இன்று இலங்கையில் மட்டுமின்றி அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பொருளாதார காரணிகளை பெருமளவு சார்ந்தது எனில் அபிவிருத்தியடைந்த நாடுகளை பொறுத்த வரையில் அது ஆணாதிக்க வாத சிந்தனையின் அடித்தளத்தை சார்ந்தது எனலாம். இலகுவாக பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் அவள் பெண் எனும் ஒரு காரணத்திற்காக அவள் மீது காட்டப்படும் வன்முறை என இலகுவாக கூறலாம். பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்குவது பற்றிய சமவாயம் 1979 (CEDAW) பின்வருமாறு பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை விளக்குகின்றது. இதை இலங்கை ஏற்று அங்கீகரித்துள்ளமை கருத்திற்குரியது.
“பெண்களுக்கெதிரான வன்முறை என்பது அரசியல், பொருளாதார, சமூக,கலாச்சார, குடியியல், அல்லது வேறு ஏதேனும் துறையில் ஆணுக்குப் பெண் சமம் என்ற அடிப்படையில், பெண்கள் அவர்களது விவாக அந்தஸ்து எப்படியிருப்பினும், மனித உரிமைகளையும் அடிப்படைச்சுகந்திரங்களையும் ஏற்றங்கீகரிப்பதை, துய்ப்பதை அல்லது வலுக்கெடும் பயன் அல்லது நோக்கம் கொண்டதும், பால் ரீதியான ஏதெனும் வேறுபாடு, விலக்கி வைத்தல் அல்லது மட்டுப்பாடு எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.”
ஆனாலும் இலங்கை ஓர் கீழைத்தேய இறுக்கமான கலாச்சார பின்ணணியை கொண்ட நாடு. கீழைத்தேயத்தின் இந்த பிண்ணணியை திறந்த மனப்பான்மையுடன் ஆராயும் போது இன,மத பேதமின்றி பெண்களை இரண்டாந்தரத்தவர்களாக பார்க்கும் தகைமையை இது கொண்டது. அதிலும் தமிழரை பொறுத்தளவில் அதன் தாக்கவளவு சற்று அதிகமே. ஒரு இனம் தனக்கொரு தனித்தொரு ஆளுமையை வெளிக்காட்டக்கூடிய தளம், அதற்குரிய தனிப்பட்ட சட்டங்களே, அவ்வகையில் மலபார்கள்( வட மாகாண தமிழர்கள் ) இன்று வரை தந்தை வழிச் சட்டமாகிய தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டிருக்கின்றார்கள். இச்சட்டம் காரணங்கள் பல சொல்லற்கரியதற்கப்பால், முகத்தளவிலேயே பெண்களை இரண்டாம் நிலைப்படுத்தி வைத்திருப்பதை காணலாம். ஆனால் இதற்கு மாறான வகையில் பெண்களை முதன்மைப்படுத்தி தாய்வழி சமூகத்தை ஊக்கப்படுத்திய முக்குவச் சட்டம் ( கிழக்கு மாகாண தமிழருக்கானது) இன்று வழக்கொழிந்து செல்லாததாகி விட்டது. இச்சிறு உதாரணம் மூலம் எமது வரலாற்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு கீழைத்தேய சமூகம் அதன் கலாச்சாரத்தினுாடாக காட்டும் வன்முறை அல்லது பாரபட்சம் தெளிவாகின்றது.
உலகம் முழுவதும் அனர்த்தங்கள் இடம் பெறினும் அது இயற்கையானதாகவோ அல்லது மனதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருப்பினும் முதலில் அதன் பாதிப்பை முகத்தளவில் ஏற்பது பெண்களே, இவ்வேற்புக்கான காரணி பெண்கள் ஆண்களை விடவும் உடலியல் பலம் குறைந்தவர்கள் எனும் காரணியை விடவும் பல காரணிகளில் தங்கியுள்ளது. அவை கலாச்சாரம், அரசியல், சமூக குழுமங்களின் வாழ்க்கை முறைமை, பொருளியல் பின்னடைவு, பெண்களின் சொத்தாளுகை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விடயங்கள் அவற்றோடு இறுதியாக உடலியற் வேறுபாட்டு காரணங்களையும் காட்ட முடியும்.
ஆனாலும் பெண்களின் நிலையை மேம்படுத்த சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல சட்டவேற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பெண்கட்கெதிரான பாகுபாடு என்பது மனித உரிமை மீறல் என்ற கண்ணோட்டத்திலேயே முதலில் பார்க்கப்பட வேண்டியது எனலாம். அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights) உறுப்புரை 2 இனுாடாக அனைத்து வித பாரபட்சங்களையும் நிராகரிக்கின்றது. அத்தோடு இவ்வுரிமையானது இலங்கையின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பின் உறுப்புரை 12 இனுாடாகவும் பின்வருமாறு உறுதிப்படுத்தப்பட்டது.
“சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள், அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள். இதன் தொடர்ச்சியானது பால் உட்பட வேறெந்த காரணியும் பாரபட்ச காரணியாக அமையக்கூடாது என வலியுறுத்துகின்றது.”
இவ்வுறுப்புரை மீறப்படின் இலங்கையின் அதியுயர் நீதிமன்றமாகிய உயர் நீதிமன்று மூலம் நிவாரணத்தை பெற்று கொள்ளலாம்.
மேற்கொண்டு சர்வதேச சட்ட உபகரணங்களை நோக்கின் இலங்கை ஓர் தரப்பாக உள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகட்கான பொருத்தனையும் (International Convention on Civil and Political Rights) பெண்களுக்கான பாரபட்சத்தை மறுக்கின்றது. இருப்பினும் சர்வதேச சட்ட உபகரணங்கள் பல தேசிய அரசுகட்கு ஓர் பொதுவான வழிகாட்டியாக அமையுமே அன்றி பிணிப்பவையாக கருதப்பட முடியாதவை. சில சர்வதேச உடன்படிக்கைகள் கூட பிணிக்கும் தகவுடையவையாக காணப்படினும், மேற்பார்வை அல்லது உடன்படிக்கை விலகலை சீர்செய்யும் அமைப்புக்களின் செய்நிலை நடைமுறையில் திருப்திகரமானதாக இல்லை என்பது இன்றைய நிலைப்பாடு.
இலங்கையின் நிலையை பொறுத்த மட்டில் ஏற்கனவே குறிப்பிட்ட உறுப்புரை 12 ஐ அரசியலமைப்பின் உறுப்பரை 12(4) ஓர் மட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது. இதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் விஷேட சலுகைகளை வழங்கினால் அது ஆண்களுக்கான சமத்தவத்தை மீறுவதாக கருதப்பட கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓர் முகத்தளவு வாசிப்பானது இலங்கையின் நடைமறை அரசியலமைப்பு பெண்களுக்கு ஆண்களை விட உயர்ந்தளவான இடத்தை வழங்கியுள்ளமை தெளிவானது.
சட்டம் என்பது சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள் எனும் வரைவிலக்கணத்தின் போது சட்டத்தை மீறினால் கிடைக்கும் தண்டனைக்கு பயந்தே பெரும்பான்மையான குடிகள் சட்டத்தை மீறுவதில்லை. அவ்வகையில் பெண்கட்கு எதிரான குற்றச்செயல்கள் பல இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் (Penal Code) நிரற்படுத்தப்பட்டுள்ளன. இதன் பகுதி XVI ஆனது மனித உடலுக்கும் மனித உயிருக்கும் எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய குற்றங்கள் பற்றி கூறுகின்றது. இதில் குறிப்பிட்ட குற்றங்கள் பெண்கட்கு உடலியல் ரீதியில் வீட்டிலும் வெளியிடங்களிலும் ஓர் மட்டுப்பட்டளவு பாதுகாப்பை அளிக்கின்றது. குறிப்பாக பிரிவுகள் 363, 1995இல் இன்றைய நிலைகட்கு ஏற்றாற் போல சுமார் ஓர் நுாற்றாண்டிற்கு பின்னர் இலங்கை சட்டவாக்கதுறையால் திருத்தியமைக்கப்பட்டது. முன்னரைப் போல குற்றவாளிகட்கு நீதிபதிகளின் தயவில் மன்னிப்பளிக்காமல் குறைந்த பட்ச தண்டனையை அமுலாக்கியது. அத்தோடு குழு பலாத்காரம், தடுப்பில் வைத்து பலாத்காரம், சுயநினைவற்ற நிலையில் பலாத்காரம், கர்ப்பிணிப் பெண்கள் மீதான பலாத்காரம் என பல வகைகளில் தண்டனைகளை நீட்சியாக்குகின்றது. குறிப்பாக 1995இன் திருத்தமானது பாலியல் சேட்டைகட்கு பிரிவு 345 இன் படி தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனையை விதிப்பதுடன் பொது போக்குவரத்து மற்றும் வேலைத்தள தொல்லைகளில் இருந்து பெண்களை காப்பதுடன், பிரிவு 346(அ) முறையில்லாப் புணர்ச்சியிலிருந்தும் பெண்களை காக்கின்றது. இக்குற்றங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண் சிறார்களே என்பது மனவருத்தம் அளிக்கக்கூடிய உண்மை.
அடுத்த பெண்களுக்கு எதிரான குற்றம் என பார்க்கையில் பெண் கடத்தல் (Trafficking of Women) என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது. நாட்டினது பூகோள பரப்பின் அப்பாலும் அல்லது நாட்டின் உள்ளேயும் “தொழில் வாய்ப்பு” எனும் மாயக்கண்ணாடியை காட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைப்பெண்கள் இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் தலைநகரில் வர்த்தக ரீதியில் பாலியல் சேவையாற்றுவதற்காக பயன்படுத்தபட்டு வருகிறார்கள். அல்லது வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக நடாத்தப்படும் அவலத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தண்டனைச்சட்ட கோவையின் 2006ஆம் ஆண்டின் திருத்தமானது ஐக்கிய நாடுகளின் அனைத்து வகையான மனித கடத்தல்களின் தடுப்பு விருப்பேட்டில் (UN Protocol on Trafficking and Prohibited all forms of Human Trafficking). மனித கடத்தலுக்கான விரிவான வரைவிலக்கணத்தை உள்நாட்டுச் சட்டம் என்ற வகையில் உள்ளீர்த்திருப்பினும் அதன் அமுலாக்கற் பொறி முறை ஓர் திட்டமிட்ட ஏற்பின் விளைவே கொடுக்கவில்லை. ஏனெனில் சட்ட அமுலாக்க முகவர்கட்கு பெரும்பாலான குற்றங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதில்வை. அவ்வாறு கொணரப்படின் பொருண்மைவாத (Substantial) ரீதியில் இலங்கையின் சட்டத்தளம் நிவாரணங்கள் வழங்குவதில் தாராளமாகவே உள்ளது. உதாரணமாக பாதிக்கப்பட்ட பெண் நிர்வாக துறையினரால் மேற்கண்டவாறு துன்புறுத்தப்படின் சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சட்டம் இல 22 இன் 1994 (CAT Act) இன் கீழ் குற்றவாளிக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையையும், பாதிக்கப்பட்டவர்க்கு ரூ.50,000 வரையான நட்டஈட்டையும் பெற முடியும்
ஆனாலும் இலங்கைச்சட்டம் இன்று வரை “திருமண வல்லுறவை” (Marital Rape) ஓர் குற்றமாக அங்கீகரிக்கவில்லை. எனவே மனைவியின் சம்மதமின்றி கணவன் அவளை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் இன்று பாதிக்கப்பட்ட பெண் நீதியின் முன் எவ்வித நிவாரணங்களும் பெறும் தகுதியை இழக்கிறாள். ஆனால் இந்தியாவை பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட மனைவி கணவனுக்கெதிராக நிவாரணம் பெற உரித்துடையவள்.
இலங்கையில் குடும்பம் எனும் அலகு மிக முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றது. குடும்ப நிலையை பேணிக்காப்பது இலங்கை அரசின் வழிகாட்டிக் கொள்கைகளில் ஒன்றாகும். அவ்வகையில் கணவனை தண்டனைக்கு உட்படுத்தி மனைவி விடுதலை அடைவது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என அனைவராலும் பொதுவில் ஏற்கப்பட்டது. அது சட்டவாக்கதுறையினரினதும் பார்வையில் பட்டு உருவாக்கப்பட்டதுதான் குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டம் இல 34 இன் 2005. (Prevention of Domestic Violence Act No 34 of 2005)
இச்சட்டம் துன்பத்தை இழைக்கும் நபரிடம் இருந்து துன்பத்துள்ளாகும் நபரை குடும்ப அலகினுள் பாதுகாப்பதற்கான ஓர் விஷேட சட்டமெனலாம். இச்சட்டம் எதிர்வாதியை “குற்றவாளி” என தீர்ப்பளிக்காது. ஆனால் மற்றைய தண்டனைக் கோவையில் குறிப்பிட்டப்பட்டுள்ள சட்டங்கள் யாவும் எதிர்வாதியை குற்றவாளி என நிலைப்படுத்துவதால் குடும்பம் என்ற அலகு விரிசல் அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டம் தீர்ப்பாக துன்பம் இழைக்கும் நபரை துன்பத்துக்குள்ளாகும் நபரிடமிருந்து பிரித்து வைக்கின்றது. இப்பிரிவுக்காலம் துன்பம் இழைத்த குடும்ப உறுப்பினர் தன் தவறை உணர்ந்து திருந்த ஓர் வாய்ப்பாக அமையும் என நம்புகின்றது. மேலும் நீதிமன்று இப்பிரிவுக்காலத்தில் துன்பத்துள்குள்ளான நபர் வசிக்கும் அல்லது தொழிலாற்றும் இடத்தினுள் துன்பமிழைத்த நபர் உட்புகுவதை தடுக்க உத்தரவிட முடியும். இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற பொலிசாரின் உதவி தேவையற்றது. எனவே குடும்ப உறுப்பினரை பொலிசாரிடம் கையளிக்கின்ற கசப்பான அனுபவங்களை குடும்ப உறுப்பினர்களிடையே நிகழ்வதை தடுக்கின்றது. அத்தோடு இச்சட்டத்தின் கீழ் வழக்காடும் நபர்களின் விபரங்களை ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்கு வெளியிடுவதிலும் மட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
இதில் துன்பத்திற்கு உள்ளான குடும்ப உறுப்பினர் நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கட்டனை (Protection Order) ஒன்றை கோர முடியும். இதில் மன்று பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து இடைக்கால பாதுகாப்பு கட்டளையை (Interim Protection Order) வழங்க கடப்பாடுடையதாகின்றது. “தண்டித்தல்” எனும் விடயத்திற்கு பாதுகாப்பு கட்டளையினால் வழங்கப்படும் “பிரிவு” எனும் எண்ணக்கரு போதுமானதாயினும் இச்சட்டம் அதற்கப்பாலும் சமூக நோக்கில் பணியாற்றுவது பாராட்டிற்குரியது. அதாவது பாதுகாப்பு கட்டளைக்கு தொடர்ச்சியாக குறைநிரப்பு கட்டளை (Supplementary Order) நீதிமன்றால் வழங்கப்படலாம். இக்கட்டளை முரண்பாடுடைய நபர்களுக்கிடையே சொத்து தொடர்பான விடயங்கள், பராமரிப்பு செலவு, தேவையின் பொருட்டு பாதிக்கப்பட்டவருக்கு தங்குமிடம், உளவள ஆலோசனைக்கு சமூகமளித்தல் உட்பட்ட விடயங்கட்கு துன்பம் இழைத்தவர்க்கு உத்தரவிட பயன்படும். மேற்குறித்த கட்டளைகள் பணம் தொடர்பானதாயின் துன்பம் இழைத்தவரின் சம்பளத்திலிருந்து உரியதொகையை கழித்து பாதிக்கப்பட்டவர்க்கு வழங்கும் படி நீதிமன்று உத்தரவிட முடியும். நீதிமன்றத்தின் உத்தரவுகட்கு கட்டுப்படாத நபர் விசாரணையின் பின்பு பத்தாயிரம் ரூபாவிற்கு விஞ்ஞாத தண்டப்பணம் மூலமோ ஒரு வருடத்திற்கு உட்பட்ட சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ தண்டிக்கப்படுவார். இச்சட்டம் கணவன் மனைவி எனும் எல்லையை கடந்து தந்தை,தாய்,பாட்டி,பாட்டன்,மருமகள்,மருமகன்,சகோதரர்கள் என விரிந்து செல்லும் குடும்ப உறுப்பினர்கட்கு ஏற்புடையதாகும்.
இலங்கையில் பல சட்டங்கள் பெண்கட்கெதிராக பாரபட்ச வன்முறைகட்கு எதிராக காணப்பட்ட போதிலும் தொடர்ந்து பெண்கள், பெண்கள் எனும் காரணத்திற்காக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணங்களாக கல்வி அறிவு இன்மை, கலாச்சார கோடுகளை தாண்டுவதிலுள்ள தயக்கம், சட்டங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியில் தெளிவின்மை அதோடு சட்ட அமுலாக்கல் உபகரணங்களில் காணப்படும் அலட்சிய மனப்பான்மை போன்றவற்றை நிரற்படுத்தலாம்.
தீர்வு என நோக்கும் போது நீதியை அமுலாக்க பாரபட்சமற்ற மற்றும் சுகந்தரமான சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளின் தேவைப்பாடு மிக அவசியமானது. ஆனால் அது இன்றைய இலங்கையை பொறுத்த வரை எந்த ஒரு அரச மற்றும் தனியார் நிறுவன கட்டமைப்புகட்கும் சாத்தியமற்றது என நடைமுறை கள நிலவரங்கள் தெளிவிக்கின்றன. இதில் பொலிசு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவை கூட தப்பிப்பதாக அறிய முடியவில்லை. இரண்டாவதாக பெண்களிடையே அவர்களது உரிமைகள், பாதுகாப்பு பெறும் வழி முறைகள் பற்றி விழிப்புணர்வூட்ட வேண்டியது அவசியம். சட்டங்கள் இலகுபடுத்தப்பட வேண்டியதும் அவசியமானவர்கட்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டியதும் அவசியம். இப்போது நீதியமைச்சால் இதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பாராட்டதக்கவை எனிலும் அதன் விரிவாக்கம் திருப்தி அளிக்க கூடிய தகவளவை கொண்டிருக்கவில்லை. முக்கியமாக சிவில் சமூகத்தின் பங்கு பெண்களுக்கான பாரபட்சத்தை ஒழிப்பதில் இன்னும் முன்னேற வேண்டிய துாரம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக அழுத்த குழுக்கள் (Pressure Groups) துறைசார் வல்லுணர்களால் வழிகாட்டப்படுவது நிகழளவில் போதியதல்ல இந்நிலைமை முன்னேற்றம் காணப்பட வேண்டும். அப்போது தான் அழுத்த குழுக்களின் அழுத்தம் அர்த்தம் உள்ளதாகவும் வெற்றிக்கானதுமாக அமையும். இறுதியில் எல்லாவற்றுக்கும் மேலாக மனித குடும்பத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் அனைத்து வேற்றுமைகளையும் கடந்து ஒரே உரிமைகட்கு பாத்திரமானவர்கள் எனும் எண்ணப்பாடு அனைவரினதும் மன வெளிப்பாடாக அமையும் நேரத்திலேயே பெண்களுக்கெதிரான பாரபட்ச செயற்பாடுகட்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.