Social Icons

Pages

Friday 11 January 2013

டெல்லி பாலியல் வேட்டை ஓர் சமூகத்தள ஆய்வு



 சட்டமாணவன் என்ற வகையில் நான் கற்கும் துறை மீது எனக்கு அபிமானம் எப்போதும் உண்டு. ஆனால் சட்டம் ஓர் சமூக இயல் என்பதை அறிந்திருந்தும் மிக சிக்கல் வாய்ந்த உற்பத்தி வளமான மனித நடத்தையை அது முறைப்படுத்துகின்றது என்பதை விளங்கியும் கூட சட்ட முறையை சமூகத்தை சரியாக கைக்கொள்ள இயலுவதில்லை என்ற மனக்குறை எப்போதும் உண்டு. இது படிப்பல்ல மாறாக கல்வி.

சட்டம் என்றுமே ஓர் உருவகத்தை அறுதியாக உருவகப்படுத்துவதில்லை. அது கையாள்பவரின் தனித்திறமைக்கு ஏற்றாற் போல மறைபொருளாகவோ அல்லது வாக்கிய  பல்பொருள் கோடல்களாகவோ அமைத்து விடுகின்றன. ஆனால் இதை சட்டத்தின் நெகிழ்ச்சி என சட்டப் புலமைத்துவம் வரையறுத்து விடுவதும் உண்டு. “பாலியல் வல்லுறவு” என்பது பொதுவாக ஓர் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளின் சம்மதமின்றி பாலியல் அங்கங்களுடன் ஓர் உடலியல் ரீதியான உறவைப்பேணல் ஆகும். இந்த வரைவிலக்கணம் மிகவும் குறுகியதும் மட்டுப்படுத்தப்பட்டதும் ஆகும். இன்றைய நவீனம் மனிதம் முன்னைய நாட்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மனித வெறுப்பாண்மையை கக்க தொடங்கியுள்ளது. ஆனால் இவை இன்னோர் கோணத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி என்ற போர்வையினுள் முற்றாகவே சுற்றப்பட்டு விடுவதும் உண்டு. ஆனால் நாகரீக வளர்ச்சி ஒருவனை துன்பப்படுத்தி மற்றவன் மகிழ்வது அல்ல ஆனால் இன்று அது தான் நடக்கின்றது.



இனி டெல்லி வழக்கினுள் 16-மார்கழி-2012 அன்று இந்திய தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியான சாகித்தில் ஜோதியா சிங் பண்டி என்ற 23 வயது பெண்ணும் அவள் காதலனான ( முதலில் நண்பர்கள் என்று வெளியிட்ட போதும் அவர் AFP செய்தி வேவைக்கு அளித்த பேட்டியில் தாங்கள்  காதலர்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.) அவேந்திரா பிரதாப் பண்டி என்கிறவரும் திரையரங்கொன்றில் திரைப்படம் ஒன்றை பார்த்து விட்டு முன்னிரவு சுமார் 09.30 மணியளவில் தங்களது இருப்பிடங்கட்கு ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது  குற்றவாளிகளான 06 பேரும் ஓர் பேரூந்தை ஓட்டி வந்துள்ளனர். ஆனால் அப்பேரூந்து பயணவழியுரிமை ( Route Pass )அற்றது.  ஆனால் அதில் வந்தவரும் தற்போது சிறுபராயத்தவர் என்ற சரச்சைக்கு உடன்பட்டிருப்பவர் இவர்கள் அருகே இறங்கி குறித்த நிறுத்தத்திற்கு இப்பேரூந்து செல்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜோடி பேரூந்தில் ஏறியுள்ளனர். ஆனால் சிறிது பயணத்தின் பின்பு பேரூந்து வழிமாறி வேற்று வழினால் பயணித்ததும் பேரூந்தின் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டிருப்பதும் காதலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரூந்தில் பயணம் செய்தவர்கள் 06 பெயரும் நண்பர்கள். அவர்களிடம் இது பற்றி விவாதிக்கப் போன காதலனை இரும்பு வார்களாலும் பின்னர் கிடைத்த தடிகளாலும் தாக்கி சுயநினைவை இழக்க செய்தனர். பின்னர் கூட்டாக அந்த 23 வயது யுவதியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உ்ட்படுத்தினர். ஆனால் கீழே பதிவிட்ட சம்பவங்கள் ஊடாக நடந்தது ஓர் பாலியல் சார் குற்றம் என என்னால் வரையறுக்க முடியவில்லை. அது மனிதத்திற்கு எதிரான ஓர் குற்றச்செயல். அப்பெண்ணின் பிறப்புறுப்பு பகுதி மிக மோசமாக தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது. அவளின் எதிர்ப்பை நிறுத்த எல்போ வடிவ சில்லு மாற்றும் இரும்புக்குழாய் அடி வயிற்றில் செலுத்தப்பட்டு அவளது உணவுக்கால்வாய் அறுக்கப்பட்டு சிறுகுடலின் பெரும் பாகம் கிட்டத்தட்ட 90 வீதம் வெளியே இழுக்கப்பட்டது. இதன் மூலம் அவளது உணவு சமிபாட்டுத் தொகுதியே முற்றாக சிதைக்கப்பட்டது. அவள் தன்னை காப்பாற்றுவதற்கு போராடிய சான்றாக நான்கு பேரின் உடலிலும் அவள் கடித்த காயங்கள் உண்டு. இது வெறும் காம வெறியாட்டம் என்றோ அல்லது உளவியல் ரீதியான பிரச்சனைகட்கு முகம் கொடுத்தோரின் விளைவு என்றோ என்னால் புறம் தள்ள முடியவில்லை. இதில் திட்டமிட்ட பழிவாங்கல்கள் எவையும் இல்லை. ஆனால் இது ஒரு விளையாட்டு அல்லது ஜொலி என்றுதான் என்னால் வகைப்படுத்த முடிகின்றது.  வெறும் ஒன்றரை மணி நேரமே இந்த மிருகச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. எனவே தொடர் வேதனையை  பெண்ணிற்கு அளித்து ரசிக்கவில்லை. ஏதோ கண்டவுடன் காலால் எட்டி உதயப்படும் நாய் போல் அவள் பாவிக்கப்பட்டிருக்கிறாள். பின்னர் இருவரும் ஜோடியாகவே வீதியில் விட்டெறியப் பட்டிருக்கிறார்கள். அவள் உடலை நாராய் கிழித்த பின்பும் கூட அவள் மீது பேரூந்தை ஏற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால் அரை மயக்கத்தில் இருந்த காதலன் அவளை காப்பாற்றி விட்டான். இருவரும் ஆடையின்றியே வீதியோரத்தில் கிடந்தனர்.  இன்று பிணமானவளுக்காய் வீதியில் இறங்கி கொடி பிடிக்கும் டெல்லி ஜனநாயகவாதிகள் ஒருவர் கூட அரை மணி நேரமாக உயிருக்கு போராடியவர்களை வைத்திய சாலையில் அனுமதிக்கவில்லை. பின்னர் வந்த போலீஸார் இருநிலையங்களில் எந்த காவல் நிலையத்திற்கு நியாயாதிக்கம் உள்ளது என்பதை பற்றி விவாதித்து முடித்த பின்னரே இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். 


அனுமதிக்கப்பட்ட கணத்தில் இருந்தே அவள் தன் உயிரை உயிர் காக்கும் இயந்திரங்களை வைத்தே தக்க வைத்து கொள்ள நேர்ந்தது. ஆனால் அப்பெண் 26 மார்கழியில் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் சிங்கப்பூர் மருத்துவமனையான மவுண்ட் எலிசெபத் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டாள். இந்த மருத்துவமனை உறுப்பு மாற்றீட்டு சிகிச்சைக்கு பெயர் பெற்றது. சர்வதேச நேரப்படி 28 மார்கழி 08.45 அளவில் அவள் தன் மரணத்தை தழுவினாள். ஏன் அவள் இந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டும் ?  உறுப்பு மாற்றுக்கு உட்படுத்த இந்தப்பெண் சுமார் மூன்று மாத காலமாவது எடுத்து தனது ரணங்களை ஆற்றியிருக்க வேண்டும். “பேசா மடந்தை” மன் மோகன் சிங் தலைமையில் 26 மார்கழியில் இடம் பெற்ற உயர் மட்ட கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டடிருக்க வேண்டும் என தற்போது பரவலான பேச்சடிபடுகின்றதது. ஏனெனில் டெல்லி வைத்தியசாலை ஒன்றில் அப்பெண் இறந்திருப்பின் போராட்டக்காரர்கள் குறித்த வைத்தியசாலையையும் அரச பொறிமுறையையும் சேர்த்து ஒன்றாக தரைமட்டமாக்கியிருப்பார்கள்.


தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்களன் பெயரில் விரைந்த டெல்லி பொலிஸார் ஆறு குற்றவாளிகளையும் மறுநாளே கைது செய்தனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பின்வருமாறு

01.வினய் சர்மா
02.பவன் குப்தா
03.முல்லாஷ் குமார்
04.ராம் சிங்
05.அக்சய் தகவன்
06. இளம்பராய குற்றவாளி என்பதால்  பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர்கட்கு மரண தண்டனை அளிக்குமாறு டெல்லி பொலிசார் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். பாலியல் வல்லுறவு மற்றும் Eve teasing வழக்குகளை மட்டும் விரைந்து முடிக்க ஐந்தாவது விரைவு நீதிமன்று டெல்லி, சாகித் நீதிமன்ற வளாகத்தில் இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் அல்டமால் கபீர் திறந்து வைத்து வழக்கு நடைபெற்று வருகின்றது.

இக்குற்றவாளிகள் மீது வல்லுறவு, ஆட்கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவை நீரூபிக்கப்படும் இடத்து மரண தண்டனை வழங்க இந்திய தண்டனைச்சட்டம் அனுமதி அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  அரச தரப்பிற்காக வாதாட மூத்த சட்டவல்லுணர் தயன் கிருஸ்ணா அழைக்கப்பட்டுள்ளார். ஆறாவது குற்றவாளியின் பாடசாலை சான்றிதழின் படி அவர் 17 வயது 08 மாதம் மட்டுமே வயது நிரம்பியவர். அவரின் உண்மை வயதை கண்டறிய பொலிசார் என்பு மச்சை பரிசோதனை நடாத்தி வருகின்றனர். அவர்  தற்போது நீதி விசாரணைகட்காக சிறுவர் குற்றவியல் நியாயசபை முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்பு 22 மார்கழி 2012 இல் இந்திய பாலியற் கொடுமை சட்டங்களை மறுசீரமைப்பதற்காக நீதி ஆணைக்குழு முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மா அவர்களை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட அக்குழு பொதுமக்கள், சட்டவியலாளர்கள், அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் பெண்ணியல் அமைப்புக்கள் என்பவற்றிடம் இருந்து முதல் நாளே சுமார் 6000 சிபாரிசுகள் மின்னஞ்சல் மூலமாக கிடைக்கப் பெற்றது ---reuters.com

பொதுவாக அரசின் பக்கமே கல்லெறி விழுகின்றது. போராட்டக்காரர்களுடன் இணைந்து போராட வந்த டெல்லி முதலமைச்சர் போராட்டக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டார். அரசாங்கத்திற் கெதிராக  முதல்வரே போராட்டமா ? என்ன ஒரு அரசியல் நாடகம் பின்னீட்டாங்க போங்க பெண் முதல்வர். அதோடு நஸ்ட ஈடு என்ற பெயரில் டெல்லி அரசு சொன்ன 15 இலட்சமும் உத்திர பிரதேச அரசு சொன்ன 20 இலட்சமும் இன்று வரை தமக்கு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தமையன் தெரிவித்தார்.

குற்றவியல் வழக்கறிஞர்களின் வழக்கறிஞர் என்று புகழாரம் சூட்டப்பட்ட  ராம் ஜெத்மலானி டெல்லி மாநகர பொலிஸ் அத்தியேட்சகர் நீரஜ் குமாரை மட்டும் பழித்து விட்டு தனது கடமையை முடித்து கொண்டதற்கு ராஜ் சபாவின் உறுப்புரிமை கூட காரணமாய் அமையலாம்.


இந்த நிகழ்ச்சியை வெறும் பெண்ணியலுக்கு எதிரான விடயம் என மட்டும் என்னால் நிறுத்த முடியாது. காரணம் ஒரு மனிதனின் குடலை உருவி எடுப்பது என்பது எமது சினிமாவில் பிரபல்யமான விடயம். ஆனால் அது இன்று எம் கண் முன்னால் யதார்த்தமாவது ஏற்றுக் கொள்ளமுடியாததாகின்றது.

இதை தொடர்வதற்கு  முன்னால் இக்குற்றவாளிகட்கு என்ன விதமான தண்டனைகளை அளிக்கலாம் என முகநுாலில் பரிமாறப்பட்ட விடயங்களை கீழே தெரிவிக்கின்றேன்.

1.   மரண தண்டனை.

2.   ஆயுட்கால சிறைத்தண்டனை

3.   வேதியல் முறையில் ஆண்மையை அகற்றல்

4.   விதைளை விதைப்பையில் இருந்து நீக்கல்

5.   ஆணுறுப்பையும் விதைகளையும் எலி, மூஞ்சூறு போன்ற உயிரிகளை வைத்து கொறித்து அகற்றல்

6.   சித்திரவதை படுத்தி மரணிக்கும் தருவாயில் சிகிச்சை அளித்து மீண்டும் சித்திரவதைக்குட்படுத்தி இதை தொடர்ந்து செய்தல்.

7.   குடியுரிமையை இரத்து செய்தல்.

மேற்குறிப்பிட்டவை எல்லாம் தண்டனைகள், அதாவது குற்றத்தின் பின்னர் குற்றவாளிகட்கு அளிக்கப்படுபவை. ஆனால் மனிதர்களை குற்றவாளிகள் ஆகாமல் தடுப்பதற்கான செயன்முறைகள் அல்ல. இவை பற்றி முகநுாலில் எந்த வித பயனுறு தகவல்களும் இடம் பெற்றது போல எனக்கு தெரியவும் இல்லை. மிக மோசமான தண்டனைகள் உள்ள நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவும் ஒன்று. ஆனால் அடம் லான்சா என்ற 17 வயது சிறுவன் தனது சகபாடிகள் 21 பேரை சுட்டு சாகடித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். உயிருக்கு விஞ்சிய தண்டனை எதுவும் இல்லை. ஏன் தீவிரவாதிகட்கு ஒ்வ்வொரு நாட்டு அரசுகளுமே தாங்கொணா சித்திரவதைகளை வழங்கியும் தீவிரவாதத்தின் இயல்போ செயற்பாடுகளோ மாற்றம் அடையவில்லை. மாறாக அவை விஸ்தரிக்கப்பட்டு கொண்டே செல்கின்றது. இங்கு எனக்கு கண்ணதாசனின் வரிகள் தான் நியாபகத்திற்கு வருகின்றது.

 “ எங்கெல்லாம் உயரமான சுவர்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதை தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.” ஆனால் 1974 இல் இடம் பெற்ற மதுரா வல்லுறவு வழக்கினை விட எத்தனையோ மடங்கு பெண்ணியலுக்காக நீதித்துறையின் மனப்போக்கு விருத்தியடைந்து இருப்பதை ஓர் பாரிய நிகர்சரி விசாரணைகளின் மாற்றங்கள் ஊடாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.


முடிவுப்பகுதி எழுத வேண்டிய நேரம் இது, சட்டப்பரீட்சை தாள் எனில் சட்டப்படி ஆனால் நடைமுறையில் சாத்தியமாகா விடிமான விடயங்களை சிபாரிசுகள் என நாமமிட்டு வரிசைப்படுத்தியிருப்பேன் புள்ளிகளுக்காய். ஆனால் இங்கு சட்டங்கள் சமூகத்தை கட்டுப்படுத்தாது சமூகமே சட்டங்களை ஏற்கும் வரை ( Vice Versa ) என்ன முடிவு ? மனிதனில் உள்ள மிருகம், மிகமிக வேகமாக கடவுளை பின்தள்ளி முன்னேறி வருகின்றது என்பதை தவிர வேறு எதையும் தீர்வாக என்னால் முன்வைக்க முடியவில்லை.

இப்பதிவு சமூகத்தளத்தில் இருந்து வரையப்பட்டது. பரீட்சை நோக்கிற்கு பயனற்றது. ஆனால் சட்டவாளர்கட்கு தவிர்க்க இயலாதது. விரைவில் சட்டத்தளத்தல் இருந்து வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது