Social Icons

Pages

Tuesday 30 April 2013

முற்பிணை---Anticipatory Bail


முற்பிணை என்பது தழிழக சினிமாக்கள் ஊடாக முன்ஜாமீன் எனும் பெயரில் எமக்கு நன்கு அறிமுகமான ஓர் எண்ணக்கரு. ஆனால் அதன் சட்டவலிதார்ந்த தன்மை பற்றி இலங்கை சட்ட நியாயாதிக்கத்தினுள் ஆராய்ந்தறிவது மிக அவசியமானதும் பொருத்தமானதுமாகும்.

நாம் ஓர் குற்றச்செயலில் ஈடுபட்டு பொலிசாரால் கைது செய்யப்படுவோம் எனும் ஓர் நிலையிலேயே முற்பிணை பற்றி யோசிக்க துவங்குவோம். சாதாரண பிணை என்பது கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான ஓர் செயன்முறை. ஆனால் முற்பிணை வேறுபட்டதாக, குற்றம் இழைத்தவர் அல்லது குற்றம் இழைத்ததாக கருதப்படுபவர் கைது செய்யப்படாமலே ( சிறைவாசம் அனுபவிக்காமலே) நீதிமன்றின் சில பொருத்தனை நிறைவேற்றங்களுடன் சமூக வாழ்வை தொடர்வதாகும்.

இதன் நியாயப்பாடு 41வது இந்திய சட்ட சீர்திருத்த ஆணைக்குழுவால் ( 41st sitting if Indian Law Commission) ஒன்று கூடலின் போது பின்வருமாறு முன்வைக்கப்பட்டது. “ஒருவனை பிணை என்ற பொறிமுறை மூலம் சிறையில் இருந்து தண்டனை அனுமதிக்கப்பட்ட காலம் நிறைவுறும் முன்னே வெளியேற அனுமதிக்கின்ற சட்டம், அவனை ஏன் சிறையில் தள்ள முன்பு முற்பிணை என்ற பொறிமுறை மூலம் வெளியே அனுப்ப கூடாது ? மாறாக ஓர் கணநேர இடைவெளிக்குள் ஒருவனை சிறைக்குள் அமர்த்துவதன் மூலம் குற்றவியற் சட்டம் என்ன சாதிக்க முயல்கின்றது ?”

நானறிந்த வகையில் முற்பிணை என்ற எண்ணக்கரு முதலில் நடைமுறையில் வெற்றிகரமான வகையில் முதலாவதாக சட்டமாக்கப்பட்டது பாரத தேசத்தில் தான்.

இந்திய குற்றவியல் நடைமுறைக்கோவையின் பிரிவு 438 முற்பிணை பற்றிய அமுலாக்கங்களை குறிக்க COPY CAT ஆன நாங்கள் எமது பிணைச்சட்ட இல 30 இன் 1997 சட்டசரத்து 21 ஊடாக முற்பிணை என்ற எண்ணக்கருவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினோம்.


இலங்கையை பொறுத்தளவில் முற்பிணைக்கான நீதிமன்ற பொருள்கோடலிற்கு பெயர் பெற்ற வழக்காக RUWAN GUNASEKARA AND ANOTHER V RAVI KARUNAYAKE என்ற மேன்முறையீட்டு நீதிமன்றினால் 13-தை-2005 இல் தீர்க்கப்பட்ட வழக்கு விளங்குகின்றது.

இவ்வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருநாயக்க ஓர் பொது பேரணியில் Public Property Act No 17 of 1982  எனும் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக இனங்காணக்கூடிய தவறான, பொது சொத்துடமைக்கு அழிவை ஏற்படுத்தினார் எனும் குற்றத்திற்கு தான் குற்றஞ்சாட்டப்படக் கூடிய தகைமையை உணர்ந்ததால் கொழும்பு  கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்பிணைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். பின்பு மேன்முறையீடுகள் பலவற்றின் பின் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை நாம் அலசுவது பொருத்தமானது. ஏனெனில் முற்பிணைக்கான சட்டத்தத்துவார்த்தங்களை அலசுவது  இத்தீர்ப்பே.

நான் முன்னைய பதிவில் குறிப்பிட்டதை போன்று பிரிவு 8(1) இன் பொது சொத்து பாதுகாப்பு சட்டம் ஆனது தனக்கென விஷேட பிணை ஏற்பாடு ஒன்றை கொண்டுள்ளது. ஆனால் மேன்முறையீட்டு தலைமை நீதியரசர் ஹீ கந்தராஜா பிரிவு 8(1) ஐ பற்றி விளக்குகையில் அது பிணை என்ற அம்சத்தை உள்வாங்குகின்றதே தவிர ஒருவரை பிணையில் வெளிவிடுவதற்கான நடைமுறை அம்சங்களை (Practical Prospective) வெளிக்காட்டவில்லை. எனவே 1997 ஆம் ஆண்டின் பிணைச்சட்டமே இங்கு செயற்படும். அச்சட்டத்தின் படி முற்பிணை இவ்வழக்கில் ரவி கருநாயக்கவிற்கு அனுமதிக்கப்பட்டது. இவ்வழக்கில் பாராளுமன்ற எண்ணக்கருவிற்கு விளைவு கொடுக்கும் வகையில் மன்று தனது பொருள்கோடலிற்கே வெளிப்பாட்டு முக்கியத்துவம் கொடுத்தது என்பது வெளிப்படையானது. எனவே இலங்கை நீதித்துறையின் அண்மைய போக்கு தனிமனித சுகந்திரத்தை பாதுகாப்பதில் உச்ச விருப்பு நிலையை காட்டுகின்றது எனலாம். அதோடு Thilanga Sumathipala V Attorney General என்ற வழக்கிலும் உயர் நீதிமன்றம், எமது அரசியலமைப்பின் 13 உறுப்புரையை மேற்கோள் காட்டி பிணையை அனுமதித்தமை குறிப்பிட்டு காட்டக்கூடியதாகும்.

மிக சமீபமாக 2010  இல் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றினால் WICKREMA SINGHE V ATTERNOY GENERAL, தனி மனித சுகந்திரம் (Individual Liberty) என்ற எண்ணக்கருவிற்கு உச்சபாதுகாப்பு வழங்கியமை அண்மைய உதாரணங்களாகும்.
ஆனாலும் முற்பிணை விண்ணப்பம் ஒன்றை விண்ணப்பிக்க போதுமாக தாம் கைது செய்யப்பட கூடியதான நியாயமான காரணத்தை மன்றின் முன் எண்பிக்க வேண்டியதானது விண்ணப்பதாரியின் மேலுள்ள கடப்பாடாகும். அதோடு ஒரு பயம் அல்லது தாம் கைது செய்யப்படுவோம் என்ற சந்தேகம் மட்டுமே முற்பிணை ஒன்றை பெற போதுமான தகுதியாகிவிடாது என்பதை கவனிக்க வேண்டும். அத்தோடு இந்த முற்பிணை Remand persons Act no 8 of 1991 ஐ விஞ்சி நடைமுறையில் எதிரியை பிணையில் அனுமதிக்காது.
அதோடு ஓர் குறிப்பிட்ட குற்றத்திற்கான முற்பிணை அக்குற்றத்திற்காக நீங்கள் கைது செய்யப்படுவதில் இருந்து மட்டுமே உங்களை பாதுகாக்குமே தவிர பொதுவில் அனைத்து குற்றங்கட்கும் பாதுகாப்பு அளிக்காது. காண்க Gurthish Singh V State of Punjab

இங்கு குறிப்பிடக்கூடியது முற்பிணை என்பது ஓர் உரிமையா ? அல்லது ஓர் சலுகையா ? முன்னாள் மேன்முறையீட்டு நீதியரசர் ஜெயரெட்ண ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த ஆக்கத்தில் முற்பிணை ஓர் சலுகையே தவிர அது குடிகளின்  உரிமை அல்ல என வாதாடுகின்றார். அவரது நிலைப்பாட்டின் படி நீதிமன்றின் தற்துணிபே நீதியியலின் விளைவாக முற்பிணை விண்ணப்பங்களில் தென்படுகின்றது. எனது முன்னைய பதிவில் குறிப்பிட்ட பிணையில் வெளியிலுள்ளவரின் கடப்பாடுகள் இங்கு பொருந்தும்.

நடைமுறை அவதானிப்பின் முற்பிணை விண்ணப்பம் ஒன்றை விண்ணப்பிக்கையில்
01.Motion--பிரேரணை
02.Petittion--பிராது
03.Affidafit—சத்தியக்கடதாசி
 அதோடு விண்ணப்பதாரியின் கல்வி,தொழில், சுகாதார நிலமை என்பவற்றையும் குறிப்பிடல் பொருத்தமானதாகும்.

Jaharki and Mukti Morch Bribery என்ற வழக்கில் நீதியரசர் மகஜன் பின்வரும் காரணங்களை முன்னிறுத்தியே முற்பிணையை இந்திய பிரதமருக்கு அனுமதித்தார் என்பது குறிப்பிடக்கூடியது.
01.வி்ண்ணப்பதாரி உடல் குன்றி காணப்பட்டார்.
02.விண்ணப்பதாரியின் குடும்பம் இந்தியாவில் தான் உள்ளது.
03.விண்ணப்பதாரியின் வசிப்பிடம் மன்றின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.

விண்ணப்பதாரி மன்றுக்கு தாக்கல் செய்யும் போது அதன் பிரதியொன்றை பொறுப்பான பொலிஸ் நிலைய ( தாம் எந்த பொலிஸ் நிலைய பொலிசாரால் கைது செய்யப்படுவோம் என நம்புகிறாரோ ) அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இன்று பொலிஸ் அதிகாரிகள் இப்பிரதியை உதாசீனப்படுத்தி விட்டு தங்களுக்கு பிரதி கிடைக்கவில்லை என கூறிக்கொண்டு கைது நடவடிக்கைகளை தொடர்கின்றார்கள். இது இன்று சட்டத்தின் நடைமுறை வெற்றிடமாக ( Procedural Lacuna) ஆக காணப்படுகின்றது.

அதோடு இன்று குற்றவாளிகள் என கருதப்படுவோரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (Criminal Investigation Department), தீவிரவாத புலனாய்வு திணைக்களம் (Terrorist Investigation Department), சிறப்பு பொலிஸ் படைகள் (Special Police Units) என்பவற்றின் அதிகாரிகள் கைது செய்கின்றனர். ஆனால் பிணைச்சட்டத்தின் பிரிவு 21 பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளோடு மட்டுமே மட்டுப்படுகின்றது.

இறுதியாக இந்த முற்பிணை என்ற கருத்துப்பாடு இந்தியாவில் அரசியற் பழிவாங்கல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள கொணர்ந்த ஓர் முறைமை கீழ்வரும் இந்திய வழக்குகள் மூலம் உங்களுக்கு மேலும் விளங்க உதவியாக இருக்கும்.

01.Balchand V State Of Mathiya Pradesh
02.Poker Ram V State of Rajastan

இன்று இலங்கையின் அரசியற்பழிவாங்கட்கட்கு அப்பாற் பட்டு தனி மனித சுகந்திரம் எனும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்கான நீதித்துறையின் தற்றுணிபினால் பயன்படுத்தப்படும் கருவியாக முற்பிணை உள்ளது என்பது எனது பார்வைக் கோடாகும்.


பிணைச்சட்டத்தை தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது