Social Icons

Pages

Friday, 23 August 2013

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ( Ministry of Law and Order )



மிகச்சமீபமாக இலங்கையில் “சட்டம் மற்றும் ஒழுங்கு” ற்கான அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு இதன் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்த மல்லிகாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவரே விடுதலைப்புலிகளின் சர்வதேவ விவகார பொறுப்பாளரான குமரன் பத்மநாபனை மலேசியாவில் இருந்து இலங்கைக்கு கைது செய்து கொணருவதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த அமைச்சிற்கான தற்போதைய விளக்கம் “கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்” விதந்துரைகளை வினைத் திறனாக நடைமுறைப்படுத்துவதாகும். ஆனால் தற்போது வடக்கின் போர் அழிவுச் சின்னங்கள் அவசர அவசரமாக சுத்தமாக்கப்படுவதும், இவ்வாறான அமைச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரகாசமடைய செய்யப்படுவதும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகட்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருமையின் ஆரம்பவேற்பாடுகள் என்பதை மறக்க முடியாது. ஆயினும் இந்த அமைச்சை ஓர் அமுலாக்க பொறிமுறையாக அல்லது ஜனாதிபதியின் இனநல்லிணக்க கரிசனையின் ஓர் அங்கமாக, நவநீதம் பிள்ளையின் முன்பு அரசாங்கத்தால் சமர்ப்பிக்க முடியும் என்பதனையும் காட்ட விரும்புகின்றேன்.


தற்போது உள்ள சிவில் செயற்பாடுகளில் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் இராணுவ தலையீடு தவிர்க்க முடியாததாகியுள்ளது. இந்த வேளையில் சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பொலிஸையும் சட்டம் மற்றும் ஒழுங்கு எனும் பெயரில் உள்வாங்கி அதன் நிர்வாக இயந்திரத்தை முன்னாள் அராணுவ அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதானது முழு சிவில் செயற்பாட்டு கட்டமைப்பையும் இராணுவமயமாக்கல் எனும் அபாயத்தை காட்டுகின்றது. இது LLRC அறிக்கையின் மட்டுப்படுத்தப்பட்ட விதந்துரைகளுக்குள்ளும் முரணான ஓர் தடைச் செயற்பாட்டு நிலை என்பது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இந்த சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது சட்ட ஆட்சியில் (Rule of Law) இருந்து சட்டத்தின் ஆட்சிக்கு (Rule by Law) இட்டுச் சென்றுள்ள உதாரணங்கள் பல உண்டு.

இதற்கு சிறந்த உதாரணமாக மியன்மாரின் முன்னாள் இராணுவ சர்வதிகாரி ஜெனரல். நீ வின்( 1962-1988). அவர் நீதித்துறை உட்பட அனைத்து விடயங்களிலும் இராணுவ தலையீட்டை உட்புகுத்தினார். அதாவது சட்டத்தால் ஓர் விடயத்தை கூறி விட்டால் (அதாவது சட்டவாக்கத்துறை முறைப்படி அதை அங்கீகரித்து விட்டால்) அதை நிறைவேற்ற எந்த வழிமுறையையும் கையாள முடியும் என்பதாகும். சுருங்க கூறின் சட்ட ஒழுங்கை நிலை நாட்டல் எனும் பெயரில் அடிமைத்தனத்தை அரங்கேற்றுவது.

இலங்கை போன்ற ஒரு நாட்டின் தற்போதைய உடனடித்தேவை சட்ட ஆட்சியும் நல் அரசாட்சியும் தான். இவற்றை அடைய பின்வரும் மூன்று விடயங்கள் அவசியமானதாகும்.

01.சுயாதீனமான, அழுத்தங்களற்ற காவற்றுறை
02.சுயாதீனமான சட்டமா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள்
03.பக்கச்சார்பற்ற நீதித்துறை

ஆனால் துரதிஸ்ட வசமாக இதை எழுதிக்கொண்டு இருக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் இயங்கக்கூடிய நிறுவன கட்டமைப்புக்கள் இலங்கையில் இலங்கையில் இல்லை என்றே எண்ணுகின்றேன். வெலிவேரிய போன்ற சம்பவங்கள் இலங்கையின் ஜனநாயகத்தை உரசிப்பார்க்கும் வகையிலான உதாரணங்கள் ஆகும்.

மேலும் அரசின் ஓர் துறை இராணவ மயமாக்கலுக்கு உட்படுதலானது ஏனைய துறைகளும் இராணுவ பிரசன்னத்தை உள்ளீர்ப்பதை ஊக்கப்படுத்தும். உதாரணமாக இன்றும் மியன்மாரின் பிரதம நீதியரசர் ஓர் முன்னாள் இராணுவ அதிகாரியாவார் என்பது இங்கு எதிர்காலக் கண்ணோடு பார்க்கப்பட வேண்டிய விடயம்.

நவநீதம் பிள்ளையின் வருகை என்ற ஒன்றை விடுத்து வட மாகாண சபை தேர்தல் என்பதும் இச்செயற்பாட்டின் விளைவுகளை எதிர்நோக்க போகின்ற ஒன்று. அதிகாரங்கள் எவ்வெவ் வழிகளில் பகரப்படினும் இராணும் என்றும் மத்திய அரசிற்கே உரியது. எனவே இராணுவமயமாக்கல் சிவில் செயற்பாடுகளில் ஆழ வேரூன்றும் போது அது பகரப்பட்ட அதிகாரங்களை அமுல் செய்வதில் பாரிய தடைகளை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது. இவ்வாறான இயல்புகள்  அவ்வமைச்சின் எதிர்கால பலன்கள் என்பதை இலங்கையின் 60 வருட கால வரலாறு எனக்கு உதாரணமாக காட்டியுள்ளது.


( பரீட்சையை தாண்டி சட்ட மாணவர்கட்கு, விதிகள் பயன்படுவதில்லையாதலால், நேரமின்மை காரணங்களாலும் அவற்றை விலக்கியுள்ளேன்)

Thursday, 1 August 2013

இலங்கையின் சட்டங்கள் ஓர் சுருக்க அறிமுகம்..


சட்டம் என்ற சொல் ஏனோ எம்மவர்கட்கு ஓர் அந்நியப் பதம் போலவும் அல்லது தண்டனையை மட்டுமே நினைவு படுத்தும் ஓர் குறிகாட்டி போலவும் மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் சட்டம் சமூகத்தை வழிநடாத்தவும் வழிதவறியோரை நெறிப்படுத்தவும் குறிப்பிட்ட சமூகத்தவராலேயே ஆக்கப்பட்ட சமூகத்தை கட்டுப்படுத்தி வழிப்படுத்துகின்ற ஓர் தொகுதி விதிகள் தானே தவிர வேறொன்றுமில்லை.

சட்டங்களின் வீச்செல்லையை வைத்து அது குடியியற் சட்டம் அல்லது குற்றவியற் சட்டம் என பொதுவாக வகுக்கப்படும். ஆனால் இந்த வகுப்பெல்லை ஆனது இவ்விரு சட்டங்களின் கீழும் நீண்டு செல்லும் ஓர் தொடரை ஒத்தது. ஏனெனில் சட்டம் ஓர் பௌதீக விஞ்ஞானம் அன்று அது ஓர் சமூக விஞ்ஞானம் சமூகத்தின் நடவடிக்கைகட்கேற்பவே அது விளைவுகளை கொடுக்கின்றது. சமூக மாற்றங்களுக்கேற்ப அது பரிமாணமாற்றத்திற்கு உட்படக்கூடியது.

இலங்கை போன்ற பல்வகைமை சட்ட ஆளுமை கொண்ட ஓர் நாட்டில் பணியாற்றுவது என்றுமே சட்டவல்லுணர்கட்கு சவாலான ஒன்று என்பது மறுக்க முடியாததாகும். ஏனெனில் நாம் பல்வகைமையான பலவேளைகளில் உள்ளக முரண்பாடுகளுடைய சட்டங்கள் மூலம் இன்று வரை ஆளப்படுகின்றோம். அவற்றை நாம் அந்நிய சட்டங்கள் (Foreign laws), சுதேச சட்டங்கள் (Indigenous laws) மற்றும் நியதிச்சட்டங்கள் (Statutory Enactments) என தேவைக்காக வகுத்து காட்ட முடியும்.

அந்நிய சட்டங்கள் என நோக்கும் போது நாம் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் காலணித்துவ நாடாக விளங்கியிருந்தோம். இவ் அந்நிய நாட்டவர் தமது நிர்வாக தேவைகட்காக தமது சட்டங்களை இலங்கையில் அமுல்படுத்தினர். இதன் படி போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட உரோம டச்சு சட்டமும் (Roman Ducth Law) ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலச்சட்டமும் (English law) இன்றைய இலங்கை தளத்தில் முக்கியத்துவம் பெறுபவை. உரோம டச்சு சட்டம் பெரும்பாலும் குடியியல் விடயங்களில் (Civil Matters) செல்வாக்கு செலுத்துகின்றது. உதாரணமாக திருமண விடயங்கள் (Matrimonial Issues), திருமணக்குலைவு (Dissolution lf Marriage), காணி விடயங்கள் மற்றும் கடல்சார் ஆளுகை (Admiralty Jurisdiction) விடயங்கள். ஆங்கிலச்சட்டம் நவீன சட்டங்கள் என வர்ணிக்கப்படுவதோடு பெரும்பாலும் குற்றவியற் சட்ட பரப்பு (Criminal Law), வியாபாரச் சட்டம் (Business Law) மற்றும் ஒப்பந்த சட்டங்கள் (Contract law) என்பவற்றில் பயன்படுகின்றது.

சுதேச சட்டங்கள் எனப்படுபவை எமது பரம்பரைக்கு உரிய எம்முடைய சட்டங்களாகும். இவை இலங்கை வாழ் மக்களால் ஆரம்ப காலம் தொட்டே மரபுகள் மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழமைகளாகும். இவை அந்நிய சட்டங்களுடன் ஒப்புநோக்குகைக்கு உட்படின் செல்வாக்கு குறைந்தவையாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தளப்பரப்பை உடையதாகவும் காணப்படுகின்றன. சுதேச சட்டங்களை மூன்று வகையான சமூகத்தவர்க்கு உடைய மூன்று வகை சட்டங்களாக காட்ட முடியும்.

0 1. தேசவழமைச் சட்டம்- Thesawalamai Law
0 2. கண்டியச் சட்டம்- Kandiyan law
0 3. முஸ்லீம் சட்டம்-Muslim Law

தேசவழமைச் சட்டம் வடமாகாண தமிழர்களின் தனிச்சட்டமாகும். அதாவது முன்னர் வடமாகாண தமிழர்கள் மலபார் என அழைக்கப்பட்டனர். தேசவழமை மலபார்கட்கு மட்டுமே உரித்தான சட்டமாகும். இச்சட்டம் ஆள்சார் சட்டமாகவும் (Personal law) இடம் சார் (Geographical Law) சட்டமாகவும் தொழிற்படுகின்றது. சுதேச சட்டங்களில் இவ்விரு வகையான ஆளுகைகளையும் உடைய சட்டம் தேசவழமை மட்டுமே !

நபர்சார் சட்டம் எனில் மலாபார் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் (வடமாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும்) அவர்கள் தேசவழமையால் ஆளப்படுவார்கள். இடம்சார் சட்டம் என்பது வடமாகாண நிலங்கள் யாவும் இச்சட்டம் மூலம் ஆளப்படும். அந்நிலங்கள் யாருக்கும் சொந்தமாக காணப்படலாம் உதாரணமாக சிங்களவர், முஸ்லீம் நபர்கள் யாராவது காணியை வடமாகாணத்தில் கொண்டிருந்தாலும் அவர்கள் அக்காணி தொடர்பில் தேசவழமையினால் ஆளப்படுவார்கள், இது இடம் சார் ஆளுகை எனப்படும். பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமையில் ஆளுகையை கொண்டிருப்பதோடு சில வியாபார வழக்கங்களிலும் குறிப்பிட்ட ஆளுகையை கொண்டுள்ளது.

அடுத்து கண்டிய சட்டம், இச்சட்டம் கண்டிய மாகாணங்களில் வசிக்கும் கண்டிய சிங்களவர்கட்கு மட்டும் ஏற்புடையதானது. இது ஓர் இடம் சார் சட்டமாகும். அதாவது கண்டிய மாகாணத்திற்கு வெளியே இச்சட்டம் ஏற்புடையதாக மாட்டாது. பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமை விடயங்களில் ஆளுகையை உடையது.

முஸ்லீம் சட்டம், ஓர் நபர் சார் சட்டமாகும். அதாவது முகமதீன்கள் (முஸ்லீம்கள்) இலங்கையில் எங்கு வசிப்பினும் அவர்கட்கு இச்சட்டம் ஏற்புடையதாகும். இச்சட்டம் திருமணம் மற்றும் வழியுரிமை என்பவற்றில் குறிப்பிட்ட ஆதிக்கம் உடையது.

அடுத்து நியதிச்சட்டம், அச்சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிகழளவு தேவை கருதி ஆக்கப்படும் சட்டங்களாகும். இச்சட்டங்களே இன்று பெருமளவில் எம்மை பிணிக்கின்றன. 1972ஆம் ஆண்டு முதல் சுகந்திரமான அரசியல் யாப்பின் கீழ் இப்பணி இன்று வரை இலங்கை சட்டவாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அடுத்து நாம் நீதிமன்ற முற்றீர்ப்புக்களை (Judicial Preceding) பார்க்கலாம். இவை சட்டங்கள் இல்லை எனினும் நீதித்துறையின் ஒரு உறுதிப்பாட்டினை பேணும் நோக்கோடு நீதிமன்றங்களால் பின்பற்றி வரப்படுபவை. எனவே நீதிமன்ற பதவணியில் உயர் நிலையிலுள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது கீழ் நிலை நீதிமன்றங்களை பிணிக்கும். எனவே இவை நீதிமன்றங்களை கட்டுப்படுத்துவதால் மக்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் போலவே செயற்படுகின்றது.


மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் ஓர் அறிமுகத்திற்காகவே வரையப்பட்டது. இச்சட்டங்களின் அமுலாக்கத்தன்மை பற்றி அறிய அச்சட்டங்களின் சட்டமூலங்களையும் குறிக்கப்பட்ட வழக்கு தீர்ப்புகளையும் ஆராய்வது அவசியமாகும். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் அவற்றை விரிவாக ஆராய்வோம்…… 

Wednesday, 31 July 2013

நட்போடு…………….


நட்பு என்ற சொல் ஏதோ பொருள்கோடல்களிற்கு அப்பாற்பட்டு உயிர்களிடையே உலாவி வரும் உணர்ச்சிகளில் தனித்துவமானதும் உன்னதமானதாகும்.

மனித உறவுகள் பெரும்பாலும் இரட்டிப்பு சொந்தம் என்றோ அல்லது திருமண முறை உறவுகள் என்றோ உறவு முறைமைகளை உறுதிப்படுத்தி கொள்கின்றோம். அதோடு பிணைப்பை பின்ணிணைக்கும் காரணிகளாக மதம்,சாதி,இனம் அதோடு மானிடம் தாமாக வரையறுத்த மட்டுப்படுத்தற்காரணிகளையும் சார்ந்தே பிணைந்துள்ளது.



விசித்திரமும், தனித்துவமும் என்னவெனில் நட்பு மனித உயிரிகளை தாண்டி ஐந்தறிவு ஜீவன்களிடமும் புரையோடி காணப்படுவதுதான். சோற்றிற்கு நன்றி காட்டும் நாய் முதல் வித்தைகளில் அடக்கி ஆளப்படும் சிங்கம் வரை மனிதனுக்கு இசைந்து போவது நட்பால் தானே !

நண்பனுக்காக உயிரை கொடுப்பது எளிது, ஆனால் நட்பிற்காக உயிரை கொடுக்கக்கூடிய நண்பன் கிடைப்பது அரிது. எனும் முதுமொழிக்கு புரூட்டஸ் காலம் முதல் இன்று வரை நட்பிற்கான துரோகங்கள் தொடர்கதையாக உள்ளது. நட்பு அல்லது நண்பர் வட்டம் ஓர் காரணத்தையோ, கொள்கையையோ வைத்தே உருவாகுகின்றது என்பது வெளிப்படை. அதற்காக எதிரிகளின் உருவாக்கம் அல்லது  செயற்பாடு என்பது மேலும் நட்பை வலிமைப்படுத்துகின்றது. ஏனெனில் வாழ்வின் அர்த்தமே வெற்றி என்ற ஒன்றிலேதான் தங்கியுள்ளது. எதிரிகள் போட்டியை உருவாக்குவார்கள், போட்டி நம்மை சிறந்தவராக்குகின்றது, அல்லாவிடில் நாம் உள்ளதை மட்டும் கொண்டு திருப்தியடைந்து விடுவோம்.

ஆனால் அந்தப்போட்டி ஆரோக்கியமானதாக, முதுகில் குத்தும் வழக்கத்தை பழக்கமாக்காததாக இருப்பது அவசியம். ஆனால் இன்று முகதுதி பாடி முதுகில் குத்துவோர் அனைவரும் சிறந்த தியாக உள்ளங்கள் போலவும் உண்மையை உரக்க சொல்பவர்கள், அனைவருக்கும் சமநிலையை நிகழளளவில் பெறவேண்டும் தீராத ஆவலுடையவர்கள், கட்டுப்பாடற்றவர்களாகவும் அன்பில்லா முரடர்களாகவும் நோக்கப்படுகின்றனர்.

ஆனாலும் அவர்கள் அறிவார்கள் யாரென்பதை தளங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களின் கொள்கையும் வாழ்வும் இதுதான் அதாவது “எனக்கு அடிமைகள் யாருமில்லை நான் யாருக்கும் அடிமையுமில்லை”. ஆனால் முகதுதி பாடிகளோ முதகெலும்பற்ற தம்மை அடிமைகளாக அர்ப்பணித்து ஏதோ ஒன்றை பெறமுயலும் அப்பாவி அடிமைகள் அவர்கள் ஏனெனில் சொற்பகால சலுகைகளிற்காக தமது உரிமைகளை விட்டுக்கொடுப்போர் அந்த சலுகைகளை தக்கவைப்பதும் இல்லை, உரிமைகளை அனுபவிப்பதுமில்லை.

ஆனால் இளமையில் ஏற்படும் நட்பு ஒழுங்காக பராமரித்து சக்திகள் ஒன்று குவிக்கப்படின் மாபெரும் சிகரங்கள் இலகுவாக அடையப்பட ஓர் இலகுபொறிமுறையாக காணப்பட இளமையிவ் தகா சேர்க்கை ஒருவரின் ஒட்டு மொத்த வாழ்வையே முழுமையாக நாசமாக்கிவிடும் ஓர் இலக்கை நோக்கி குறிபார்த்தெய்யப்பட்ட அம்பு போல் செயற்பட வேண்டிய நாம் சொந்த விருப்பு வெறுப்புகட்கு அப்பாற்பட்டு நாம் ஏற்படுத்திக்கொண்ட பொது இலக்கிற்காய் உழைக்க வேண்டும். மொத்தத்தில தீயா வேலை செய்யணும் நட்புகளா !


Wednesday, 17 July 2013

Whistle Blower - எச்சரிக்கை குரலெழுப்புவோன்


“சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு தருணமும் எதேச்சாதிகாரத்தையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் சகித்து கொள்ள முடியாத சொற்ப எண்ணிக்கையான தனிநபர்கட்கு ஏற்படுகின்ற அதிவிஷேடமான தைரியத்தின் விளைவாகவே தலைப்பு செய்திகளாகின்றன”.

Whistle Blower அதாவது எச்சரிக்கை ஒலி எழுப்புவோன் என வகைப்படுத்தப்படுவோர் ஓர் படியாக்கற் முறைமையை கொண்ட நிறுவனத்தின் செயற்பாடுகளில் காணப்படும் அல்லது அதிகார படிமுறை நிச்சயிக்கப்பட்டோரால் நிகழ்த்தப்படும் நடத்தைப்பிறழ்வு (misconduct), நேர்மையீனம் (dishonest), சட்டமீறல்கள் (illegality), இலஞ்ச ஊழல் (Bribe and corruption) நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு பகரங்கப்படுத்துபவன் ஆவான். இம்முரண் செயற்பாடுகள் மக்களுக்கு வர்த்தகத்தை வழங்கக்கூடிய அனைத்து விதமான நிர்வாக கட்டவியல் அமைப்புகட்கும் அரச நிறுவனங்கள் தனியார் மற்றும் பொது கம்பனிகள் எந்த ஒரு நாட்டினதும் வர்த்தகவெல்லை நிறுவனங்கள் (இங்கு வர்த்தகம் என்ற பதமானது பொருள் மற்றும் வேவை பரிமாற்றத்தை உணர்த்தி நிற்பதால் அனைத்து நிறுவன வகையறாக்களும் இக்கண்காணிப்பு வளையத்தினுள் அடங்கிவிடும். உதாரணம் கரிசனை மையங்கள் (Charity Organizations)



Whistle Blowers தங்களுடைய செயற்பாடுகளை அக்குறிப்பிட்ட நிறுவனத்தினுள்ளேயோ அல்லது பரந்தளவில் மக்கள் சமூகம் எனும் தளத்திலோ எச்சரிக்கையை வெளிப்படுத்துபவர்.

இதன் முக்கியத்துவம் என்னவெனில் “வெள்ளம் வரும் முன்பே அணை கட்டவேண்டும்” எனும் கோட்பாட்டினடிப்படையில் விளக்ககூடியது. அதாவது இச்செயற்பாடு ஓர் முன்னெச்சரிக்கை அலாரமாக தொழிற்படுவதுடன் ஓர் நிறுவனத்தின் செயற்பாட்டு முகவராண்மைகளின் பிழையான நடத்தையால் அந்நிறுவனம் எதிர் விளைவுகளை நிகழளவில் உருவாக்குவதை தடுப்பதுடன் வேலைத்தளத்தின் தொழில் சார் தரத்தை அதிகரிக்கவும் உற்பத்தியின் வினைத்திறனாற்றலை மேம்படுத்தவும் இச்செயற்பாடு பயனுடையதாகின்றது. ஆனால் Whistle Blowing சுகந்திரமாகவும் சீரானதொடராகவும் இடம் பெற ஓர் வினைத்திறனான கொள்கை கட்டமைப்பு (An effective whistle blowing policy) தேவைப்படுகின்றது. இது குறிப்பிட்ட நாட்டின் சட்டங்கள் மூலமாகவோ அல்லது நடைமுறை விடயங்கள் மூலமாகவோ செயன்முறைப்படுத்தலுக்கு உட்படக்கூடியது.

ஆனால் பெரும்பான்மையான தனிநபர்கள் இந்த whistle Blowers எனும் செயற்பாட்டு பதத்தை தமது வாழ்க்கையில் பிரயோகிப்பதில்லை. காரணம் வஞ்சம் தீர்க்கப்படுவோம் என்பதை விட தொழிலாண்மையின் தொடர்புகளின் வலைப்பின்னல் இழக்கப்படும் எனும் மேலோட்டமான அச்சமே காரணமாக உள்ளது.

ஒப்பீடாக Whistle Blowers ஆக தொழிற்படுபவர்கள் பலதடவைகள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட நிறுவன கட்டமைப்புக்கள் மூலமாகவோ அல்லது நாட்டின் சட்ட முகவராண்மைகள் மூலமோ பழி தீர்க்கப்படுகின்றனர் என்பது உண்மை.

இவர்கள் வேலைத்தளத்தினுள் வேலைநிறுத்தம், வேலை இடைநிறுத்தம், சம்பளக் குறைப்பு மற்றும் ஏனைய வேலையாட்களிடையே வேறுபாடாக தரக்குறைவாக நடாத்தப்படல் போன்ற அவதிகட்கு ஆளாகின்றனர். இன்று இவர்கட்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்வினை முறைமை Shoot the MESSENGER என அழைக்கப்படுகின்றது.  அதோடு குறிப்பிட்ட எச்சரிக்கை ஒலி எழுப்பியோனை குற்றவியல் நீதிமன்ற நியாதிக்க முறைமை மூலம் குற்றவாளியாக்கல் என்பது இன்று பரவலானது. மேலதிகமாக எதிர்கால வேலை தேடும் படலத்தில் புறக்கணிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. ஏனெனில் தமக்கு எதிராக செயற்படும் எந்த ஒரு ஊழியரையும் நிறுவன முகாமை கட்டமைப்புக்கள் பணியிலமர்த்த விரும்புவதில்லை.

வேறாக அவதுாறு வழக்கு மூலமும் இவர்களை சட்டப்படி குற்றவாளிகளாக இனம்காட்ட முடியும். இது குடியியல் வழக்காக நட்டஈடு கொடுப்பனவிலும், குற்றவியல் வழக்காக இனம் காணப்படின் அது சிறைவாசத்திலும் சென்று முடிவடையும். ஆனாலும் இன்று நீதித்துறையின் போக்கு அவதுாறு பரப்பினும் அது உண்மை என நிரூபிக்கும் பட்சத்தில் முழுப்பாதுகாப்பையும் குற்றம் சாட்டப்பட்டவர் பெறலாம் என்பது சற்றே ஆறுதலளிக்கக்கூடிய விடயம்.

இதில் ஓர் திண்ணமான விடயம் தனிநபர்கள் உலகின் அரசுகள் மேற்கொள்ளும் கபட தானங்களை துணிச்சலாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான். இதில் அதிகம் பேசப்படுவது அமெரிக்கா பற்றியும் அதோடு Whistle Blowers ஆன யூலியன் அசாஞ்சே மற்றும் எட்வேர்ட் சிநோடன் பற்றியே ஆகும்.

முதலாமவர் அசாஞ்சே, இவரின் விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இணைய உலகில் இல்லை என்றே கூறலாம். இவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏனைய நாடுகளில் காணப்படும் அமெரிக்காவின் துாதுவராயலங்களுடன் மேற்கொண்ட தொடர்பாடல் விடயங்களை தனது இணையத்தினுாடாக அம்பலப்படுத்தியிருந்தார். அதில் அமெரிக்காவின் இரட்டை முகமும் ஏனைய நாடுகளில் மேற்கொண்ட குறிப்பிட்ட  ஆட்புல அரசுகட்கு எதிரான சதி வேலைகளும் வெளிச்சத்திற்கு வந்தன. எனவே இப்போது அசாஞ்சே இதற்காக பெற்ற பரிகாரம் அவர் மீது தொடரப்பட்டிருக்கும் பாலியல் சேட்டை வழக்காகும்.

இரண்டாமவர் சிநோடன், இவர் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு மையம் சிவிலியன்களின் தொடர்பாடல் வலையமைப்பை ஊடறுத்து மக்களால் பரிமாற்றப்படும் விடயங்களை ஒட்டுக்கேட்டதுடன் அவற்றை பதிவு செய்தும் வைத்திருந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இவர் மிக இளநிலை C.I.A (Central intelligence Agency) அதிகாரி என்பது குறிப்பிட கூடியது. தனது மனட்சாட்சி உறுத்தியதன் காரணமாகவே இத்தகவல்களை வெளியிட்டேன் என அவர் ஒப்புக்கொண்டார். இது ஓர் அடிப்படை மனித உரிமையான தனிமைக்கான உரிமையை (Right to Privacy)மீறுவதாக இச்செயல் அமைகின்றது என வாதிடுகின்றார். ஆனால் இவர் தொடர்ந்தும் அமெரிக்காவால் நீதிமுறை விசாரணைகட்காக தேடப்பட்டு வருகின்றார். இது அதிபர் பாரக் ஒபாமாவின் இரண்டாம் பதவிக்காலத்தில் ஓர் அழுத்தக்கறை என அரசியலவதானிகள் கணக்கிடுகின்றனர்.

இவர்களை நோக்கும் போது ஓர் குறிப்பிட்ட நாட்டின் பிரஜை எனும் வகையில் அவர்கள் செய்தது நிச்சயம் ஓர் தேசதுரோக செயலே ஆயினும் முழு மானிட சமுதாயம் என்று பார்க்கும் போது அது ஓர் மனிதாபிமாக செயலே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஓர் மனித உயிரி முதலில் தனது சமூகமான மானிடத்திற்கு தனது விசுவாசத்தை காட்டிய பின்னரே நாடு எனும் எல்லையினுள் தன்னை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பட்டயம் (Universal Declaration of Human Rights) அப்பட்டயம் எண்ணிட்டுள்ள உரிமைகள் மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உரியவை என வரையறுக்கின்றதே தவிர குறிப்பிட்ட நாட்டவர்க்கு உரியவை என வரையறுக்கவில்லை.

நாடு என்ற வகையில் குடிமகனுக்கு உள்ள உரிமைகளை அனுபவிக்க புடிமகனுள்குள்ள கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் மேற்குறிப்பிட்ட உதாரண நபர்களை போன்றோர் குடிமகனுக்குரிய  கடமைகளில் இருந்து விலகி முழு மனித சமுதாயத்திற்காகவும் தம்மை அர்ப்பணிந்திருந்தனர். அரசுகள் என்றும் அமைதிகாக்கும் குடிகளையே விரும்பும் அது என்றும் ஆர்ப்பாட்டமாக தனது திரைமறைவுச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் குடிகளை விரும்பாது.

மேலாக Whistle Blowing இன்று கீழ்வரும்  விடயங்கட்கு தனது பரப்பெல்லையை விஸ்தரித்துள்ளது.

01. சட்ட மீறுமை-Criminal Offence
02. கடமைப்பாட்டில் இருந்து மீறல்-Failure to comply with legal obligation
03. நீதிறை பிழையாக வழிகாட்டல்- Miscarriage of Justice
04. சுகாதாரக்கேடான செயற்பாடுகள்- Endangering of health safety
05. சுற்றாடலை மாசாக்கும் நிகழ்வுகள்- Damage to the environment
06. நேர்மையற்ற பாகுபாடு- Unfair discrimination

இச்செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக பழிவாங்கல் எனும்
தடையிலிருந்து தம்மை பாதுகாக்க Whistle Blowers கீழ்வரும் முறைகளை கைக்கொள்ளலாம்

01.சட்ட ரீதியான பாதுகாப்பை பெறல்
02.அரசின் பாதுகாப்பு முகவராண்மைகளை பயன்படுத்தல்
03. குழு வலையமைப்புக்களை அமைத்தல், பலப்படுத்தல்
04.சர்வதேச தளத்தை தற்பாதுகாப்பிற்காக பயன்படுத்தல்

சில நாடுகள் Whistle Blowers ஐ பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைக்கூட கொண்டிருக்கின்றன.  உதாரணமாக
01. தென் ஆபிரிக்கா- Protected Disclosure Act
02. ஐக்கிய இராச்சியம்- Public Interest Disclosure Act
03. நோர்வே- Working Environment Act
04. இந்தியா – Protection of Whistle Blowers Act

ஆகியவற்றை பட்டியல் இடமுடிந்த போதும் இலங்கையில் இவ்வாறன ஏற்பாடுகள் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்ட மனவேதனைகட்கு என்றும் உட்பட்டவை. ஆனால் சட்டம் உள்ள நாடுகளில் கூட பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே ! இதற்கு உதாரணமாக சட்டம் அமுலிலுள்ள பாரத தேசத்தில் IPL கிரிக்கெட் சூதை வெளிப்படுத்திய பொலிசு கான்ஸ்தோபிள் ஒருவர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டதை காட்ட விரும்புகின்றேன்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் சமூகத்தில் அபாய செயற்பாடுகட்கான எச்சரிக்கை அலாரத்தையும் அந்த அலாரத்தை உருவாக்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பட்டியலிடுகின்றன. ஆனால் Whistle Blowers மோதும் கட்டமைப்பை பொறுத்து அவர்கட்காக பதில் விளைவுகள் மோசமாக இருப்பதுடன் கிடைக்கும் பரிகாரங்களும் மறுக்கப்படும் வாய்ப்பு நிகழளவில் அதிகம் என்பதையும் கவனத்திற்கொள்வது சிறப்பானது.






Friday, 12 July 2013

மனிதராக இருப்பதற்கான விதிகள்


01.நீங்கள் ஓர் உடலை பெறுவீர்கள்
நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் இது உங்களுடையதுதான்

02.நீங்கள் பாடங்களைக் கற்பீர்கள்
மரபுசாரா பள்ளியான வாழ்க்கையில் நீங்கள் முழு நேரமாக சேர்க்கப்படுவீர்கள். இந்தப்பள்ளியில் நீங்கள் தினந்தோறும் பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு அந்தப் பாடங்கள் பிடித்திருக்கலாம் அல்லது அவற்றைப் பொருத்தமற்றதாகவோ மடத்தனமாகவோ நினைக்கலாம்.

03.தவறுகள் இல்லை, பாடங்கள் மட்டுமே

முயற்சித்து பார்த்து தவறுகளை அறிவதுதான் வளர்ச்சி. பரிசோதனை முயற்சி பலன் தரும் சோதனைகளைப் போல தோல்வியுற்ற சோதனைகளும் முயற்சியின் ஓர் அங்கம் தான்

04.கற்றுக் கொள்ளப்படும் வரை பாடம் திருப்பித் திருப்பி நடத்தப்படுகின்றது.
ஒரு பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை அது பல்வேறு வடிவங்களில் உங்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடத்தை நீங்கள் கற்ற பிறகு அடுத்த பாடத்திற்கு போகலாம்.

05. பாடங்களை கற்பதற்கு முடிவில்லை.
வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் அதற்குரிய பாடங்களை் இல்லாமல் இருப்பதில்லை. நீங்கள் உயிரோடிருந்தால் கற்பதற்கான பாடங்கள் இருக்கும்.

06.இங்கேயை விட அங்கே சிறந்தது அல்ல.
உங்களின் அங்கே இங்கே ஆக மாறும் போது, நீங்கள் மற்றொரு அங்கேயை அடைவீர்கள். அது மீண்டும் இங்கேயை விட சிறந்ததாக தோன்றும்.

07.மற்றவர்கள் உங்களை காட்டும் கண்ணாடி தான்.
மற்றொரு நபரைப் பற்றிய சிலவற்றை நீங்கள் விரும்பவே, வெறுக்கவோ முடியாது. அது உங்களிடம் நீங்கள் விரும்புவதையோ , வெறுப்பதையோ பிரதிபலிக்காத வரை.

08.நீங்கள் வாழ்க்கையில் என்னவாகப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான்.
உங்களுக்குத் தேவையான உபகரணங்களும் வசதிகளும் உங்களிடம் இருக்கின்றன.  அதை வைத்து என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம். சாய்ஸ் உங்களுடையது.

09.உங்களுக்கான விடைகள் உங்களுக்கு உள்ளேயே உள்ளன.
வாழ்க்கையின் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பார்ப்பதும் கவனிப்பதும் நம்புவதும் தான்.


10. நீங்கள் இவை எல்லாவற்றையும் மறந்து விடுவீர்கள்.

வட மாகாண சபை தேர்தலும் தமிழர் தீர்வுகளும்


இன்றைய சமகால இலங்கையிலும், சர்வதேச அரங்கின் இலங்கைத்தீவின் கண்காணிப்புகளிலும் முதன்மை பெறுவது வட மாகாண சபை தேர்தலாகும். இது சாதாரண ஓர் ஜனநாயக வழமைச் செயல்முறைமை எனில் இந்தளவு முக்கியதுவம் காரியமற்றது. இன்று இலங்கை அரசிற்கு உள்ள இரண்டு பிரச்சினைகளாக போர்க்குற்றங்கள் மற்றும் இனப்பிரச்சனை தீர்வு. இனப்பிரச்சனைக்கான தோற்றுக்காரணி அழிக்கப்பட்டாலே போர்க்குற்றங்கட்கான அழுத்தக்காரணிகளும் நீக்கப்படும் என்பது திண்ணம்.


30 வருட இலங்கையின் கசப்பான அனுபவத்தையும் உலகின் தேசிய நலன் எனும் கோட்பாட்டிற்கு லங்காபுரியை பொறுத்தளவில் சகிக்க முடியா உச்ச அச்சுறுத்தலை கொண்டிருந்தவர்களை நிர்மூலப்படுத்தியதாக அறிவித்த பின்பு அவ்அச்சுறுத்தலுக்காக தோற்றுவாயை ஒரேயடியாக சர்வதேசத்தின் முன்பு துடைத்தழிப்பதற்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. முன்பு 13ம் திருத்தத்தில் ஒன்றுமில்லை என வாதிட்ட தமிழ் தேசியவாதிகள் இன்று அதை பற்றி விமர்சிக்கவும் பிச்சு புடுங்கவும் தொடங்கி விட்டார்கள். எல்லாம் அதிகார வேட்கையும் அரசியல் ஆசையும் தான். ஓர் சட்டமாணவன் என்ற வகையில் எந்த வித அதிகார பகிர்வு ஆணைகளையோ சுயாட்சி அதிகாரத்தையோ முகத்தளவில் கூட கொண்டிராத 13ம் திருத்தம் இன்று தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தி கொள்வோரால் கூட உச்சளவில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்பது என்னை பொறுத்தளவில் சகிக்க முடியாத அல்லது நகைப்பிற்குரிய ஓர் விடயதானம்.

ஆனால் அதைக்கூட இலங்கை தேசியவாதிகள் இறையாண்மையின் அச்சுறுத்தலாகவும் தமிழர்கட்கான தனிநாட்டின் முதற்படியாகவும் சித்தரிப்பதை என்னவென்று கூற முடியும். தற்போது அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பிறப்பித்துள்ள கட்டளைகள். மாகாண முறைமை ஒழிக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் அதாவது ஒழிப்பு முறைமையை முற்றுப்படுத்தும் வரைக்கும் 5 கட்டளைகளை உடனடியாக தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும்.

0 1. மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
0  2. மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களை ரத்து செய்யப்பட வேண்டும்.
0  3. மாகாண இணைவிற்கான அதிகாரத்தை களைய வேண்டும்.
0 4. பெரும்பான்மை மாகாண சம்மதத்தின் பெயரல் ஓர் சட்டத்தை மத்திய அரசு ஆக்கின் அது அனைத்து மாகாணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
0 5. மத்திய அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளும் மாகாண சபைகளை நேரடியாக கட்டுப்படுத்த வேண்டும். .

என்னை பொறுத்தளவிலே மேற்கூறப்பட்ட விடயங்களில் 04 ஐ தவிர அனைத்துமே 13ம் திருத்தத்தின் முகத்தளவிலேயே கோரிக்கைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது. ஏனெனில் இங்கு மத்திய அரசு ஓர் சட்டமூலத்தை ஆக்கின் அது சம்மதளித்த மாகாண சபைகட்கு மட்டும் ஏற்புடையதாகுமே தவிர மற்ற சபைகளை பிணிக்கமாட்டாது.
ஆனால் இதில் உள்ள சூட்சுமம் இந்த தேர்தல் தமிழ் மக்களின் 60 வருட கால போராட்டத்திற்கு ஓர் முடிவை இட்டு விட்டதாகவும் தமிழர்கள் யுத்த முடிவு (POST WAR) என்ற தளத்தில் இருந்து முரண்பாட்டு முடிவு (POST CONFLICT) என்ற தளத்திற்கு தம்மை இந்த வட மாகாண சபை தேர்தல் மூலம் நகர்த்தி விட்டதாகவும் ஆனால் இதை ஏற்காத இலங்கை தேசியவாதிகளை கூட விஞ்சி இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கட்கு ஓர் ஜனநாயக ரீதியில் தீர்வை பெற்று கொடுத்து விட்டதாகவும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இலங்கை அரசாங்கத்தால் காட்டி விட முடியும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதானது ஜனநாயன விழுமியங்னை தமிழர் மதிக்கவில்லை என்பதை நிகழளவில் விடுத்து வெற்றியின் தறுவாயில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அதிகார நாற்காலியை விட தயாரில்லை என்பதையும் அதை எதிர்க்கின்ற தமிழ்க் கட்சிகள் கூட அதே தறுவாயில் இருப்பின் இதை முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதையும் யாரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு வரலாற்றிலிருந்து உதாரணங்களை பதிவிட ஆரம்பித்தால் 60 வருட கால வரலாற்றை மீள்பிரசுரம் செய்வதை விடுத்து எனக்கு மாற்றுபாயமும் இல்லை.

ஆனால் 13ம் திருத்தத்தினுாடான அதிகார பரவலாக்கம் வெறும் கானல் நீர்தான் அதை அதன் உட்பிரிவு அலசல்களுடன் கணித ரீதியாக அமைவுறுத்தியுள்ளேன். அதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சட்ட உறுப்புரைகளையும் அந்த அதிகாரங்கள் பறிக்கப்பட வழிசமைக்கும் சட்ட உறுப்புரைகளையும் நேர்ப்படுத்தி விளைவு பூச்சியம் என அதாவது அதிகார பகிர்வு என்பதே இல்லை என காட்ட முயற்சிக்கின்றேன்.

இது சட்டவாக்கதுறையில் (Legislature) மாகாண சபைகளின் நிலைமையை காட்டுகின்றது.



இது மாகாண சபைகளின் நிறைவேற்றுத்துறை (Executive) நிலைமையை காட்டுகின்றது.


Friday, 17 May 2013

திருமணத் தீர்வுகள்



இன்று நாட்டின் நீதிக்கட்டமைப்பு முறைமையில் முதனிலை குடியியில் நியாயாதிக்கத்தை கொண்ட மாவட்ட நீதிமன்றங்கள் திருமண பிணக்குகளால் நிரம்பி வழிகின்றமை கண்கூடு. “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” எனும் வாக்கியம் இன்றளவும் பொருள்நோக்கப் பதிந்தாக எல்லா மதங்களினதும் வழிகாட்டிக் கோட்பாடுகளில் உள்ள விடயம். 17ம் நுாற்றாண்டு வரை பிரித்தானிய நீதிமன்றங்கட்கு கூட திருமண பந்தத்தை பிரிப்பதற்கான ( விவாகரத்து ஆணை வழங்குவதற்கான ) அதிகாரம் காணப்படவில்லை. அதன் பிறகு நவீன நாகரீக வளர்சியாலும் வியப்புறும் தொழினுட்ப தோற்றத்தாலும், தனிமனித சுகந்திரம் எனும் பரந்து பட்ட எண்ணக்கரு நலன்புரி அரசுகளிடையே ஏற்படுத்திய தாக்கத்தாலும் மிக வரையறுக்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டும் விவாகரத்து வழங்குவதற்கான அனுமதி Matrimonial Causes Act of 1807 இன் மூலம் வழங்கப்பட்டது. இதன் முக்கிய காரணம் அன்று சட்டமும் சமயமும் ஒன்றாகவே சமூகளவில் நோக்கப்பட்டது. அதில் சமயம் எனும் காரணி சற்று மேலான ஸ்தானத்தை வகித்து வந்தது. குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தின் செல்வாக்கும் சமயத்தலைவர்களின் அதிகாரமும் பிரித்தானிய சட்டங்களை கட்டுக்குள் கொணர்ந்து திருமண உறவை புனிதத்திற்கு உரிய ஒன்றாக மாற்றி உயர்வு படுத்தியிருந்தது. இங்கிலாந்தின் காலணித்துவ நாடான இலங்கையின் நடைமுறை சட்டங்கள் கூட திருமண ஆளுகை விடயத்தில் அன்றைய திருச்சபை உலகின் கோட்பாடுகளை உள்ளடக்கி காணப்படுகின்றது. ஆனால் சமகால உலகம் இந்த நிலையை என்றோ கடந்து விட்டது. ஏனெனில் 5000 வருடங்கட்கு முன்பே கிறிஸ்தவ சமயத்தை அதிகார சமயமாக உலகில் முதலாவதாக தழுவிக்கொண்ட ஐரோப்பிய தேசமான ஆர்மேனியாவில் இன்று திருமண பந்தம் ஆனது ஒரு பகுதியின் சுயவிருப்பின் பேரில் சட்டரீதியான மணமுறிவிற்கு அனுமதிப்பதானது தனிமனித சுகந்திரத்தின் உச்சக்கட்ட வெளிப்பாட்டின் நியதி என்ற நியாயப்படுத்தல்களுக்குள் இன்று அடங்கிவிடுகின்றது.

இலங்கையின் சட்டத்தளத்தினுள் திருமணம் (Marriage) அல்லது திருமண விடுப்பு (Matrimonial Relief) எனும் பதங்கள் நடைமுறை பிரயோக அடிப்படையில் (Procedural Issues) பொதுமக்களிடையே பிரபல்யப்பட, சட்ட புலமையாளர்களிடையே தத்துவார்த்த ரீதியில் (Substantial Aspects) திருமண விடயங்கள் தொடர்பான இலங்கைச் சட்டங்கள் அல்லது சட்டக்கொள்கைகள் புலமைத்துவரீதியில் சர்ச்சைப்படவும் பிரபல்யமடையவும் தொடங்கியுள்ளன.

திருமணம் என்பது திருமண ஒப்பந்தத்திற்கு தகுதி எனக்காணும் ஓர் ஆணும் ஓர் பெண்ணும் சமூக கோட்பாட்டின் உறுதி மொழி ஒன்றினடிப்படையில் இணைந்து சமூகத்தின் ஓர் அலகான குடும்பத்தை சட்டரீதியில் உருவாக்குவது எனலாம். ஆனாலும் இங்கே என்னால் கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமானது விரைவில் இலங்கையிலும் மிக விரைவில் தவறு என சுட்டப்படுமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஓரினத்தவர்களின் திருமண தளப்பரப்பு, அதற்காக நெகிழ்கின்ற சட்டத் தத்துவார்த்தங்கள் மற்றும் அண்மையில் பிரித்தானியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் என்பன இவ்வாதத்திற்கு வலு சேர்ப்பனாக உள்ளது.

திருமண விடயங்கள் என்று நோக்கும் போது திருமணத்திற்காக தகைமை, திருமண ஆதனங்கள், திருமண விளைபேறான குழந்தைகள், திருமண குலைவு அத்தோடு திருமண நிலையிலான பராமரிப்பு என்பன சட்டத்தளத்தில் முக்கியத்துவம் பெறுபவை. இதில் திருமணக்குலைவு அல்லது திருமண தீர்வுகள் எனும் விடயம் பற்றியே .இலங்கை சட்டத்தளத்தில் நாம் பயணிக்கவுள்ளோம். இலங்கையில் திருமணங்கள் நியதிச்சட்டப்படியோ அல்லது கலாச்சார முறைமையின் கீழோ சட்டப்படி வலிதுடையதாகும். இலங்கையின் சுதேச சட்டங்களாக கண்டியச்சட்டம் திருமண அந்தஸ்தை கண்டிய திருமண மற்றும் விவாகரத்து சட்டம் இல 44 இன் 1952 மூலமும் முஸ்லீம் சட்டம் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் இல 13 இன் 1951 மூலமும் பெற்றுக்கொள்கின்றது. தேசவழமைச்சட்டத்தால் ஆளப்படுவோரும், சுதேச சட்டங்களால் ஆளப்படாத மற்றைய இலங்கையரும் திருமண பதிவு கட்டளை சட்டம் இல 19 இன் 1907 படியும் திருமண விடயங்களில் ஆளப்படுகின்றனர். இப்போது நாம் இச்சட்டப்படியே மேற்கொண்டு திருமண தீர்வுகள் எனும் பகுதிக்குள் செல்வோம்.

திருமணம் எனும் பந்தத்தினுள் உட்புகும் அனைவருமே வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், துணையாகவும் இருப்போம் எனும் உறுதிமொழியுடனேயே தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர். ஆனால் பல்வேறு சமூக, பொருளாதார காரணிகளின் தாக்கத்தால் தமது உறுதிமொழியை புறந்தள்ளவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேற்குறித்த கட்டளைச்சட்டம் விவாகரத்திற்கு மூன்று வழிகளை ( திருமணக் குற்றங்களை ) அறிமுகம் செய்கின்றது. இவற்றுள் ஏதேனும் ஒன்றின் வழியாகவே அதாவது குறிப்பிட்ட திருமண குற்றத்தை நிரூபிப்பதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பு தனக்கான நிவாரணமாக விவாகரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஓர் திருமணக்குற்றம் (Matrimonial fault )ஒரு தரப்பிடம் இருந்தால் மட்டுமே மற்றைய தரப்பு நிவாரணம் பெற முடியுமென்பதாகும். இது திருமண பதிவுக் கட்டளைச்சட்டம் பிரிவு 19 இன் ஊடாக பின்வருமாறு வகையிடப்படுகின்றது.

முதற்குற்றம் சோரம் போதலாகும் (Adultery) இது எம்மவர் சமூகத்திடையே கணக்கிலெடுக்கக்கூடிய அளவில் வேரூன்றிவிட்ட ஒன்று. அதாவது திருமணம் ஆன ஆணோ, பெண்ணோ திருமண ஒப்பந்தத்திற்கு புறம்பாக வெளிநபர் ஒருவருடன் பாலியல் ரீதியான உடற்தொடர்பை கொண்டிருப்பதாகும். இது இருமணதாரத்திலிருந்து (Bigamy) வேறுபட்டது. இருதாரமணம் இலங்கை தண்டனைச்சட்டக் கோவையின் பிரிவு 362 (அ)  இன் மூலம் 7 வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமாகும். ஆனால் சோரம் போதல் ஆனது திருமணக்குற்றம் மட்டுமே. அதாவது விவாகரத்திற்கு ஆன ஓர் வழியே அன்றி தண்டிக்கப்பட கூடிய குற்றமல்ல. இச்செயற்பாடு திருமணத்திற்கு முன்னரோ அல்லது ஓர் தடவை நடந்த உடற்றொடர்பு என்ற ரீதியிலோ திருமணக்குற்றமாக கருதப்பட மாட்டாது. மாறாக திருமணத்தின் பின் தொடர்ச்சியாக வேறோருவருடன் உடல் சார்ந்த உறவை பேணி வருவதே இக்குற்றமாகும். ஆனால் தாய் அத்தகைய உறவை பேணுகின்ற போதிலும் தந்தைமை நிரூபிக்கப்பட்ட பிள்ளையின் பராமரிப்பு கடமைப்பாட்டில் இருந்து தந்தை தப்பிக்க முடியாது. ஆனால் நடைமுறைச் சிக்கல் என்னவெனில் சோரம் போதலை நிரூபிப்பது நிகழ்தகவளவில் கடினமானதொன்று. உடல் உறவு (Sexual Intercourse) இன்று நிகழ்தகவளவில் (Balance of Probabilities) நிரூபிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது குற்றம் சாட்டும் தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் இத்தவறை செய்தார் என எண்பிக்கும் (Burden of Proof) பொறுப்பை சட்டத்தின் பால் ஏற்க கடமைப்பட்டவர். அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விவாகரத்து விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவது யதார்த்த சாதாரணமாகும்.

இரண்டாவது குற்றமாக வன்ம உறவறுப்பை (Malicious Desertion) காட்டலாம். இது இன்று வரை நீதித்துறையின் தொடர் பொருள்கோடற் பணிக்கு வாய்ப்பளித்து வரும் ஓர் கோட்பாடாகும். அதாவது குறிப்பிட்ட ஓர் வாழ்க்கை துணை மற்றைய துணையுடன் வாழ்வது பொறுத்துக்கொள்ள முடியாத (Intolerable) துன்பத்தையும் வாழ்விற்கே ஆபத்தானதாகவும் (endanger to Life) ஆகவும் அமையும் எனில் அதை நாம் வன்ம உறவறுத்தலுக்கு உதாரணமாக காட்டலாம். எவ்வாறெனிலும்
அத்துன்பத்தை விளைவிக்கும் நபர் திருமண பந்தத்ததை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் (Intention) அதனை செய்திருக்க வேண்டும். இன்று பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் இப்பகுதியினுள்ளேயே தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் அனைத்து திருமண குற்றங்களும் திருமணத்தை முடிவுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்படின் அது இலகுவாக வன்ம உறவறுப்பு என்ற விடயத்தினுள் அடங்கிவிடும். ஏனெனில் சோரம் போதல் எனும் ஓர் திருமணக்குற்றத்தை புரியும் ஓர் ஆண் தனது மனைவியுடனான திருமண பந்தத்தை முடிவுறுத்த விரும்புவதாக காட்ட முடியும்.  இவ்வன்ம உறவறுப்பு இரண்டு பகுதிகளாக காட்சிப்படுத்த பட முடியும். முதலாவதாக சாதாரண உறவறுப்பு ( Simple Malicious desertion) இதில் துன்பத்தை விளைவிக்கும் துணை மற்றைய துணையை திருமண இல்லத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையாகும். துன்பம் தாங்காது அப்பாவி துணை வீட்டை விட்டு வெளியேறுவதையே இது காட்டுகின்றது.
அடுத்த வகை ஊகித்தறியக்கூடிய வன்ம உறவறுப்பாகும் (Constructive malicious desertion) என்பதாகும். இதில் பாதிக்கப்பட்ட தரப்பு திருமண இல்லத்தில் தங்கியிருக்க குற்றமுள்ள தரப்பு பந்தத்தை முறிக்கும் எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி செல்லலை குறிக்கும்.
திரும்பவும் ஞாபகப்படுத்தக் கூடிய விடயம் யாதெனில் வெறும் உடல் ரீதியான பிரிவு மட்டும் ஒரு போதும் வன்ம உறவறுப்பாக சட்டத்தின் முன் காட்டப்படமாட்டாது. தொழில் அல்லது பொருளாதார காரணிகளின் தாக்கத்தால் இன்று தம்பதியினர் பிரிந்து வாழ்வது தவிர்க்க இயலாதது. எனவே குற்றமுள்ள துணையின் திருமண பந்தத்தை முடிவுறுத்தும் எண்ணம் உறுதியாக நீதிமன்றின் முன்பு எண்பிக்கப்படும் வரை விவாகரத்து பெறுவது சாத்தியமானதன்று.

மூன்றாவதாக நாம் சுட்டுவது, தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடிய தகைமை இழப்பாகும். இதை ஆங்கிலத்தில் Impotency என வரையறுப்பர். இது ஆண்களின் தந்தைமையையோ அல்லது பெண்களின் மகப்பேற்று தகைமையையோ குறிப்பதில்லை. மாறாக ஓர் ஆண் பெண்ணுடன் பாலுறவொன்றை ஏற்படுத்தக்கூடிய விடயம் என நம்பப்பட்டாலும் இன்றைய சட்ட கருதுகோள் பெண்களும் பாலியல் ரீதியில் உறவை பேணமுடியாதவாறு உடல், உள பிணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மருத்துவ வளர்ச்சியின் உதவியோடு நிரூபித்துள்ளது. எனவே இன்று இருபாலாரும் இந்த தகுதியீனத்திற்கு ஆளாகின்றார்கள். இதற்கு ஓர் முன்நிபந்தனையாக நிரூபிக்க வேண்டியது இந்த குறிப்பிட்ட தகுதியீனம் திருமணத்திற்கு முன்னிருந்தே குறிப்பிட்ட துணையை பாதித்திருக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பாதிப்புக்களால் உதாரணமாக திருமணத்தின் பின்னர் ஏற்படும் விபத்து மற்றும் மன உளைச்சல் என்பவற்றால் ஏற்பட்ட தகுதியீனத்தை காட்டி விவாகரத்து பெற முடியாது.

 ஆச்சரியமான விடயமாக பொது மக்களிடையே உள்ள கருத்து யாதெனில் விவாகரத்தை பொறுத்த மட்டில் திருமணம் ஆகி ஒரு வருட காலம் சென்ற பின்பே விவாகரத்திற்கு நீதிமன்றில் விண்ணப்பிக்க முடியும் என்பதாகும். ஆனால் இது முற்றிலும் தவறான ஓர் தகவலாகும். ஏனெனில் அவ்வாறானதொரு சட்டத்தேவைப்பாடு எந்த ஒரு நியதிச்சட்டத்திலோ, நீதிமன்ற நடைமுறை கோவைகளிலோ இன்று வரை வெளியிட்டிருக்கப்படவில்லை.

அத்தோடு மேற்கூறிய மூன்று காரணிகளுமே திருமணக்குற்றம் என்ற அடிப்படையில் விவாகரத்தை வழங்கும். ஆனால் இருதரப்பிலும் திருமணக்குற்றம் இல்லாவிடின் விவாகரத்து இலங்கையில் இன்றைய சட்டப்பரப்பில் சாத்தியமில்லை. ஆனால் சமகால உலகம் இன்று மீளமைக்க முடியாத அளவு உடைவு பெற்ற (Irretrievable Break down marriages) திருமணபந்தத்தை திருமணக்குற்றம் என்ற எண்ணக்கருவை தாண்டி சட்ட ரீதியாக முறிவு பெற அனுமதிக்கின்றது. இதன் நியாயப்பாடு என்னவெனில் திருமணக்குற்றங்கள் எதுவும் இல்லாத போதிலும் தம்பதியினர் இருவரினதும் திருமண நம்பிக்கை அல்லது பந்தம் முற்றாக மீளமைக்கமுடியாதவாறு உடைவு பெற்றிருப்பின் அதன் பின்பும் அத்திருமணத்தை சட்டப்படி செல்லுபடியற்ற தாக்குவதில் நீதித்துறை காணும் நேரெதிர்த்தன்மை என்ன ? வெறுமையாக கட்டுக்களை அவிழ்த்து தனி மனித சுகந்திரத்திற்கு ஏன் நலன்புரி அரசு என்ற ரீதியில் வலுச்சேர்க்க கூடாது ? ஆனாலும் இறுக்கமான சமூக கலாச்சாரத்தை திருமணத்தில் கொண்டுள்ள இலங்கையரால் இன்று வரை திருமணக்குற்றம் எனும் எண்ணக்கருவை தாண்டி விவாகரத்திற்கு காரணமியற்ற இயலவில்லை. அதோடு இருபக்க சம்மதம் ( Mutual Consent) மூலம் விவாகரத்து கோர முடியாது என்பதும் குறிப்பிடக்கூடியது.

திருமண தீர்வுகள் எனும் விடயத்தில் விவாகரத்து எனும் கருவினை தாண்டி “நீதிமுறைப்பிரிவு” (Judicial Separation) என்பது இலங்கை சட்டப்படி திருமண தம்பதிகள் விவாகரத்திற்கு தோதான அல்லது அதற்கு மேலதிகமான திருமண உறவில் சகிக்க முடியாத காரணிகளை மன்றின் முன் நிரூபித்து மாவட்ட நீதிமன்றில் சட்டமுறைப்பிரிவை பெறலாம். இதனால் மன்றின் உத்தரவின் பேரில் தம்பதிகள் வேறு வேறு சட்டநபர்காளக இனங்காணப்படுவார்கள். இலங்கையை பொறுத்த மட்டில் திருமண வல்லுறவு என்பது சட்டப்படி குற்றமற்றது. ஆனால் நீதிமுறைப் பிரிவில் இருக்கம் போது கணவன் மனைவியின் சம்மதம் இன்றி உடலுறவை மேற்கொ்ண்டிருப்பின் அது பாலியல் வல்லுறவு குற்றமாக இலங்கை தண்டனை சட்டக்கோவையின் கீழ் கருதப்படும். ஆனால் திருமணம் சட்டப்படி வெறிதாகமாட்டாது. பிரிவினை காலத்தில் தம்பதிகள் சேர்ந்தால் ஆணை ரத்தாக்கபடும். அல்லாவிடின் பின்னர் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

இலங்கை குடியியல் நடைமுறை சட்டக்கோவை (1889) திருத்தப்பட்டது இல 20 இன் 1977 (Civil procedure code in 1889 as amended of 20 in 1977). இதன் பிரிவு 602 (2) (அ) நீதிமன்று மூலம் இரு வருடங்கட்கான பிரிவாணையை பெறலாம் என்பதோடு ஏழு (7) வருடங்கள் தம்பதியினர் ஊனிலும் உறக்கத்திலும் (Bed and Board) அதாவது உடல் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ தாம் தம்பதிகள் என்ற நிலைப்பாட்டை வெளிக்காட்டாவிடின் இச்சட்டத்தின் பிரிவு 602 (2) (ஆ) மூலம் விவாகரத்து கோரமுடியும்.

இந்த சட்டநிலைமை நீதியரசர் தம்பையா அவர்களால் மிகச்சரியாக முத்துராணி எதிர் துரைசிங்கம் எனும் வழக்கில் திருமணக்குற்றம் எதுவுமின்றி இப்பிரிவு என்பது விவாகரத்து பெற ஓர் காரணி என தீர்ப்பளித்தார். ஆனால் பின்பு உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா, இச்சட்ட பிரிவுகளை முழுமையாக பொருள்கோடல் செய்து
தென்னக்கோண் எதிர் தென்னக்கோண் எனும் வழக்கில் இலங்கையில் எந்த நியதிச்சட்ட பிரிவுகளால் விவாகரத்து அனுமதிக்கப் படினும் அதற்கு திருமணக்குற்றம் இன்றியமையாதது என தீர்த்தார். இதுவே இன்றைய பிணிக்கும் முற்றீர்ப்பாக கருதப்படுவதால் இலங்கையின் சட்டக்கோட்பாடும் விவாகரத்தில் திருமணக்குற்றம் எனும் நிரூபித்தலுக்கு உட்பட்டதே.


இறுதியாக இலங்கையில் திருமண தீர்வுகளாக விவாகரத்து மற்றும் நீதிமுறைப்பிரிவு என்பன காணப்படுகின்றன. இதில் எந்த நிவாரணத்திற்கும், நிவாரணம் பெற விரும்பும் பகுதி மற்றைய தரப்பின் திருமணக்குற்றத்தை நீதிமன்றின் முன் நிரூபிப்பது கட்டாயமானதாகும். இதில் நான் குறிப்பிட்ட மீளிணைக்கமுடியாத உடைவுக்கோட்பாடு மிகவிரைவில் இலங்கை சட்டத்தளத்தில் அறிமுகமாகும் போல எண்ணத்தோன்றுகின்றது. இதற்கு இன்று மாவட்ட நீதிமன்றங்களின் திருமண தீர்வு வழக்குகளின் பழுச்சுமையே ஆதாரமாகும்.


 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது