Social Icons

Pages

Friday, 11 May 2012

சட்ட ஆட்சி : ஹிட்லரை முன்னிறுத்தி சில சிந்தனைகள்


யாழ் பல்கலைக்கழக சட்டமாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்படும் நீதம் மலர்காக நான் வரைந்த கட்டுரை




இக்கட்டுரையை வரைவதற்காக திரும்ப திரும்ப அச்சாக்கப்படும் சட்டக்கொள்கை கோட்பாடுகளை விளக்க வெறும் கோட்பாட்டளவு விளக்கங்களை மட்டும் விபரிக்காமல் அதன் உண்மை பிரயோக யதார்த்தங்களையும் விளக்க எண்ணினேன். இதற்காக ஓர் உதாரணத்தை யதார்த்தமாக மேற்கோளிட வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் பக்கங்களில் விளக்க வேண்டிய கோட்பாடுகளை வரிகளில் உதாரணங்கள் மூலம் சுட்டி விடலாம். அதற்காக தனி மனித ஆளுமைகள் என்ற விடயப்பரப்பில் ஹிட்லர் என்ற ஆளுமையை தேர்ந்தெடுத்தேன். ஹிட்லரின் இரண்டாம் உலகப்போரும் அவரின் மின்னல் வேக போரியல் தந்திரோபாயங்களும் உலகிற்கு தேவையான அளவில் அறிமுகமானவை. ஆனால் சட்டம் என்ற தனி விடயதானத்தினுள் ஹிட்லர் என்ற தனிமனித ஆளுமை எவ்வாறு செயற்பட்டது என்பது இன்று வரை பரவலான அறிமுகத்திற்கு அப்பாற்பட்டது. அவர் போரியல் உத்திகளில் மட்டும் மின்னல் வீரராக அல்லாது அரசியல் சதுரங்கத்திலும் சட்டம் என்ற போர்க்காய்களை மிகத்திறமையாக நகர்த்தியவராகவும் காணப்பட்டார். 1933ம் ஆண்டு வரை ஜேர்மனி ஒரு ஜனநாயக நாடு ஆனால் இரு இனங்களிடையே புகைச்சலை கொண்டிருந்த தேசம் ஓர் குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தின் செழிப்பையும் செல்வாக்கையும் பார்த்து மற்றைய பெரும்பான்மை இனம் மனதில் கருவிக்கொண்டிருந்த நேரம் ஹிட்லரின் வரலாறு ஆரம்பமானது. அது நிச்சயம் எமக்கு சட்டத்தின் ஆட்சியினதும் அதன் ஏனைய துணை சட்ட கருது கோள்களினதும் நடைமுறை பிரயோகத்தை தெளிவிக்கும் ஓர் ஊக்கியாக தொழிற்படும் என எண்ணுகின்றேன். இன்று வளநாடுகள் அல்லது வேற்றுக்கொள்கை நாடுகளில் மனித உரிமை மீறல் எனும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி கொக்கரிப்பதோடு உச்சக்கட்டமாக நாட்டிறைமை என்ற கருதுகோளையே துடைத்தெறிந்து விட்டு வலுக்கட்டாய படை நடவடிக்கைகளில் ஈடுபடும் மேற்குலகம் அன்று ஒரு தனி மனிதன் சுமார் பதினோரு மில்லியன் சிவிலியன்களை கொன்றொழித்த போது தடுக்க தக்க நடவடிக்கை ஏன் எடுத்திருக்கவில்லை ? என்ற வினா இன்றைய மேற்குலகின் அக்கறைத்தன்மையின் உண்மைத்தன்மையை எமக்கு காட்டுகின்றது. சட்ட ஆட்சியின் கீழ் சட்டத்தை மிஞ்சி யாரும் இல்லை என்ற கருத்தியலை சட்டமே நானெனில் மேல் கீழ் சர்ச்சைகளிற்கே இடமில்லை என நிரூபித்தவர் தான் ஹிட்லர். இனி அவரின் வழியில்……………..

சட்டம் எனும் பதத்திற்கு வரைவிலக்கணமொன்றை வகு்க்க துணிந்த எவருமே அதில் வெற்றியடையவில்லை. மாறாக ஏதாவது சொற்கோவைகளை தமது வாசகர்கட்காக வசனமாக்குகின்றனர். சட்டம் என்பது சமூதத்தை ஒழுங்கமைக்கும் ஒரு விதிக்கோவை எனும் விபரணம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அது அடுத்தாக சட்டம் ஓர் நெறியாக சமூகத்தை வழிப்படுத்துகின்றதா  அல்லது ஓர் கட்டளையாக சமூகத்திற்கு ஆணை பிறப்பிக்கின்றதா என்பது இன்று வரை ஆய்வுக்குட்பட்ட விடயம். முதலாம் வினாவிற்கு ஆதரவுடையோர் தம்மை இயற்கை சட்டவாதிகள் எனவும் அரண்டாம் வினாவிற்கு ஒத்து சான்று பகர்வோர் தம்மை ஒழுங்கமைப்பு வாதிகள் எனவும் இரண்டு நிலைக்கும் இடையில் நெகிழ்ந்து நிற்கும் ஓர் புள்ளியே சட்டம் என வாதிடுவோர் தம்மை குரோசியர்கள் என அறிமுகப்படுத்துகின்றனர்.  ஆனால் எமது முழு தலைவலியே அந்த நெகிழ்வுப்புள்ளி தான். எப்போது அது எங்து இருக்கும் என தெளிவாக வரையறுத்து விட்டால் சட்டவாளர்கட்கு பணிகளும் இருக்காது அவர்கட்கான தோற்றுவாய்களும் காணப்படாது. ஏனெினல் அந்த புள்ளி தீர்மானிப்பு என்பது வெறும் விதிகட்கான கோணங்களுக்குள் அடங்கியிருக்க கூடிய விடயமோ அல்லது அடக்கப்படக்கூடிய விடயமோ அன்று  மாறாக அந்தப்புள்ளி நிர்ணயப்புள்ளிகளையே தொடர்சியாக நிர்ணயித்து கொண்டிருப்பது தான் சட்டத்தின் வரலாற்று யதார்த்தம்.


சட்டப்பயிலுணர்களின் முதல் வகுப்பு  எதிர்நோக்கல் வினா ஏன் இத்துறை தேர்ந்தெடுப்பு என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றது. பெரும்பாலும் பெறப்படும் விடையும் சட்டம் சமூக மாற்றத்திற்கான உபகரணமாக காணப்படுகின்றது என்பதேயாகும். எனவே சட்டத்தின் மூலம் சமூகத்தை மறுசீரமைக்க முடியும் என்பதாகும். ஆனால் அந்த உபகரணம் எனும் நேருருவாக்கம் வேறுபட்ட இரு தொழிற்கரங்களால் இயக்கப்படுவதை நாம் சிந்தையில் இருத்துவதில்லை அல்லது சிந்திக்க முயன்றதுமில்லை. முதலாவதாக அந்த உபகரணத்தை யார் கையாள்கிறார்கள் இரண்டாவது அந்த உபகரணம் யாரால் வடிவமைக்கப்படுகின்றது. ஆனால் இரண்டு வினாக்கட்கும் ஒரே விடையை நாம் எடுத்துரைப்பின் எங்கோ ஓர் தவறுதலை மேற்கொள்கின்றோம். இந்த உபகரணங்கள் மீயுயர் சட்டங்களாகவோ அல்லது பல்அம்ச நாட்டம்சங்கள் மூலம் வழிகாட்டும் வழித்தடங்களாகவோ அமையலாம். இந்த உபகரண அமைப்புகளே சட்டம் ஓர் ஒழுக்காற்று நெறியா அல்லது ஆணையா என தீர்மானிப்பதாக அமைகின்றது. உபகரண வடிவமைப்பு என்பது இரண்டாவது பதத்தை விட சற்றே கொள்ளளவு கூடியது என்பது வரலாற்று சான்றுகள் மூலம் ஆவணப்படுத்தி விடலாம். ஏனெனில் ஓர் உபகர வடிவமைப்பில் ஓரினத்தன்மையை பொருள்வாக்கோடு உருவாக்கிவிட்டால் அதோடு அதை கையாள வேண்டிய நிலைக்கு மாற்றுபாயமின்றி இயக்குணர்கள் தள்ளப்பட்டால் வடிவமைப்பு பணியே முதன்மை பெறுமே அன்றி கையாளும் பணி அன்று.  ஏனெனில் கையாள் பணியாளுக்கு அவ்வுபகரணத்தை இயக்குவதை விட ஒரே ஒரு மாற்றுாபாயம் இன்னோர் உபகரண வடிவமைப்புத்தான் அல்லது கையாள் என்ற பதவி நிலையை துறப்பதுதான். எனவே எவ்வாறு நோக்கினும் தன்னிச்சையாக முன்னையது முதன்மை பெறுவது நியதி. ஆனால் அதையும் தாண்டி வடிவமைத்தவர்கள் வெகு சிலரே அவ்வாறனவர்கள் எவ்வாறு முதற்பந்தியில் குறிப்பிட்ட நெகிழ்சிப்புள்ளியை எவ்வாறு அல்லது எங்கே நகர்த்துகின்றனர் என்பது தான் தனி மனித ஆளுமைக்கும் சட்ட ஆட்சிக்கும் இடையிலான எதிர்க்கோண நேருருவாக்கத்தை எமக்கு தெளிவாக்கும் குறிப்பேடாகும்.
ஆனால் வரலாற்றுப்பாடம் எமக்களித்த தோற்றுவாய் உபகரண வடிவமைப்பில் ஈடுபட்ட பெரும்பான்மையானோர் சட்டத்தை ஆணையாகவே தொழிற்படுத்தினர் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உதாரணம் தான் அடோல்ப் ஹிட்லர். ஏனெனில் அவ்வாறல்லாது இயற்கை சட்டப்பரப்பினுள் யாராவது சட்டத்தை உட்புகுத்தி விட்டால் அவ்வுபகரணமே இயக்குணரை கையகப்படுத்துமே அன்றி இயக்குணரின் தோற்றப்பாங்கு தேவையற்றதாகிவிடும். ஆனால் தர்க்கிப்பதற்கு அப்பாற்பட்ட விடயம் சே குவேரா போன்றோர் ஆக இருக்கலாம். ஆனால் அவர்களால் இந்த உபகரண வடிவமைப்பில் முழுமையடைய முடியவில்லை என்பதே எனது நிலைப்பாடு.அவ்வாறு முழுமையடைந்திருப்பின் அவர்களின் தொழில்முறைமைகளும் ஆணையை நோக்கி பயணித்திருக்கலாம் என்பது திண்ணம். அது பற்றி ஆராய்வதை விடுத்து உபகரண வடிவமைப்பில் முழுமையடைந்தோர் எவ்வாறு அதை பயன்படுத்தினர் என அளவளாவுவது பொருத்தமானதாகும். ஏனெனில் முழுமை பெற்றவர்கள்லேயே உபகரணத்தை செயற்படுத்தவும் முடியும். ஹிட்லரின் சுய வரலாறு எமக்கு மிகையளவாக ஏற்கனவே திணிக்கப்பட்டிருக்கும் எனும் எடுகோளிற்கமைய அவரின் அரசாட்சி முயற்சியாண்மை அல்லது ஆட்சித்துறைக்கான பதவணி கட்டமைப்பு என்பன இன்றைய அரசாண்மை கட்டுமானங்களுடன் கூட ஒப்புநோக்க கூடியவையாகும். இவற்றைப்பற்றிய தொடர்சியான உதாரண மாதிரி ஒப்புநோக்கல்கள் சமகால வடிவமைப்புகளை விளங்கிக்கொள்ள உதவும் என எண்ணுகின்றேன்.


ஆனால் இவ்வாறான தாற்ப்பரியங்களில் மேற்குலக நாடுகளின் வழி தொடரிகளாக செயற்படும் மூன்றாம் மண்டல நாட்டு குடிகளாகிய நாம் அவர்கள் காட்டும் வழித்தடத்தை பின்பற்றுகிறோமே தவிர அதற்கப்பால் உள்ள வரலாற்று எச்சங்களை எண்ணிப்பார்த்ததுமில்லை அல்லது எண்ணிப்பார்க்க விரும்பியதுமில்லை. எம் மனப்பாங்கு அவ்வாறு இன்று வரை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது. உலகின் பெரும் மக்கட்செறிவை சென்றடையும் ஊடகங்கள் எல்லாம் மேற்குலக வல்லரசுகளால் வழிநடாத்தப்படுபவை. மிகச்சிறப்பான உதாரணமாக குறிப்பிடின் தகவற்கிடங்கு என்றும் அறிவுக்களஞ்சியம் என்றும் எம்மால் புகழாரம் சூட்டப்படும் இணையம் கூட பலவானின் கைப்பொம்மையாக நின்று ஆா்ப்பரிக்கின்றது. வரலாற்று ஆசிரியா்கள் பக்கம்பக்கமாக கட்டுரைகளை பிரசுரித்தபோதும் நுண்ஆய்வுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தாது தங்கள் அபிப்பிராய சம்பாசனைகளையே பதிப்பிக்கின்றார்கள். ஆதாரங்களுக்கான இணைய இணைப்பிகள் பெரும்பாலும் முடக்கப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ காணப்படுவதானது வினைத்திறனான தகவற்பாதுகாப்பு என்ற இணையத்தின் தொழில்நுட்ப மூலாதாராத்தையே இன்று நிர்மூலப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையிலும் சிந்தனை தெளிவுடையோர் ஹிட்லரின் அன்றைய உபகரண சிருஷ்டிப்பு முறைமைகளை இன்றைய ஜனநாயக   தோலுடைய வல்லரசுகள் அல்லது புறக்கணிக்கத்தக்க அரசுகள் கூட தமக்கான யதார்த்த தொழிற்கருவிகளாக பயன்படுத்துவதை உணரத்துணியாமல் இருப்பது யதார்தத்திற்கு அப்பாற்பட்டது.
ஓர் கொடுங்கோலராக ஹிட்லரை அறிமுகப்படுத்திய அறிவுலகமும் சட்டமும் அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிரம்பியிருந்த சூழற்காரணின் மத்தியில் சட்ட உபகரண தொழிற்பாடுகளோடு எவ்வித இயக்குகை தொடர்புகளுமற்ற ஒருவரை எவ்வாறு உபகரண வடிவமைப்பாளராக மாற்றியது என்பது பற்றி மௌனித்தே விட்டது. அரசியற்துறை பின்புலமற்று ஓவியராக உருவாக விரும்பிய ஹிட்லரால் எவ்வாறு ஓர் பெரும்நிலப்பாங்கான ஜேர்மனியின் கட்டளையிடும் தலைவராக வரமுடிந்தது. ஒர் நாட்டின் இறைமை, வலுவேறாக்கம் மற்றும் சட்ட ஆட்சி எனும் அடிப்படை கோட்பாடுகளை எவ்வாறு தகர்த்தெறிய முடிந்தது என்பது பற்றிய தொடரே கீழ் ஆராயப்படுகின்றது.


ஹிட்லா் ஓர் இனவெறியர் என்றும் யூதர்கள் மட்டில் கொலைவெறியை மட்டுமே தன் கண்களில் கொண்டிருந்தவர் என்று அறிவித்த தரப்பினர் முதலாம் உலகப்போரின் பின் பல ஜேர்மானியர்கட்கு யூதர்களைப்பிடிப்பதில்லை அவர்களாலேயே தாம் வறுமையில் வாடுவதாக நினைத்தனர். ஆனால் அவர்களை ஏன் சமூகமாற்று உபகரணமான சட்டம் தடுத்தது அல்லது கட்டுப்படுத்தியது என்பதை பற்றி பரப்புரை செய்ய மறந்து விட்டனர் போலும் ஆனால் ஹிட்லர் சற்று நேர்மாறாக சிந்தித்தார். உபகரணம் காட்டிய வழியிலேயே சென்றார் இறுதியில் அவ்வுபகரணத்தையே தனது தேவைகளுக்காக மாற்றி அமைத்தார் இதுதான் ஹிட்லரின் வழிப்பாதை யாராலும் முடிக்க முடியாததை முடித்தவரின் வெற்றிப்பாதை. தத்துவ மூதறிஞர் அரிஸ்டோட்டில் சட்டத்தின் ஆட்சியின் மிகை உணர்வை வெளிப்படுத்த தனிமனித ஆளுகையின் சக்தியை கீழ்படுத்தினார் ஆனால் ஹிட்லர் தன்னை எந்தவொரு உயர் தாழ் வகைகட்குள்ளும் தான் வகுக்கப்படுவதை ஏற்கவில்லை. தானே சட்டமெனவும் தனது ஆட்சியே சட்ட ஆட்சியெனவும் பிரகடனப்படுத்தினார். இங்கு சட்ட ஆட்சிக்கும் (Rule of Law ) சட்டத்தின் ஆட்சிக்கும் (Rule by Law) நேரெதிர் வேறுபாடுகள் உண்டு. அதாவது சட்ட ஆட்சி என்பது நீதி மற்றும் நியாயமான விதிகளால் சட்டம் செயல்படத்தப்பட வேண்டம் என்பதுடன் அது அதனுள் உட்படுவோர் அனைவரையும் நிகழ்தகவளவிலாவது சமமாக அல்லது சமமானோரிடையே சமமாக நடாத்தக்கூடியது அல்லது அதற்கு கடமைப்பட்டது. அதாவது சட்ட மீயுயர் தன்மையின் மீது தன்னிச்சையான உபகரணமாக தொழிற்படுவது இரண்டாவது சட்டத்தின் ஆட்சி இது ஓர் உபகரணமாக உருவாக்கி விடப்பட்ட சட்டம் தனது ஆளுகைக்கு தனக்கு கொடுத்து உருவேற்றப்பட்ட கட்டளைகட்கு அமைய தனது ஆளுகைப்பரப்பை ஆட்சி செய்வது.  இவ்வகையானது சட்டமும் அதன் தொழிற்பாடுகளும் மனித விழுமியங்களுடன் ஒப்புநோக்கல் எனும் பண்பியலாக்கத்தை விட அதன் படியாக்க முறைமைகட்கே முக்கியத்துவம் அளிக்கும்.  அதாவது ஆட்சி உபகரணம் எந்தெந்த வழிமுறைகளில் ஓர் கட்டளை சட்டமாக வேண்டும் என ஏற்கனவே வகுத்துள்ளதோ அந்த முறைகளை கடந்து விட்டால் வெளியாகும் வெளியீடே சட்டத்தின் ஆட்சிக்கான எடுகோளாகும். இது பழைய பிரித்தானியாவின் பிரகடன வழக்கில் பிரபல பிரித்தானிய நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோக் அவர்களால் எழுப்பப்பட்ட வினாவை ஒத்து அமைவதை அவதானிக்கலாம். அரசன் தனக்குரிய நீதியியல் அதிகாரங்களை   தானே நேரடியாக பிரயோகிக்கலாமா அல்லது அதற்குரிய நீதித்துறை ஊடாக பிரயோகிக்க கடமைப்பட்டவனா எனும் வினா இன்று வரை முழுமையான விடையை பெறவில்லை. ஏனெனனில் நேரடியாகவோ அன்றி மறைமுகவாவேனும் இவ்வுபகரண வடிவமைப்பளர்கள் தங்களது எண்ணத்தையோ அல்லது செல்வாக்கையோ சட்டத்தில் தொடர்ந்து பிரயோகித்து வருவதே யதார்த்தமானது.



