இன்றைய தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின்
மூலம் மனித குலம் அளவிட முடியாத நன்மைகளை அடைந்து வருகின்றமை கண் கூடாக காணும் நாம் அதே சமயத்தில் அதன் அதீரியான பாதக விளைவுகளையும்
கேள்விப் படுகின்றோம். சில சமயங்களில் நாம் அதில் பாதிக்கப் படுகின்றோம்.
ஆனால் பல சமயங்களில்
எது பாதிப்பென்று தெரியாமலேயே அதற்கு ஆட்படுகின்றோம். இன்றைய உலகின் இணைய சேவையின்
தாராள விஸ்தரிப்பும் பாவனையாளர் இலகு முகத்தளங்களும் இந்நிலைமைகளை நடைமுறை சாத்தியம்
ஆக்கியுள்ளன. இந்நிலைமைகட்கு எமது நாடும் விதிவிலக்கானது இல்லை.
இன்று இலங்கையின் வளர்ந்து வரும்
தொடர் இணைய தக்கவைப்பு தகைமையும் மற்றும் சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனையும்
கணணிக்குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதில் முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளன.
சட்டம் மனிதர்களின் சில பிறழ் நடத்தைகளை சட்டத்திற்கு முரண் என்கின்றது. எனவே சட்டத்திற்கு
புறம்பானவற்றை தடுக்கவும் நெறிப்படுத்தவும் ஓர் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட சட்டத்தின்
அடிப்படைத் தேவை உணரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தளவில் அவ்வொழுங்கமைப்பை 2007 ஆம்
ஆண்டின் 24ஆம் இலக்க, கணனிவழிக் குற்றச்சட்டம் வழங்குகின்றது.
இது முகத்தளவிலேயே கணனிக்குற்றங்களை
இருவகையாக பிரிக்கின்றது.
01. கணனிக்கு புரியப்படும் குற்றங்கள் ( Offences relating to Computers)
01. கணனிக்கு புரியப்படும் குற்றங்கள் ( Offences relating to Computers)
02. கணனியின் மூலம் புரியப்படும் குற்றங்கள் (Offences committed
using by computers)
கணணிக்கு புரியப்படும் குற்றங்கள்
எனும் போது அவை கணணியையோ அல்லது குறிப்பிட்ட வகை தரவு வலைப்பின்னலையோ பாதிக்கும் வகையான
செயற்பாடுகளாக அமைய வேண்டும்.
கணணியின் மூலம் புரியப்படும் குற்றங்கள்
எனும் போது கணணியை உபயோகித்து வேறோர் குற்றத்தை புரிவது, உதாரணமாக கணணியின் மூலம் துருவலை
மேற்கொண்டு வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதை குறிப்பிடலாம்.
இச்சட்டம் பிரித்தானியாவின் Computer Misuse Act of 1990 ஐ அடியொற்றியே இலங்கையில் உருவாக்கப்பட்டது. இலங்கையில்
இதையொற்றி வழக்கு தீர்ப்புக்கள் இல்லை என்ற படியால் மேலைத்தேய வழக்குகள் சிலவற்றை கோடிட
விரும்புகின்றேன்.
Gearth V
Croos Key, எனும் வழக்கில், பிரபல பாடகர் ஜஸ்டின்
பைபரின் காதலியின் Face
Book இன் கடவுச்சொல்லை உடைத்து தகவல்களை திருடிய 19 வயதான
இளைஞர் பின்னர் அத்தகவலை ஓர் பிரபல வார இதழிற்கு விற்றார். அவர் மேல் அதிகாரமின்றி
கணணியிலுள்ள தகவல்களை கையாண்டமை மற்றும் அதிகாரமின்றி பெறப்பட்ட தகவல்களுடன் ஊடாடியமை
எனும் குற்றங்கட்கு தண்டிக்கப்பட்டார்.
ஆனாலும் இலங்கையின் கணணி குற்றச்சட்டம்
முழுவதுமாக ஓர் நிறைவான சட்டஏற்பாடு என்று
என்னால் பட்டியலிட்டு விட முடியாது. அதன் நியாயாதிக்கத்தை பற்றி ஆராய்யும் போது பிரிவு
இரண்டு ஓர் பரந்து பட்ட அதிகாரத்தை வழங்குகின்றது.
அது கணணி தொடர்பாக குற்றமிழைக்கும்
நபர்களோ பாதிக்கப்படும் கணணிகளோ அல்லது குற்றத்திற்கு பயனுறத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்ட
ஏதேனும் சாதனங்களோ அல்லது சேவைகளோ இலங்கையை சார்ந்திருப்பினும் இலங்கைக்கு வெளிப்பரப்பை
சார்ந்திருப்பினும் குற்றங்களாக இச்சட்டத்தின் கீழ் நியாயாதிக்கத்திற்கு உட்பட்டு காணப்படுகின்றது.
ஆனால் சர்வதேச ரீதியில் இக்குற்றங்களை ஓர் ஒன்றிணைந்த கூட்டு முறைமையின் கீழ் கையாள
இலங்கை இது வரை அவ்வாறான ஆக்கபூர்வமான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.
இச்சட்டம் ஆனது சாதாரண தண்டனைச்சட்டக்கோவையில்
பட்டியலிடப்பட்ட குற்றங்கட்கு அடிப்படை தேவைகளாக வலியுறுத்தப்படும் குற்றமனம்
(Mens rea) மற்றும் குற்றச்செயலை (Actus reus) முகத்தளவிலேயே தேவைப்படுத்துகின்றது.
அவற்றை நிரூபிக்காது குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது. எனவே இதன் மூலம் கணணி
குற்றங்கட்கு சிறப்பானதோர் சட்டஏற்பாடு தேவை என உணர்ந்தாலும் எமது பாரம்பரிய சந்தேகத்தின்
பலனை குற்றவாளிக்கு சார்பாக்க வேண்டும் எனும் கோட்பாட்டை மீறவில்லை.
இச்சட்டத்தின் பிரிவு 3 ஆனது குற்றமனத்துடன் ஒருவன் தனக்காகவோ வேறொருவருக்காகவோ
கணணி ஒன்றையோ அல்லது கணணியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் ஒன்றையோ அதிகாரமளிக்ப்படாத வகையில்
கையாண்டால் ஓர் இலட்ச ரூபாய் தண்டப்பணமும் ஐந்து வருடங்கள் வரை நீடிக்கப்பட கூடிய சிறைத்தண்டனையையும்
பெற உள்ளாக்கப்படுவான். இப்பிரிவின் விரவணப்பகுதியில் கணணி ஒன்றை தொடுவது கூட குற்றம்
என கூறப்படினும் குற்றமனம் என்பது சந்தேகத்திற்கு அப்பால் (Beyond Reasonable
Doubt) நிரூபிக்கப்படும் வரை யாரையும் குற்றவாளியாக இனங்காண முடியாது. இது பெரும்பாலும்
Computer hacking எனும் பதத்தால் தொழினுட்ப ரீதியில் இனம் காணப்படுகின்றது.
அத்தோடு கணணியை அதிகாரமின்றி கையாள்பவன்
அக்கையாளுகை வேறோர் குற்றத்தை புரிதலுக்கான தேவைப்பாட்டுடன் தொடர்புடையது என அறிந்து
செயற்படின் அவன் ஐந்து வருடம் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு இலட்ச ரூபாய் வரை அபராதமும்
செலுத்த நேரிடும். இக்குற்றம் தொழினுட்ப ரீதியில் Computer Cracking என அழைக்கப்படுகின்றது.
அத்தோடு கணணியை அல்லது அதிலுள்ள நிரல்களை சேதப்படுத்தல் அல்லது அதன் செயற்பாட்டை மாற்றல்
அல்லது பிழையான வெளியீடுகளை தரச்செய்தல் எனும் குற்றங்கட்கு மூன்று இலட்சம் வரையான
தண்டப்பணத்தையும் ஐந்து வருட சிறைத்தண்டனையையும் அளிக்கின்றது. இக்குற்றம் கணணி வைரசுகளை
பரப்புதல் மற்றும் தரவுகளை அழித்தல் அல்லது மாற்றம் செய்தல் என பரந்து விரிந்த குற்றங்களை
உள்ளீர்க்கின்றது. ஓர் சிறப்பான வாதாட்டத்தின் மூலமாக எந்த ஒரு கணணியின் பாற்பட்டு
புரியும் குற்றத்தையும் இப்பிரிவின் கீழ் கொணர்ந்து விட முடியும்.
பிரிவு 06 ஆனது முக்கியமாக நாட்டின்
பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான உறுதிப்பாடு என்பவை பற்றி குறிப்பிடுகின்றது. ஏனெனில் கணணி மூலம்
மிக குறைவான நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்
விடுவிக்க மடியும். இன்று இலங்கை அரசாங்கம் அனைத்து அரச மற்றும் தனியார் சேவைகளில்
இலத்திரனியல் முறைமையை ஊக்குவித்து வரும் இக்கால கட்டத்தில் இவ்வச்சுறுத்தல்கள் மிகவும்
பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவையாகும். இப்பிரிவின் கீழ் குறிப்பிட்ட அமைச்சின்
செயலாளர்கள் நாட்டின் பாதுகாப்பு அல்லது பொருளதாரம் குறித்த நபரின் செயற்பாட்டால் ஆபத்திற்கு
உள்ளாகி உள்ளது என நீதிமன்றில் சான்றழிக்க முடியும். ஆயினும் அந்நபருக்கு அக்குற்றத்தை
புரிய குற்றமனம் உள்ளதா என தீர்மானிப்பது முழுவதுமாக நீதிமன்றின் கைகளிலேயே உள்ளது.
எனவே அமைச்சுகள் தங்கள் தற்றுணிவால் யாரையும் குற்றவாளிகளாக்க முடியாது.
மேலும் இச்சட்டம் அதிகாரமின்றி
பெறப்பட்ட தரவுகளை அல்லது தகவல்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், பரிமாற்றல்
மற்றும் எவ்விதத்திலாவது ஊடாடல் என்பவற்றை தடுக்கின்றது. இப்பிரிவின் கீ்ழ் நாம் அனைவரும்
பொதுவாக தண்டிக்கப்படலாம். அதாவது அனுமதியின்றி தகவல்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம்
செய்தல் அத்தோடு முறையில்லா வகையில் தரவிறக்கப்ட்ட வீடியோக்கள் மற்றும் பாடல்களை பயன்படுத்தல்
அல்லது அனுமதியோடு பெறப்பட்டவற்றை அதிகாரமின்றி
மீள்பிரதியாக்கம் செய்தல் போன்றவை இப்பிரிவின் படி மூன்று இலட்சம் வரையான தண்டப்பணத்திற்கும்
மூன்று வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனைக்கும் உரித்தான குற்றங்களாகும்.
அத்தோடு குறிப்பிட்ட கோப்புக்களின்
கடவுச்சொற்களை உடைப்பதற்கான
Pass Word Crackers மற்றும் வன்பொருட்களை பயன்படுத்தல்
மற்றும் உற்பத்தி, இறக்குமதி என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக சீனாவில் மலிவு
விலையில் கிடைக்கக்கூடிய கடனட்டை வாசிப்பான்களை இறக்குமதி செய்வதோ பயன்படத்துவதோ குற்றமாகும்.
இவ்வாசிப்பான்களில் ஓர் முறை கடனட்டைகளை புகுத்துவதன் மூலம் கடனட்டை பற்றிய அனைத்து
தகவல்களையும் அறிந்து பின்னர் அதை மோசடி செய்ய முடியும்.
அத்தோடு இறுதியாக ஒருவருக்கு ஓர்
ஒப்பந்தத்தின் மீது வழங்கப்பட்டுள்ள ஓர் கணணி கையாளுகை அதிகாரத்தை அவர் பிறிதொரு நபருக்கு
ஒப்பந்தம் கோரினாலன்றி வழங்க இயலாது. உதாரணமாக வங்கி அதிகாரி தனக்கு அளிக்கப்பட்டுள்ள
வாடிக்கையாளரின் கணக்குகளை கையாள்வதற்கான கடவுச்சொல்லை பிறிதொரு நபருக்கு வழங்க முடியாது.
இங்கு வங்கி உதாரணமாக காட்டப்படினும் அனைத்து தொழில்கட்கும் இது பொருத்தப்பாடுடையது.
அத்தோடு மேற்குறிப்பிட்ட குற்றங்களை
புரிய முயற்சித்தல் (Attempt), புரிவதற்கு உதவி செய்தல் ( Abet) மற்றும் புரிய சதி
செய்தல் (Conspiracy) என்பனவும் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட கூடிய குற்றங்களாகும்.
அத்தோடு இச்சட்டம் விசாரணைகளின்
போது அது தொடர்பான கணணிச் செயற்பாடுகள் அவசியமின்றி இடைநிறுத்தப்படுவதை தவிர்ப்பதோடு
இலத்தரனியல் நிபுணர் ஒருவரையும் பொலிசாரோடு இணைந்து செயலாற்ற அனுமதிக்கின்றது. அத்தோடு
விசாரணையில் உயர் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தகைமை பேணப்படவும் உத்தரவாதமளிக்கின்றது.
பெரும்பாலான விசாரணை விடயப்பரப்புகள் நீதவானின் அதிகார பரப்புக்குள்ளேயே வருகின்றன.
ஆயினும் இச்சட்டத்தின் நியாயாதிக்கம் மேல் நீதிமன்றிற்கே உள்ளது.
இதில் குழப்பம் என்னவெனில் இச்சட்டத்தின்
கீழ் வரக்கூடிய பல்வேறு குற்றங்களாக வகையிடப்பட்டுள்ள செயற்பாடுகள் வேறு பல சட்டங்களின்
கீழும் குற்றங்களாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. எனவே எச்சட்டத்தின் கீழ் நிகழ்ந்துள்ள
குற்றத்திற்கான மூலங்கள் கூடுதலாக பொருந்துமோ வழக்கு தொடுநர் தரப்பு அச்சட்டத்தின்
கீழ் வழக்கை முன்னெடுக்க வேண்டும்.
கீழ்வரும் விடயதானங்கள் இலங்கை
சட்டப்பரப்பை பொறுத்த மட்டில் கணணிக்குற்றங்கள் தொடர்பில் மாறுபட்ட அணுகுமுறை முக்கியத்துவம்
பெறுகின்றது.
01.எவ்வாறு சட்டம் அமைந்திருப்பினும்
பயிற்றப்பட்ட ஆளனி மற்றும் நிறுவன கட்டமைப்பு மேம்பாடு இன்றி அமுலாக்கல் என்பது சாத்தியமற்றது.
02.கணணி குற்றங்களை கண்டறிய இலத்திரனியல் சோதனைக்கூடமொன்று அமுலாக்கப்பட வேண்டும்.
03.சர்வதேச கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பில்
நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பு அவசியம்.
04.முக்கியமாக மக்கள் தங்களது பாதுகாப்பு
பற்றி தொடரறா நிலையில் (Online Surveillance) விழிப்புடன் செயற்படுவது அவசியம்.
மேற்கூறப்பட்ட வழிவகைகள் அமுலாக்ப்படினே
கணணியின் பாலான குற்றங்களை கட்டுப்படுத்தல் சாத்தியமானதாக காணப்படும்.
நல்ல ஒரு பதிவு ! இணைய குற்றங்கள் அது சம்பந்தமான ஆரம்ப சட்டம் அதற்கான தண்டனைகள் பற்றிய விழிப்புணர்வின் மூலமே இவ்வகையான குற்றங்களை குறைக்க முடியும்.
ReplyDeleteஇருப்பினும் அதன் குற்றகையாளுகை முறைமைகள் திருப்திகரமானதாக இல்லை. நாடு இன்னும் செல்ல வேண்டிய பாதை அதிகமுள்ளது.
DeleteBigamy சட்டங்கள், அவற்றுக்கான தண்டனைகள்,
ReplyDeleteமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றியும் திருட்டு தனமாக இருதார மணம் செய்து முதல் திருமணத்தின் விவாகரத்து கிடைக்கும் வரை சட்டத்தின் பிடியிலிருந்து தம் இரண்டாவது திருமண சான்றிதளை மறைத்து சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிப்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், முதல் திருமணத்தின் விவாகரத்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியிலேயே இரண்டாவது திருமணமானவருடன் வெளிநாடு சென்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவான பதிவாக இலங்கை இந்து திருமண சட்டங்கள் ஊடாக பதிவிட முடியுமா?