Tuesday, 24 December 2013
Sunday, 8 December 2013
மனித உரிமைகள் நாள்; டிசம்பர் 10
டிசம்பர் 10 ஆம் திகதியை மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 423(V) எனும் பிரேரணையை 10-12-1950 இல் நிறைவேற்றி பிரகடனப்படுத்தியது. இப்போது நாம் மனித உரிமைகள் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகின்றோம். மனித உரிமைகள் என்ற பதம் உ்ண்மையில் 1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights) மூலமே நவீன உலகிற்கு வெளிக்கொணரப்பட்டது. அதில் 30 உரிமைகள் மனித உரிமைகளாக மையப்படுத்தப் பட்டிருப்பதோடு அதன் முகவுரையானது இவ்வாறு மனித உரிமைகட்கு விளக்கமளிக்கின்றது.
ஓர் மனித உயிரி உலக மனித குடும்பத்தின் ஓர் அங்கத்தவன் ஆகையால் அக்குடும்பத்திற்குரிய அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க அவனும் தகுதியுடையவன்
.
.
இப்பிரகடனம் பிணிக்கும் உபகரணமாக இல்லாது விடினும் (Non-binding instrument) ஓர் வழிகாட்டியாக முதன் முதலில் 30 உரிமைகளை மனித உரிமைகளாக நிலைநிறுத்தியது. அதன் முன்பு மனித உரிமைகள் வரலாற்றை நாம் காண வேண்டியுள்ளது.
அவற்றில் வரலாற்றில் முந்தியது சீயசின் உருளை (கி.மு. 539) எனப்படும் களிமண்ணால் ஆன, மக்களின் உரிமைகள் பொறிக்கப்பட்ட உருளையாகும். இது அக்காடியன் மொழியில் உருவாக்கப்பட்டதோடு பேர்சியாவின் முதல் மன்னான சைரஸால் அவனது குடி மக்களிற்கு வழங்கப்பட்ட சமய சுகந்திரம் மற்றும் அடிமை நிலையை ஒழித்தல் என்பனவற்றின் நினைவாக வழங்ப்பட்ட உலகின் மிக தொன்மையான ஓர் மனித உரிமைகள் ஆவணமாகும்.
அடுத்த திருப்பமாக அமைந்தது மக்னா கார்ட்டா (1215) உடன்பாடாகும். இது பிரித்தானிய மன்னனின் அதிகாரங்களை பாராளுமன்றின் கீழ் கொணர்ந்ததோடு சட்டத்தின் முன் மன்னன் உட்பட யாவரும் சமன் எனும் நிலையையும் தோற்றுவித்தது. அத்தோடு ஜனநாயகத்திற்கான ஓர் முக்கிய திருப்பு முனையாகவும் இது அமைந்து காணப்பட்டது.
அடுத்த திருப்பம் என்ற வகையில் ஐக்கிய அமெரிக்காவின் சுகந்திர பிரகடனம் (1776), இதன் முக்கிய அம்சம் மக்கள் விரோத அரசிற்கு எதிராக மக்களுக்கு புரட்சி செய்யும் உரிமையை (Right to revolution) கொண்டுள்ளார்கள் என்பதை உலக அரசுகட்கு உணர்த்தியமை.
அடுத்த உபகரணம் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பாகும் (1787) இச்சாசனமே சித்திரவதையிலிருந்து விடுதலை மற்றும் உயிர் வாழ்வதற்கான உரிமை என்பவற்றை நிலை நிறுத்தியது.
மேற்குறிப்பிட்டவாறான வளர்ச்சியை கொண்ட எண்ணக்கருவான மனித உரிமைகள் பிரகடனம் மூலமாக நவீனம் எனும் எண்ணப்பாட்டுக்குள் வந்தது. இப்பிரகடனம் கீழ்வரும் 30 உரிமைகளை கொண்டுள்ளது.
01. எல்லோரும் பிறப்பின் போதும் நடாத்துகையின் போதும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள்
02. எந்த வகையிலும் மனிதர்களுக்குள் பாரபட்சம் காட்ட கூடாது. ( இனம், மொழி, நிறம்)
03. அனைவர்க்கும் உயிர் வாழும் உரிமை உண்டு.
04. யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
05. யாரும் யாரையும் சித்திரவதைப்படுத்த முடியாது.
06. சட்டத்தின் முன் சகலரும் சமன்
07. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.
08. சட்டத்தால் ஒவ்வொருவரது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்.
09. சட்டவிரோத தடுத்துவைப்பு மற்றும் கைது என்பவற்றுக்கு யாரும் உள்ளாக கூடாது.
10. அனைவரும் நீதியான மற்றும் வெளிப்படையான நீதி விசாரணையை கோர உரித்துடையவர்கள்.
11. விசாரணை நிறைவடையும் வரை அனைவரையும் சுற்றவாளிகளாக கருத வேண்டும்.
12. தனித்துவத்தை பேணுவதற்கான உரிமை.
13. விரும்பியபடி பணயம் செய்யும் உரிமை
14. பிறிதொரு நாட்டிற்கு செல்வதற்கும் ஆபத்தின் போது உயிரை பாதுகாக்க அடைக்கலம் கோருவதற்குமான உரிமை
15. ஒரு தேசியத்தை பேணுவதற்கான உரிமை
16. திருமணம் செய்வதற்கும் குடும்பமாக வாழ்வதற்குமான உரிமை
17. தமது பொருட்களை சொந்தமாக கொண்டிருப்பதற்கான உரிமை.
18. விரும்பிய சமயத்தை பின்பற்றுவதற்கான உரிமை
19. சுகந்திரமாக சிந்திப்பதற்கும், தகவல்களை பெறுவதற்குமான உரிமை.
20. சங்கங்களை உருவாக்கவும் அமைதியாக ஒன்று கூடுவதற்புமான உரிமை.
21. அரசாட்சியில் பங்கு பற்றுவதற்கான உரிமை
22. சமூக பாதுகாப்பிற்கான உரிமை.
23. பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான உரிமை
24. ஓய்வெடுக்கவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான உரிமை
25. போதுமான வாழ்க்கை தரத்தை பேணவும் மருத்துவ வசதிகளை பெறவுமான உரிமை
26. கல்வி கற்பதற்கான உரிமை
27. தமது பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கான உரிமை.
28. அனைவரும் சமூக கட்டமைப்பை ஒழுங்காக பேண கடமைப்பாடு உடையவர்களாகிறார்கள்.
29. அனைவரும் மற்றவரது உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும் கடமைப்பா உடையவர்களாகிறார்கள்
30. இவ்வுரிமைகள் யாராலும் பறிக்கப்பட முடியாதவை.
இப்பிரகடனம் பின்னர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகட்கான சர்வதேச பொருத்தனை 1966 (ICCPR) மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகட்கான சர்வதேச பொருத்தனை 1966 (ICESCR) என பிணிக்கும் ஒப்பந்தங்களாக (Binding Laws) மாற்றம் கண்டது. இலங்கை அரசும் இதன் முதல் பொருத்தனையை ஏற்று அதை பாராளுமன்றம் ஊடாக 2007 இல் இலங்கை சட்டங்களில் ஒன்றாக உருவாக்கியது.
இதில் முதல் பொருத்தனையை (ICCPR) நிறைவேற்ற அரசு எதையும் செய்யாது விட்டாலே போதுமானது. உதாரணமாக மக்களின் உரிமைகளை மறுக்காதிருத்தல், ஊடக சுகந்திரத்தை நசுக்காதிருத்தல் என்பவற்றை கூறலாம். அதை நாம் மறை உரிமைகள் (Negative Rights) எனலாம்.
இரண்டாம் பொருத்தனையை (ICESCR) பொறுத்தமட்டில் இது நேர் உரிமைகளாகும் (Positive Rights). இதை நிறைவேற்ற அரசு தலையிட வேண்டும். உதாரணமாக பொருளாதார வளம், வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பவற்றை குறிப்பிடலாம்.
மேற்கூறிய அனைத்து மனித உரிமைகளையும் அனைத்து நாடுகளும் தத்தமது உள்நாட்டு சட்டங்கள் ஊடாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எண்ணப்பாடு (Ideal) ஆனால் நடைமுறையில் (Reality) அது முழுமையாக சாத்தியப்படுவது கிடையாது.
எமது நாட்டின் மீயுயர் சட்டமான 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அதன் பகுதி 3 இனுாடாக அடிப்படை உரிமைகள் எனும் தலைப்பின் கீழ் சில மனித உரிமைகளை பட்டியலிட்டுள்ளது. அவ்வுரிமைகள் மீறப்படிக் உயர் நீதிமன்று ஊடாக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
உதாரணமாக அடிப்படை உரிமைகளாக, பாரபட்சத்திற்கெதிரான உரிமை (உறுப்புரை 12), சித்திரவதைக் கெதிரான உரிமை (உறுப்புரை 13), சிந்தனை,மனட்சாட்சி மற்றும் சமய சுகந்திரம் (உறுப்புரை 10), பேசுவதற்கு, ஒன்று கூடுவதற்கு உள்ள சுகந்திரம் (உறுப்புரை 14) ஆனாலும் இவ்வுரிமைகளில் பல உரிமைகள் தேசிய நலன் அல்லது தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் உறுப்புரை 15 இனுாடாக பறித்தெடுக்கப்படுகின்றது. அத்தோடு உயிர் வாழ்வதற்கான உரிமை எமது அரசியலமைப்பில் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்திய அரசியலமைப்பு உயிர்வாழும் உரிமையை நேரடியாக அடிப்படை உரிமை என வகைப்படுத்தியுள்ளது.
மேற்குறிப்பிட்ட 30 மனித உரிமைகளில் சில மட்டுமே அடிப்டை உரிமைகள் என அரசியலமைப்பு கூறுகின்றது. அத்தோடு பல உரிமைகள் அரசின் வழிகாட்டிக் கோட்பாடுகள் என சட்டம் கூறினும் அவை மீறப்பட்டால் நிவாரணம் எதையும் பெறமுடியாது. இது “நிவாரணமில்லையேல் உரிமையில்லை” எனும் அடிப்படை சட்டக் கோட்பாட்டை மீறுவதாயுள்ளது.
மனித உரிமைகள் என பார்க்கும் போது பெரும்பாலும் நாம் உரிமைகளை மீறும் அரசுகள் அவற்றால் பாதிக்கப்படும் குடிமக்கள் எனும் பார்வையில் தான் நோக்குகின்றோம். ஆனால் சாதரண மனிதர்களும் தமது சக மனிதர்களை மனிதர்களாக மதிக்க பழக வேண்டும். உண்மையில் அரசை விட ஒப்பீட்டு விகிதாசார அளவில் தனி மனிதர்களே அடுத்த தனி மனிதர்களின் உரிமைகளை புறக்கணிப்பதில் முன்னணி வகிக்கின்றார்கள். மனித உரிமைப் புறக்கணிப்பானது பாடசாலைக்காலத்தில் ஓர் மாணவனை மட்டும் விளையாட்டில் சேர்க்காது மற்ற மாணவர்கள் அனைவரும் விளையாடுதல் எனும் மிக அற்பமான உதாரணத்தில் இருந்து தொடங்குகின்றது. எனவே முதலில் தனி மனிதர்கள் மற்ற தனி மனிதர்களை தம்மை போல் பாவிக்க துவங்கின் அரசுகளும் மனித உரிமைகளை புறக்கணிப்பது இயலாததாகிவிடும். ஏனெனில் அரசு என்பது மக்களின் சமூக ஒப்பந்தம் தானே ஒழிய வேறோர் எண்ணகரு அல்ல.
Subscribe to:
Posts (Atom)