அடுத்த சட்ட ஆட்சியின் மிக முக்கிய பாங்காக அல்லது கருப்பொருளாக காட்டப்படுவது சட்ட மீயுயர்தன்மையை விட ஏதோ ஒரு வகையில் உயர்வான தன்மையாகும். எனவே இக்கோட்பாடு உபகரண வடிவமைப்பு என்ற தொழிற்பாட்டை விட சற்றே மேல்நோக்கிய ஏதோ ஒன்றே சட்ட ஆட்சி என்ற புலத்துள் எம்மை இழுத்து செல்கின்றது. ஆனால் அந்த மேல் நோக்கிய பருப்பொருட்கள் எல்லாம் கணிதரீதியாக மையப்பட்டவை அல்ல. மாறாக ஒழுக்க ரீதியிலான கோட்பாடுகளே அவையாகும். அவை தகுதியான அளவில் மக்களிடையே பிரயோகிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த அளவு என்பது என்ன அதை யார் எப்படி தீர்மானிப்பார்கள்? விடை கிடைக்காத  இவ்வினாக்களுக்கான விடையை ஹிட்லரின் வழியில் நின்று தேடுவோம்.
ஜேர்மனியில் 1919 இல் தேசிய சோசலிஷ ஜேர்மானிய தொழிலாளர்   கட்சி (NSDAP) அன்ரன் டிறிக்ஸ்டர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அக்கட்சியால் போதுமானளவு செல்வாக்கை ஜேர்மானிய அரசாங்களவில் செலுத்தமுடியவில்லை . இக்கட்சியின் ஓர் பிரசார கூட்டத்தில் பார்வையாளனாக கலந்து கொண்ட ஹிட்லர் பின்னர் தனது நா வண்மையால் அந்த கட்சியையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தார். 1920களில் ஹிட்லர் வெர்சாலிஸ் பொருத்தனைகளை(Treaty of Versailles) கைவிடவும்( இப்பொருத்தனைகள் முதலாம் உலகப்போரின் விளைவால் ஜேர்மனியின் மேல் வலிந்து சுமத்தப்பட்ட நிபந்தனைகள் குறிப்பாக ஜேர்மனி உடன்படிக்கையாளர்களின் சம்மதமில்லாமல் தனது ஆள்நிலப்பரப்பை அதிகரிக்க முடியாததபடி தடுத்தன ) ஜேர்மானிய ஆட்புல எல்லைகளை நீட்சிக்கவும் உருவாக்கிய நிகழ்ச்சி நிரல் 25-புள்ளித்திட்டம் (25 point program) எனப்பட்டது. இதுவே பின்னை நாள் நாஜி கட்சியின் பிரதான கொள்கையாகவும் இரண்டாம் உலகப்போருக்கான தோற்றுக்காரணியாகவும் காணப்பட்டது. இதை ஹிட்லர் இறைமை எனும் பதத்தோடு தொகுத்திழைத்தார். அதாவது உழைக்கும் வர்க்கம் உரிமையை பெறும் எனவும் எந்த முன்னைய பொருந்தனைகளும் விதிகளும் தமது இறைமையையோ அல்லது அதன் தொடர் செயற்பாடுகளையோ பாதிக்காது என முழக்கமிட்டார். இது முதலாம் உலகப்போரினால் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்திருந்த உழைப்பாளர் வ்ர்க்கத்தை மிக இலகுவாக ஹிட்லரின் பால் ஈர்த்தமையானது ஆச்சரியர்த்திற்குரியதல்லவே. தங்கள் நிலமும் உற்பத்தி வருமானமும் கிடைக்கப்பெறுவதில் ஏற்படும் சுரண்டல் மூலம் இயல்பாகவே மனித மனத்தில் எழும் காழ்ப்புணர்ச்சியையும் பழியுணர்சியையும் ஹிட்லர் அன்றைய காலகட்டத்திலேயே  சிறப்பாக கையாண்டார் என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும். இவ்வாறான ஹிட்லரின் செயற்பாடுகள் பல நாசிஷ கொள்கைகளை தழுவி  இருந்ததால் இக்கட்சி விரைவிலேயே நாஜிக்கட்சி என பெயர் பெற்றது. அதாவது அது கட்சியின் சுருக்கப்பெயர் அதன் அங்கத்தவர்களும் அப்பெயர் கொண்டே அழைக்கப்பட்டனர்.

படிப்படியாக மக்களின் ஆதரவை பெற்ற இக்கட்சி தமக்கான பிரசாரக்கூட்டங்கள் மற்றும் கட்சி்ப்பேரணிகளை வெளி நபர்களிடமிருந்து பாதுகாக்க தனியான ஓர் ஆயுத குழுவை உருவாக்கியது. இதில் இராணுவ துணை ஒட்டுக்குழுக்களும் இராணுவத்திவிருந்து விலகி ஓடியோரும் பாரிய அளவில் உள்வாங்கப்பட்டனர். இதனால் ஹிட்லர்  மத்திய அரசின் படைகளை இலகுவாக சமாளிக்கலாம் எனும் தத்துவத்தை உருவாக்கினார். இந்த குழு Gauleiters எனப்பட்டது. 1923ல் இந்தப்படையுடன் பவேரியா மாநிலத்தை கைப்பற்ற ஹிட்லர் மேற்கொன்ட முயற்சிகள் தோல்வியை தழுவ ஹிட்லர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி ஏற்பட்டது. அவரது நாஜிக்கட்சியும் தற்காலிக தடைக்கு உட்பட்டது. ஆனால் இந்த சிறை வாசமே உலக வரலாற்றை 1939 களில் திசை திருப்ப முதன்மைக்காரணம் எனலாம். அவா் விடுதலையான பின்பு 1925ல் நாஜிக்கட்சி உறுப்பினா்களாக 25000 போ் இருந்தனா். இதே எண்ணிக்கை 1929ல் சுமார் 180000 ஆக உயா்ந்தது. நான்கு வருடற்களில் இது 720%  அதிகரிப்பாகும். ஹிட்லரால் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட தலைவா்களின் செயற்பாடு பாரிய பங்களிப்பை நாஜிக்கட்சியின் வளா்ச்சியில் செலுத்தியது. அவா்கள் ஜோ்மானிய பிரதேச நகர மாநில மற்றும் மத்திய அரசு இயந்திரங்களில் நாஜிக்கட்சியின் தாக்கத்தை நிலை நிறுத்தினர்.


ஆனால் ஹிட்லருக்கு வேறோர் புறச்சூழற் காரணியும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியது. அது ஜோ்மனியில் 1929 – 30களில் காணப்பட்ட பணவீக்கமும்( Inflation ) மற்றும் அதன் தொடர்ச்சியான வேலை வாய்ப்பின்மை வீத அதிகரிப்பும்தான். இது மக்களை நாஜிக்கட்சியின் கொள்கைகள் பால் திருப்பியது. ஆனால் பின்நாளில் ஆர்ஜன்ரீனாவின் பறக்கும் பணவீக்க போக்கை அவதானிகள் ஜோ்மனிய நிலையோடு ஒப்பிட்டு ஹிட்லரே நாஜிக்கட்சியினுாடாக கள்ள நோட்டுக்களை வெளியிட்டு பணச்சுற்றோட்ட வேகத்தை அதிகரித்து அன்றைய ஜோ்மானிய பொருளாதாரத்தை சீரழித்தார் எனும் கூற்றையும் நான் மறக்கவில்லை. எது எவ்வாறு இருப்பினும்இச் சீரழிவானது 1928ல் 800000 ஆதரவாளா்கள் கொண்ட நாஜிக்கட்சிக்கு1929களில் 14000000 வாக்குகளை சேகரிக்க உதவியது. இது மொத்த வாக்களா்களில் 38%  ஆகும். ஆனால் பின்பு 1932களில் வேலை வாய்ப்பின்மை வீதம் குறைவடைந்தும் நாஜிக்கட்சிய்ன் வாக்கு வீதமும் 33%   மாக குறைவடைந்தது.

ஆனாலும் ஹிட்லரின் 25புள்ளி நிகழ்ச்சி நிரல் 05-மார்ச்-1933 தேர்தலில் அவரை 44% வாக்குகளால் வெற்றியடைய செய்தது. ஹிட்லர் அதன் பின்பு தகுதியாக்கும் சட்டம் ஒன்றின் மூலம் அதிகார ஆணையாளராக சர்வதிகாரங்களை பெற்ற நபரானார். அதன் பின் தொடர்ச்சியாக 17-யூலை-1933 இல் நாஜிக்கட்சியே ஜேர்மனியின் ஒரே கட்சியாக அங்கீகாரமளிக்கப்பட்டது. பின்னர் அரச சேவையிலுள்ள உயர்மட்ட சிவில் சேவை அதிகாரிகள் யாவர்கட்கும் தனது கட்சியின் அங்கத்துவத்தை கட்டாயமாக்கினார் ஹிட்லர். அதோடு அவரது மாவட்ட தலைவர்கள் ஜேர்மானிய மாநிலங்களின் முக்கிய பதவிகளை அலங்கரிக்கவும் வழிவகுத்தார். தனது கட்சிக்குள் முதலில் தனக்கு எதிரானவர்களை களை எடுத்த ஹிட்லரின் வார்த்ததைகள் மீயுயர் கட்டளைகளாக கட்சியிலும் நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாஜிக்கட்சி அரசியலில் மட்டுமின்றி நேரடியாகவே சமூக கலாச்சார துறைகளில் கூட செல்வாக்கை செலுத்தியது. இந்த கட்சியமைப்பின் பதவணி பரந்து பட்டதாகவும் மிக சிக்கல் வாய்ந்த ஒன்றாகவும் இருந்தது.  கட்சியால் கட்டுப்படுத்தப்படும் இளைஞர் பெண்கள் தொழிலாளர் சங்கங்கள் என்பன கீழ்நிலையிலும் கட்சி உறுப்பினர்களும் சிவில் சேவையாளர்களும் நடுமட்டத்திலும் காணப்பட ஹிட்லரும் அவரது நெருங்கிய சகாக்களும் மேல் மட்டத்தில் காணப்பட்டனர். இருப்பினும் இம் மூன்று மட்டங்களிற்குள்ளும் இடையிலும் பல சிக்கலாக பதவணிக்கட்டமைப்பை நிறுவினார் . இதுவே அவரை பல தோல்விகளிலிருந்தும் காட்டிக்கொடுப்புக்களிலிருந்தும் காப்பாற்றியது எனலாம். உலகின் சர்வதிகார ஆட்சியாளர்களாக வகைப்படுத்தப்பட்டோரில் மிக குறுகிய கட்டுப்பாட்டு விசாலமாக (Narrow Span Of Control) பதவணியை அமைத்தவரும் ஹிட்லரே .
இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் தோல்வியின் பின் ஹிட்லர் தற்கொலை செய்த பின்பு நேசநாடுகளால்  அவரது நாஜிக்கட்சி தடை செய்யப்பட்டதோடு அக்கட்சியின் உயர் மட்டத்தினர் பலர் மனிதாபிமானத்திற்கெதிரான போர் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாக்க பட்டனர். 1945களில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் துளிர்த்திருந்த நாஜிக்கொள்கைகளும் துடைத்தெறியப்பட்டன.


இனி நாம் ஹிட்லரின் சட்டங்களையும் அவை எவ்வாறு யூதம் என்ற ஓர் இனத்தையே அழித்தன என்பது பற்றியும் பகுப்புரைவோம். ஹிட்லர் ஜனநாயக முறைமையான தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினும் தன் கட்சி மூலம் தனித்து பெரும்பான்மை பெறாமல் தொங்கு பாரளுமன்றையே நம்பியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அவருக்கு கிடைத்த பதவி சான்சிலர் மட்டுமே மிகுதி அதிகாரங்கள் யாவும் அதிபர் ஹிண்டன்பர்க் இடமே காணப்ட்டது அங்கும் ஹிட்லருடன் விதி கை கோர்த்ததோ என எண்ணத்தோன்றுகின்றது. அதிபர் ஹிண்டன்பர்க் 1934 இல் இயற்கை மரணம் எய்த ஹிட்லர் இன்னொர் தேர்தலை நடாத்த அனுமதிக்காது தானே நாட்டின் அதிபராகவும் தனது 25புள்ளி நிகழ்சி நிரலை அமுலாக்க பாதுகாப்பை காரணம் காட்டி முப்படைகளின் தளபதி எனும் பதவியையும் தனதாக்கினார். இன்று வரை பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொதுவான ஆனால் படைப்பாளிகட்கு அப்பாற்பட்டு பார்வையாளர்களால் மறக்கப்பட்ட விடயம் ஓர் கதாநாயகனுக்கு அடிப்படை தகுதி அவரின் தனி மனித செயற்றிறன்களோ அல்லது தனி மனித ஆளுமையோ அல்ல அந்த அடிப்படை ஓர் பிரச்சினையே என்பது என் வாதம் அந்த நிகழ்வு அல்லது பிரச்சினை என்பதற்கு அடுத்துத்தான் தனித்தகுதிகள் இடம் பெறுகின்றன.ஏனெனில் பிரச்சினைகள் இல்லை எனில் அதை தீர்ப்பதற்கு கதாநாயகன் என்ற கதாபாத்திரத்திற்கே தேவையிருக்காது.  அன்று ஹிட்லருக்கும் தன்னை ஓர் ஜேர்மானியக்கதாநாயகனாக சித்தரிக்க ஓர் பிரச்சினை அல்லது நாட்டில் தடுமாற்ற நிலை தேவைப்பட்டது. அன்றைய யூத இனம் இரு பெரும் விடயதானங்களில் ஜெர்மானிய குடிகளிடமிருந்து வேறுபட்டனர். முதலாவதாக இன ரீதியில் இரண்டாவதாக பொருளாதார நிலையில், விவிலிய காலந்தொட்டு யூதர்கள் வட்டித்தொழிலை ஆற்றி வந்தமை அனைவரும் அறிந்த விடயம். முதலாம் உலகப்போர் உழைக்கும் ஜெர்மனிய வர்க்கத்தை மேலும் வறுமைக்குள் தள்ள யூதரோ கிடைத்த சந்தடிகளில் எல்லாம் வட்டித்தொழிலை வரிவாக்கினர். இதனால் இயல்பாகவே இன வேற்றுமை என்ற கசப்புக்காரணி பொருளாதார வேறுபாடுகளினாலும் மேலும் கடினமுற்றது. இந்த காரணியை ஹிட்லர் தனதாக்கினார். யூத ஒழிப்பில் அவர் காட்டியதீவிரம் ஜேர்மானிய போர் வீரர்களிடமும் மக்களிடமும் அவரின் மதிப்பை பன்மடங்கு அதிகமாக்கின. இதனால் ஹிட்லர் எதை செய்தாலும் அதில் ஜேர்மானியர்களின் நலன் மேலோங்கும் என மக்கள் உறுதியாக நம்பினர். இந்த நேரத்தில் ஹிட்லர் கொணர்ந்த குறிப்பிட்டு கூறக்கூடிய இரண்டு சட்டங்களை இங்கு பதிப்பிக்கின்றேன். இவை இரண்டுமே ஜேர்மானியர்கள் ஓர் புனித இனம் எனவும் அவர்கள் மட்டுமே பூமியின் சர்வ வல்லமை உடையவர்கள் என்ற மாய தோற்றப்பட்டை ஹிட்லர் உருவாக்கினார். விளைவு கண்மூடித்தனமான இனப்பற்று ஜேர்மானிய மக்களிடம் அதை இனப்பற்று என்றெல்லாம் குறைவாக கூறி விட முடியாது வேண்டுமென்றால் இனவெறி என வரையறுக்கலாம்.  அன்று தொடங்கி இன்று வரை முடியாத உலக நெறி இந்த வெறி.


ஹிட்லரின் இந்த பழி தீர்க்கும் அல்லது வெறியூட்டும் நடவடிக்கைகள் சட்டவாக்கம் மூலமும் வலுவூட்டப்பட்டன. இச்சட்டங்கள் நியூரம்பர்க் சட்டங்கள் என நியூரம்பர்க் இல் இடம் பெற்ற நாஜிக்கட்சியினரின் மாநாடு ஒன்றில் 1935 இல் முன்மொழியப்பட்டன.



 முதலாவதாக “ஜேர்மானிய இரத்தத்தையும் ஜேர்மானிய கௌரவத்தையும் பாதுகாப்பதற்கான சட்டங்கள்” (The Laws for the Protection of German Blood and German Honour) என்ற பெயரில் 15-செப்ட்-1935 இல் அமுல்படுத்தப்பட்ட கட்டளைகளை குறிப்பிடலாம்.

ஜேர்மானிய இரத்தத்தின் புனித தன்மையை பாதுகாப்பதற்கும் அதன் எதிர்கால இருப்பை தீர்மானிக்கவும் ஜேர்மானிய தேசியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஜேர்மானிய சட்டவாக்கத்துறை பின்வரும் சரத்துக்களை உடனமுலாகுமாறு பிரகடனப்படுத்துகின்றது.

பிரிவு-01
(அ) யூதருக்கும் ஜேர்மானியருக்குமான திருமணங்கள் முற்றாக   தடைசெய்யப்படுகின்றன. அதாடு ஜேர்மானிய இரத்த வழி தொடர் கொள்கை்ககு உட்பட்ட ஏனைய பிரிவினருக்கும் யூதருக்கும் இடையிலான  திருமண உறவுகளும் தடை செய்யப்பட்டன. ஏதேனும் திருமணங்கள் இச்சட்டத்தை விஞ்சும் வகையில் வெளிநாடுகளில் சட்டபூர்வமாக செய்யப்படினும் ஜேர்மானிய குடியரசினுள் வெற்றும் வெறிதானதுமாகும்.

(ஆ)    இச்சட்டப்படி செல்லுபடியற்றதாக்கப்பட்ட திருமணங்கட்கான எல்லா வழக்கிடை செயற்பாடுகளும் அரச சட்டத்தரணிகளால் மாத்திரம் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

பிரிவு-02
திருமணத்திற்கு புறம்பான உடலுறவுகள் யூதர்கட்டும் ஜேர்மானியர்கட்கும் முற்றாக தடைசெய்யப்படுகின்றன.

பிரிவு-03
யூத இனத்தை சேர்ந்த 45 வயதிற்கு உட்பட்ட வீட்டுப்பணிப்பெண் தொழிலாற்றும் பெண்கள் அனைவரும் ஜேர்மானிய வீடுகளில் தொழிலாற்றுவதிலிருந்து முற்றாக தடுக்கப்படுகின்றனர்.

பிரிவு-04
(அ)   யூதர்கள் மாநில மற்றும் தேசிய கொடியையோ அல்லது அதன் நிறங்களையோ பயன்படத்த தடை விதிக்கப்பட்டது.
(ஆ)    ஆனால் யூதர்கள் தங்கள் இனத்திற்கு உரிய நிறத்ததை எப்போதும் பயன்படத்தலாம் . அதற்கு ஜெர்மானிய அரசு முழு பாதுகாப்பையும் வழங்கும்.

பிரிவு-05
(அ)   யாராவது ஒருவர் இச்சட்டத்தின் முதலாம் பிரிவை மீறின் கடூழிய வேலை மூலம் தண்டிக்கப்படுவார்.
(ஆ) யாராவது ஒருவர் இச்சட்டத்தின் இரண்டாம் பிரிவை மீறின் சிறைத்தண்டனை அல்லது கடூழிய வேலை அல்லது இவை இரண்டின் மூலமும் தண்டிக்கப்படுவார்.
(இ) யாராவது ஒருவர் இச்சட்த்தின் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவுகளை மீறிச்செயற்படின் அவர்  ஒரு வருடம் வரை நீடிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையாலோ அல்லது தண்டத்தின் மூலமோ அல்லது இவையிரண்டின் மூலமோ தண்டிக்கப்பட முடியும்.


பிரிவு-06
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நிர்வாக ஒமுங்கு விதிகளையும் துணைவிதிகளையும் ஆக்குவதற்கு ஜேர்மனிய நீதி அமைச்சர் அதிகாரம் பெற்றவர்.

பிரிவு-07
இதில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள் யாவும் இப்பிரகடனத்தின் அடுத்த நாள் முதல் அமுலாகும். ஆனால் சரத்து மூன்று மட்டும் 01-தை-1936 இருந்தே அமுலாகும்.

இச்சட்டத்தின் மூலம் யூதஇனத்தின் பெருக்க எண்ணிக்கையை பெருமளவு குறைத்ததோடு மிக தெளிவாக யூதரிலிருந்து பிளவு பட்ட ஜெர்மானியர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டார் ஹிட்லர். அடுத்து பிரஜாவுரிமை சட்டம் மூலம் ஜெர்மனியர்க்கு மட்டும் குடியுரிமையுடன் அரசியல் உரிமைகளையும் அளித்தார். இச்சட்டமூலத்தின் ஹிட்லர் கையெழுத்திட்ட உண்மைப்பிரதிகள் பின்பு அமெரிக்க மத்திய புலனாய்வு படையினரால் கைப்பற்றப்பட்டு இன்று வரை வாசிங்டன் டி.சி யிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டு கூறக்கூடியதொன்றாகும்.



றீசிச் பிரஜாவுரிமைச்சட்டம் 15-செப்ட்-1935 (Reich Citizenship Law )
பிரிவு-01
(அ) ஒரு ஜேர்மானிய பிரஜை என்ற அரசின் சட்ட அந்தஸ்தை பெறுவதால் அவன் அரசிற்கு விசுவாசமானவனாகவும் அரசின் மட்டில் சில கடப்பாடுகளை உடையவனாகவும் காணப்படுகின்றான்.
(ஆ) அரசின் நிலைப்பாடானது சட்டவாக்கதுறையின் சட்டங்களிலும் மற்றும் பிரஜாவுரிமை சட்ட ஏற்பாடுகளுக்கமையவும் பிரஜைகளை முன்னிலைப்படுத்தும்

பிரிவு-02
(அ) ஒர் ஜேர்மானிய பிரஜை தனது முழு விருப்பத்திலான செயற்பாட்டின் மூலம் ஜேர்மானிய அரசி்ற்கும் ஜேர்மானிய குடிகட்கும் விசுவாசமானவன் என நிரூபிக்கப்பட வேண்டும்.
(ஆ) ஜேர்மனிய பிரஜாவுரிமை பிரஜாவுரிமைப்பத்திரம் மூலம் வழங்கப்படும்.
(இ) இப்பிரஜா உரிமையை உடையவர் ஜேர்மனிய அரசின் முழு அளவிலான அரசியல் உரிமைகளை சட்டரீதியாக பெறும் நபராவார்.


பிரிவு-03
உள்ளலுவல்கட்கான அமைச்சர் துணை ஆளுநருடன் இணைந்து இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்கு விதிகளையும் ஏற்பாடுகளையும் ஏற்படுத்த அதிகாரம் பெற்றவராவார்.



இவற்றை விட 1933 முதல் பல கைகளிலும் யூதர்கள் இரண்டாம் நிலை குடி அந்தஸ்து கூட பெறமுடியாத அளவில் நாஜிகளால் பல வகையிலும் புறத்தொதுக்கப்பட்டார்கள். ஹிட்லரால் 1920களில் வகுக்கப்பட்ட 25-புள்ளித்திட்டம் அவரின் முதல் ஆறு  ஆண்டு கால சர்வதிகார ஆட்சியில் யூதர்கள் அரசியல் சட்ட மற்றும் குடியியல் ரீதியில் பல ஓரங்கட்டல்களை சந்திக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட அவரின் ஆட்சியில் 400 வகையான ஒழுக்காற்று விதிகள் யூதரின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. இச்செயற்பாடுகள் தேசிய அளவில் மட்டுமல்லாது மாநில பிராந்திய மற்றும் நகர சபை அளவுகளிலும் கூட யூத எதிர்ப்பு கொள்கை சட்டங்கள் பல பரிணாமங்களை எடுத்தன. 1933களில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் யூதரின் பொது வாழ்க்கை தரத்தை கீழ் நோக்கி தள்ளின என்றால் மிகையாகது. 07-ஏப்-1933 இல் உருவாக்கப்பட்ட “Law for the Restoration of the professional civil service” அதாவது இச்சட்டம் சட்டரீதியாக தொழில் சார் குடியியல் அலுவலகங்களிலிருந்து யூதர்கள் முதற்கட்டமாக வெளியேற்றியது. பின்னர் ஜேர்மானிய அரசு பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயிலும் யூத மாணவர்களின் எண்ணிக்கையை கடுமையான அளவில் மட்டுப்படுத்தியது. அத்தோடு மருத்துவ மற்றும் சட்டக்கல்வி அனுமதிகளில் யூத இனம் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டது. தலைநகர் பெர்லினில் யூதர்கள் சட்டத்தரணிகளாகவும் நொத்தாரிசுகளாகவும் பணியாற்ற நீதித்துறை அனுமதி மறுத்தது. அதோடு வெறும் 1.5% மட்டுமே உயர்கல்வி அனுமதியை ஜெர்மானியரல்லாதோருக்கு (Non- Aryans) வழங்கியது. யூதர்களின் மருத்துவ சேவை கூட யூதர் அல்லாதோர்க்கு கிடைக்கவில்லை. யூத நடிகர்கள் அரங்குகளிலோ, திரையிலோ கூட நடிக்க தடை விதிக்கப்பட்டது. விலங்கு வளர்ப்பு கூட யூதர்கட்கு மறுக்கப்பட்டது. ஆனால் ஹிட்லர் யூத பொறியியலாளர்களை நேசித்தார். அதன் பின்ணணி அவர்களை வைத்தே  அவர் இரண்டாம் உலகப்போருக்கான போர்த்தளவாட தயாரிப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது.அதாவது தலையாட்டி பொம்மைகளாக பயன்படுத்தினார் அவருக்கு தலையாட்ட மறுத்தால் தலை வெட்டப்படும் அவ்வளவே! இன்றைய நவீன உலகில் கூட ஜேர்மானிய இயந்திரங்கட்கான மவுசு மற்றைய தொழினுட்ப நாடுகளை விட அதிகம். அதற்கு ஹட்லர்தான் நிச்சயக்காரணம் அவர் யுத்தத்திற்காக தயார் செய்த அந்த இயந்திர நுணுக்க திறனே இன்று வரை ஜேர்மனியின் இயந்திரத்துறையின் புகழிற்கு காரணம்.


அடுத்ததாக 1965 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நியுபெர்ம்பர்க் சட்டங்கள் மேலே பகிரப்பட்டு காட்டியது போலவே யூதன் என்றால் யாரென நாஜிகட்கு தெளிவாக தெரிவித்து  வேரறுக்க உதவிய சட்டங்கள். மூன்று தலைமுறைக்கு யூத வழி வந்த மரபினனாக இருப்பின் அவன் எந்த மத முறைமையின் கீழ் தன்னை ஒன்றினைப்பினும் யூதன் என்றே  முத்திரை குத்தப்பட்டான். கிறிஸ்தவ  மதத்திற்கு தம்மை மதமாற்றி கொண்டோரும் பின்பு யூதர் என்றே அடையளப்படுத்தப்பட்டனர். யூத நோயாளிகட்கு மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டது. ஜேர்மானிய நீதிபதிகள் யூத நீதிபதிகளின் தீர்ப்புக்களை முற்றீர்ப்புகளாக ஏற்பதிலும் யூத சட்டவாளர்களின் கருத்துக்களை வழக்குகளில் மேற்கோளிடுவதிலும்  தயக்கத்தை காட்டினர். அத்தோடு இராணுவத்தில் கடமையாற்றிய யூதர்கட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர் அல்லது உட்பூசல்கள் என உருவாக்கப்பட்ட கலவரங்கள் மூலம் உயிர் துறக்க வைக்கப்பட்டனர். முதலாம் உலகப்போரில் ஜேர்மனி சார்பாக போரிட்டு இறந்த யூதவீரர்களின் அஞ்சலி நிகழ்வுகள் கூட தடை செய்யப்பட்டன. இதன் மூலம் யூத இனத்தின் வரலாற்று தியாக நினைவுகளை கூட ஹிட்லர் அழித்து விட எண்ணினார்.


அடுத்து பொருளாதார ரீதியில் யூதர்கள் தங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை பதிய கட்டாயப்படுத்தப்பட்டனர். தொடர்சியாக சொத்து மிகையளவு சட்டத்தின் மூலமும் உரியாளல்லாத கைவிடப்பட்டதாக காட்டப்பட்ட யூதர்களின் கம்பனிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் யூதர் அல்லாதோர்க்கு சந்தைப்பெறுமதியை விட மிக சொற்ப விலைக்கு  கைமாற்றப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளால் யூதரின் பொருளியற் பலம் இரண்டில் மூன்றாக குறைக்கப்பட்டது. 1936இல் இடம் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டுத்துறையிலும் யூதரின் பங்களிப்பு துடைத்தொழிக்கப்பட்டது.
1938களில் பரவலாக அறியப்பட்ட Night Of broken Glass எனும் செயற்றிட்டம் மூலம் 9/10-கார்த்-1938 இல் அனைத்து பொது இடங்களை பயன்படுத்தும் ( பாடசாலைகள், மருத்துவமனைகள், சினிமா, மற்றும் விளையாட்டு திடல்கள் ) தகுதியையும் அத்தோடு ஜேர்மானிய மக்களின் குடியிருப்புக்களிர் நுழைய முடியா நிலைக்கும் தள்ளப்பட்டனர். 1939களில் யூதர்கள் பிரத்தியேகமாக இனம் கண்டு இனப்பிரிப்பிற்கும் படுகொலைகட்குமாக “J” என்ற எழுத்தை அனைத்து யூதர்களின் அடையாள அட்டைகளிலும் கடவுச்சீட்டுக்களிலும் பொறித்தார் ஹிட்லர். .அதன் பின்னர் யூதர்கள் எவ்வாறெல்லாம் நாஜிகளால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நான் விபரிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்காது என நம்புகின்றேன்.
பின்பு 1939களில் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் 1945 வரை பல உயிர்களை காவு வாங்கி சோவியத் படைகள் பெர்லினிலுள்ள ஹிட்லரின் மாளிகையை முற்றுகை பெற்றதுடன் முற்றுப்பெற்றது. அன்று முற்றுப்பெற்றது இரண்டாம் உலகப்போர் மட்டுமல்ல ஓர் சிறந்த தனி மனித ஆளுமையும் தான்.


இன்றைய நவீன உலகிலும் நாம் ஹிட்லரின் பிரதிபலிப்புக்களை தினமும் கண்டுகொண்டிருக்கின்றோம் அல்லது அவற்றால் ஆளப்பட்டு கொண்டிருக்கின்றோம். இன்றைய அரசியல் சதுரங்கத்தில் அரசியற்விஞ்ஞானத்தின் முற்பகர்வுகள் அர்த்தமற்று விடுவன போல் தோன்றுகின்றது. 1923களில் அப்போதைய பவேரியா பிரதமரை துப்பாக்கி முனையில் மிரட்டி தனது புரட்சிக்கு ஆதரவு பெற்றது போல!!!அனைவரும் குழம்பி போயிருந்தனர். பிரதமரின் ஆதரவுடன் புரட்சியா ? புரட்சி என்பதே ஆட்சியில் இருக்கும் இவர்கட்கு எதிராகத்தானே ? முதலில் தொண்டர் பலத்திற்காக கூட்டுப்புரட்சி பின்பு பிரதமரை மேலனிப்பிவிட்டு தனிப்புரட்சி தனது புரட்சி.
நான் முன்னரே குறிப்பிட்டிருந்த உபகரண வடிவமைப்பில் ஹிட்லர் மகத்தான வெற்றி கண்டிருந்தார். இனம் என்ற ஓர் தார்ப்பரியம் அவருக்கு அனைத்து சட்டக்கருதுகோள்களிலிருந்தும் மீறி செயற்பட உதவியாக இருந்தது. மக்கட் சமூகம் ஏதாவது ஓர் மிகையளவீட்டு பிணைப்புக்காரணிக்குள் சிக்குண்டு விட்டால் சட்டம் அந்த பிணைப்புக்காரணியை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை மீட்பது கடினம். ஏனெனில் சட்டம் ஓர்  பௌதீக விஞ்ஞானம் அன்று நாம் தொடர் சீரான விளைவுகளை பெறுவதற்கு அது ஓர் சமூக விஞ்ஞானம் சமூக மாற்றங்கட்கு ஏற்ப அது வேறுபட்ட விளைவுகளையே கொடுக்கக்கூடியது. அதன் படி அந்த சமூகமாற்று உபகரண வடிவமைப்பு மக்களை வழிப்படுத்தி விட்டால் அதுதோடு ஓர் மிகையீட்டுக்காரணியும் கைகோர்த்து விட்டால் இறைமை, வலுவேறாக்கம், சட்ட ஆட்சி எல்லாம் வெறும் ஏட்டளவில் அச்சாக்கப்படுமே தவிர சமூகம் என்ற பரிசோதனை கூடத்தை எட்டகூட முடியாது. எனவே அன்று ஹிட்லர் ஜனநாயக நாட்டை எவ்வாறு அதன் பொறிமுறைக்குள் நின்று செயற்பட்டு தனதிகாரத்திற்கு மாற்றினாரோ அதே போல இன்றுங்கூட சில தனி மனித ஆளுமைகள் பூகோள பிராந்திய எல்லைகட்கு உட்பட்டோ மீறியோ தனியதிகாரத்தை செலுத்துகின்றார்கள்.சட்ட ஏற்பாடுகள் வேறு படலாம், அதிகார வீச்செல்லை வேறுபடலாம், எதிரிகளை புறந்தள்ளும் நுட்பம் வேறுபடலாம் ஏன் கட்டுப்படுத்தும் மிகையளவீட்டு காரணிகள் கூட வேறுபடலாம் ஆனால் முடிவடையும் புள்ளி தனியதிகார, சர்வதிகார ஆட்சியாளுமைதான். சட்டம்  அவர்களை தனது குடையின் கீழ் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டேயிருக்கின்றது……. அந்த குடைகளை ஆக்குவோரே அவர்கள் தான் என்பதை சிந்தையில் நிறுத்தாமலே……………


உசாத்துணைகள்

01.ஹிட்லர், ஆசிரியர் திரு்.ரா.ராகவன் முதலாம் பதிப்பு-மாசி-2008
05. en.wikipedia.org/wiki/Nuremberg_Laws



No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது