Social Icons

Pages

Tuesday, 18 August 2015

வடக்கின் நல்லாட்சியும் அகஸ்து 17 உம்


பொதுவாக அனைவரும் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே  அது சம்மந்தமான  ஆக்கங்களை மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பதுண்டு. ஆனால் இக்கட்டுரையை வரைந்தோன் அவ்வாறு இல்லாது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே இக்கட்டுரையை பிரசுரிக்க எண்ணம் கொண்டிருந்தான். ஏனெனில் தமிழர்களாகிய எமது வரலாற்றுப்பிழை தேர்தல் முடியும் மட்டும் அதில் கண்காணிப்பு செலுத்துகின்ற ஒரு கூட்டமாக அதன் பின்னர் அதை மறந்து விடுகின்றவர்களாக இருக்கின்றோம். ஆனால் உண்மையில் தேர்தலின் பின்னரே மக்கள் அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வு கொண்ட மக்கள் கூட்டமே ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் உள்ளிருப்பிற்கு அடிப்படையாகும். அவ்வகையிலேயே தொடர்ச்சியான கண்காணிப்பே பொருளாதாரம் தொடங்கி அனைத்து வித முன்னேற்றங்களிலும் பங்களிப்பை நல்க முடியும்.



இலங்கையை பொறுத்த மட்டில் இந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரு தேசியவாத கட்சிகளுக்கிடையிலான பலப்பரீட்சையாகவும், MR அவர்களிற்கான அரசியல் உள்ளீர்ப்பு தடை தாண்டல் பரீட்சையாகவும் பார்க்கப்பட்டாலும் வடமாகாணத்தை பொறுத்த மட்டில் சென்ற தேர்தல்களை விட இம்முறை எவ்விதமான களைகட்டல்களும் பெரிதாக இடம் பெறவில்லை என்பதே உண்மையாகும். வடகிழக்கு மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக இன்று வரை விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்தே செயற்பட்டு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறையும் தனது அதிகாரத்தை வட மாகாணத்தில் தக்க வைத்துள்ளது. பெரும்பான்மையாக உறுப்பினர்கள் யாரும் மாற்றப்படாத போதும் அக்கட்சி இந்த தேர்தலிலும் நிலைத்து நிற்கின்றது. இது மாற்றுக்கட்சிகள் இல்லாமை எனும் நிலைப்பாட்டை விட கொள்கையளவில் கூட மாற்றுக்கட்சிகள் தமிழ்த் தேசிய சுட்டமைப்பிற்கு மாற்றாக இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

உண்மையில் சமகால வேற்று நாட்டு அனுபவங்களின் அடிப்படையில் அதிகார பகிர்விற்கோ அல்லது சுயாட்சிக்கான அடிப்படை கோரிக்கைகாகவேனும் பிராந்திய அளவில் ( இலங்கையை ஒப்பு நோக்கையில் மாகாணங்களை பிராந்தியங்களிற்கு ஒப்பிடலாம்) செல்வாக்கு செலுத்தக்கூடிய கட்சிகள் அவசியமாகும். இந்தியாவின் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை தி.மு. மற்றும் .தி.மு. போன்றவற்றை குறிப்பிடலாம். ஆனால் இலங்கையை பொறுத்த மட்டில் பிராந்தியங்களினுள் மத்திய கட்சிகளின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்து வருகின்றமை விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் அதிகரித்து செல்வதாக காணப்படுகின்றது. பிராந்திய கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மாற்றுக்கட்சி ஒன்று இன்று வரை வலுவானதாக வடகிழக்கு மாகாணங்களை தமிழர் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்த இல்லாமல் போனமை ஆனது காலத்தின் துரதுஸ்டமேயாகும். ஆனால் இதன் எதிரொலி ஆனது சுமார் 38% ஆன மக்கள் தமது வாக்குகளை யாருக்கும் பயன்படுத்தவில்லை. இது இன்னும் 5 வருட காலப்பகுதியில் வலுப்பெற்று வருமேயானால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரித்து ஜனநாயகத்தின் பால் இலங்கைத்தமிழர்களுக்கேயான ஒரே ஒரு உரிமையையும் இல்லாது ஆக்கிவிடும். இப்போது மாற்று அணி ஒன்று தேவை என்ற கோட்பாட்டுடன் களமியங்கியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ண்ணி ஆனது தனது செல்வாக்கை குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மட்டுமே இவ்வளவு காலம் வரை நகர்த்தியிருப்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதிலும் பல பல்பலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்த போதும் மிக சொற்பமான வாக்கு வங்கியை மாத்திரமே இக்கட்சி பெற்றிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுமார் 27,000 வாக்குகளை வென்ற போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி  நாற்றுக்கும் குறைவான வாக்குகளையே பெற முடிந்த்து யாழில் நான்கிலத்திற்கு மேல் பயணித்த போதும் அது ஒரு ஆசனத்தையேனும் பெற உதவில்லை இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி வடக்கில் 2 ஆசனங்களையும் வெற்றிலை 01 ஆசனத்தையும் பெற்றிருப்பதானது வாக்களார் மற்றும் வேட்பாளர்களையும் மீறி மத்திய கட்சிகளின் (தேசிய கட்சிகளின்) ஆதிக்கத்தை பிராந்திய நிலைகளிலும் ஊடுருவியுள்ளதை காட்டக்கூடியதாக உள்ளது. அனைத்து கட்சிகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து பார்த்தால் தேசியக்கட்சிகள் இரண்டுமே பின்வரும் விடயங்களை தெளிவு படுத்தி தமது இலக்கை நிர்ணயித்துள்ளன.

01.அரச அடையாளப்படுத்தல்
02.அரசியல் தீர்வு
03.சமாதானமும் மீளிணக்கமும்
04.சமயம்
05.தேசிய பொருளாதாரம்
06.வெளியுறவுக்கொள்கை
07.அரச சேவைகள் மற்றும் அரசாங்கத்தின் பணிகள்
08.ஊழலை அழித்தல்
09.நீதியியல் முறைமை
10.பொருளாதார அபிவிருத்தி
11.நிதி மற்றும் வர்த்தகம்
12.கல்வி
13.சுகாதாரம்
14.விவசாயம் மற்றும் பாலுற்பத்தி
15.மீன்பிடித்துறை
16.சுற்றுலாத்துறை
17.காணி
18. நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்ப்பாசணம்
19.வலு
20.போக்குவரத்து
21.வீடமைப்பு
22.சுற்றாடற் பாதுகாப்பு
23.வேலை வாய்ப்பு
24. சிறுவர் மற்றும் பெண்கள் நலன்
25.இளைஞர் மற்றும் விளையாட்டு

ஆனால் பிராந்தியக் கட்சிகள் அல்லது கட்சி தனது தேர்தல் விஞ்ஞானபனத்தில் பண்பு ரீதியான கோரிக்கைகளை விட அளவு ரீதியான கட்டளைகளை வழங்கவில்லை. தமிழ் மக்களை இன்னமும் இனவாதம் அல்லது இனப்பிரச்சனை எனும் வலைக்குள் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது இனியும் செல்லாது என்பதே இப்போதைய தேர்தல் முடிவுகள் பிராந்தியக் கட்சிகளுக்கு காட்டும் முடிவாகும். அதை விட சில சாத்தியமாகாத அல்லது சாத்தியமாகாது என நன்றாக அறிந்த சில விடயங்களை கூட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பாக ஒன்று பட்ட மற்றும் பிரிக்கப்படாத இலங்கையினுள் சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கோருவதாகும். பதின்மூன்றாம் திருத்தம் சட்டமாக்கப்பட்ட போது அது இலங்கையின் ஒன்றையாட்சி தகைமைக்கு எவ்வித்த்திலும் பங்கம் விளைவிக்காது என இலங்கை உயர் நீதிமன்றம் தெரிவித்த பின்னரே அது சட்டமாக்கப்ட்டது. ஏனெனில் அது இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை பாதிக்கவில்லை என சிங்கள பௌத்த தேசம் சட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்தமையால் ஆகும். ஆனால் அதிலிருக்கும் மிக குறைந்த பட்ச அதிகாரங்காளான காணி மற்றும் பொலிசு என்பவற்றை கூட மத்தியின் அனுசரணையின் கீழ் மட்டுமே மாகாணங்கள் கையாளமுடியும். எனவே சாதகமாக ஏற்புடையதான வேலைக்கட்டமைப்புக்களில் மட்டும் அவதானம் செலுத்தினால் போதுமானது அல்லது அதற்கு மீறியமை சாத்தியமான அடை பொருளை கொண்டவை அல்ல.

உதாரணமாக இன்று இலங்கையில் விஷேடமாக பணியாற்றி வரும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் குறிப்பாக மேற்குலக நிதிவளத்தை தன்னகத்தே கொண்டு பணியாற்றி வரும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் பலவும் தமது பணிக்கொள்கைகளை அகதி யுகத்திலிருந்து அபிவிருத்தி யுகத்தை நோக்கி நகர்த்துவதை நாம் அவதானிக்கலாம். ஆனாலும் இன்னும் எமது யுத்த்த்தால் நேரடாகவோ அல்லது மறைமுகமாவோ பாதிக்கப்பட்ட எம் இனத்தவர்கட்கு இன்னும் தொடர்ந்திருக்கும் அகதி வாழ்க்கை யுத்தம் முடிந்து 06 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் கூட நீண்டு செல்வது கண்டனத்திற்குரியது. உதாரணம் மன்னாரில் தம்பண்ணகுள கிராம மக்கள் வெள்ளப் பாதிப்புகளால் வருடம் தோறும் அவதியுறுவதால் தற்போது அதே மடு பிரதேச செயலக பிரிவினுள் காணப்படும் காட்டை அழித்து அதற்கு இரண்டாம் கட்டை என பெயரிட்டு அங்கு குடியேற்றப்பட்டுள்ளார்கள் சுமார் 160 குடும்பங்கள் உள்ள அந்த கிராமத்தில் 30 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத்திட்ட உதவிகள் கிடைத்துள்ளன. மிகுதிக்குடும்பங்கள் வீடு, கழிப்பறை வசதிகள் ஏன் குடி நீர் வசதிகள் கூட இல்லாத  காட்டினுள் யானைத் தொந்தரவுகள் உடனேயே தமது காலத்தை கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் வாழ்கின்றனர் இப்பந்தி எழுதப்படும் வரை. இதற்கு மாகாண சபையில் ஆட்சியிலுள்ள மற்றும் வடமாகாணத்தில்  பாராளுமன்ற ஆசனங்களில் பெரும்பான்மையை பெற்ற கட்சி என்ன செய்கின்றது எனும் கேள்விக்கு விடை யாருக்கும் கிடைக்கவில்லை அல்லது யாரிடம் கேட்பது என யாருக்கும் தெரிவதில்லை.
.
எனவே தமக்கு தகுதிகாண் காலமாக தமிழ் மக்களால் இன்று எனும் குதிரையின் முன்னாள் காட்டிய கரட்டாக இல்லாது அடையக்கூடிய  நிலையான அபிவிருத்தி (Sustainable Development) மற்றும் அதிகாரப் பகிர்வு (Devolution of Powers) எனும் வகையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தேசிய கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து அது ஒரு கட்டத்தில் பிராந்திய கட்சிகளின் அடையாளத்தையே இல்லாது ஆக்கிவிடும். அரசியல் பிரச்சனைகளை விட வாழ்வாதாரம் மற்றும் சுயாட்சி பொருளாதாரம் என்பனவற்றிலும் பிராந்திய கட்சிகள் அக்கறை கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அளவு கோலுடன் 05 வருட காலத்தினுள் எவ்வளவு அளவு சாதிக்க  வேண்டும் என்பதையும் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

மேலும் வாக்காளர்கள் தமது பணி வாக்களிப்பதோடு முடிந்து விட்டது என எண்ணாது தாம் அளித்த வாக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என கண்காணிப்பது அவர்களது அளப்பரிய கடமையாகும். ஏனெனில் பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்க்ள வாக்களிப்பது மட்டுமே ஜனநாயக கோட்பாடு போலவும் அதை 05 வருடங்கட்கு ஒரு முறை நிறைவேற்றி வைப்பது மட்டுமே ஒரு குடிமகனின் கடமை போலவும் தேர்தல் காலங்களில் மட்டும் முளைக்கும் காளான்களாக காணப்படும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் சிவில் சமூகங்கள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இயங்கும்  அமைப்புக்களும் மக்களின் மனதில் தவறான பொறுப்புணர்ச்சியை விதைத்து விடுகின்றன. இருப்பினும் உண்மையில் சிவில் சமூகங்கள் பலமாக இருத்தலே நல்லாட்சிக்கான அடிப்படை அம்சமான பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும். ஆனால் அவ்வாறு அழுத்த செயற்பாடுகளை கொடுக்கக்கூடிய சிவில் அமைப்பே அரசியல் பின்புலம் ஒன்றுடன் இணைந்து இயங்குவதானது ஜனநாயகத்திற்கு விழுந்த அடி என்றே நான் கருதுகின்றேன். ஒரு அரசியல் கட்சி சார்ந்தா அல்லது ஒரு மத வழிநடத்தலுடன் அதன் தலைமைத்துவத்துடன் இணைந்தோ நடாத்தப்பட்டு செல்வது சிவல் சமூகம் ஆகாது அது அரசியல் கொள்கையுள்ள ஆனால் கட்சிக்கொள்கையற்ற சுய ஆற்றலுடைய குடிமகன்களின் கூட்டாலேயே சாத்தியம் ஆகும்.

அரசாங்கங்களையும் அதன் முதன்மை அங்கத்தவர்களாகிய அரசியல் வாதிகளையும் மற்றும் அதன் அமுலாக்கற் பிரிவிற்குள் அடக்கப்படும் அரச அதிகாரிகளையும் அவர்களின் பணிகள் தொடர்பாக கேள்விக்குட்படுத்த மக்களுக்கு உள்ள சட்ட ரீதியான வழிவகையாக தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். இச்சட்டம் பத்தொன்பதாம் திருத்தம் மூலமாக இலங்கை மக்களுக்கு அரசியல் யாப்பில் ஒரு உரிமை என தெரிவிக்கப்பட்டாலும் அது தொடர்பான நடைமுறையாக்கல் சட்டம் இன்று வரை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படவில்லை, இன்று நல்லாட்சி எனும் பெயரில் ஆட்சி அமைக்கவுள்ள தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அதை எதிர்பார்ப்பதோடு பலமுள்ள சிவில் சமூக கட்டமைப்பு ஒன்று மன்னாரில் இன்று அவசரமாக தேவைப்படுகின்றது. அது கிராமிய மட்ட பிரதிநிதித்துவம், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சட்டம் உட்பட பல துறை சார்ந்த வல்லுணர்களின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதாக அமைந்திருப்பது கட்டாயம். இது ஓர் நீண்டகாலத்திட்டம் இளைஞர்களின் முன்ண்ணி பங்களிப்புடன் அனுபவஸ்தர்களின் வழிகாட்டலுடன் திடமாக முன்னகர்த்தப்பட வேண்டிய கட்டாயம்…. மாற்றம் மட்டுமே  மாறாதது என்ற இவ்வுலகில் மறாதது ஒன்று என்று ஒன்றுமில்லை நம்மை காக்க நாம் இணையாத வரை எமக்கு மீட்பில்லை.

அப்படி ஒரு கட்டமைப்பு அரசியல் செல்வாக்கை தாண்டி மன்னார் நகரில் இன்று வரை தோற்றம் பெறாமை அல்லது வளர்ச்சி காணாமை என்பதே இன்று வரை எமது மாவட்டம் அனைத்திலும் பின்னிற்கின்ற அல்லது அனைவராலும் மிளகாய் அரைக்கப்படுகின்ற மாவட்டம் என்பதை யாரும் மறுக்க முடியாது

 .அர்ஜின்,
மன்னார்.
LL.B (Hons) (Jaffna)
Attorney-at-Law (W/O)

arjunwil@yahoo.com
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது