Social Icons

Pages

Friday, 17 November 2017

யானைகளின் பாதுகாப்பு -இலங்கை சட்டப்பரப்பில் ஒரு தேடல்



உலகம் தொடர்ச்சியாக தொழினுட்ப வளர்ச்சி காரணமாக சுருங்கி விட்ட
அல்லது சுருங்கி வருகின்ற தற்காலத்தில் இயற்கை வளங்களின் பாதுகாப்பு அல்லது பேணுகை என்பன தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற கவனக்குறைவை ஒவ்வொரு நாடும் தமது தேசிய சட்டப்பொறிமுறை ஊடாக கட்டுப்படுத்த முனைகின்றன. இயற்கை வளங்கள் எனும் பதத்தினுள் மிருகங்கள் (உயிரினங்கள்) தாவரங்கள் மற்றும் புவியியல் பிரதேசங்கள் என்பன வழமையின் பிரகாரம் உள்ளடங்குபனவாகும்.

இலங்கையைப் பொறுத்தளவில் மிருகங்களின் பயன்பாட்டினடிப்படையிலும் அருகிச்செல்லும் அளவிலும் அதை விட குறிப்பாக இலங்கைத்தீவின் பெரும்பான்மை மதமான பௌத்த மத கலாச்சார செயற்பாடுகளிலும் யானைகளின் பங்கு மகத்தானது. அதை விட இலங்கை தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கனிசமான பங்கை சுற்றலாத் துறையின் ஊடாக வருடந்தோறும் ஈட்டி வருகின்றது. இந்த சுற்றுலாத்துறைக்கு கூட யானைகளின் பங்கு அல்லது அவைகளின் செயற்பாடு என்பன குறிப்பிடத்தகு பங்கை வழங்குவதை நாம் மறுக்க முடியாது.

எது எவ்வாறிருப்பினும் இன்றைய சனத்தொகை பெருக்க காலத்தில் அதிகரிக்கப்படமுடியாத வளமான காணியினது தொடர்ச்சியான தேவைக்கான கேள்வியானது அதை நிரம்பலுக்குட்படுத்தபடாத வகையில் அதிகரித்து செல்கின்றதை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
யானைகளைப் பொறுத்தளவில் இலங்கையின் அதிகரித்து செல்லும் சனத்தொகையால் நிலத்திற்கான கேள்வி காரணமாக மனிதர்கள் யானைகளின் இடங்களை ஆக்கிரமிப்பதாலும் மற்றும் யானைகள் செல்வத்தின் மற்றும் அதிகாரத்தின் சின்னமாக விளங்குவதால் அவற்றை தமது பிரத்யேக கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்தல் காரணமாகவும் மற்றும் வேட்டையாடல் (தந்தங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களுக்காகவும்ஃ பொழுது போக்கிற்காகவும்) தேவைகளாலும் அவை அச்சறுத்தல்களை எதிர்நோக்குகின்றன.

1) மனிதர்கள் யானையின் வசிப்பிடங்களை அழித்தல்
2) அவை கௌரவத்தின் சின்னமாக பயன்படல்.
3) கலாச்சார மற்றும் சமய தேவைகட்கு பயன்படல்.
4) பொழுது போக்கிற்காகவும்இ உடற்பாகங்கட்காகவும் வேட்டையாடப்படல்.

எனவே மேற்குறித்த பாதுகாப்பினங்களை எதிர்கொள்ளும் யானைகள் சட்டரீதியான பாதுகாப்பை பெறுவது அவசியமாகும்.

இலங்கையை பொறுத்தளவில் இதனுடன் தொடர்புடைய சட்டங்களாக கீழ்வரும் இரண்டு சட்டங்கள் காணப்படுகின்றன.

1. 2009ம் ஆண்டின் 22ம் இலக்க தாவர விலங்கினப் பாதுகாப்பு திருத்தச் சட்டம்

2. பகிரங்க ஆதனத்திற்கெதிரான தவறுகள் (திருத்தச் சட்டம்)

முதலாவதாக குறிப்பிட்ட சட்டத்தின் படி அதன் பிரிவு 2 உரிய அமைச்சருக்கு காட்டி எல்லைகள் யானைகள் வசிப்பிடம் என்பன பற்றிய தீர்மானங்கள் எடுக்க அதிகாரம் அளிக்கின்றது. தற்போதைய நடைமுறை வர்த்தமானி வெளியீட்டின் பிரகாரம் காடுகள் பல வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த சட்டத்தின் படி பின்வரும் விடயங்கள் யானைகள் தொடர்பில் கடும் கட்டுப்பட்டை கொண்ட குற்றங்களாக காணப்படுகின்றன.

1. யானைகளை வேட்டையாடல் சுட்டுக் கொலை செய்தல் காயப்படுத்தல் மற்றும் எடுத்துச் செல்லல் - (பிரிவு-12)
2. யானைகளை இலங்கைக்கப்பால் ஏற்றுமதி செய்தல் - (பிரிவு-19(2))
3. யானைகளை வீட்டில் அல்லது பொது இடங்களில் வளர்த்தல் - (பிரிவு-22(a)(2))
4. யானைகளை கொல்லும் அல்லது காயப்படுத்தும் நோக்குடன் மின்வேலிகள் அமைத்தல் செயல் உபகரணங்களை பொருத்துதல்.

மேற்குறித்த செயற்பாடுகள் யாவும் “அனுமதியற்ற வகையில் மேற்கொள்ளலே குற்றமாகும். அந்த அனுமதியானது குறித்த சட்டத்தின் படி “இயக்குணர் நாயகத்தின்” அதிகாரத்தின் கீழ் வழங்கப்பட வேண்டியதாகும். அந்த அனுமதியை வழங்கவும் அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஏராளமாக உள்ளன. இது பிரிவு 20 இன் கீழ் கட்டாயமானது.

மேற்குறிப்பிட்ட எக்குற்றத்திற்கும் நீதிமன்ற விசாரணையின் பின்னர் குற்றவாளிகளாயாக ஓர் நபர் இனங்காணப்படும் பட்சத்தில் தண்டனையாக ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் (150,000) ரூபாவிற்கு குறையாதவாறும்  ஐந்து இலட்ச (500,000) ற்கு மிஞ்சாத வகையிலும் ஓர் தண்டப்பணத்தை செலுத்த நேரிடும்.

இச்சட்டத்தின் படி பிணையானது முற்று முழுவதாக மறுக்கப்படுவதோடு 1997ம் ஆண்டின் 30ம் இலக்க பிணைச்சட்டமோ அல்லது 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடபடி முறைக்கோவையின் பிரிவுகளோ இக்குற்றங்களை பொறுத்தளவில் ஏற்புடையவை ஆக மாட்டாது.

இவ்வேளையில் கொழும்பு மேலதிக நீதிவான் ஒருவர் “சட்டப்படியான அங்கீகாரமின்றி” யானைக் குட்டி ஒன்றை உடமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் யானையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  கடும் திருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக குறித்த அனுமதியின்றிய குற்றங்கள் பகிரங்க அதனங்கள் பற்றிய தவறுகள் சட்டத்தின்  இன் கீழும் குற்றப்படுத்தக் படக்கூடியன. ஏனெனில் அங்கீகாரமின்றிய உடமைகள் யாவும் அரசிற்கே உரியனவாகும். எனவே அவை பொதுச் சொத்துக்களுமாகும்.

எனவே மேற்குறித்த சட்டநிலைகளை பார்க்கும் போது இலங்கையின் கலாச்சாரத்துடன் இறுக்கமான பிணைப்பினை கொண்ட யானைகளை பாதுகாக்கும் நோக்கோடு இறுக்கத்தன்மையான சட்டங்களை (பிணையற்ற தன்மை,ஒப்பீட்டளவில் தண்டப்பணம்) பாராளுமன்றம் இயற்றி இருப்பினும், அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ள யானைகள் தொடர்பில் தற்போது அரசாங்கமும், அதற்கென தத்துவமளிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களும் அதீத அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

ஏனெனில் அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள யானைகள் தொடர்சியாக துன்புறுத்தல்ளுக்கு ஆளாவதும், உரிய பராமரிப்பு நியமங்களுக்கு கீழாக பராமரிக்கப்படுவதும் ஊடாகங்கள் மூலமாக நாம் அறியக்கூடியாதான அன்றாட தகவல்களாகி விட்டன. எனவே அங்கீகாரமளித்தல் மட்டுமின்றி தொடர்ச்சியான கண்கானிப்பு இதில் அவசியம் என்பதுடன் கௌரவ சட்டமா அதிபர் அவர்கள் யானைகளின் பாதுகாப்பு தொடர்பில் சகல அழுத்தங்களையும் தாண்டி செயற்பட்டு வருகின்றமை  பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

Tuesday, 5 September 2017

வாக்குமூலம் 02




 
இன்று மன்னார் நகரப்பகுதியில்  மியன்மாரில் தொடர்ச்சியாக ஓர் நிலவெல்லை ஊடறுத்து அதில் காணப்படும் அல்லது பூர்வீகமாக காணப்படுகின்ற முஸ்லீம் மக்கள் தொடர்ச்சியாக சொல்லணா துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுவதை எதிர்த்து அதில் அடங்கியுள்ள மனித உரிமை மீறல்களை கண்டித்து ஓர் ஆர்ப்பாட்டம் ஒன்று அல்லது கவனயீர்ப்பு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்று முடிவடைந்துள்ளது. இதில் சாதாரண மனித உரிமை மீறலுக்கான ஓர் கண்டனம் என்பதை தாண்டி ஒரு தமிழ் சார் ஒரு நபர் சார் இயக்கத்தாலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் முஸ்லீம்கள் இலங்கையிலும் குறிப்பாக மன்னாரிலும் சிறப்பாக அவர்களது பண்டிகையை கொண்டாடிய போதும் கூட இந்தளவு ஓர் எதிர்ப்பை அல்லது ஓர் கண்டன செய்தியை மியன்மார் அரசிற்கு எதிராக மேற்கொண்டமை தொடர்பில் என்னால் ஓர் உறுதியான ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.

மேலும் இன்றைய பொழுதில் மியன்மார் என்ற வார்த்தை கூட உச்சரிக்க முடியாத அல்லது ஏதோ ஒரு கண்கட்டிற்கே பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக அறிகின்றேன். குறிப்பாக இதில் வடமாகாண சபையை பிரதிநிதித்துவம் படுத்தும் அமைச்சர் ஒருவரும் மற்றும் முன்னார் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து இதை ஏதோ ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தள்ள முற்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவிக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும் பலம் மிக்க சமூக வலையமைப்பான முகப்புத்தகத்தில் இலங்கை முஸ்லீம்களுக்கு இது தேவையில்லாத வேலை எனவும் இது பௌத்த பேரினவாதத்தின் கோபத்தை இன்னும் கிளறி இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு பாதிப்பைவ ஏற்படுத்தும் என நிபுணத்துவ துறைசார் முஸ்லீம் நபர் ஒருவரும் பதிவிட்டுள்ள நிலையில் தமிழர் தமது அரசியல் அல்லது பயங்கரவாதம் என பிரகடனப்படுத்தப்பட்டு பின்னர் இரத்தக்குழம்புடன் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பின்னரெல்லாம் தேவைப்படும்போதெல்லாம் பூச்சாண்டியிற்காக உயிர்ப்பூட்டப்பட்ட நியாயமான ஓர் அலகிற்கான தாகத்தை சில பொதுக்கொள்கைகள் எனும் அடிப்படைவாதத்தை மெருகூட்டுவதன் மூலம் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் மறைமுகமாக அரங்கேறி வருகின்ற ஓர் காலக்கொடு8ம என்பது மட்டுமே இன்று என்னால் உறுதிப்படுத்த முடிந்த ஒன்றாகும்.
ஏனெனில் நிலையான கோட்பாட்டின் படி காலம் பலவற்றை மாற்றும் அல்லது மறக்கப்பண்ணும் இவ்வாறான பொது அணைப்புக்கள் சிலவற்றை  வேகப்படுத்தும் அல்லது உள்ளூர மந்தப்படுத்தும் என்ற எனது நிலைப்பாடு எவ்வளவு நிஜமானது என்பதைக் கூட காலமே சொல்லும்.....

அர்ஜின்
05-09-2017

Wednesday, 14 June 2017

வாக்குமூலம்-01




என்னை ஒத்த வயதினருக்கும் இல்லது கனிஸ்டர்களுக்கும் ஏன் சில பல சிரேஸ்டர்களுக்கும் கூட வடகிழக்கில் எந்தெந்த இடங்களில் தமிழரின் குடியிருப்புக்கள் என்பன தொடர்பில் ஒரு தெளிவான பார்வை இல்லை என்பதை மட்டும் வருத்தத்துடனும் வெட்கத்துடனும் ஏற்றுக் கொள்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் அதுவும் இளைஞர்கள் பலர் பல்வேறு சமூகங்களில் இருந்து தமிழரின் நிலத்தை ஒரு பொருளாதார பலமாக அல்லது பலவீனமாக பார்க்கின்ற அணுகுமுறையை என்னால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

உண்மையில் தமிழரின் பொருளியல் சார் நலன்கள் அல்லது வளங்கள் இலங்கைத்தீவின் எல்லையை கடந்தவை அல்லது  (தீவினுள்) புவியியற்பரப்புடன் தொடர்பு படாதவை. எனவே தமிழரின் நிலங்களை கையகப்படுத்துவது என்பது குறித்துரைக்கும் அளவிற்கு அவர்களின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் என்பது ஏற்கமுடியாது. ஏனெனில் துயர்பகிர்ந்த அல்லது பகிர்கின்ற எமது நெடுந்துார போராட்டத்தில் தமிழர்கள் இறையாண்மை உள்ள அரசிடம் எவ்வித பொருளாதார உதவிகளையும் கோரவில்லை. மாறாக அவ்வரசின் அங்கங்களே பலமுறை தமழர்களிடமும் அவர்களின் ஆயுத அலகான விடுதலைப்புலிகளிடமும் அவ்வவ்போது பொருளதார ரீதியில் உதவிகளையும் சன்மானங்களையும் பெற்று வந்தனர்.

ஆனால் அவற்றையும் தாண்டி நிலம் என்பது எமது இருப்பிற்கான ஒரு ஆதாரம் என்பது யாராலும் எப்போதும் மறுதலிக்கப்பட முடியா உண்மை. அதுவே இவ்நெடுந்துயர் எம்மை இன்று வரை சூழ்ந்திருக்கவும் காரணம். ஆனால் இன்று அது பொருளாதாரம் என்ற ஒன்றின் மூலம் வீழ்த்தப்படும் எனில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி எமக்குள் இயல்பாக எழுவதை நாம் தவிர்க்கக் கூடாது.


 பிரபல ஆங்கில துப்பறியும் ஆயத கலாச்சார எழுத்தாளரான Frederick Forsyth என்பவர் எழுதிய THE KILL LIST எனும் புத்தகத்தில் வெள்ளைமாளிகை ஒரு கட்டளையை ஒரு போர்வீரனுக்கு அனுப்புகின்றது. அது இதுதான்……The Preacher, Identify, Locate, Destroy.. இன்று இந்த கட்டளை ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் வர வேண்டும். இந்த நான்கு கமாக்களில் முதலாவதை தாங்கள் அடையாளம் காணாமலிருந்தால் இதை படிப்பதை இத்துடன் நிறுத்துங்கள்.

அடையாளம் கண்டால் தமிழரின் பூர்வீக நிலங்கள் அல்லது எல்லைப்பரப்புக்கள், அதன் வளங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் (அரசு சார் அல்லது அரசு சாரா) , குறித்த புவியியற் பிரதேசத்திற்கான நேரடி நிதிப்பாய்ச்சல்கள் அல்லது சாத்தியங்கள் என்பன குறித்த திறந்த உரையாடல்கள் அல்லது மிகக்குறைந்தளவிற்கு ஒரு எழுத்து மூல ஆவணமாவது வெளிப்படையாக தமிழர் மத்தியில் இருக்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சி சாரா புத்திஜீவிகள் அல்லது அமைப்பகங்கள் உதவ வேண்டும். அல்லது தொடர்ச்சியாக எல்லா பக்கத்தாலும் இருப்பை இழக்க வேண்டி நாம் உந்தப்படுவோம்.

அர்ஜின்
14-06-2017
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது