'இக்கட்டுரை
தமிழ் தேசியத்திற்கான பரவளவு வகையார்ந்த தேடலாக அமைய வேண்டுமே தவிர, அதற்கெதிரான மாற்றீட்டு
தேடலாக ஆசிரியரால் வகையிடப்படவி்ல்லை.'
உண்மையில்
தேசியத்தின் அர்த்தம் எம்மை தேசிய இனமான யாரும்
அங்கீகரிக்க யாரும் தேவை இல்லை. நாம்
ஒரு தனிப்பட்ட மொழி கலாச்சார பண்புகளோடு வாழ்கையில் நாம் தேசிய இனம் என்பது நிறுவப்பட்டது.
இப்போது இவ்வாக்கியத்தின் அடிப்படை நாம் 13ஆம் திருத்தம் ஊடாகவோ 13பிளஸ் அல்லது 13
மைனஸ் இலோ தங்கியிருப்பது அர்த்தமற்றது. ஏனெனில் ஒருவன் ஒன்றை தந்தால் அதை அவன் திரும்ப
பெறுவதில் அவனுக்கு ஒரு தடையும் இல்லை. அதிகாரத்தை நாம் ஒருவனிடம் இருந்து பெற்றால்
அதை அவன் தனக்கு வேண்டும் பொழுதில் திரும்ப பெறலாம். ஆனால் நாம் எதிர்பார்க்க வேண்டியது
தமிழர்களாகிய எமக்குள்ள இறைமையை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே. அதிகார அங்கீகரிப்பு
என்பது வேறு அதிகார கையளிப்பு என்பது வேறு எமக்கு உள்ள இறைமையின் பிரதிபலனாக உள்ள அதிகாரத்ததை
யார் ஏன் எப்படி எமக்கு கையளிக்க வேண்டும் அல்லது பகிர்ந்து அளிக்க வேண்டும். உங்கள்
வீட்டை உங்களுக்கே ஒருவன் பகிர்ந்தளிப்பதை போன்றதே இன்று நாம் கேட்டு நிற்கும் அதிகார
பரவலாக்கம் என்பது இக்கட்டுரையாளனின் திண்ணமான எண்ணம்.
இக்கட்டுரை
இன்றைய மாகாண சபை தேர்தலை முன்னிறுத்தி முதல் பாகத்தில் இலங்கையின் தமிழர்தார்ப்பரிய
அரசியற்சூழலையும் இரண்டாம் பகுதியில் யாப்படிப்படையில் 13ம் திருத்தம் ஊடான மாகாண சபை
நிறுவலின் சட்டவலிதார்ந்த தார்ப்பரியத்தையும் அலச முற்படுகின்றது.
பகுதி
01
21-03-2013 அன்று இலங்கை அரசியல் மற்றும் ஜனநாயக வரலாற்றில்
மிக முக்கியமான நாள் அல்லது மிக முக்கிய நாளாக காட்டப்பட்ட நாள் என்பது தான் மிகப்பொருத்தமாக
இருக்கும் என்பதே எனது தொடக்கம், ஒன்றுமில்லமாத மாகாண சபை இவ்வளவு பூதாகரமானதாக காட்டப்படுவதுதான்.
இந்த மாகாண சபை தேர்தலை குறிப்பாக வட மாகாண சபை தேர்தலை தமிழர்கள் மத்தியில் தமது உரிமையின்
எதிரொலியாக, தீர்வின் உறைவிடமாக இன்றைய அரசியற் சூழல் அதை ஏற்க ஏற்கனவே தயாராகி விட்ட
அல்லது தயார் படுத்த்ப்பட்டு விட்ட தமிழர்களிடம் முன்வைக்க்ப்படுகின்றது.
முதலில்அரசியற்சூழல்
என நோக்கின் இலங்கை அரசாங்கமும், 2013ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதியும் தங்களது பெருந்தன்மையும்,
சிறுபான்மையினர் மத்தியிலான கரிசனையை வெளிப்படுத்தும் நோக்காகவும், யுத்தக்குற்றம்
எனும் அழுத்தத்தை அதிகார பரவலாக்கம், இனப்பிரச்சனைக்கான தீர்வுப்பொதி எனும் மென்மையாக்கிகள்
மூலம் சமப்படுத்தவும் சர்வதேச நிர்ப்பந்தங்களை சரிப்படுத்தவும் இத்தேர்தல் சிங்கள பௌத்தத்திற்கு
அளிக்கின்றது.
இலங்கையின்
9 மாகாண சபைகளில் 8 மாகாண சபைகளின் ஆட்சியும் கட்சி சார்ந்தோ,சாராதோ பெரும்பான்மை பௌத்த
சிங்களத்தினுள் அகப்பட்டிருக்க போதிலும் அதிலும் கூட இருமாகாண சபை கலைப்பு, தேர்தல்
எனும் கண்கட்டு வித்தைகள் எல்லாம் இது ஓர் தாக்கமற்ற அல்லது மற்ற மாகாண சபைகளை ஒத்த
சாதாரண நிகழ்ச்சிக்குள் கொண்டு வரும் ஓர் உத்தி என்பது மறுக்க .இயலாதது. ஆனாலும் அரசாங்கமும்
அதன் ஆதரவுகளும் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மறைமுக ஆதரவை வழங்கி அதன் வெற்றி
பெறுகையை உறுதி்ப்படுத்த உதவின என்பது தான் உண்மை. ஏன் எனில் தேர்தல் விஞ்ஞாபனங்கள்
வெளியிடும் கட்சிகள் எவையுமே அதை நடைமுறைப்படுத்தியதில்லை இது குற்றமுமில்லை என ஐக்கிய
தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாஸ குறிப்பிட்டமை மிகச்சரியானது. உதாரணமாக
இராவய பலய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் இலங்கை அரசிற்கு முரணாக உ்ள்ளது
என கூறி வழக்கிட முடியும் எனில் ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிடும் போதும்
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என கூறுவதும் அரசியல் யாப்பிற்கு முரணாண வகையில்
குற்றமே ! அரசியலரமைப்பு மக்களின் ஆணைக்கமைய மாற்றம் பெறக்கூடிய ஒன்றுதானே தவிர எக்காலத்திற்கும்
உரியதொன்றல்ல.
இரண்டாவதாக
நான் குறிப்பிட்ட விடயம் மக்கள் இதை ஏற்க தயாராகி விட்டார்கள் என கூறியது இன்று தமிழர்கள்
அனைவருமே ஏதோ ஒரு தோல்வியின் மனத்தளத்தில் தமது இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என
தெரியாமல் குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் உண்மை. தமது இயலாமையை இந்த
வட மாகாண சபை தேர்தல் மூலம் தமிழ்த் தேசியம் எனும் சாதனையை நிகழ்த்தி விட வேண்டும்
எனும் உந்துதலில் காணப்படுகின்றனர் என்பதும் உண்மையே அதற்கேற்றாற் போல் அரசியல் நுட்பம்
அறிந்த சட்ட மேதை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக
தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தியிருப்பது அவர்களது வெற்றி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்த
உதவிப்படுத்த உதவியிருக்கின்றது. அதற்காக அரசியற் கட்சிகள் கூறுவது அல்லது வேட்பாளர்களின்
வாய்ச்சொல் வீச்சுக்கள் மற்றும் கட்சி விஞ்ஞாபனங்கள் விபரிப்பது எல்லாமே வட மாகாண சபை
வெற்றியின் மூலம் சாத்தியப்படும் என்றோ, ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் பெறினும் கூட
நிச்சயம் அவை நிகழளளவிற்கு புறம்பானவை என என்னால் கூற முடியும் இது எனது சட்ட அனுபவங்கள்
மூலமும், சிங்கள மற்றும் சர்வதேச நபர்களுடனான கலந்தாய்வின் பின்னர் 13ஆம் திருத்தம்
தொடர்பில் தமிழர்கள் எதையும் சிங்கள பௌத்தர்களிடமிருந்து மட்டுமே பெறுவது என்பது நிறுவப்பட்ட
ஒன்றாக விளங்குகின்றது.
நோர்வேயில்
எரிக் சொல்கெய்மை சந்தித்த போது தமிழர்களின் போராட்டமோ அல்லது புலம்பெயர் தமிழர்களின்
அழுத்தங்களோ இலங்கையில் எவ்வித மாற்றங்களையும் ஏந்படுத்தாது எனவும் ஜனாதிபதியே எதற்கான
தீர்வையும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு வெறும் பொருளாதார அபிவிருத்திகள் மட்டும் தமிழர்களை
திருப்திபடுத்தி விடாது என்பதை சீனா-திபெத் உதாரணம் மூலம் விளக்கியிருந்தார். உலக இளைஞர்
தினமன்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர துாதுவரை சந்தித்த போது மகிந்த
சிந்தனை அடிப்படைடிலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC)
பரிந்துரைகள் மட்டுமே இலங்கைக்கான தீர்வாக அமைய முடியும் என்பதோடு சர்வதேச அழுத்தங்கள்
இலங்கைக்கு நன்மை பயக்காது என குறிப்பிட்டார்.
இவை
எல்லாம் தமிழர்கள் தொடர்பில் சர்வதேச பார்வைகள் என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில்
இலாபம் இன்றி எவரும் எதிலும் ஈடுபடமாட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்தும் சர்வதேசம்,
தமிழர் தரப்பின் மீது பாசத்தை பொழிய வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன் ?
ஐக்கிய
நாடுகளி்ன் சபைகளில் அதிகாரமுள்ள சபை எனில் அது பாதுகாப்பு சபைதான், அதன் வீட்டோ அதிகாரம்
உள்ள நாடுகளில் தற்போது சீனாவும், ரஸ்யாவும் இலங்கை சார்பாக உள்ளதால் அதை வைத்து மேற்குலகத்திற்கு
பூச்சாண்டி காட்டுவது வழமை போலாகிவிட்டது. இப்போது சீனாவின் முத்துமாலை வியூகத்திற்கு
இலங்கை தலை சாய்ப்பது இந்தியாவின் வல்லாதிக்க கனவில் ஓர் இடிதான்.
ஆனால்
தமிழ்த் தேசியம் என்ற வகையில் தமிழர்கட்கு இந்தியா நண்பன் எனும் பூச்சாண்டி அதை விட
நகைப்புக்குரியது. ஏஎனனில் இலங்கை இரண்டாக பிரிவதிலோ அல்லது இலங்கையின் ஆட்சிப்புல
எல்லையினுள் இன்னோர் தன்னாட்சி அதிகாரம் அமைவதையோ இந்தியா ஒரு போதுமே அனுமதிக்காது.
ஏனெனில் ஐயமெதுவும் இன்றி இரு பகை அரசுகள் தமது ஆதரவை ஒரு போதும் ஓரே நாட்டிற்கு வழங்கப்போவதில்லை.
இரண்டில் ஏதோ ஒரு நாடு இந்தியாவை எதிர்க்கப்போவவது திண்ணம். இரண்டாவது காரணம் இலங்கைத்தமிழர்கள் சுயாட்சியை
பெற்றால் தமிழ் நாட்டு தமிழர்களும் தங்களுக்கு தமிழ் எனும் அடிப்படையில் சுயாட்சி கோருவது
கற்பனாவாதமாக அமைய முடியாது.
அதோடு
இலங்கை-இந்திய ஒப்பந்தம் 13ம் திருத்தம் பற்றியயோ அல்லது அதிகார பகிர்வின் வீச்செல்லை
பற்றியோ எதுவும் கூறவில்லை. பின்பு சர்வதேச பிணிக்கும் ஒப்பந்தம் அல்லது வியன்னா பிரகடனம்
என்றெல்லாம் புருடாக்கள் விடுவது வெறும் கானல் நீர்தான். 13ஆம் திருத்தம் (மாகாண சபை
தோற்றத்திற்குரியது) முழுக்க முழுக்க சிங்கள அரசிற்கும் அன்று தம்மை தமிழ்த் தேசியவாதிகளாக
காட்டிக் கொண்டோருக்கும் இடையிலான ஓர் இணக்ப்பாட்டின் ஓர் அடிப்படைதான். ஆனால் அவ்விணக்கப்பாட்டில்
இந்திய அழுத்தம் தகவளவில் காணப்பட்டது என்பது மட்டும் உண்மை
.
ஆனால்
தந்தை செல்வா அவர்கள் காங்கேசன்துறை இடைத்தேர்தலை வென்ற பின்பு 1975 மாசியில் பினவருமாறு
குறிப்பிட்டார்.
“நாம் கடந்த 25
வருடங்களாக ஒன்றுபட்ட இலங்கை எனும் தார்ப்பரியத்தினுள் எமக்கான அரசியல் உரிமைகளை சமத்துவமாக
அனுபவிக்க போராடினோம், ஆனாலும் தொடர்ச்சியாக பதவி வகித்து வந்த சிங்கள அரசாங்கங்கள்
சுகந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே நாம் இந்த நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்து மறுக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கு அமைய தமிழ் மக்களிடம் உள்ள இறைமையின்
பாற்பட்டு தமிழ்த் தேசிய ஈழம் உருவாகி நாம் விடுதலையடைவோம் என நான் இத்தால் பிரஸ்தாபிக்கின்றேன்.”
இதே
போன்ற நிலைமையை உருவாக்கிய 1976ஆம் ஆண்டின்
வட்டுக்கோட்டை பிரகடனமும் இன்றைய தமிழரின் நிலைமையை அன்றே தீர்வுடன் தீர்க்கதரிசனம்
கூறியிருப்பதாக எனக்கு ஏனோ எண்ண தோன்றுகின்றது. இலங்கையின் பெரும்பான்மை வாக்கு வங்கியை
தன் வசப்படுத்த சிறுபான்மையினர் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை விடுத்து தொடர்ச்சியாக
இலங்கையை ஆட்சியை செய்த மாற்றுக்கட்சி அரசாங்கங்கள் வேறொரு நுட்பத்தையும் அறிந்திருக்கவி்ல்லை
அல்லது அறிய முற்படவும் இல்லை. இருவேறு துருவ செயற்பாடுகள் அல்லது கொள்கைகள் எவ்வாறு
ஒன்றாக பயணிக்க முடியும்? இலங்கை ஆட்புல எல்லையினுள் அல்லது அரசினுள் 13ஆம் திருத்தம்
ஊடாக தமிழருக்கு சுயாட்சிக்கான கதவுகள் திறக்கப்படும் என நான் கருதவில்லை. அதை நாம்
இப்போது சட்டரீதியாக ஆராய்வோம்.
பகுதி
02
இதில்
நாம் அதிகார பகிர்வின் அல்லது தன்னாட்சியின்
சட்டவலிதாண்மையை பரீட்சிக்க இருக்கின்றோம்.
இலங்கையின் மீயுயர்வானது அரசியல் அமைப்பு அல்லது
அரசியல் யாப்பு ஆகும். இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு இது அரசியலமைப்பின் உறுப்புரை
2 இன் மூலம் தெளிவாக வகையிடப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வுறுப்புரை ஆனது மக்கள் தீர்ப்பின்றி
திருத்தப்பட முடியாதது என உறுப்புரை 83(அ) வகையிறுக்கின்றது. மக்களின் இறைமை மூலமே
அரசு தோற்றம் பெறுகின்றது, அவ்விறைமை மக்களிடமே உள்ளதான உறுப்புரை 3 விபரிக்கின்றது.
எனவே மக்கள் ஆணைக்கு மாறாக அரசாங்கங்கள் செயற்பட முடியாது. ஆனால் அந்த இறைமை யாருடையது
பெரும்பான்மையினதா அல்லது சிறுபான்மையினதா? அரசியலமைப்பு பெரும்பான்மை எதிர்கருவியாக
செயற்பட வேண்டும் என்ற கருதுகோளிருப்பினும் நடைமுறையில் அது பெரும்பான்மை சார்பாக செயற்படுவதே
யதார்த்தமானது. எனவே குறிப்பிட்ட மக்களின் குறிப்பிட்ட நல இறைமையை எவ்வாறு பிரயோகிக்க
வேண்டும் என அரசின் இயந்திரங்கயளாகிய நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என்பவற்றிற்கு உறுப்புரை
4 மூலம் எடுத்துரைக்கின்றது.
13ம்
திருத்தம் 14-கார்த்திகை-2013 இல் உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டதன் பெயரில் இலங்கையில்
மாகாண சபை நிறுவப்ப்ட்டது. இது உறுப்புரை 2 ஐ மீறுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. ஏனெனில் அரசியல் யாப்பு பொருள்கோடலிற்கான அதிகாரம் உயர்நீதிமன்றிடம்
மட்டுமே உண்டு. அவ்வழக்கு
தீர்ப்பின் போது நீதிபதிகள் 5 ற்கு 4 என பிரிந்து 13ம் திருத்தம் அரசியலமைப்பை மீறவில்லை
என தீர்த்தனர். எனவே முகத்தளவிலேயே 13ம் திருத்தம் ஆனது உறுப்பரை 2 ஐ மீறவில்லை. அதாவது
இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை பாதிக்கவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே இப்போது
இடம் பெறும் அது 13ம் திருத்தத்தின் மீதான தேர்தலின் விளைவாக அமையப்பெறும் மாகாண சபை
எப்படி சமஷ்டி அல்லது சுயாட்சி என்று பூசுவார்த்த விளையாட்டுக்களை காட்டப்போகின்றது
என சிந்திப்பது தமிழ்த் தேசியத்தின் மீதான ஓர் சவாலும் இலங்கை தமிழர் ஒவ்வெருவர் மீதான
கடமையும் ஆகும்.
அடுத்த காட்டப்படும் பூச்சாண்டி இந்தியா, ஏதோ 13ம் திருத்தத்தை அமுல்படுத்த
மறுப்பது சர்வதேச மீறல் போலவும் அதற்கான இலங்கையை இந்தியா தண்டிக்கும் என்பது போலவும்
காட்டப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையில் அதிகார
பரவலாக்கத்துடன், மாகாண சபை உருவாக்கம் ஒரு ஊக்கியாகவும், உறுதிப்படுத்தும் கருவியாகவும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் சரத்து 1.5 பின்வருமாறு கூறுகின்றது.
இலங்கையின் ஒற்றுமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் உருவாக்கும் சக்திகளை வலுவடையச் செய்யும் அவசியத்தை கருத்திற்கொண்டு அதன் பல்லின,பன்மொழி,பல்சமய, பன்மைத்துவ சமுதாயத்தை பேணி அனைத்துக்குடி மக்களும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் ஒருங்கிணைந்து வாழ்ந்து வளம் பெற்று தமது அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்.
அது வேறெதைப்பற்றியும் கூறவில்லை. ஆனாலும் இலங்கை அரசியலமைப்பின் பகுதி 2 ஒ்ற்றையாட்சினுள் எப்படி
பன்மையை அனுமதிக்கும், அதோடு உறுப்புரை 9 பௌத்த மதத்திற்கான அரசின் கடமைகளை விளக்குவதோடு, இதை காரணம் காட்டி முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கத்தோலிக்க சமய ஒன்றியமொன்றின் பதிவுக் கோரிக்கையை நிராகரித்தமை இவ்வுறுப்புரையின் பாரதுாரத்தை காட்டுகின்றது. அதோடு மொழி உரிமையில் தமிழும் அரச கரும மொழி என்றே குறிப்பிடப்படுகின்றது. ஏன் “ழும்” என்ற வார்த்தை பிரயோகம் என்று நாம் அறிய வேண்டும்.
13ம் திருத்தத்ததை பற்றி
கலாநிதி.எஸ்.நரபாலசிங்கம் அவர்கள் கூறியதை நான் இங்கு மீள்பதிப்பிக்க விரும்புகின்றேன்.
“பதின்மூன்றாம் திருத்தம் உண்மையிலேயே ஓர் நல்லெண்ணத்துடன் உருவாக்கபடவில்லை. அது இலங்கையர்
அனைவரும் சமத்துவம் பெற்றவர்களாக வாழ்வதை நெருங்கியேனும் உறுதிப்படுத்தவில்லை. துரதுஸ்ட
வசமாக அரை நுாற்றாண்டிற்கு பின்னரும் இன்றும் பிரச்சனைகள் தீர்ந்ததாக நான் கருதவில்லை.
அடுத்து நாம் அரசின் இயந்திரங்களின் நிலைமை மாகாண மறைமையின் கீழ்
எவ்வாறு உள்ளது என காண்போம்.
01.நிறைவேற்றுத் துறை
நிறைவேற்றுத்துறைக்கான முழு அதிகாரமும் மாகாண ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.
மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் முழு தற்றுணிபின் பெயரில் நியமிக்கப்படுதோடு அவரின் அனுமதிக்காலம்
வரை மட்டும் பதவியை வகிக்கலாம். எனவே எவர் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் ஜனாதிபதிக்கு
பணியாமல் பதவி வகிக்க முடியாது. நியமிப்பவரும் அவரே நிறுத்துபவரும் அவரே. எனவே நிலத்தின்
மீது மேசை, மேசை மீது பூனை எனில் நிலத்தின் மீது பூனை கதை போல மாகாண சபையின் கட்டுப்பாடு
ஆளுநரிடம் ஆளநரின் கட்டுப்பாடு ஜனாதிபதியிடம் ஆகவே மாகாண சபையின் கட்டுப்பாடு ஜனாதிபதியிடம்
அவ்வளவே !
ஆளுநர் தனது அதிகாரத்தை நேரடியாகவே அல்லது மாகாண சபை மூலமோ பிரயோகிக்க
முடியம் எனில் அவருக்கு அதிகாரத்தை மாகாண சபையை மீறி பிரயோகிப்பதில் எந்ந தடையும் இல்லை.
13ம் திருத்தத்தில் மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அருமையான பணி ஆளுநருக்கு உதவியும்
ஆலோசனையும் வழங்குவது மாத்திரமேயாகும். அதோடு ஆளுநர் கோரும் சமயங்களில் எல்லாம் மாகாண
சபை அமைச்சர்கள் தேவையான தகவல்களை வழங்கவும் 13ம் திருத்தம் கட்டாயப்படுத்துகின்றது.
பொலிஸ் அதிகாரங்களை பார்த்தால் மாகாண உதவிப் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும்
அதிகாரம் ஆளுநருக்கும் மாகாண முதல்வரு்க்கும் இடையிலானது ஆனால் அங்கு கருத்தொற்றுமை
தோன்றாதவிடத்து ஜனாதிபதியே நியமிப்பார். மாகாண சபை பொலிஸ் அத்தியேட்சகரை நியமிக்கும்
வலுக்கொண்டதாக இருப்பினும் உதவிப் பொலிஸ் மா அதிபரின் ஆணை அனைத்து பொலிசாரையும் கட்டுப்படுத்தும்
என்பது நடைமுறை.
அடுத்து காணி அதிகாரங்ளை
பார்ப்பின் அரச காணிகள் முழுவதுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் வருகின்றது. அதனால்
அரச காணியினுள் குடியேற்றமோ எதுவோ அதல் தலைப்போட மாகாண அரசிற்கு அதிகாரம் இல்லை.
அடுத்து முக்கியமாக மத்திய அரசு கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டால்
அதன் படி அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள்
வந்து விடும் . உதாரணமாக எதுவும் சிறுவர், பெண்கள், வியாபார முயற்சி என எதுவும் ஓர்
கொள்கை பிரகடனமாக பிரகடனப்படுத்தி விட்டு மத்திய அரசு அவ்விடயத்தில் மாகாண அரசின் அதிகாரத்தை
முற்றாக நீக்கிவிட முடியும்.
அதோடு ஜனாதிபதி அவசர கால நிலை பிரகடமொன்றை செய்வதன் ஊடாக அனைத்து
மாகாண சபை அதிகாரங்களையும் தன்வசப்படுத்தலாம்.
02.சட்டவாக்கத்துறை
சட்டவாக்கத்தை பொறுத்த மட்டில் 13ம் திருத்தத்தில் மூன்று நிரல்கள்
சட்டவாக்கம் தொடர்பில் உண்டு
01.மாகாண சபை நிரல் ( மாகாண சபை மட்டும் சட்டமாக்கக் கூடிய விடயங்கள்)
02. மத்திய அரசு நிரல் ( மத்திய அரசு மட்டும் சட்டமாக்கக் கூடிய
விடயங்கள் )
03. ஒருங்கியை நிரல் ( பொதுவாக இருவரும் சட்டமாக்க கூடிய விடயங்கள்
)
இதில் வேடிக்கை என்ன எனில் மூன்றாம் நிரலில் இருவரும் சட்டம் ஆக்கின்
அதன் மீது பாராளுமன்ற சட்டமே செல்லும். அப்போது உண்மையில் உள்ளது இரண்டு நிரல்தானே
! அதாவது ஒருங்கியை நிரல் உண்மையில் மத்திய அரசு நிரலினுள் அடக்கப்பட்டு விடும். அதோடு
மாகாண சபை நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பில் கூட பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு
சட்டமாக்கின் அதுவே செல்லும். அதோடு மாகாண சபையின் சட்டங்கள் யாவற்றுக்கும் ஆளுநர்
சம்மதம் அளிக்க வேண்டும். இவ்வளவும் கடந்தாலும் மாகாண சபைக்கு என்று தனியான சட்ட வரைஞர்
திணைக்களம் கிடையாது. அதற்கு மத்தியையே நம்பி இருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய சட்ட
வரைஞர் திணைக்களம் உள்ள பணிச்சுமையில் மாகாண சட்டங்களை வரைதல் நிச்சயம் தாமதத்திலும்
தாமதமாக இடம் பெறக்கூடிய ஒன்று.
03.நீதித்துறை
இதில் மேல்நீதிமன்ற அதிகாரங்கள் பகிரப்படினும் மாகாண சபையின் நீதிபதிகளை
நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நீதிச்சேவை ஆணைக்குழுவால் இடம்
பெறுவதால் ஜனாதிபதியின் செல்வாக்கு நிச்சயம் தவிர்க்ப் படமுடியாததாகின்றது. அதோடு அரசுக்கெதிரான குற்றம், அரச ஊழியர்கட்கு எதிரான குற்றங்கள் மற்றும் பதவி வகி சார் குற்றங்கள் மாகாண நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்டவை.
04.நிதித்துறை
இது அரசின் நேரடி முகவரமைப்பு இல்லை எனினும் மிக முக்கிய பங்கை அரசின்
செல்வாக்கி்ல் பிரயோகிக்க தக்கது. மாகாணங்கள் பெறும் வருவாய் முழுவதும் திறைசேரி வைப்பிலிடப்பட்டு
பின்பு நிதிக்குழுவின் ஆலோசனையின் பெயரில் ஜனாதிபதி ஒவ்வொரு மாகாணத்திற்கும் பகிர்ந்தளிப்பார்.
ஆயினும் நிதிக்குழுவை கூட அவரே நியமிப்பார். அவர் கொடுத்த நிதியை கூட ஆளுநரின் சம்மதம்
இன்றி மாகாண சபை கையாள முடியாது. அதோடு நிதி வரி சம்மந்தமான எந்த சட்டங்களை ஆக்கவோ
இருக்கும் சட்டங்களை திருத்தவோ அல்லது அழிக்கவோ ஆளுநரின் சம்மதமின்றி மாகாண சபைக்கு
அதிகாரம் கிடையாது.
மொத்தத்தில் 13ஆம் திருத்தம் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆனது
சர்வதேச அழுத்தத்திலோ அல்லது சட்டவலிதார்ந்த தன்மையிலோ தங்கியிருக்கவில்லை. ஜனாதிபதியின்
கருணையின் நிமித்தமே தங்கியுள்ளது என்பதை நான் போதுமானவளவு நிரூபித்து விட்டதாக எண்ணுகின்றேன்.
அவர் நினைத்தால் தான் உண்டு. அவர் எப்படி நினைப்பார் வாக்கு வங்கி பெரும்பான்மையிடம்
எனவே அவர் நினைக்க போவதுமில்லை. எமக்கு இப்போதுள்ள மாகாண சபை முறைமை மூலம் யார் அறுதிப்
பெரும்பான்மையுடன் வெற்றி பெறினும் நாற்காலிகளை தவிர வேறேதுவும் கிடைக்கப் போவதுமில்லை.
வெற்றி பெறுபவர்கள் உண்மையில் தமிழ்தேசிய உணர்வுகட்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்
என வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டலை ஏற்கவும் விவாத ஊடாட்டங்களுக்காகவும்
எப்போதும் தயாராகவே இருக்கின்றேன். arjunwil@yahoo.com
எனும் இணைய அஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.