்பாக கடன்களின் கட்டமைப்பானது முதலீடு மற்றும்
முதலீட்டின் மீதான வருவாய் என்பவற்றை வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் அவை நுகர்வு
மற்றும் நீண்ட கால மீள திருப்பங் திட்டஙகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதையும் மக்கள்
உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இதில் வழங்கப்படும் கடன் தொகைக்கு
தற்போது தண்ட வட்டி (Penal interest) உட்பட நிதி நிறுவனங்கள் 45% வருடாந்த வட்டியை
கொண்டு காணப்படுகின்றன. குறித்த கடன் தொகைக்கான மீள்கட்டுமான திட்டம் பற்றியும் வாடிக்கையாளர்
அறிந்திருப்பதும் அவசியம். பல வாடிக்கையாளர்கள் பருவ காலத்துடன் இணைந்து தமது தொழில்
நடவடிக்கைகளை முன்னெடுக்கின் போதும் நிதி நிறுவனங்கள் பருவகாலத்திற்கேற்ப மீள் அறவிடுதல்களை
மேற்கொள்பதில்லை என்பதையும் அவை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவிலேயே அறவீடுகளை
மேற்கொள்ளும் என்பதையும் மக்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் இயற்கையின்
பருவகால மாற்றங்களுக்கேற்ப நிதி நாட்காட்டிகள் செயற்படுவதில்லை என்பதையும் மக்கள் அறிந்து
கொள்ள வேண்டும்.
மேலும்
பல நிறுவனங்களில் ஏக காலத்தில் கடன் பெறுவதை தவிர்ப்பதும் கடன் நெருக்கடிகளில் இருந்து
தப்பிப்பதற்கான ஓர் மார்க்கமாகும். ஏனெனில் ஓர் கடனை பெற்று அடுத்த கடனை அடைக்கும்
போது வட்டி உட்பட்ட மேலும் மேலும் பொருளாதார இறுக்கங்களை ஏற்படுத்துகின்றது.
அத்துடன்
மக்கள் பலரின் குற்றச்சாட்டாக தற்போது காணப்படுவது குறித்த நிதி நிறுவனங்கள் நுண்பாக
கடன்களை வழங்குகின்றன போது எவ்வித பின்புல அறிக்கைளையும் பெற்றுக் கொள்ளாது வழங்குதல்
பின்னர் கடன்களை மீள அறவிடும் போது சமூக விழுமியங்கட்கு எதிரான வகையில் செயல்களை செல்வதாகும்.
ஆனால் நிதி நிறுவனங்கள் குழுக்களில் அங்கம்
வகிப்போருக்கே இக்கடன்களை வழங்குவதோடு ஒருவரின் சிபாரிசுகளை மற்றவர் பெயரில் பரஸ்பரம்
எதிர்பார்க்கின்றன. மக்கள் கடன் பெறும் அவா மிகுதியால் அவற்றின் பூரண திருப்தியுடன்
செயற்பட்டு விட்டு பின்னர் முறைமைகளை குறை கூறுவதால் அவர்கள் தேசிய பொருளாதார கொள்ளையின்
படியும் சட்டத்தின் பாலும் எவ்வித நிவாரணங்கயையும் பெற உரித்தற்றவராகின்றார்கள்.
அத்துடன்
முதலீட்டு திரும்பல் அற்ற அனைத்து கடன்களும் கடனட்டை (Credit Cord) பாவனை போன்றே பொருளியல்
வல்லுணர்களால் நோக்கப்படுகின்றது. ஏனெனில் இவையிரண்டுமே எதிர்கால உழைப்பை (future
Earnings) நிகழ்காலத்திலேயே செலவழிக்க வைக்கின்றன.
அச்செலவானது முதலீட்டுத் திரும்பல் எனும் எண்ணக்கருவுடன் சமாந்தரமாக இணையும் போதே எதிர்கால
வரவாக அல்லது எதிர்கால உழைப்பாக தேறி காணப்படும். அன்றேல் அது என்றென்றைக்குமே செலவாக
மாத்திரமே காணப்படும்.
இதை
விட இவ்வகை கடன்களுக்கு தம்மை பிணையாளிகளாக கட்டுப்படுத்தி கொள்பவர்கள் மிக அவதானமாக
செயற்பட வேண்டும். ஏனெனில் பிணையாளிகள் (Sureties) முதன்மை கடன் படுநர் (Creditor)
எக்கடன் தொகைக்கு பொறுப்பாக காணப்படுகின்றாரோ அத்தொகை முழுவதற்கும் பொறுப்பாக காணப்படுகிறார்கள்.
குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வேளையில் அவர்கள் தமது அனைத்து தனிமனித அந்தஸ்தையும்
குறித்த கடன் மற்றும் அதன் நிபந்தனைகள் தொடர்பில் இழப்பதுடன் சட்ட நடவடிக்கைகட்கு உள்ளாகி
குறித்த நிலுவைத்தொகைக்கான தமது சொத்துக்களையும் இழக்க வேண்டிய ஓர் நிலைக்கு உள்ளாக
வேண்டியேற்படும். எனவே இவ்வகையான கூட்டுக்கடன்கள் என்றுமே மக்களுக்கு பெரும் தொல்லையாகவே
அமைகின்றன.
நுண்பாக
நிதிநிறுவனங்கள்
இவ்வகையில்
பல நிதியியல் கம்பனிகள் (finance Companies) இன்று நுண்பாக நிதிச்சேவையை வழங்கி வருகின்றன.
அத்துடன் வங்கிகள் (Bank) கூட தமது துணை நிலை (Subsidies) நிறுவனங்களை உருவாக்கி அதன்
மூலம் நுண்பாக நிதிச்சேவைகளை வழங்கி வருகின்றன. எனவே இன்று சந்தைப்படுத்தல் துறையில்
நிதியியல் சேவைகளை வழங்கும் பெரும்பான்மையான நிறுவனங்கள் நுண்பாக நிதியியல் சேவைகளை
வழங்குவதை இலங்கை நிதிச்சந்தையில் ஓர் வழமையான செயற்பாடாக கொண்டுள்ளன.
மேலும்
அனைத்து நிறுவனங்களும் சமூக பொறுப்புடமை என்பதுடன் செயற்படினும் (Corporate responsibility)
அது அவர்களின் நிதியியல் நலன்களை (Financial
benefit) என்றும் மிஞ்சி விடாது என்பதை
நாம் யதார்த பூர்மாக விளங்கி கொள்ள வேண்டும். ஏனெனில் வியாபார நிறுவனங்கட்கான பொருள்
கோடல்களில் “இலாப நோக்கம்” என்பது இன்றியமையாதது.
“சந்தை
ஆய்வு” எனும் விடயத்தில் நுண்பாக நிதிக்கடன்களை பொறுத்தளவில் அதன் கொடு பெறுமதியும்
வரு பெறுமதியும் தனித்தனியாக ஒப்பீட்டளவில் குறைவு என்கிறபடியால் வாடிக்கையாளரான கடன்படுநர்களின் பின்புல ஆய்வை (Background beck) செய்வதற்கு ஓர் திட்டமிடப்பட்ட கட்டமைப்பை நிதியியல்
நிறுவனங்கள் பொதுவாக நிறுவியிருக்கவில்லை. அதற்கான கடன்படுநர்கள் மீளச்செலுத்த இயலாத
பழியை அல்லது அதன் கொடூர விளைவுகளை இலகுவாக நிதியியல் நிறுவனங்களின் தலைகளின் மேல் சுமத்த இயலாது. அதற்கான எந்த ஒரு சட்டக்கட்டுப்பாட்டையும்
அவர்கள் கொண்டிருக்கவில்லை.
மேலும்
இலங்கை போன்ற ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடானது சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து
சர்வதேச நிதி ஸ்தாபனங்களாலும் ஓர் “திறந்த சுகந்தரமான பொருளாதார கொள்கை” ஒன்றை அமுல்படுத்துமாறு
தொடர்ச்சியாக அழுத்ததிற்கு உட்பட்டு வரும் ஒரு நாடு என்ற வகையில் சிறிதாக எழும் ஓர்
சில சலசலப்புக்ளுக்காக முழுமையாக ஓர் பொருளாதார மாற்றல் கொள்கை ஒன்றை அமுல் படுத்தும்
எனவும் மக்கள் எதிர்பார்ப்பது யதார்த்ததிற்கு புறம்பானது.
நுண்பாக நிதியிடலும் சட்டமும்
சட்டம்
உண்மையில் இரு வேறுபட்ட நேரெதிர் சக்திகளை ஏதோ ஒரு புள்ளியில் சமநிலை செய்ய முற்படுகின்றது.
ஆனால் அது எந்த சக்தியும் ஒன்றை ஒன்று மேலோங்கி கீழ்மைப்படுத்த அனுமதிக்காது. ஆனால்
சட்டம் “முரண் தடையை” (Estoppel) என்றும் ஓர் அங்கமாக ஏற்கின்றது. பொதுவாக இவ்வாறான
விடயங்கள் “ஒப்பந்த சட்டம்” மூலமாக ஆளப்படுவதால் முதலிலேயே கடன் பெறுநர்கள் தமது சுயாதீன உரிமைகளை “விட்டுக்
கொடுப்பதால்” பின்னர் மறுதரப்பான நிதி நிறுவனங்கட்கு எதிராக பெறக்கூடிய அதிகுறைந்த
நன்மைகள் கூட கைவிட்டுவிட வேண்டிய ஓர் நிலைமையே
காணப்படுகின்றது.
குறிப்பாக
கீழ்வரும் சட்டங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நுண்பாக நிதியிடலுடன் தொடர்புறுகின்றன.
1)
2016 ஆம் ஆண்டின் 6ம் இலக்க நுண்பாக நிதிச்சட்டம்
2)
1980 ஆம் ஆண்டின் 31ம் இலக்க வவிந்துதவும் சமூகம் பணிகள் அமைப்புக்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை)
சட்டம்
3)
2007ம் ஆண்டின் 07ம் இலக்க கம்பனிகள் சட்டம்
மேற்படி
சட்டங்கள் நுண்பாக நிதியுடன் தொடர்பு பட்டுள்ள நிறுவனங்களின் உருவாக்கம் ஆளுமை, கட்டுப்பாடுகள்,
அறிக்கையிடல், கடன் மீள் அறவிடல் போன்ற பல விடயங்கள் சார்பில் விடயதானங்களாக கொண்டுள்ளன.
மேற்குறித்த சட்டங்களுடன் தொடர்புடைய பல சட்டங்கள் இவ்நிதிக்கையாளுகை தொடர்பில் ஏற்கத்தகு
அளவில் ஏற்பாடுகள் கொண்டிருப்பினும் மேற்சொன்ன சட்டங்கள் பெருமளவு தாக்கத்தை செலுத்துவதால்
அவை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன.
மேலும்
இலங்கையை பொறுத்தளவில் மத்திய வங்கியே (Central Bank) நிதி நிறுவனங்கள் மேற்பார்வைக்கு
பொறுப்பாக உள்ளது. அதன் பணிப்பின் பெயரிலேயே ஏனைய நிதிநிறுவனங்கள் தமது கடன் வழங்கும்
வகையறாக்கள் (Classifications of loans) கடன் வழங்கு அளவு (Credit limit) வட்டி வீதம்
(interest Rate) ஆகியவற்றையும் மேற்கொள்கின்றன. ஆனால் மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதார
நலன்கட்கு அப்பால் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த எப்போதும் முயற்சிக்காது என்பதை
நாம் உணர வேண்டும்.
முடிவாக
உலக
பொருளாதார மாற்றீடுகளின் வறுமை கோட்டிற்குட்பட்டவர்களையும் சாதாரண அல்லது வழமையான நிதி
நிறுவன சேவைகளையும் புறக்கணிக்கப்பட்டு எல்லைப்படுத்தப் பட்டோருக்குமே இந்த நுண்பாக
நிதியிடல் திட்டங்கள் பெருமளவில் வெற்றியை அளித்தன என்று நாம் உலகின் வரலாறுகளுடாக அறியக்கூடியதாக உள்ளது. இந்த நிதியியல் துறை ஒவ்வொரு
நாட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கங்களின் கொள்கையின் படி வடிவமைக்கப்பட்ட
சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும்
பயன் பெறுநராக மக்கள் இந்த சேவைகளை அதன் நோக்கம் மற்றும் பின்புல கலாச்சாரம் என்பன
அறிந்து பயன்படுத்த வேண்டும். அகதி யுகம் முடிவுற்று அபிவிருத்தி யுகத்தில் பாய்ந்துள்ள
இலங்கை மேலைத்தேய நாடுகளின் பாணியில் எதிர்கால உழைப்பை தற்காலத்தில் செலவிட அதிக நுகர்வு
தன்மையை நோக்கி நகர்வதை நாம் தெளிவாக அவதானிக்கின்றோம். இது வறுமைக் கோட்டிற்கட்பட்ட
மக்களிடமே இன்னும் அதிகமாக இருப்பதையும் இன்று கண்கூடாக காண்கின்றோம். எனவே “அளவிற்கு மிஞ்சினால் அமுதமும்
நஞ்சு” என்பதற்கேற்ப நுண்பாக நிதியிடல் திட்டங்கள்
எதிலும் நுண்பாக கடன்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.