Social Icons

Pages

Tuesday, 11 December 2012

“திவி நெகும” எனது பார்வையில்



01).திவி நெகும என்றால் என்ன ?

திவி நெகும என்பது கீழ்வரும் மூன்று  சட்டங்களை திருத்தி ஓர் நிறுவக அலகாக செயற்படுத்துவதற்கான ஓர் சட்டமூலமாகும்.

(அ) இலங்கை சமுர்த்தி அதிகார சபை இல 30 இன் 1995
(ஆ )இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை இல 18 இன் 1996
(இ இலங்கை உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை இல 26 இன் 2005

இச்சட்டங்கள் மூலம் பயன்பெறுவோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக திவி நெகும செயற்பாடு சுய வங்கிகள் சார்ந்து இயங்குவதாடு பெரும்பாலும் நிதியியல் சார் செயற்பாட்டை அல்லது காசுப்பாய்ச்சலை நாட்டு மக்களிற்காக ஊக்கப்படுத்தும் ஓர் செயற்பாடும் ஆகும் என அரசாங்கம் அறிக்கைப்படுத்துகின்றது.

02). இச்சட்டமூலம் யாரால் முன் வக்கப்பட்டது ?

அரச வர்த்தகமானியில் 30-07-2012 அன்று பிரசுரிக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமாகிய பசில் ராஜபக்சே அவர்களினால் 09-10-2012 அன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

03).இச்சட்டத்தின் அரசியல் விமர்சனங்கள் எவை ?

இலங்கை ஜனாதிபதியின் குடும்பத்தினர் நிதிக்கட்டுப்பாடு பின்வருமாறு நாட்டின் தொத்த பாதீட்டில் 64 வீதமாக காணப்படும். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 24 வீதம், ஜனாதிபதியின் ஏனைய நேரடி அமைச்சுக்கள் 22 வீதம், திவி நெகும மூலம் புதிதாக 18 வீதம் தம்முடைய நேரடி கட்டுப்பாட்டில் நாட்டின் நிதியை கையாள வழியேற்படும்.

04). இச்சட்டமூலத்தின் பால் உருவாக்க எண்பிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை?

(அ) திவி நெகும அபிவிருத்தி திணைக்களம் ( பிரிவுகள் 4,5,6)
(ஆ) திவி நெகும தேசிய சபை ( பிரிவுகள் 7,42)
(இ) திவி நெகும சம்மேளனம் ( பிரிவுகள் 23,24)
(ஈ) சமுதாய அடிப்படையிலான வங்கிகளினதும் வங்கிச் சங்கங்களினதும் முகாமைத்துவ சபை ( பிரிவு 33)
(உ) திவி நெகும மாவட்டக் குழுக்கள் ( பிரிவுகள் 20,21,22)
(ஊ) திவி நெகும வலைய அமைப்புக்கள் (பிரிவுகள் 16,17,18)
(எ) திவி நெகும சமுதாய அடிப்படையிலான அமைப்புக்கள் (பிரிவுகள்  10,11,12)

05). இச்சட்டமூலத்தின் நுட்பங்கள் அல்லது பொருள்கோடற் தத்துவங்கள்   பற்றி ?

இச்சட்ட மூலம் 47 பிரிவுகளையும் 10 பகுதிகளாகவும் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலுள்ள பிரிவுகளின் கீழும் அத்தலைப்புக்கான வகை நிறுவக உருவாக்கம், உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் நியமனம், செயற்பாட்டு எல்லைப்பரப்பு, ஒட்டு மொத்த கட்டுப்பாட்டு அதிகாரம் என்பன காணப்படுகின்றன. முழுமையாக பதிவிட வண்டும் எனில் சட்டமூலத்த பிரதி பண்ண நேரிடும். இடம் மற்றும் கால அரித கணக்கிற் கொண்டு பிரதி பண்ணலை தவிர்த்துள்ளேன்.

முகத்தளவிலான தோற்றத்திலேயே பரந்து பட்ட அதிகாரங்களை மையக் குவிய முறைமையினுள் கொண்டு வருவதற்கான சட்டமூலம் என இதை கூறிவிடலாம். நேரடி பொருள் கோடலே அதிகார குவிப்பு மேற்கொள்ள போதுமானதாக இருக்கின்றது.

06). இச்சட்ட மூலத்திற்கும் நீதித்துறை அச்சுறுத்தல்கட்கும், பிரதம நீதியரசர் அவர்களிற்கெதிரான குற்றப்பிரரணைக்கும் இடையிலான தொடர்பு எப்படிப்பட்டது?

1987 இல் இந்திய அழுத்தத்தின் பேரில் இலங்கை அரசால் வலிந்து ஏற்கப்பட்ட 13ம் திருத்தச்சட்டம் தன்னகத்த 3 நிரல்களில் அரச செயற்பாட்டு பிரிவுகளை கொண்டிருந்தது. அவை முறையே

(அ). மாகாண நிரல்
(ஆ). மத்திய அரசு நிரல்
(இ). ஒருங்கிணை நிரல்

இதில் மாகாண சபை நிரல் மாகாண சபை மட்டுமே கையாள வேண்டிய விடயங்களையும் மத்திய அரசு நிரல் மத்திய அரசால் மட்டுமே கையாளப்பட வேண்டிய விடயங்களையும் ஒருங்கிணை நிரல் இரு ஆட்சி அமைப்புக்களும் பொதுவாக சட்டம் இயற்றக்கூடிய விடயங்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. ஒருங்கியை நிரற்படி மத்திய அரசும் மாகாண சபையும் ஓர் விடயத்தில் வேறுபட்ட கொள்கைகளை வெளிப்படுத்தின் மத்திய அரசின் கொள்கையே முதன்மையானதாகும்.

ஆனால் திவி நெகும திட்ட அமுலாக்கலின் பெயரில் மாகாண சபை நிரலில் காணப்படக்கூடிய சுமார் 17 விடயதானங்களை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொணர வழி சமைக்கின்றது. இவ்வாறான சட்டங்கள் பாராளுமன்றில் அனைத்து மாகாண சபைகளின் ஒப்புதலின் பயரிலேயே நிறவேற்றப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் வடக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அதற்கான ஒப்புதலை பெற்றாகிவிட்டது. ஏனனில் வடக்கில் மாகாண சபை முறைமை இன்னம் ஸ்தாபிக்க படவில்லை. அதற்கு அரசாங்கம் வடக்கில் மாகாண சபை தேர்தலை நடாத்தி இருக்க வேண்டும்.

நீதிமன்றின் முன்னிலையில் இவ்விடயம் தன்னார்வலர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்ட போது அரசு வடக்கில் மாகாண சபை இல்லாததின் காரணமாக வடக்கு மாகாண  ஆளுநரின் சம்மதத்துடன்  இச்சட்டமூலத்தை சட்டமாக்கலாம் என வாதிட்டது. இதில் வேடிக்கை என்னவன்றால் மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியாலேயே அவரின் முழுமையான தற்றுணிபின் அடிப்படையில் அவரின் பிரதிநிதிகளாக அவரால் நியமிக்கப்பட்டவர்கள்.

இந்த வழக்கு விசாரணையில் அரசற்கு சார்பாக சமிஞ்சை ஒன்றை பிரதம நீதியரசர் உட்பட்ட நீதியரசர் குழாம் வழங்காமையே இன்று நிறைவேற்றுத்துறை நீதித்துறையை அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டிற்குள் கொணர துடிப்பதற்கான வலுவான காரணம்.




07).இச்சட்ட மூல அமுலாக்கலின் போது மாகாண சபையின் எவ்வாகையதன அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன ?

(அ) மாகாணங்கட்கான பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
(ஆ) மாகாணத்தினுள் உணவு வழங்கல் மற்றும் விநயோகித்தல்
(இ )மாகாண சபை நிர்மாண பணிகள்
(ஈ) வர்த்த நிலையங்கள் பொதுச்சந்தைகள்
(உ) முதியோர் மற்றும் மாற்றாற்றல் உள்ளோர் சேவை
(ஊ) கிராமிய அபிவிருத்தி
(எ) கட்டமைப்புக்குட்படாத வர்த்தக, இலக்கிய, விஞ்ஞான, சமய மற்றும் ஏனைய மாகாண அமைப்புக்கள்
(ஏ) மாகாண உட்பாதைகள், பாலங்கள் , இறங்கு துறை அமைப்பு, பயனறுகைகள்
(ஐ) உடல், உள ரீதியான மற்றும் சமூக ரீதியிலான புனர்வாழ்வு, ஏனைய நிரற்படுத்தப்ப்ட்ட விடயங்கள்.

08). நீதித்துறை அமுலாக்குமாறு உத்தரவிட்ட மாற்றங்கள் எவை ?

(அ)அரசு நிதி மத்திய நிதி தொகுப்பின் மூலம் மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். திவி நெகும நிதியை அமைச்சர் மட்டுமே சுயாதீனமாக கையாள முடியாது.

(ஆ) திவி நெகும துறைக்கான உயர் அதிகாரிகளையும் அமைச்சரவை மட்டுமே நியமிக்க முடியம். குறித்த துறைக்கான அமைச்சர் மட்டுமே ஏகாபத்தியமாக முடிவுகளை எடுக்க முடியாது.

09). இச்சட்ட மூலத்தில் உச்ச கட்டத்தில் விமர்சிக்கப்படும் மூன்று பிரதான விடயங்களும் எவை ?

(அ). திவி நெகும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் பணியாட்கள் இரகசியத்தை வெளிப்படுத்தா உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்து இட வேண்டும். அதன் படி ஓர் சட்டத்தாலோ அல்லது பொருத்த நியாயாதிக்கமுடைய நீதிமன்றாலோ கோரப்பட்டால் அன்றி அவர்கள் திணைக்கள விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது. இதை பிரிவு 38 சுட்டுகின்றத. ( இந்த வேளையில் இந்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவற்றியுள்ளதனை குறிப்பிடுகின்றேன்.)

(ஆ) இத்திணைக்கள உத்தியோகத்தர் கேட்கும் எந்த விடயத்திற்கும் குடிமக்கள் பதிலளிக்கும் படி இச்சட்டம் கட்டாயப்படுத்துகின்றது. மீறின் சிறை அல்லது அபராதத்தை விதிக்கின்றது. நீதிமன்று கூட தனக்கெதிராக குற்றம் சுமத்த படக்கூடிய கேள்விகட்கு தனிநபரை விடையளிக்குமாறு கட்டாயப்படுத்த சட்டப்படி வலுவற்றது. இங்கு எந்த விடயம்  என்பது படுக்கையறை விடயமாக இருக்கவும் கூடுதோ என எண்ண தோன்றுவது உருவக பிழையல்ல. ஏனெனில் உறுப்புரையின் சொற்பாவனை அந்தளவு பரந்து பட்டதாக உள்ளது.

(இ) அரசின் நல்லிணக்கம் அதிகார பகிர்வு எனும் பேச்சுகளிற்து சிறந்ததோர் எதிர் சாட்சியாக மாகாண சபை அதிகாரங்களை துடைத்தொழிக்கும் ஓர் சட்டமாக விளங்குகின்றது.

10).இச்சட்டத்தின் கீழ் நிதி முகாமை பற்றி ?

இச்சட்ட மூலத்தின் மூலம் இத்திணைக்கள நிறுவகத்திற்கு ஒதுக்க உத்தேசிக்க பட்டுள்ள சுமார் 80 பில்லியன் இலங்கை ரூபா மக்கள் பணம் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என அறிய அதன் உரிமையாளர்கட்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

பகுதி 8 இன் திணைக்ளத்தின் நிதி என தலைப்பிடப்பட்டு இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ( பிரிவுகள் 35 மற்றும் 36)

பிரிவு 35 கீழ்வரும் முறைமைகளூடாக திணைக்களத்திற்கு பெறப்படும் நிதிகளை அமைச்சர் குறிப்பிடும் தேவைகட்காக அவர் குறிப்பிடும் விதத்தில் பயன்படுத்த எதிர்பார்க்கப் படுகின்றது. 

35 (1) (அ) அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி

35 (1) (ஆ)  திணைக்களத்திற்கு வழங்கப்படும் எல்லா மானியங்கள் மற்றும் அன்பளிப்புக்கள்

35 (1) (இ) வங்கி சமூகங்களால் அளிக்கப்படும் எல்லா பங்களிப்புக்கள்

35 (1) (ஈ) வங்கி சமூகத்தின் இலாபங்கள் அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்ட  படி

பிரிவு 36 இந்த சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட அமைப்புகளின் அனைத்து நிதி சார் பரிமாற்றங்களும் இனி இத்திணைக்களத்தால் கையாளப்படும்.

11).இச்சட்ட மூலத்தின் கள தகவல்கள் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புக்கள் ?

குடும்ப ஆட்சி முறைமை என எதிர்க்கட்சிகளும் இடதுசாரிகளும் பகிரங்கமாகவே எடுத்துரைக்கையில் ஜனநாயகம் மரித்து மன்னராட்சி முறையையும் கடந்து சர்வதிகார நிலையினை அடைகின்ற வேளையிலே பாராளுமன்றில்  விஷேட பெரும்பான்மை பலத்தையும் விஞ்சிய பலத்தடன் உள்ள அரசாங்கம் இச்சட்ட மூலத்தையும் இலகுவாக சட்டமாக்கி விட முடியும். ஆனால் தடைக்கல்லாக உள்ள நீதித்துறையை சமாளிப்பது இன்று அரசின் இன்னோர் சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளது. ஆனால் புதிய பிரதம நீதியரசர் நியமிக்க பட்டு நீதிமன்ற விடயங்கள் வழமைக்கு திரும்பி விட்டால் இதுவும் பதினொன்றில் பத்துதான் ஏனெனில் நீதித்துறையின் உச்சத்தை நிர்வாகத்தின் உச்சம் தான் உச்சத்தில் அமர்த்துகின்றது.

Monday, 26 November 2012

இலங்கையின் நீதித்துறை ஒர் ஆய்வு


ஓர் உயர்தர பாடசாலை மாணவனாக சட்டத்தரணி என்ற ஓர் உயர்தொழிலை அடைய அவா கொண்டதற்கு முழு காரணமுமே தொழிற்சுகந்திரம் தான். யாருக்கும் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. என் விருப்பப்படி வேலை நேரம், வேலை பிரிப்பு என்பது தான். ஆனால் இன்று அன்று எனக்குள் ஏற்பட்டிருந்த அந்த அவா, அடங்கி தணிந்து விட்டதென்றே கூறலாம். சட்டத்தளத்தினுள் நுழையாமல் வெளிப்பார்வையில் தென்பட்ட மாயைகள் எனக்குள் இன்று இல்லை. 

நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவர்க்கும் சட்டம் ஒன்று தான். இலங்கையின் 1978ம் ஆண்டு யாப்பு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவர்க்கே நீதிமன்ற பொறி முறைமையில் இருந்து முழு பாதுகாப்பை தனது 35வது பிரிவினுாடாக வழங்குகின்றது. இதில் அவர் பதவிக்காலத்தில் செய்தமை அல்லது செய்யாமை ( Commission and Omission ) தொடர்பாக நீதிமன்ற பொறி முறைக்கு அப்பாற்பட்டவர். செய்யாமை கூட சட்டக்குற்றமே, அதாவது சட்டம் குறித்த ஒருவனுக்கு அளித்த பொறுப்பை நிராகரித்தான் எனும் குற்றமாகும். ஆனால் அதே யாப்பினுாடாக ஜனாதிபதி தனது  அமைச்சரவை செயற்பாடுகள் தொடர்பாக அவர் நீதிமன்ற செயன்முறைக்கு உட்பட்டவரே ! . நிகழவு ஜனாதிபதி தன் வசம் முக்கிய மூன்று அமைச்சுகளை கொண்டிருக்கின்ற போதும் என் அறிவிற்கெட்டிய வரைக்கும் ஒரு குற்றச்சாட்டேனும் அவ் அமைச்சுக்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்டதாக அறியேன்.


நிலை இவ்வாறிருக்க வலு வேறாக்க கோட்பாட்டை ( Separation Of Powers ) தன்னுள் ஈர்த்த இலங்கையின் நடைமுறை  அரசியல் யாப்பு அதன் மூலத்தை ( Nature of Origin ) எங்கோ தவற விட்டது போல தோன்றுகின்றது. இலங்கையின் அரச பொறிமுறை மூன்று உட்யந்திரங்களை கொண்டது. முதலாவதாக ஜனாதிபதியை தலைவராக கொண்ட நிறைவேற்றுத்துறை ( Executive), இரண்டாவதாக சபாநாயகரை தலைவராக கொண்ட சட்டவாக்கத்துறை ( Legislature) , மூன்றாவதாக பிரதம நீதியரசரை தலைவராக கொண்ட நீதித்துறை(Judiciary) . இவை மூன்றும் ஒன்றை ஒன்று சரிபார்த்து சீராக்க ( Check and Balance) வேண்டும் என்பதுதான் கோட்பாட்டு நியதி.








இப்படம் ஆனது நீதித்துறை மற்ற இரு துறைகளையும் கண்காணிப்பது போல காட்ட வரையப்படடதேயின்றி வலுவேறாக்க கோட்பாட்டை விபரிப்பதென்று.


அதாவது சட்டவாக்கத்துறை உருவாக்கும் சட்டங்கள் நாட்டின் மீயுயர் சட்டமான ( Supremacy Of Law ) அரசியல் யாப்புடன் முரண்படுமிடத்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடல். அதே போன்று சட்டத்துறையினால் உருவாக்கப்பட்ட சட்டங்களை அமுல்படுத்தும் துறையான நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கட்கு தக்க நிவாரணம் அளிப்பதும் நீதித்துறையின் கடப்பாடு.


ஆனால் இலங்கையில் சட்டவாக்கத்துறையும் நிறைவேற்றுத்துறையும் இன்று ஒன்றே என்பது நுட்பங்கட்கு அப்பால் தெளிவாக புலப்படுகின்றது. சட்டத்துறை நபர்களிடையே இருந்தே நிறைவேற்று துறைக்கான அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அமைச்சரவையின் தலைவர் நிறைவேற்று துறையின் தலைவரான ஜனாதிபதி அவர்களே ! அப்படி எனில் இரு துறைகட்கும் ஒரே தலைவர் தானே ? நீதித்துறை செயற்பாட்டை பார்த்தால் உச்சநீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். அடுத்த நிலை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம், பதவி நீக்கம் மற்றும் ஒழுக்க கோவை விடயங்கட்கு நீதிச்சேவை ஆணைக்குழு ( Judicial Service Commission )  பொறுப்பானது. இவ்வாணைக்குழுவில் உச்சநிதிமன்ற நீதிபதிகள் மூவர், பிரதம நீதியரசர் உள்ளடங்கலாக பதவி வகிப்பார்கள். (உறுப்புரை 112.)

நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் கீழ் உறுப்புரைகள் 105 முதல் 147 வரை இரு அலகுகள் XV மற்றும் XVI என்பன நீதித்துறையுடன் சம்மந்தப்பட்டு காணப்படுகின்றன.


உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய உறுப்புரை 107(2) இன் படி ஜனாதிபதி பாராளுமன்றிற்கு அவ்விடயத்தை தெரியப்படுத்தி பின்பு பெரும்பான்மை வாக்குகளால் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பதவி நீக்க காரணமாக பிறழ்நடத்தை அல்லது தகுதியீனம் ( Misconduct or Incapacity ) நிரூபிக்க படவேண்டும்.


ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஜனாதிபதியே பிரதம நீதியரசரை நியமிப்பார். பிரதம நீதியரசர் மற்ற  நீதித்துறை அலுவலர்களை நியமிப்பார். இது நிலத்தின் மீது மேசை, மேசை மீது பூனை எனவே நிலத்தின் மீது பூனை கதைதான்.



அதோடு பாராளுமன்ற சிறப்புரிமைகள் (Parliamentary Privileges ) என்ற பெயரில் அங்கு என்ன பேசப்பட்டாலும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் சுகந்திரம் அல்லது அதிகாரம் அரசியலமைப்பின் மூலமாகவே நீதிமன்றிடம் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது. இதற்கான நியாயப்பாடு பேசப்படா பொருளாக ஒன்று அமைய கூடாது என்பதோடு பாராளுமன்று ஆனது ஓர் திறந்த வெளி நாட்டின் விவாத அரங்கு என்பது தான்.


ஏனைய முன்னைய அரசியலமைப்பு சட்டங்களை விட 1978ம் ஆண்டு யாப்பு ஆனது பரந்தளவு பாதுகாப்பை எழுத்தியல் ரீதியில் நீதித்துறைக்கு ளவழங்கியுள்ளது. ஆனால் ஜே.ஆர் அன்று இதே யாப்பை நிறைவேற்று அதிகாரம் எனும் தோற்றுவாயிற்காகவே கொணர்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அது இன்று பதினெட்டாவது திருத்தச்சட்டம் மூலம் இன்னும் வலுவூட்டப்படுகின்றது. பதினேழாவது திருத்தத்ததை நிர்மூலப்படுத்தியதன் மூலம் சிறுபான்மையினரின் ஒரே ஒளிக்கீற்றான 13ம் திருத்தமும் ஆட்டங்காண ஆரம்பித்துள்ளது.


தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இன்று பிறழ்நடத்தை பிரிவின் கீழேயே குற்ற விசாரணைகட்கு உட்படுத்த பட்டிருக்கிறார். மொத்தமாக 7 கோடி ரூபா வரையிலான வருமானத்திற்கு மீறிய கணக்கில் வராத சொத்துகட்கான குற்றத்தின் கீழே விசாரணைகட்கு முகம் கொடுத்துள்ளார். ஆனால் திவி நெகும சட்ட மூலத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து கொணரப்பட்ட வழக்கில் ஆட்சேபனையை ஆட்சேபிக்காததன் விளைவுதான் இவை என உலாவும் கதைகளையும் நான் மறக்கவில்லை.  அவரது கணவர் பிரசாத் காரியவம்சம் வங்கி மோசடி ஒன்றில் ஈடுபட்டமையும் குற்ற பிரேரணையில் குறிப்பிட்டு காட்டப்பட்டிருப்பது எந்தளவு துாரம் சரியானது என என்னால் ஊகிக்க முடியவில்லை. அதே நேரம் பதிலி தளங்களால் மட்டுமே இப்போது அணுகக்கூடிய தளமொன்றில் 6000 கோடி ரூபாய்கள் தரகென்ற பெயரில் இலஞ்சமாக யாரோ பெற்றுக் கொண்டிருப்பதாக வந்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது போலும்……..


பொதுவாக இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை பெற அனுபவமும் படிமுறை பதவி நகர்வுகளுமே தேவை என்பது ஓர் வழக்காற்று சட்டமாகவே உள்ளது. ஆனால் முன்னைய பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா மூப்படிப்படையில் பதவி துறப்பதற்கு சொற்ப காலத்திற்கு முன்னமே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பீடாதிபதியாக கடமை புரிந்து கொண்டிருந்த தற்போதைய நீதியரசர் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியால் நேரடியாக சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
மேகங்கள் என்றும் ஒன்று போல் இருப்பதில்லை. அதிலும் இன்றைய இலங்கையின் அரசியல் மேகங்களின் நகர்வுகள் அரசியல் விஞ்ஞான வித்தகர்களாலேயே கணிக்க முடியாதவை. நாடாளுமன்றில் இன்று விஷேட பெரும்பான்மையை விஞ்சிய சக்தியடன் எதையும் செயற்படுத்த வல்ல நிறைவேற்றுத்துறை இதிலும் வெற்றி பெறும் என கணிக்க அதீத ஞானம் தேவைப்படாது.



அண்மையில் பொது நிகழ்வு ஒன்றில் முன்னைய பிரதம நீதியரசரை சந்தித்த ஜனாதிபதி நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்க அவரோ குற்றப்பிரேரணை விடயத்தை துவக்க கையமர்த்திய ஜனாதிபதி தவறான முறைமைகட்கு சரியாக இறுதியே முடிவு என கூறினார். இதைத்தான் SUNDAY TIMES பத்திரிகை “WHATEVER THE CHIEF JUSTICE MAY SAY, GOVT WILL HAVE ITS WAY” என வர்ணித்தது போல் உள்ளது.



முடிவாக அமெரிக்காவை ஒப்பு நோக்கின் அங்கு மூன்று அரச துறைகளுக்கிடையிலும் மிக நேர்த்தியான பிரிப்பு உள்ளது. பிரித்தானியாவை நோக்கின் அங்கு துறைகளுக்கிடையில் பிரிப்பு என்பது இல்லை. ஆனால் இலங்கையில் மூன்றாக பிரிந்து செயலாற்ற வேண்டிய அரச பொறிமுறை இரண்டிற்கு ஒன்றாக உள்ளதால் தான் இன்று நீதித்துறை இவ்வாறு அல்லல் பட வேண்டி உள்ளது. இவ்வாறாக நடைமுறை ரீதியாக மட்டுமல்லாது யாப்படிப்படை ரீதியாக கூட இலங்கை நிறைவேற்றுத்துறையை பலப்படுத்தி உள்ளது. இதற்கு ஓர் அரசாங்க மாற்றம் ( (Government  )  மட்டும் போதுமானதாக இருக்காது அரச பொறிமுறை ( State Mechanism ) மாற்றம் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாக அமைய முடியும்.

Thursday, 15 November 2012

அதிகாரத்தை அடைய 48 வழிகள்


மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள் , நேரான மரங்களே முதலில் வெட்டப்படும், நேர்மையான  மனிதர்களே  முதலில் பழி துாற்றப்படுவார்கள், வளைந்து கொடுங்கள் வாழ்க்கை இலகுவானதாக இருக்கும் --- சாணக்கியன் பொன் மொழி   




இன்று புதியதோர் புத்தக அறிமுகத்தடன் உங்களை சந்திக்கின்றேன். நான் தொடர்சியாக அச்சிட்ட புத்தக வடிவிலும் மின் நுால்களாகவும் பல சுய முன்னேற்ற தொடர்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுபவன். இவை அனைத்துமே பெரும்பாலும் சுயசிந்தனை, சுயகட்டுப்பாடு, சுய ஆக்கம் எனும் கோட்பாடுகளை பற்றியே சூழ்ந்திருக்கும். ஆனாலும் ”அதிகாரத்தை அடைய 48 வழிகள்” எனும் புத்தகம் சற்று வித்தியாசமாகவே எனக்கு பட்டது. இது நியுயோர்க்கை சேர்ந்த இராபர்ட் கீரின் என்பவரால் படைக்கப்பட்டு சென்னை பல்கலைக்கழக முனைவர் எஸ்.எஸ்.குமார் அவர்களால் தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது. இப்புத்தகம் இந்திய மதிப்பில் ரூபா.199 ஆகும். இலங்கையில் சுமார் ரூபா.700 அளவில் விற்பனையாகின்றது. இதை என்னால் LAKE HOUSE புத்தக விற்பனை நிலையத்தில் மட்டுமே விற்பனைக்கு பெறக்கூடியதாக இருந்தது. 325 பக்கங்கள் உடைய இப்புத்தகம் உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுள்ளமையும் வர்ணக்கலவை மற்றும் அதிகரித்த புள்ளி அச்சளவு என்பன புத்தக விலையில் கணிசமான பங்களிப்பு வழங்கியுள்ளது போல தோன்றுகின்றது. அதோடு நேரடி மொழி மாற்று முறைமை கையாளப்பட்டிருப்பதால் சில இடங்களில் மறைபொருட் தெளிவை காண்பது கடினமாவேயுள்ளது. இப்புத்தகத்தை பெற google இல் google செய்த பின்னரும் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்ப்பதிவர்களிடம் இருந்து இந்த நுால் வருடப்படாமல் தப்பி விட்டது போலும்.

இனி புத்தக விடய தானத்தினுள்,
நான் ஏற்கனவே கூறியவை போல் மற்ற எல்லா புத்தகங்களையும் விட இது ஒழுக்கமுறை சாரா, கபட, இரக்கமற்ற மற்றும் கற்பிக்கின்ற நுாலான அதிகாரத்ததை அடைய 48 விதிகள் என்பது நடைமுறை வாழ்விற்கு, நடைமுறை வாழ்வியலிற்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற விடயங்களை எட்டுவதோடு 500 வருட கால ராஜதந்திரிகள், போர் வீரர்கள், வஞ்சியர் மற்றும் பிரபல ஏமாற்றும் பேர்வழிகள் விட்டுச்சென்ற வழிமறைகளையும் தெளிவு படுத்தி நிற்கின்றது.

பொதுவாக புத்தகங்கள் உங்கள் முழுத்திறனையும் பயன்படுத்துங்கள்

அல்லது வெளிப்படுத்துங்கள் என்றே ஆரம்பமாகும் வேளையில் 

இப்புத்தகமோ ”தலைவரை விட எப்பொழுதும் அதிகமாக ஒளி 

வீசாதீர்கள்” என்று ஆரம்பமாகின்றது. தலைமைத்துவத்தை அல்லது

அதிகார இருப்பை அடைவது மற்றும் தொடர்சியாக தக்க வைப்பது
என்பதற்கான 48 சாணக்கிய விதிகளையும் காரண காரிய

விளக்கங்களையும் அளிக்கின்ற இந்நுால் உண்மையிலேயே ஓர் 

தலைமைத்துவ வழிகாட்டி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

Thursday, 25 October 2012

இலங்கையின் காணிச்சட்டங்கள்



01.நிலம் என்றால் என்ன ?

நிலம் அல்லது காணி என்பதை வெறும் பொருளாதார பெறுமதியை மட்டுமே கொண்ட ஓர் இடப்பரப்பு என மட்டுப்படுத்தி விட முடியாது. அது எம்நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்த ஓர் சமூக கலாச்சார காரணியாவதோடு பொருளியல் ரீதியில் அதிகரிப்பிற் சாத்தியமற்ற உற்பத்தி வளம் என்பதால் தொடர்ச்சியான அதிகரித்த கேள்விக்கும் பிரச்சினைகட்கும் உள்ளாகும் விடயப்பரப்பாகும்.

02.காணி தொடர்பில் இப்போது இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் என்ன ?

நடைமுறையில் பிரதானமாக ஆவண பதிவுக்கட்டளை சட்டம் ( Registration of Documents Ordinance No 23 of 1927) , மற்றும் உரித்துப்பதிவு சட்டம் ( Registration of Title Act No 21 of 1998) என்பன காணப்படுகின்றன.
இவற்றிற்கு மேலதிகமாக மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு ஒழுங்குபடுத்துவதற்காக மோசடி தவிர்ப்பு கட்டளைச்சட்டமும் ( Prevention of Fradues Ordinance No 7 of 1840) , . ஆவண பதிவொழுங்குகளை சீராக்குவதற்காக நொத்தாரிசு கட்டளைச்சட்டமும் ( Notaroes Ordinance No 1 of 1907 )விளங்குகின்றன.


03. ஆவண பதிவுக் கட்டளை சட்டம் (Registration of Documents Ordinance) என்றால் என்ன ?

இன்று நாம் கைவசம் கொண்டிருக்கும் காணி உறுதிகள் அனைத்தும் இச்சட்டத்தாலேயே ஆளப்படுகின்றன. இது தனது பிரிவு 3 இனுாடாக நிலம் எனும் பதத்தை வரையறுப்பதுடன் மாவட்ட காணி பதிவாளர் தனது காணி இடாப்பில் உறுதிகளை பதிவதற்கும் இச்சட்டம் வகை அளிக்கின்றது.

04. இச்சட்டங்கள் அமுலில் இருந்தும் ஏன் காணி தொடர்பில் மிகையான சீர்கேடுகளும், நீதிமன்றங்களில் தொகையான வழக்கு நிலுவைகளும் காணப்படுகின்றன ?

இதற்கு இரண்டு காரணங்களை பிரதானமாக முன் வைக்கலாம்.

முதலாவது மாவட்ட காணி பதிவகத்தில் காணப்படும் காணி பதிவிடாப்பு தொலையுமிடத்து குறிப்பிட்ட இடாப்பில் பதியப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் இழக்கப்படும்.  பின்னர் மூன்றாம் திறத்தவர் அது தன் காணி என நொத்தாரிசினால்  உறுதி செய்யப்பட்ட உறுதியை சமர்ப்பித்தால் காணி பதிவாளர் அவ்வுறுதிக்கான பதிவை இடாப்பின் புதிய பக்கத்தில் பதிவார். அதே காணிக்கு இன்னொருவர் உறுதியை முறைப்படி காணி பதிவாளரிடம் பதிவிற்கு சமர்ப்பித்தால் அவ்வுறுதியையும் பதிவாளர் பதிவிடாப்பின் அதே பக்கத்தில் பதிய நிர்பந்திக்கப்படுகிறார். இப்பதிவுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே சென்ற சந்தர்ப்பங்களும் குறைவின்றி உண்டு.

இரண்டாவது சந்தர்ப்பம் காணி கைமாற்றலின் போது ஏற்படுவதாகும். கைமாற்றம் ( விற்பனை அல்லது நன்கொடை) இடம் பெற்ற போது ஓர் காணிக்கு தானே இனி உரியவன் எனும் நோக்கோடு நொத்தாரிசினால் உறுதிப்படுத்தப்பட்ட எத்தனை உறுதிகள் காணி பதிவாளரிடம் அனுப்பப்பட்டாலும் அத்தனையும் அவர் தனது பதிய கட்டாயப்படுத்தப்பட்டவராவார்.

இரு சந்தர்ப்பங்களிலும் காணி பதிவாளர்க்கு உள்ள நியாயப்பாடு என்ன எனில் அவருக்கு காணியின் உரித்து உண்மை பற்றி விசாரணை செய்ய எந்த அதிகாரமும் கிடையாது அதோடு உறுதியை முதலில் பதிவு செய்ய வருபவர் உண்மை உரித்துடையவரல்லாதவர் எனில் தொடர்சியாக பதிவு செய்பவர் பாதிப்புக்குட்பட கூடாதென்பதாகும். இச்செயற்பாடுகள் முகத்தோற்றளிலேயே ஓர் பெரும் நீதி வெற்றிடத்தை காணிப்பிணக்குகளில் உள்ளாவோர்க்கு அளிப்பது போலுள்ளது.


05. காணி பதிவாளர்க்கு இந்நிலைக்கு எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் ?

காணி பதிவாளரின் அதிகாரம் உறுதி ஆவணங்களை காணி பதிவிடாப்பில் பதிவதோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அவர் கீழ்வரும் மூன்று காரணங்கள் தவிர எதன் சாட்டுதல் பேரிலும் பதிவை மேற்கொள்ளாது நிராகரிக்க முடியாது.

1.        உரிய நபர் உறுதியை பதிவிற்காக சமர்ப்பிக்கவில்லை, உரிய நபர்களாக  மூன்று நபர்கள் மட்டுமே கருதப்படுவார்கள்
  (அ). ஆவண உறுதியின் சொந்தக்காரர்.
  (ஆ). அத்தாட்சிப்படுத்திய நொத்தாரிசு
  (இ). குறிப்பிட்ட நொத்தாரிசினால் உறுதிப்படுத்தப்பட்ட நபர்
      2. உறுதிக்கான உரிய முத்திரை வரி செலுத்தப்படவில்லை.
      3.ஆதன இடாப்பு தரப்பில்லை ( உறுதி உரிய முறையில் பூரணமாக்கப்படவில்லை )


06. உங்களிடம் உள்ள காணிக்கான உறுதி ( Deed ) ஓர் இறுதிச்சான்று பத்திரம் ஆகுமா  ?

பதில், நிச்சயமாக  இல்லை. ஆனால் பொது மக்கள் பலர் தங்களிடம் உள்ள காணி உறுதி ஒன்றே தம் காணியின் உரிமையாளர் என்பதை எண்பிக்கும் என தவறாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் நீதிமன்றின் முன்னிலையில் அக்காணியின் மீது அக்கறை உடையோர் யாருமே உங்கள் உறுதியின் வலிதார்ந்த தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். உங்களிடம் உள்ள உறுதி ஆனது நீதிமன்றின் முன்பு ஒரு முகத்தோற்ற அளவிலான ( Prima Facie )ஆவணமாகவே கருதப்படும். நீங்கள் முதலில் காணிப்பதிவக இடாப்பில் உங்கள் உறுதியின் பதிவை மேற்கொள்வதால் உங்களுக்கு பின்னர் பதியப்படும் நபர்களை விட ஓர் முன்னுரிமையை (Priority) பெறுகிறீர்கள். ஆனால் இன்னும் இந்த “முன்னுரிமை” என்ற பதம் எமது நீதிமன்றங்களினால் தெளிவாக என்ன பயன்பாடு என்று வரையறுக்காமை காணிச்சட்டத்தில் ஓர் இடைவெளியை உருவாக்கியுள்ளது. 


07. மேற்போர்ந்த பிணக்குகட்கு தீர்வேதும் இல்லையா ?

காணிப்பிணக்குகளை கையாளவும் , எதிர்காலத்தில் காணிகளின் உரிமைத்தன்மையை நிச்சயப்படுத்தி கொள்ளவும், மோசடிகளை  தவிர்க்கவும், கணணி இற்றைபடுத்தற் செயற்பாடுகள் மூலம் வினைத்திறனை பேணவும் 1998ம் ஆண்டு உரித்து பதிவுச்சட்டத்தை  (   Registration of Title Act ) பிம் சவிய நிகழ்ச்சி திட்டம் மூலம் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

08.உரித்துப்பதிவு  ( Registration of Title ) என்றால் என்ன ?

இது முதன் முதலில் அவுஸ்ரேலியாவில் அமுலாக்கப்பட்ட ஓர் காணி அளவீட்டு முறையாகும். இதன் போது அரசாங்கம் நாட்டின் சகல காணிகளையும் அளவை செய்து அதன் மீது உரித்து உடையவர்கள் என தகுதி காண்போருக்கு காணி உரித்து சான்றிதழ் வழங்கும். இச்சான்றிதழானது காணி உரிமை தொடர்பில் இறுதிச்சான்றாவணமாக அனைத்து நிர்வாக, நீதி விடயங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

09.பிம் சவிய  ( Bim Saviya ) என்றால் என்ன ?

பிம் சவிய என்பது பின்வரும் நான்கு அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக உரித்து பதிவு முறைமையை அமுலாக்குவதற்கான ஓர் செயற்றிட்டமாகும்.
01.நில அளவையாளர் திணைக்களம்
02. பதிவாளர் திணைக்களம்
03. காணி ஆணையாளர் நாயக திணைக்களம்
04. காணி உரித்து நிர்ணய திணைக்களம்.

10.இதன் நடைமுறைகள் யாவை ?

முதலாவதாக பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு நில அளவையாளர் நிறுவனத்தால் அப்பிரதேசம் முழுமையாக அளவீடு செய்யப்படும். பின்னர் பொதுமக்கள் தங்கள் காணிகட்கு உரிமைகளை கோருமாறு வேண்டப்படுவர். அப்போது காணிக்கு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தமது காணி என முன்மொழிவு ஒன்றினை வெளிப்படுத்துவர். குறிப்பிட்ட காணிக்கு வேறு எவராலும் உரிமைத்தடங்கற்கள் ஏற்படுத்தப்படாது விடத்து  என இரு தரப்படுத்தப்பட்ட காணி உரித்து சான்றிதழ் வழங்கப்படும். அதே காணிக்கு வேற்றார் மூலம் உரிமைத்தடங்கல் ஏற்படத்தப்படின் அது மாவட்ட நீதிமன்றின் நியாயாதிக்கத்திற்குட்பட்டதாகும்.

11. காணி உரித்து சான்றிதழ் ( Land Title Certificate ) என்றால் என்ன ? அதன் நன்மைகள் என்ன ?

மேற்குறிப்பிட்ட செயன்முறைகளின் இறுதியில் காணியின் சொந்தக்காரருக்கு வழங்கப்படும் ஓர் சான்றிதழ். இது உங்களிடம் இருப்பின் உங்களின் காணி உரிமை தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

அதோடு தொடர்ச்சியான கொடுக்கல் வாங்கலிலும் ( விற்பனை / நன்னொடை)  இங்கு உயர்வினைத்திறன் இங்கு பாதுகாக்கப்படுகின்றது.
காணியை உரிமை மாற்றம் செய்யும் போது குறித்த சான்றிதழ் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். பிறகு புதிய உரிமையாளர்கட்கு புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட உரித்து சான்றிதழ் வழங்கப்படும். இதே போல காணிகளை துண்டாடி கைமாற்றினும் உரிய காணி சான்றிதழ் கையளிக்கப்பட்டு துண்டங்கட்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் ஆவண பதிவு முறைமையின் கீழ் உள்ள குறைபாடுகள் மற்றும், மோசடிகட்கு தீர்வாய் அமையும் எனலாம்.


12.இந்த உரித்து பதிவு முறைமையின் பிரதி கூலங்கள் யாவை ?

(அ). உரித்து பதிவு செய்யப்படும் போது உரிய ஆவணங்கள் இன்மையால் உண்மையான காணி சொந்தக்காரர்கள் தமது காணிகளை இழக்கின்ற அபாயம்.
(ஆ) இம்முறைமை  ஆனது எமது சுதேச சட்டங்களுடன் முரண்பட்டு எமது பாரம்பரியம் இழக்கப்படும் நிலைமை.
(இ) ஏதோ ஓர் முறைமை மூலம் உரித்து சான்றிதழை பெற்று விட்டால், பின்னர் அக்காணிணின் உரித்தின் வலிதார்ந்த தன்மை பற்றி நீதிமன்றின் முன்னிலையின் கேள்விக்குட்படுத்த முடியாமை.
.(ஈ). இது அதிக தொழினுட்ப செயற்பாடுகளையும், ஆளனியையும் உள்ளீர்க்கும் ஓர் செயற்பாடு என்பதால் பாரிய நிதி தேவைப்பாடு உண்டு. தற்போதுள்ள நிதிப்பாய்ச்சல் செயன்முறைகளின் படி பார்த்தால் இலங்கை முழுவதையும் இம்முறைமையினுள் உள்ளடக்க சுமார் 50 வருட காலப்பகுதியாவது தேவைப்படும்.


13.ஆட்சியுரிமை ( Prescription ) என்றால் என்ன ?

ஆட்சியுரிமை என்பது குறிப்பிட்ட காணியில் ஒருவர் தொடர்சியாக குடியேறியிருந்தால் அக்காணியின் உரிமை அவருக்கே சாரும் என்பதாகும். ஆனால் அவர் கீழ்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
(அ) தன் இருப்பிற்கு பிரதிபலனாக எதையும் காணியின் உரிமையாளருக்கு உரிமையாண்மை சார்பில் வழங்கியிருக்க கூடாது.
(ஆ). காணியின் அக்கறையுடைய வெளிநபர்கள் யாரொலும் காணியின் இருப்பு தொடர்பில் குடியிருப்பவருடன் பிணக்குகனில் ஈடுபட்டிருக்க கூடாது.
(இ) வழக்கு கொணர்வதற்கு முன்னர் தொடர்ச்சியாக 10 வருடங்கள் அக்காணியில் குடியிருக்க வேண்டும்.
(ஈ). ஆட்சியுரிமை எனும் கோட்பாடு அரச காணிகட்கோ , நம்பிக்கை பொறுப்பு காணிகட்கோ ஏற்புடையதாகமாட்டாது.


ஆட்சியுரிமை எனும் கோட்பாட்டை உருவாக்க காரணம் நில சொந்தக்காரனுக்கு அநீதியை ஏற்படுத்துவதாகாது மாறாக ஓர் நில சொந்தக்காரன் தனது காணியை எதற்கும் பயன்படுத்தாது விடின் அது  மொத்த தேசிய உற்பத்தியில்  நிலம் என்ற உள்ளீட்டு காரணியின் உள்ளீடை குறைக்கும். இதை தவிர்கவே காணியை பயன்படுத்துவோனுக்கு அதன் உரித்தை அளித்து நிலத்தின் உள்ளீட்டை தேசியநலன் கருதி சட்டம் ஒழுங்கமைக்கின்றது.


14.அனுமதி பத்திர காணிகள் (  Permit Lands ) என்றால் என்ன ?

இவ்வகை காணிகள் இலங்கை முழுவதும் பரந்து பட்டு காணப்படினும் குறிப்பாக வட கிழக்கில் இது ஒப்பீட்டளவில் அதிகம் எனலாம். அரசாங்கம் வறழ் வலய குடியேற்றங்களை வடகிழக்கில் பெருமளவு மேற்கொண்டது யாவரும் அறிந்த விடயம். இதன் போது அரசாங்கம் குடியேற்றவாசிகட்கு அரச காணிகளை அனுமதி பத்திர காணிகள் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.  ஆனால் அதன் கைமாற்றதகு தன்மை பல விதங்களில் உருவாக்கப்பட்டன.
சில காணிகள் குறிப்பிட்ட காலத்தின் பின் சொந்த காணிகள் போல கைமாற்றக்கூடியன. சில காணிகள் தனது பரம்பரையாளர்கட்கு மட்டும் கைமாற்றலாம் என மட்டுப்படுத்தப்பட்டவை. மேலும் சில காணிகள் மாவட்ட செயலகத்தின் அனுமதியின் பேரிலேயே கைமாற்றக் கூடியவை.

இவற்றை கவனத்தில் எடுத்த பின்னரே தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லாது விடின் அரசாங்கத்திடமோ அல்லது ஆரம்ப கால அனுமதி தாரரிடமோ காணிகளை இழக்க நேரிடும். இன்று வடகிழக்கில் இருந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளியேறிய பெரும்பான்மை இனமக்கள் தாம் அன்று கைமாற்றிய  அனுமதி பத்திர காணிகட்கான உரிமையை மீள கோருவதை ஓர் உதாரணமாக காட்டலாம்.



 மேற்குறிப்பிட்ட விடயங்கள் எனது அறிவிற்கு எட்டிய மட்டிலும் உசாத்துணைகளாக பதிவாளரது சந்திப்பையும் சட்ட நுால்களையும் கொண்டவை. நன்றி.
                                                                    

Thursday, 6 September 2012

சிவப்பு சந்தை----மனித உறுப்புக்களின் சந்தை


ஆங்கிலத்தில்  பிரசுரமாகியுள்ள  RED MARKET எனும் நாவல் ஆனது இன்றைய நவநாகரீக உலகின் போர்வையை கழற்றி விட்டு அதன் இயல்பையும் உண்மைத்தன்மையையும் உலகிற்கு பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. இன்று உலகின் தொழில்களில் தொழிலாண்மையோடு பணம் கொட்டும் துறை மருத்துவ துறை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

 என் சொந்த அனுபவம் என் அம்மாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை கொழும்பு தேசிய வைத்தியசாலை தவிர வேறு எந்த அரச வைத்தியசாலைகளிலும் மாற்றீட்டு வசதிகள் இன்மை காரணமாகவும் தேசிய வைத்தியசாலையில் முழு பரிசோதனைகள் திருப்பதிபடுத்தப்பட்ட பின்னரும் சுமார் 02 வருட காலங்கள் காத்திருப்பு வரிசையை அணைத்திருக்க வேண்டிய துர்பாக்கியத்தாலும் தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. காத்திருப்பு காலத்தில் அதாவது சிறுநீரக மாற்றீடு காலம் வரை இரத்த சுத்திகரிப்படும். வாரத்திற்கு இரு முறையேனும் இச்சுத்திகரிப்பை மேற்கொள்ளின் மட்டுமே நோயாளி மூச்சு விட அவஸ்தையை எதிர் நோக்க வேண்டி ஏற்படாது. இவ்வாறன காலத்தில் மனித உறுப்பு மாற்றீட்டிற்காக சந்தித்த சட்ட வதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பின்னர் வெற்றிகரமாக சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டது.

நான் அம்மாவுடன் வைத்தியசாலையில் தங்கியிருந்த போது அவதானித்த ஒன்று அம்மாவிற்தகு இரத்தம் தேவை என கூறி ஆட்களை அழைத்து வரும் படி எங்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கூறியது. ஆனாலும் எந்த இரத்தப்பிரிவு என்றாலும் பரவாயில்லையாம். ஆனால் பற்றுச்சீட்டை பார்த்த போது இரத்தம் ஒரு பைன் என பட்டியலிட்டு அதாவது சுமார் 350 மில்லி லீட்டர் மனித இரத்தத்தின் விலை ரூபா.6000. இதை பார்த்த பின்பு நான் இரத்தம் வழங்க யாரையும் அழைத்து செல்லவில்லை. எந்த கெடுபிடியும் இன்றி மனித இரத்தம் ரூபா.6000 ற்கு கிடைத்தது. இதை ஏன் சட்டம் தடுக்கவி்ல்லை எனும் வினா அன்று பாடசாலை உயர்தர மாணவனாக ஏற்பட்ட எனக்கு இன்று 3ஆம் வருட சட்ட மாணவனாக கூட விடையை எட்ட முடியவில்லை. வைத்திய துறையில் சட்டம் தலையிடாதாற்கு ஓர் காரணம் என தீங்கியற் சட்டத்தில் படித்த ஞாபகம் அதாவது மருத்துவ பாவனையாளர்களை சட்டம் கட்டுப்படுத்தின் மருத்துவ துறையின் ஆராய்வுத்தகமை அல்லது விரிவெல்லை மட்டுப்படுத்தப்ட்டு  அதன் விளைவாக புதிய கண்டுபிடிப்புகளோ பிணி தீர்ப்பனவுகளையோ இடம் பெறாது என்பதே சார்பான வாதம். ஆனால் சட்டவாய்வாளர்கள் செய்த மிகுந்த அறிவியற் தனத்தையும் நான் மறக்கவில்லை. முதலில் ஒரு தராதரமுள்ள மருத்துவ பாவனையிலலாளரின் கருத்துக்களை அதே தரமுள்ள இன்னொரு மருத்துவ பாவனையியலாளரின் கருத்துக்கள் புறந்தள்ள மாட்டா என கூறிய நீதித்துறை பின்னைய நாட்களில் இரண்டு வித கருத்துக்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பின் மன்றே  அதில் எது நியாயமானது என தீர்மானிக்கும் என்ற பிணிக்கும் தீர்ப்பை இன்று வரை பிணிக்க செய்துள்ளது. இதை விட மன்றின் அதிபதிகட்கும் வழக்குரைஞர்கட்கும் கூட இதேயளவு விடுபாட்டு மற்றும் சிறப்புரிமைகள் மன்றின் மாதிரியில் கிடைப்பது  கண்கூடு.

டெனிங் பிரபுவின் கூற்று இதற்கு சான்று. நான் அதிகமாக சட்டம் பற்றி அறுப்பதாக எண்ண வேண்டாம். சட்டம் என்பது ஓர் புத்தக பாடம் மட்டுமல்ல  அது மனித சமுதாயத்தின் அனைத்து தொழிலாண்மைகளுடன் தொடர்பை கொண்டது. ஏனெனில் எங்கெல்லாம் சமூக அமைதியின்மை ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் அமைதி(தீ)யை ஏற்பட வழி சமைப்பதே சட்டத்தின் கடப்பாடு. உயரிய தொழிலாண்மைகள் ஒன்றுடனொன்று என்றும் முட்டி மோத விரும்புவதில்லை. ஆனாலும் சட்டமும் மருத்துவமும் ஒன்றுடனொன்று உராய்ந்தாவது செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது. உதாரணமாக குற்றவியற் சட்டம் தீங்கியற் சட்டம் என்பன குறிப்பிட்டு கூறத்தக்கன.

ஆனால் எந்த வித தொழிலாண்மையும் மருத்துவம் உட்பட தன்நிலை பிறழ்விற்கு உட்படும் போது சட்டம் தலையிடுவது தவிர்க்க இயலாதது. மனித உயிரின் மதிப்பையும் சமூக வாழ் மாண்புகளையும் ஒருசீரில் பராமரிப்பது சட்டத்தின் கடப்பாடு.

இனி நேரடியாக புத்தகத்தினுள் நுழைவோம்

அந்த வகையில் மனித உடல் உறுப்பு விற்பனை எனும் விடயத்தில்  சட்டம் இன்னும் மூன்றாம் நாடுகளில் இலங்கை உட்பட கண்மூடி வாய் பொத்தி நிற்பதை SCOTT CARNEY எழுதிய THE RED MARKET எனும் புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இப்புத்தக எழுத்தாளர் சர்வதேச புலன் விசாரணை அமைப்பை சார்ந்த ஓர் ஊடகவியலாளர். இதை எழுத வெளியிட  ஆராய்ச்சிக்காக மட்டுமே சுமார் ஐந்து வருட காலத்தை தம் வாழ்நாளில் அவர் இழக்க வேண்டி ஏற்பட்டது. அதிலும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து ஐரோப்பிய வளர்ச்சி அடைந்த நாடுகட்கு கள்ளச்சந்தையூடாக கடத்தப்படும் மனித உடல் உறுப்புக்கள்  மனித எலும்புகள் மனித இரத்தம் பற்றியதாகவே பெரும்பகுதி ஆக்கிரமித்திருந்தது. குறிப்பாக ஆசிரியர் இந்தியாவை மையப்படுத்தி தனது முடிவுகளை பெரும்பாலும் பகுப்புரைப்பதை அறிய முடிகின்றது. 

கட்டற்ற சனத்தொகை மட்டற்ற வறுமை பசி பரந்த புவியியற் பரப்பின் தொடர்பாடல் தடைகள் வெளியுலக அறிவை பெறுவதில் கூட காணப்படும்  வசதியீனம் அல்லது அசட்டுத்தனம் அல்லது மரபு என்பன இந்திய ஜனநாயக அரசை காப்பாற்றவோ அல்லது சட்ட மீறுகையை  கட்டுப்படுத்தாத கையாலாகாத தனத்தை நியாயப்படுத்தி காட்டவோ பயன்படக்கூடும். இருப்பினும் உண்மை உண்மை தான் .

இந்தியாவின் ஒரு எல்லையோர கிராமத்தின் பெயர் கிட்னிவாகம் அதாவது இந்த ஊரில் பெரும்பாலும் அனைவருமே ஓர் கிட்னியை வழங்கியவர்கள் ( விற்றவர்கள் அல்லது பறிக்கப்பட்டவர்கள் ) .

பல தனியார் வைத்தியசாலைகள் எப்படியாவது தமது நோயாளியை பல லகரங்கள் கறந்து கொண்டு பிழைக்கவைத்து விடுகின்றன. அதன் சூட்சுமம் வைத்தியருக்கும் நிர்வாகத்திற்கும் மட்டுமே வெளிச்சம். ஆனால் பல தளியால் வைத்தியசாலைகள் வைத்தியர்களின் கூட்டாண்மைகளால் இயங்கிக் கொண்டிருப்பவை என்பதை அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாட்டின் வியாபார சட்டங்கள் கம்பனி கூட்டிணைவுகளையே இறுக்குவதால் இவை உயர் தொழிற்கூட்டாண்மைகள் என்ற வகுதிக்குள் அடங்கி தப்பிவிடுகின்றன. ( இலங்கையின் வியாபார சட்டப்படி 20 உறுப்பினர்களுக்கு மேல்  ஓர் தொழிலில் சேர்ந்து ஈடுபட்டால் இதை கம்பனியாக கூட்டிணைக்க வேண்டும். ஆனால் உயர்தொழில்கள் என வர்ணிக்கப்படும் முயற்சியாண்மைகட்கு விதி விலக்கு உண்டு ).

சில  தனியார் வைத்தியசாலைகள் நோயாளிகளின் அனுமதியின்றி ஏன் தகவல் கூட இன்றி மனித உறுப்புகளை மாற்றீடுசெய்து விடுகின்றனர். இவை பெரும்பாலும் சிவப்பு சந்தையில் இருந்து பெற்றுக்கொண்டதாகவே காணப்படுகின்றது. இந்த முழு தொகையையும் நோயாளியிடம் பன் மடங்காக கறந்து விடுகின்றார்கள்.

அடுத்து புற்றீசல்கள் போல் முளைவிட்டுள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள். எனது பல நண்பர்கள் பங்களாதேஷின் ஓர் தனியார் மருத்துவ கல்லுாரியில் ஐந்து வருட படிப்பிற்குமாக சுமார் 65 இலட்சம் வரை அள்ளி தெளித்தவர்கள். அவர்களின் பயிற்சிக்காக கல்லுாரி மனித உடல் உறுப்புக்கள் மற்றும் என்புகளை வழங்கியிருந்தது. அவற்றை இருப்பிடங்கட்கு எடுத்து வரும் பலர் மீள ஒப்படைப்பதில்லையாம் ஆனாலும் தொடர்ச்சியாக அவை மாணவர்கட்கு வழங்கப்படுகின்றன. ஆனால் பங்களாதேஷ் ஓர் மிக பெரும்பான்மை இஸ்லாம் சார் நாடு. பொதுவாக இஸ்லாமியர்கள் தங்கள் உடலங்ளை மரணத்தின் பின்பு ஆராய்ச்சி மற்றும் பிற தேவைகட்காக ஒப்படைப்பது மதப்படி தடுக்கப்பட்டள்ள ஒன்று.

இவை எல்லாம் எப்படி சாத்தியம். இதற்காக மனித உறுப்பு ஏஜெண்டுகள் இந்திய கண்ட நாடுகளில் காணப்படுகின்றார்கள். அவர்களின் உறுப்புகள் பாடங்கட்காகவும் உறுப்பு மாற்றீட்டு சிகிச்சை  முறைமைகட்காகவும் பயன்படுகின்றன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் மிகக்கடுமையாக மருத்துவர்கள் கண்காணிக்கப்படுவதும் உயர்தொழிலாண்மை என்ற வாதம் உதிர்வடைந்து வருவதும் மனதிற்கு நிம்மதியளிப்பினும் அதை சமப்படுத்த ஆசிய நாடுகளில் இவை உறுதியடைவதும் மனதிற்கு மகிழ்வை அளிக்க கூடியவையல்லவே. எனவே வைத்தியர்கள் தமது வாழ்வை மட்டும் கருத்தில் கொள்ளாது தம் மருத்துவ கல்லுாரியில் எடுத்த சத்தியத்தின் படி அனைத்து உயிர்களையும் சம தன்மையாக பாவிக்க வேண்டும். ஏனெனில் இக்குற்றங்களை நிகழ்த்த மருத்துவ தொழிலாண்மை தவிர்ந்த ஏனைய அறிவு சாராரால் முடியாது. அதோடு சட்டத்தை ஆக்குவோரும் நடைமறைப்படுத்துவோரும் இயற்கை சட்டவியலை பின்பற்றும் ஓர் நடைமுறைப்போக்குமே இன்று இவ்வவலத்தை தடுக்கும் என நிறைவு செய்கின்றேன்.   

புத்தகத்தை PDF ஆக தரவிறக்க இங்கு சொடுக்குங்கள்

Friday, 17 August 2012

கணணி துருவற் தடயவியற் புலனாய்வு



இன்றைய சட்டப்பரப்பு அல்லது சட்டப்பரிமாணங்கள் என்பவை தொன்று தொட்டான சட்ட விடயதானங்கள் எனும் கருத்துக்களில் இருந்து பெருமளவு தற்போது வேறுபடுவது கண்கூடு. உதாரணமாக குடியியல் குற்றவியல் விடயதானங்களை கடந்து வணிகச்சட்டம் முகாமைச்சட்டம் போக்குவரத்து சட்டம் மருத்துவ சட்டம் என்பவற்றோடு இன்று புலமைச்சொத்துரிமைச்சட்டம் பாரிய வளர்ச்சியை நோக்கி வளர்வதானது துரிதமான இணைய புறநிலை வேவைகளின் விஸ்தரிப்பின் துலங்கல் என வரையறுக்கலாம்.  கணணியும் அதன் அதன் தாக்கங்களும் இன்று ஒவ்வொரு மட்ட மனித சமூகத்தின் அடிவரை வியாபித்தள்ளது. வலியோரிடம் இருந்து நியாயமற்ற வளப்பங்கீட்டில் எளியோரை காப்பது  சட்டத்தின் வகிபாங்கு.

இந்த வகிபாங்கு இன்று புலமைச்சொத்து  அல்லது கணணியியல் குற்றங்கள் என்பன தொடர்பில் மிக அபரிதமான தளப்பரப்பையும் அதே வேளையில் மிக சொற்பமான சட்ட ஆளுகை தன்மையையும் கொண்டுள்ளது.  இதற்கு காரணமாக முதலில் பயிற்றப்பட்ட மனித வளமின்மையை காட்டலாம். கணணியியல் குற்றங்களை சட்ட ஆளுமைக்குள் கொணர்ந்து அதன் மூலம் நிவாரணங்களை பெற உரிய ஆதாரங்களை தகுந்த நீதிமன்று முன்பு நெறிப்படுத்துவது சாதாரண சட்ட அல்லது கணணி அறிவால் சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது.


இதற்கு சிறந்த புலமைத்துவ சட்ட அறிவு அதோடு கணணி துருவற் தடயவியற் புலனாய்வு துறையில் ( Computer hacking forensic investigation ) நிபுணத்துவம் என்பவை உட்சேரறட் தகுதிகளாகும் .அத்தோடு இற்றைப்படுத்தல் என்பதும்தவிர்க்க முடியாதது. ஏனெனில் தினமும் புதுப்புது சாதனங்களை இலத்திரனியல் தடவியற் துறையில் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இத்துறையானது கணணி புலனாய்வுகள் கணணிசார் குற்றங்கள் எண்மிய தடவியல் கணணி தரவு மீளெடுப்பு என நீள்கின்றது.

இதில் தரவு மீளெடுப்பு என்பது தரவை கண்டுபிடித்தல் ( Discovering Data) அழிக்கப்பட்ட தரவை மீட்டெடுத்தல் (Recovering deleted)எண்மியமாக்கலை மீள நிலைப்படுத்தல் (Encrypted)சிதிலமடைந்த கோப்புக்களை நிகழுருவேற்றல் (Damaged file information) எனும் செயற்பாடுகளை  உள்ளடக்கியது.

சட்டமுகவராண்மை அல்லது நீதியியல் வழக்கப்படி பின்வருவன கணணியியல் குற்றங்களாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
01.Disloyal Employees
02.Computer break-in
03.Possession of  pornography
04.Breach of contract
05.Industrial espionage
06.E-Mail fraud
07.bankruptcy
08.Dispated dismissals
                                  09.Web page defacement

மேற்குறிப்பிடப்பட்ட வகை குற்றங்களை நிரூபிக்கவும் நிவாரணம் பெறவும் சட்டவியல் கணணியியல் என இரு தொழிலாண்மை வகைகளில் தேர்ச்சி அவசியம். சட்ட மாணவர்களது பரந்த பார்வை மற்றும் தொடர்ச்சியான இற்றைப்படுத்தல் என்பன இலத்திரனியல் குற்றங்கள் சம்மந்தமான துறைக்கு அவர்களது எதிர்காலத்தில் சிறந்த பொருளாதார அந்தஸ்துடன் வழிகாட்டும் என நம்பலாம்.

இலங்கையில் முதன்முறையாக கணணி துருவற் தடயவியற் பயிற்சியை CICRA நிறுவனம் வழங்குகின்றது. பயிற்சியின் பின்னரான பரீட்சையில் சித்தியடைவதை உறுதிப்படுத்தின் ஐரோப்பிய ஒன்றித்தால் வழங்கப்படும் கணணி துருவற்  தடயவியல் புலன்விசாரணையாளர் எனும் தகுதியை பெற முடியும். தற்போது  இத்தகுதி பணியிடங்கட்கு ஐக்கிய அமெரிக்காவில் கடும் கிராக்கி நிலவுவதுடன்  வருமானமாக சுமார் $80000-$125000  வரை  அதாவது LKR:10480000-LKR16375000 வரை பெறமுடியும். அதோடு கணணி என்ற சாதனம் மக்கள் கைகளில் இருந்து நழுவும் வரை இத்துறைக்கான மவுசு குறைவடைய வாய்ப்பில்லை.

அதோடு இன்று இணைய யுத்தம் அங்கீகரிக்கப்படாத ஓர் போர் முறைமையாக நாடுகளிடையே உருவெடுத்துள்ளது. இது வரும்காலங்களில் இலங்கை உட்பட அனைத்து நாடுகளின் தேசிய பாதுகாப்பு சார் பிரச்சனையாக உருவெடுக்கும்  என்பதால் எம்நாட்டில் கூட அதி உயர் வருமானம் தரக்கூடிய ஓர் துறையாக இது பரிணமிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இக்கட்டுரையை தமிழிலேயே வரைய  முற்பட்ட போதும் தொழினுட்ப சொற்களின் பொருட்கோடற் தெளிவின்மையை தவிர்க்க ஆங்கீல பாவனையை உட்புகுத்தியமை தவிர்க்க முடியாததாயீற்று.

நன்றி
சண்டே டைம்ஸ்
15/07/2012.




Tuesday, 24 July 2012

இலவச மனித உரிமைப்பாட பொதிகள்



மனிதன் மனிதனாக பிறப்பதன் வாயிலாக பெற்றுக்கொள்வதே மனித உரிமைகள் ஆகும். சட்டத்தின் பெரும்பங்கு மனிதனுக்கு அவன் யார் அவனது கடமைகள் மற்றும் உரிமைகள் என்னனென்ன என தெளிவிப்பதன் மூலம் சமுதாய ஒழுக்கத்தை கட்டிக்காத்தல் எனும் வகுதிக்குள் அடங்கி விடும்.  ஆனால் இது நடைமுறை சாத்தியமாக்கப்பட வேண்டும் எனில் அனைத்து தரப்பு மனிதர்களிடமும் இது பற்றிய பரப்புரை செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு உரிய மூலங்களிலிருந்து வழங்கல்கள் தடையின்றி வழங்கப்பெறுவது அவசியம். அந்த வகையில் பல தன்னார்வ அமைப்புக்கள் இப்பணியை மேற்கொள்கின்றன. இதற்காக வருடாந்தம் ட்ரில்லியன் கணக்கில் நிதி வளம் செயற்றியனுக்காய் வெளிப்பாச்சலுக்குள்ளாகின்றது. இவற்றை  அறியவும் பரப்புரை செய்யவும் இணையம் பெருமளவு துணை நிற்கின்ற போதும் கையில் தாள் வடிவில் வைத்து வாசித்து அறியும் போது கிடைக்கும் திருப்தி நம்மவர்கட்கு  மின்னுால் வடிவங்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை.


அந்த குறையை நிவர்த்திக்க பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமையியல் புத்தகங்கள் கடைகளில் கிடைப்பினும் விலை என்பது எம் எல்லோருக்கும் கசக்கும் என்பதும் இலவசம் என்பது இனிப்பானது என்பதும் பொதுவானது. எனவே சில இணையத்தளங்கள் மனித உரிமை சம்மந்தமான சில ஆரம்பநிலை விடயப்பரப்புக்களை தாள் அச்சுகளாகவும் மற்றும் குறுவட்டு வடிவிலும் ஆங்கீலம் உட்பட ( தமிழ் மொழியில் கிடைப்பனவுத்தகமை இல்லை) பல மொழிகளில் வண்ணமயமாக நமது வீட்டிற்கே அனுப்பி வைக்கின்றன நம்மிடத் நயா பைசா பெறாமலே ! குறிப்பிட்டஇணையத்தளங்களினுள் நுழைந்து இலவச பொதிகட்கான கேள்வியை மேற்கொள்ள இங்கு மற்றும் இங்கு சொடுக்குங்கள் . ஆனால் இவை உங்கள் வீட்டிற்கு வந்து சேர 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் நிச்சய நம்பகத்தன்மை உடையது. நான் இது வரை 3 பொதிகளை பெற்றுள்ளேன். ஆனால் சிரமம் என்னவென்றால் ஒரு தடவையில் ஒரு பொதிக்கான கேள்வியையே மேற்கொள்ளலாம். இன்னொரு பொதிக்காக மீண்டும் ஒரு தடவை கேள்விப்படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் அவ்வளவே !!!
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது