Social Icons

Pages

Thursday 28 November 2013

பெண்கட்கு எதிரான வன்முறை: ஓர் சட்டநோக்கு

இன்று இலங்கையில் மட்டுமின்றி அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பொருளாதார காரணிகளை பெருமளவு சார்ந்தது எனில் அபிவிருத்தியடைந்த நாடுகளை பொறுத்த வரையில் அது ஆணாதிக்க வாத சிந்தனையின் அடித்தளத்தை சார்ந்தது எனலாம்.  இலகுவாக பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் அவள் பெண் எனும் ஒரு காரணத்திற்காக அவள் மீது காட்டப்படும் வன்முறை என இலகுவாக கூறலாம். பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்குவது பற்றிய சமவாயம்  1979 (CEDAW) பின்வருமாறு பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை விளக்குகின்றது. இதை இலங்கை ஏற்று அங்கீகரித்துள்ளமை கருத்திற்குரியது.

“பெண்களுக்கெதிரான வன்முறை என்பது அரசியல், பொருளாதார, சமூக,கலாச்சார, குடியியல், அல்லது வேறு ஏதேனும் துறையில் ஆணுக்குப் பெண் சமம் என்ற அடிப்படையில், பெண்கள் அவர்களது விவாக அந்தஸ்து எப்படியிருப்பினும், மனித   உரிமைகளையும் அடிப்படைச்சுகந்திரங்களையும் ஏற்றங்கீகரிப்பதை, துய்ப்பதை அல்லது வலுக்கெடும் பயன் அல்லது நோக்கம் கொண்டதும், பால் ரீதியான ஏதெனும் வேறுபாடு, விலக்கி வைத்தல் அல்லது மட்டுப்பாடு எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.”



ஆனாலும் இலங்கை ஓர் கீழைத்தேய இறுக்கமான கலாச்சார பின்ணணியை கொண்ட நாடு. கீழைத்தேயத்தின் இந்த பிண்ணணியை திறந்த மனப்பான்மையுடன் ஆராயும் போது இன,மத பேதமின்றி பெண்களை இரண்டாந்தரத்தவர்களாக பார்க்கும் தகைமையை இது கொண்டது. அதிலும் தமிழரை பொறுத்தளவில் அதன் தாக்கவளவு சற்று அதிகமே. ஒரு இனம் தனக்கொரு தனித்தொரு ஆளுமையை வெளிக்காட்டக்கூடிய தளம், அதற்குரிய தனிப்பட்ட சட்டங்களே, அவ்வகையில் மலபார்கள்( வட மாகாண தமிழர்கள் ) இன்று வரை தந்தை வழிச் சட்டமாகிய தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டிருக்கின்றார்கள். இச்சட்டம் காரணங்கள் பல சொல்லற்கரியதற்கப்பால், முகத்தளவிலேயே பெண்களை இரண்டாம் நிலைப்படுத்தி வைத்திருப்பதை காணலாம். ஆனால் இதற்கு மாறான வகையில் பெண்களை முதன்மைப்படுத்தி தாய்வழி சமூகத்தை ஊக்கப்படுத்திய முக்குவச் சட்டம் ( கிழக்கு மாகாண தமிழருக்கானது) இன்று வழக்கொழிந்து செல்லாததாகி விட்டது. இச்சிறு உதாரணம் மூலம் எமது வரலாற்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு கீழைத்தேய சமூகம் அதன் கலாச்சாரத்தினுாடாக காட்டும் வன்முறை அல்லது பாரபட்சம் தெளிவாகின்றது.

உலகம் முழுவதும் அனர்த்தங்கள் இடம் பெறினும் அது இயற்கையானதாகவோ அல்லது மனதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருப்பினும் முதலில் அதன் பாதிப்பை முகத்தளவில் ஏற்பது பெண்களே, இவ்வேற்புக்கான காரணி பெண்கள் ஆண்களை விடவும் உடலியல் பலம் குறைந்தவர்கள் எனும் காரணியை விடவும் பல காரணிகளில் தங்கியுள்ளது. அவை கலாச்சாரம், அரசியல், சமூக குழுமங்களின் வாழ்க்கை முறைமை, பொருளியல் பின்னடைவு, பெண்களின் சொத்தாளுகை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விடயங்கள் அவற்றோடு இறுதியாக உடலியற் வேறுபாட்டு காரணங்களையும் காட்ட முடியும்.
ஆனாலும் பெண்களின் நிலையை மேம்படுத்த சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல சட்டவேற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பெண்கட்கெதிரான பாகுபாடு என்பது மனித உரிமை மீறல் என்ற கண்ணோட்டத்திலேயே முதலில் பார்க்கப்பட வேண்டியது எனலாம். அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights)  உறுப்புரை 2 இனுாடாக அனைத்து வித பாரபட்சங்களையும் நிராகரிக்கின்றது. அத்தோடு இவ்வுரிமையானது இலங்கையின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பின் உறுப்புரை 12 இனுாடாகவும் பின்வருமாறு உறுதிப்படுத்தப்பட்டது.

“சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள், அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள். இதன் தொடர்ச்சியானது பால் உட்பட வேறெந்த காரணியும் பாரபட்ச காரணியாக அமையக்கூடாது என வலியுறுத்துகின்றது.”

இவ்வுறுப்புரை மீறப்படின் இலங்கையின் அதியுயர் நீதிமன்றமாகிய உயர் நீதிமன்று மூலம் நிவாரணத்தை பெற்று கொள்ளலாம்.

மேற்கொண்டு சர்வதேச சட்ட உபகரணங்களை நோக்கின் இலங்கை ஓர் தரப்பாக உள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகட்கான பொருத்தனையும் (International Convention on Civil and Political Rights) பெண்களுக்கான பாரபட்சத்தை மறுக்கின்றது. இருப்பினும் சர்வதேச சட்ட உபகரணங்கள் பல தேசிய அரசுகட்கு ஓர் பொதுவான வழிகாட்டியாக அமையுமே அன்றி பிணிப்பவையாக கருதப்பட முடியாதவை. சில சர்வதேச உடன்படிக்கைகள் கூட பிணிக்கும் தகவுடையவையாக காணப்படினும், மேற்பார்வை அல்லது உடன்படிக்கை விலகலை சீர்செய்யும் அமைப்புக்களின் செய்நிலை நடைமுறையில் திருப்திகரமானதாக இல்லை என்பது இன்றைய நிலைப்பாடு.

இலங்கையின் நிலையை பொறுத்த மட்டில் ஏற்கனவே குறிப்பிட்ட உறுப்புரை 12 ஐ அரசியலமைப்பின் உறுப்பரை 12(4) ஓர் மட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது. இதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் விஷேட சலுகைகளை வழங்கினால் அது ஆண்களுக்கான சமத்தவத்தை மீறுவதாக கருதப்பட கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓர் முகத்தளவு வாசிப்பானது இலங்கையின் நடைமறை அரசியலமைப்பு பெண்களுக்கு ஆண்களை விட உயர்ந்தளவான இடத்தை வழங்கியுள்ளமை தெளிவானது.

சட்டம் என்பது சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள் எனும் வரைவிலக்கணத்தின் போது சட்டத்தை மீறினால் கிடைக்கும் தண்டனைக்கு பயந்தே பெரும்பான்மையான குடிகள் சட்டத்தை மீறுவதில்லை. அவ்வகையில் பெண்கட்கு எதிரான குற்றச்செயல்கள் பல இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் (Penal Code) நிரற்படுத்தப்பட்டுள்ளன. இதன் பகுதி XVI ஆனது மனித உடலுக்கும் மனித உயிருக்கும் எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய குற்றங்கள் பற்றி கூறுகின்றது. இதில் குறிப்பிட்ட குற்றங்கள் பெண்கட்கு உடலியல் ரீதியில் வீட்டிலும் வெளியிடங்களிலும் ஓர் மட்டுப்பட்டளவு பாதுகாப்பை அளிக்கின்றது. குறிப்பாக பிரிவுகள் 363, 1995இல் இன்றைய நிலைகட்கு ஏற்றாற் போல சுமார் ஓர் நுாற்றாண்டிற்கு பின்னர் இலங்கை சட்டவாக்கதுறையால் திருத்தியமைக்கப்பட்டது. முன்னரைப்  போல குற்றவாளிகட்கு நீதிபதிகளின் தயவில் மன்னிப்பளிக்காமல் குறைந்த பட்ச தண்டனையை அமுலாக்கியது. அத்தோடு குழு பலாத்காரம், தடுப்பில் வைத்து பலாத்காரம், சுயநினைவற்ற நிலையில் பலாத்காரம், கர்ப்பிணிப் பெண்கள் மீதான பலாத்காரம் என பல வகைகளில் தண்டனைகளை நீட்சியாக்குகின்றது. குறிப்பாக 1995இன் திருத்தமானது பாலியல் சேட்டைகட்கு பிரிவு 345 இன் படி தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனையை விதிப்பதுடன் பொது போக்குவரத்து மற்றும் வேலைத்தள தொல்லைகளில் இருந்து பெண்களை காப்பதுடன், பிரிவு 346(அ) முறையில்லாப் புணர்ச்சியிலிருந்தும் பெண்களை காக்கின்றது. இக்குற்றங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண் சிறார்களே என்பது மனவருத்தம் அளிக்கக்கூடிய உண்மை.

அடுத்த பெண்களுக்கு எதிரான குற்றம் என பார்க்கையில் பெண் கடத்தல் (Trafficking of Women) என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது. நாட்டினது பூகோள பரப்பின் அப்பாலும் அல்லது நாட்டின் உள்ளேயும் “தொழில் வாய்ப்பு” எனும் மாயக்கண்ணாடியை காட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைப்பெண்கள் இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் தலைநகரில் வர்த்தக ரீதியில் பாலியல் சேவையாற்றுவதற்காக பயன்படுத்தபட்டு வருகிறார்கள். அல்லது வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக நடாத்தப்படும் அவலத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தண்டனைச்சட்ட கோவையின் 2006ஆம் ஆண்டின் திருத்தமானது ஐக்கிய நாடுகளின் அனைத்து வகையான மனித கடத்தல்களின் தடுப்பு விருப்பேட்டில் (UN Protocol on Trafficking and Prohibited all forms of Human Trafficking). மனித கடத்தலுக்கான விரிவான வரைவிலக்கணத்தை உள்நாட்டுச் சட்டம் என்ற வகையில் உள்ளீர்த்திருப்பினும் அதன் அமுலாக்கற் பொறி முறை ஓர் திட்டமிட்ட ஏற்பின் விளைவே கொடுக்கவில்லை. ஏனெனில் சட்ட அமுலாக்க முகவர்கட்கு பெரும்பாலான குற்றங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதில்வை. அவ்வாறு கொணரப்படின் பொருண்மைவாத (Substantial) ரீதியில் இலங்கையின் சட்டத்தளம் நிவாரணங்கள் வழங்குவதில் தாராளமாகவே உள்ளது.  உதாரணமாக பாதிக்கப்பட்ட பெண் நிர்வாக துறையினரால் மேற்கண்டவாறு துன்புறுத்தப்படின் சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சட்டம் இல 22 இன் 1994 (CAT Act) இன் கீழ் குற்றவாளிக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையையும், பாதிக்கப்பட்டவர்க்கு ரூ.50,000 வரையான நட்டஈட்டையும் பெற முடியும்

ஆனாலும் இலங்கைச்சட்டம் இன்று வரை “திருமண வல்லுறவை” (Marital Rape) ஓர் குற்றமாக அங்கீகரிக்கவில்லை. எனவே மனைவியின் சம்மதமின்றி கணவன் அவளை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் இன்று பாதிக்கப்பட்ட பெண் நீதியின் முன் எவ்வித நிவாரணங்களும் பெறும் தகுதியை இழக்கிறாள். ஆனால் இந்தியாவை பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட மனைவி கணவனுக்கெதிராக நிவாரணம் பெற உரித்துடையவள்.
இலங்கையில் குடும்பம் எனும் அலகு மிக முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றது. குடும்ப நிலையை பேணிக்காப்பது இலங்கை அரசின் வழிகாட்டிக் கொள்கைகளில் ஒன்றாகும். அவ்வகையில் கணவனை தண்டனைக்கு உட்படுத்தி மனைவி விடுதலை அடைவது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என அனைவராலும் பொதுவில் ஏற்கப்பட்டது. அது சட்டவாக்கதுறையினரினதும் பார்வையில் பட்டு உருவாக்கப்பட்டதுதான் குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டம் இல 34 இன் 2005. (Prevention of Domestic Violence Act No 34 of 2005)

இச்சட்டம் துன்பத்தை இழைக்கும் நபரிடம் இருந்து துன்பத்துள்ளாகும் நபரை குடும்ப அலகினுள் பாதுகாப்பதற்கான ஓர் விஷேட சட்டமெனலாம். இச்சட்டம் எதிர்வாதியை “குற்றவாளி” என தீர்ப்பளிக்காது. ஆனால் மற்றைய தண்டனைக் கோவையில் குறிப்பிட்டப்பட்டுள்ள சட்டங்கள் யாவும் எதிர்வாதியை குற்றவாளி என நிலைப்படுத்துவதால் குடும்பம் என்ற அலகு விரிசல் அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டம் தீர்ப்பாக துன்பம் இழைக்கும் நபரை துன்பத்துக்குள்ளாகும் நபரிடமிருந்து பிரித்து வைக்கின்றது. இப்பிரிவுக்காலம் துன்பம் இழைத்த குடும்ப உறுப்பினர் தன் தவறை உணர்ந்து திருந்த ஓர் வாய்ப்பாக அமையும் என நம்புகின்றது. மேலும் நீதிமன்று இப்பிரிவுக்காலத்தில் துன்பத்துள்குள்ளான நபர் வசிக்கும் அல்லது தொழிலாற்றும் இடத்தினுள் துன்பமிழைத்த நபர் உட்புகுவதை தடுக்க உத்தரவிட முடியும். இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற பொலிசாரின் உதவி தேவையற்றது. எனவே குடும்ப உறுப்பினரை பொலிசாரிடம் கையளிக்கின்ற கசப்பான அனுபவங்களை குடும்ப உறுப்பினர்களிடையே நிகழ்வதை தடுக்கின்றது. அத்தோடு இச்சட்டத்தின் கீழ் வழக்காடும் நபர்களின் விபரங்களை ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்கு வெளியிடுவதிலும் மட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
 
இதில் துன்பத்திற்கு உள்ளான குடும்ப உறுப்பினர் நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கட்டனை (Protection Order) ஒன்றை கோர முடியும். இதில் மன்று பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து இடைக்கால பாதுகாப்பு கட்டளையை (Interim Protection Order) வழங்க கடப்பாடுடையதாகின்றது. “தண்டித்தல்” எனும் விடயத்திற்கு பாதுகாப்பு கட்டளையினால் வழங்கப்படும் “பிரிவு” எனும் எண்ணக்கரு போதுமானதாயினும் இச்சட்டம் அதற்கப்பாலும் சமூக நோக்கில் பணியாற்றுவது பாராட்டிற்குரியது. அதாவது பாதுகாப்பு கட்டளைக்கு தொடர்ச்சியாக குறைநிரப்பு கட்டளை (Supplementary Order) நீதிமன்றால் வழங்கப்படலாம். இக்கட்டளை முரண்பாடுடைய நபர்களுக்கிடையே சொத்து தொடர்பான விடயங்கள், பராமரிப்பு செலவு, தேவையின் பொருட்டு பாதிக்கப்பட்டவருக்கு தங்குமிடம், உளவள ஆலோசனைக்கு சமூகமளித்தல் உட்பட்ட விடயங்கட்கு துன்பம் இழைத்தவர்க்கு உத்தரவிட பயன்படும். மேற்குறித்த கட்டளைகள் பணம் தொடர்பானதாயின் துன்பம் இழைத்தவரின் சம்பளத்திலிருந்து உரியதொகையை கழித்து பாதிக்கப்பட்டவர்க்கு வழங்கும் படி நீதிமன்று உத்தரவிட முடியும். நீதிமன்றத்தின் உத்தரவுகட்கு கட்டுப்படாத நபர் விசாரணையின் பின்பு பத்தாயிரம் ரூபாவிற்கு விஞ்ஞாத தண்டப்பணம் மூலமோ ஒரு வருடத்திற்கு உட்பட்ட சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ தண்டிக்கப்படுவார். இச்சட்டம் கணவன் மனைவி எனும் எல்லையை கடந்து தந்தை,தாய்,பாட்டி,பாட்டன்,மருமகள்,மருமகன்,சகோதரர்கள் என விரிந்து செல்லும் குடும்ப உறுப்பினர்கட்கு ஏற்புடையதாகும்.

இலங்கையில் பல சட்டங்கள் பெண்கட்கெதிராக பாரபட்ச வன்முறைகட்கு எதிராக காணப்பட்ட போதிலும் தொடர்ந்து பெண்கள், பெண்கள் எனும் காரணத்திற்காக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணங்களாக கல்வி அறிவு இன்மை, கலாச்சார கோடுகளை தாண்டுவதிலுள்ள தயக்கம், சட்டங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியில் தெளிவின்மை அதோடு சட்ட அமுலாக்கல் உபகரணங்களில் காணப்படும் அலட்சிய மனப்பான்மை போன்றவற்றை நிரற்படுத்தலாம்.



தீர்வு என நோக்கும் போது நீதியை அமுலாக்க பாரபட்சமற்ற மற்றும் சுகந்தரமான சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளின் தேவைப்பாடு மிக அவசியமானது. ஆனால் அது இன்றைய இலங்கையை பொறுத்த வரை எந்த ஒரு அரச மற்றும் தனியார் நிறுவன கட்டமைப்புகட்கும் சாத்தியமற்றது என நடைமுறை கள நிலவரங்கள் தெளிவிக்கின்றன. இதில் பொலிசு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவை கூட தப்பிப்பதாக அறிய முடியவில்லை. இரண்டாவதாக பெண்களிடையே அவர்களது உரிமைகள், பாதுகாப்பு பெறும் வழி முறைகள் பற்றி விழிப்புணர்வூட்ட வேண்டியது அவசியம். சட்டங்கள் இலகுபடுத்தப்பட வேண்டியதும் அவசியமானவர்கட்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டியதும் அவசியம். இப்போது நீதியமைச்சால் இதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பாராட்டதக்கவை எனிலும் அதன் விரிவாக்கம் திருப்தி அளிக்க கூடிய தகவளவை கொண்டிருக்கவில்லை. முக்கியமாக சிவில் சமூகத்தின் பங்கு பெண்களுக்கான பாரபட்சத்தை ஒழிப்பதில் இன்னும் முன்னேற வேண்டிய துாரம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக அழுத்த குழுக்கள் (Pressure Groups) துறைசார் வல்லுணர்களால் வழிகாட்டப்படுவது நிகழளவில் போதியதல்ல இந்நிலைமை முன்னேற்றம் காணப்பட வேண்டும். அப்போது தான் அழுத்த குழுக்களின் அழுத்தம் அர்த்தம் உள்ளதாகவும் வெற்றிக்கானதுமாக அமையும். இறுதியில் எல்லாவற்றுக்கும் மேலாக மனித குடும்பத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் அனைத்து வேற்றுமைகளையும் கடந்து ஒரே உரிமைகட்கு பாத்திரமானவர்கள் எனும் எண்ணப்பாடு அனைவரினதும் மன வெளிப்பாடாக அமையும் நேரத்திலேயே பெண்களுக்கெதிரான பாரபட்ச செயற்பாடுகட்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

Monday 11 November 2013

சித்திரவதை ஓர் சமகால நடைமுறை


(உலக அரசுகளின் குற்றவியல் தடுப்பின் மையக்கரமான விசாரணை, மனித குலத்திற்கெதிரான குற்றமான சித்திரவதையாக மாற்றப்படுவது தொடர்பான ஓர் சுருக்கப் பார்வை.)


இக்கட்டுரையானது சித்திரவதை எனும் எண்ணக்கருவையும், சித்திரவதைக்கு எதிரான சட்ட வலிதார்ந்த தன்மையையும் சட்டத்தின் பரப்பெல்லை அடிப்படையின்றி மட்டுப்படுத்தப் பட்டுள்ளதையும், சித்திரவதைக்கு உள்ளான நபர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் சார்ந்திருப்பாளர்கள் என்பவற்றை பற்றி கோட்பாட்டளவில் பகுப்புரைகளை மேற்கொள்வதோடு முதன்மையாக சித்திரவதை அரசின் உரிமையாகுமா ? எனும் வினாவிற்கு விடை தேடும் விடுகதையாகவுமுள்ளது. இருப்பின் சித்திரவதையின் புள்ளி விபர பகுப்பாய்வுகள் தொடர்பில் இக்கட்டுரை உட்புகுந்து ஒப்புநோக்காததானது இக்கட்டுரையாளர் சித்திரவதைக்கெதிரான நிகழளவு கருதுகோள் அரசினதும் அதன் மக்கள் மட்டிலும் மாற்று சிந்தனை அறிவிற்கான தளமொன்றை ஏற்கும் வரையில் பயனறத்தகாதது எனும் கருத்தோடு நேரடி இயைபாக்கமுடையது. இக்கட்டுரையில் ஆங்கில சொற்களின் உட்புகுத்தலானது தெளிவான மையக்கருத்து விளக்கத்திற்கும், அதிகாரம் பெற்ற தமிழ் மொழி பெயர்ப்புக்களின் அருமைத்தன்மைக்கான மாற்றுபாயமாகவுமே கொள்ளப்பட வேண்டும்.

சித்திரவதை எனும் பதத்தை இக்கட்டுரை முழுவதும் பல கோணங்களில் ஆராய்கின்றது. ஆனாலும் முதலில் ஒரு சாதாரண சமூகப்பிராணியின் பார்வையில் அது இவ்வாறு தான் இருக்க முடியும்.


“சித்திரவதை மக்களை மௌனமாக்குகின்றது, அது உடல் உள பலத்தை சிதைக்கின்றது. அது சிறைக்கூடங்களில் மக்கள் பெற்ற மிக கீழ்த்தரமான மோசமான அனுபவங்களை வெளிப்படுத்துவதை தடுக்கின்றது. பல தாங்கொணா நிலைகளிலும் அதை பற்றி பலமாக குரலெழுப்பினும் அதை காது கொடுத்து கேட்க யாரும் தயாராக இல்லை. பாதிக்கப்பட்டோரின் கதைகள் பயங்கரமானதாகவும் ஆனால் நம்ப முடியாததாகவும் இருக்கின்றது. யாரும் இவ்வளவு கொடூரமான கதைகளை கேட்க விரும்புவதில்லை. அதை விட இது இல்லை என்ற எண்ணப்பாட்டுடன் வாழவே விரும்புகின்றார்கள்அ இவ்வகையான யதார்த்தங்கள் சித்திரவதை புரிவோர் அதை தொடர்வதற்கு ஊக்குவிப்பதோடு அதை உலகின் ஏடுகளில் இருந்து அழிக்கவும் உதவுகின்றது”.

அரசு என்பது ஓர் திடமான உருவகம் உடைய ஓர் பௌதீக தோற்றப்பாடு உடையது அல்ல, மாறாக மக்களின் கூட்டமைவிற்கான ஓர் எதிரொலி. அது கற்பனாவாதத்தின் ஒரு பெயரால் வகைப்படுத்தப்படலாம் அல்லது இறைமையை வரையறையின்றி பாவிப்பதற்கு பௌதீக வளங்களின் அருமைப்பாடு காரணம் என கூறி தட்டிக்கழிக்கலாம். எது எவ்வாறு தோற்றங் காட்டப்படினும் மக்களின் மனப்பாங்கே அந்த மக்களின் குடித்தொகை இடவமர்வை காட்டும் நாடு எனும் ஆட்சிப்புலத்தின் அரசை அமைக்கின்றது. ஒன்றை அமைப்பவரின் எண்ணப்படியே அந்த அமைப்பு உருவாவது இயற்கை நியதி. ஆனால் மக்கள் தங்களால் ஸ்தாபிக்கப்பட்ட அரசின் அல்லது அது தனது தொழிற்பாடுகளை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்களை[1] கண்டு அஞ்சுவதும் தங்களின் மேல் எவ்வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியும் என நம்புவதும் ஏனோ வியப்பாகவே உள்ளது. இதன் தாக்கவளவு பிராந்தியங்கட்கு இடையில் வேறுபட்டு காணப்படினும் இக்கோட்பாடு இல்லாத பிராந்தியம் இல்லை.

ஆனாலும் அரசு என்பதை தர்க்கரீதியில் வரைவிலக்கணப்படுத்த முனைந்தால் அது கீழ் வருமாறு அமையலாம்.

“எந்த ஒரு நிறுவன அமைப்பிற்கு தனிநபர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பதற்கான தனியுரிமையை அத்தனி நபர்களே அளித்துள்ளார்களோ அந்நிறுவனமே அரசு எனப்படும்.”
அதாவது ஒரு தனிநபரின் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதை எதிர்த்து வன்முறையை பிரயோகிக்க அவனுக்கு உரிமையுண்டு. ஆனாலும் சமூக நலன்கருதி அவன் தனக்கான உரிமையை அரசிடம் கையளித்து தனக்கான நிவாரணத்தை வேண்டுகின்றான். எனவே அவன் கையளித்த உரிமை அவன் கையளித்த விடயதானங்கட்கே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர எதையும் செய்ய அல்ல.

அனைத்து சித்திரவதை கோட்பாடுகளும் அரசால் தனிநபர்கட்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பிலேயே அதிக கவனத்தை காட்டுகின்றது. ஏனெனில் தனிநபர்களுக்குள் இடம் பெறும் தாக்கங்கள் அந்நாட்டு சட்டங்கள் மூலம் ஆளப்படுகின்றன. இப்பதிவுகள் குற்றவியற் சட்டங்களால் மட்டுமல்லாது குடியியற் சட்டங்களாற் கூட ஆளப்படும் தன்மையை இன்று பல நாடுகளின் சட்டமுறைமையின் ஓர் அம்சம். ஆனாலும் அரசுகளின் குற்றங்களும் முன்கொணரப்படல் அவசியமாகும். “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !” எனும் வாக்கியத்திற்கேற்ப குற்றம் எவர் தரப்பில் புரியப்பட்டாலும் அது தண்டிக்கப்பட வேண்டும். வகாச்சிகே தயாரத்ன எதிர் ரி.ஈ. ஆனந்தராஜாவும் ஏனையோரும்[2] எனும் வழக்கில் “தன் ஊழியரின் தவறை அரசே பொறுப்பேற்க வேண்டும்” என மாண்புமிகு நீதியரசர் விக்னேஸ்வரன் தீர்ப்பளித்தார்.

சித்திரவதை எனும் வார்த்தைக்கு சர்வதேச ரீதியாக பல விளக்கங்கள் அளிக்கப்படினும் பொதுவான விளக்கமாக இதனை கொள்ளலாம். “ஒருவரோ ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களோ தன்னிச்சையாகவோ அல்லது ஓர் அதிகாரத்தின் கட்டளைகட்கு உட்பட்டோ ஓர் நபரிடம் இருந்து குறிப்பிட்ட தகவலை பெறும் பொருட்டோ, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை பெறும் பொருட்டோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தின் பொருட்டோ தெள்ளிய மன எண்ணப்பாட்டுடன் முறைமைப்படுத்தப்ப்ட்ட தாங்கொணா நோவை ஒருவர்க்கு ஏற்படுத்தல் சித்திரவதை ஆகும்[3].
இச்சித்திரவதை உள்நாட்டுச்சட்டத்தின் கீழ் Seroius Crime என வர்ணிக்கப்படுவதோடு சர்வதேச சட்டத்தின் கீழ் Heinous Crime எனவும் வர்ணிக்கப்படுகின்றது. மனித நாகரீகத்தின் பிறப்பிடமாக கருதப்பட்ட றோம் மற்றும் கிறிஸ் என்பவற்றில் கூட அதிகாரத்தில் உள்ளோர் குற்றவாளி என கருதிய நபர்களிடம் குற்ற ஒப்புதலை பெற சித்திரவதை தாராளமாக பயன்படுத்தப்பட்டது. புராதன இலங்கையின் கண்டிய சட்ட தண்டனைகளும் பின்னைய வரலாற்றாசிரியர்களால் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை என வர்ணிக்கப்பட்டது.

இன்று உலகம் தன்னை நாகரீகத்தின் உச்சம் என கருதி ஒரு முகமூடியை தனக்கு இட்டுள்ளது. ஆனாலும் இன்று பாரிய அளவான மனித உரிமை மீறலில் சித்திரவதை தனக்கென ஓர் தனியிடத்தை தக்க வைத்துள்ளது. அறிவியலின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி இன்று சித்திரவதையை உடலியல் சார்பிலிருந்து உளவியலுக்கு நகர்தியுள்ளது. இதற்காக மருத்துவ ரீதியில் இரசாயன கலப்புக்களை உடலினுள் செலுத்தி சித்திரவதை செய்யும் முறைமையினை காட்டலாம். இம்முறைமைகளானது மிக அபாயகரமானவையாகும். ஏனெனில் உளவியல் சித்திரவதை தொடர்பான தகவலை சேகரிப்பது மிக கடினமானதுடன் அதை ஆவணப்படுத்துவது சாத்தியமற்றது.

டென்மார்க் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் ஓர் அமைப்பானது[4] சித்திரவதையை மூன்று வகைகளாக பிரிக்கின்றது.

01.உடலியல் ரீதியான முறைமைகள் இது பரவலாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைமையாகும். உடல் ரீதியாக தாங்கொணா வலியை ஏற்படுத்துவது இம்முறைமையாகும். இதில் மரண தருவாயிற்கு அருகில் கொணரப்படுவதற்கான மிகையான அச்சமூட்டல்கள் அல்லது மரணத்தை எதிர்பார்க்கும் வகையிலாக செயற்பாடுகளும், உடல் அங்கங்களை சிதைக்கும் வகையில் எரித்தல், வெட்டுதல் மற்றும் விறைப்பை உண்டாக்கல் என்வற்றை உள்ளடக்கும்.

02.உளவியல் முறைமைகள் இம்முறைமை ஆனது சற்று தொழினுட்ப திறனுதவியை தேவைப்படுத்துவதுடன் முன்திட்டமிடல் இல்லாது நிகழ்த்ப்படுவது சாத்தியமற்றது. அதே போன்று இதனால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண்பது மற்றும் குணமாக்குவது மிக சவாலானதாகும். ஏனெனில் நரம்பு மண்டல பாதிப்புக்களை சரி செய்ய இன்று வரை பூரண வெற்றிகர முறைமை ஒன்று விஞ்ஞான ரீதியில் கண்டுபிடிக்கப்படவில்லை.

03.கூட்டிணைக்கப்பட்ட முறைமைகள் இம்முறைமை பெரும்பாலும்  மேற்குறிப்பிட்ட இரண்டு முறைமைகளின் தாக்கத்தால் வெளிவரும் விளைவாக உள்ளது. இருப்பினும் ஒரே செயற்பாடுகளே கூட்டிணைக்கப்பட்ட விளைவை தரக்கூடியது. உதாரணமாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் உணவுத் தவிர்ப்பு போன்ற நுட்பங்களை குறிப்பிடலாம்.

இலங்கையில் சித்திரவதை என்பது யுத்தகாலத்தில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் பொதுவானதாகவும் எல்லாக் காலங்களிலும் பொலிசுக்கு உரிமையான ஒன்றாகவும் இனங்காணப்பட்டு வந்துள்ளது. ஏதேச்சையதிகார கைது மற்றும் தடுத்து வைப்பு என்பன சித்திரவதையை மேலும் ஊக்குவிக்கும் காரணிகளாக உள்ளன. ஆனாலும் இவை இலங்கையின் மீயுயர் சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. சில வேளைகளில் ஒரு விதமான குற்றப்பகர்வுகளோ அற்ப சந்தேகங்கட்கான நியாயபூர்வ காரணங்கள் இல்லாத போதும் கூட, உதாரணமாக கைதிற்கான காரணங்களை கேட்டதற்காக அல்லது அல்லது எதிர் பதிலளித்ததற்காக அல்லது மது போதையிலுள்ள பொலிசாரின் வெறித்தனமான போதையின் வெளிப்பாடாக மிருகத்தனமாக நபர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இதைப்பற்றிய கருத்தில் நீதியரசர் குணசேகர பின்வருமாறு விளக்கினார்.

“இவ்வழக்கின் நிகழ்வுகள் பொலிசு கட்டுக்காவலில் வைத்திருக்கப்படும் சந்தேக நபர்கள் மீது ஒரு சில பொலிசு அலுவலர்களால் கடைப்பிடிக்கப்படும் கீழ்த்தரமான முறைகள் தொடர்பில் மனதையுருக்கும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன. அத்தகைய முறைகளை முரட்டுத்தனமானவை, நாகரீகமற்றவை, மனிதாபிமானமற்றவை என்றே விவரிக்கலாம். அவை மிகவும் வெறுப்பிற்குரியவை ஒருவரது மானிட பண்பு நலன்களையும் மகத்துவத்தையும் பற்றிய உணர்வை புண்படுத்துபவை[5]……

இதில் நீதித்துறையின் ஊக்கப்பங்களிப்பு சித்திரவதைக்கான மறைமுக காரணி என்பது வேதனைக்குரிய ஒன்று. சர்வதேச யூரிமார் ஆணைக்குழுவின் அறிக்கையின் படி இலங்கை நீதிபதிகள் பொதுவாக பொலிசார் மட்டில் அதிக கரீசனை உடையவர்களாக உள்ளார்கள். அதோடு நீதித்துறையின் அடிப்படை கோட்பாடுகளே உயர்மட்ட நீதி நிவாரணவியற் தளங்களால் மீறப்படுவது கவலைக்குரியது மட்டுமின்றி சட்டவாட்சிக்கான மிகப்பெரியதொரு சவாலாகும். நீதிபதி தன் முன்னுள்ள சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பை வழங்க வேண்டுமே தவிர தனது சுய அனுபவங்கள், ஊகங்கள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கின் அது இயற்கை நீதிச் சட்டத்தை மீறுவதாகும். இவ்வாறான காரணிகளால் சித்திரவதை ஓர் வழமையான விசாரணை நடைமுறையாக காணப்படுவதுடன், பிலிப் அல்ஸ்டனின் கூற்றுப்படி

இலங்கையில் கட்டுக்காவலில் இருப்பவர்களின் இறப்புக்களின் பெருந்தொகையானவை வஞ்சகம் தீர்க்கும் பொலிசினால் அல்ல ஆனால் வழமையான நடைமுறையில் பங்கேற்கும் சாதாரண அலுவலர்களாலேயே விளைவிக்கப்படுகின்றன[6]”.

நீதித்துறையின் போக்கு எவ்வாறு நீதிபதிகள் ஊடாக வெளிப்படுத்தப்படினும் சட்டத்தளம் அதன் பரந்தளவாகவே இலங்கையில் இன்று வரை கொண்டு காணப்படுகின்றது. ஆனாலும் அந்த பரப்பெல்லை எந்தளவு பயன்பாட்டிற்குள்ளாகின்றது என்பது யதார்த்தத்ற்குரிய வினாவாகும். ஆயினும் தொடர் இற்றைப்படுத்தல்கள் இன்மையும், பழைமையின் மேலுள்ள பெரு விருப்பமும் போதிய பயிற்றப்பட்ட ஆளனி வளமின்மையும் அதைப்போன்ற இன்மைகளின் காரணிகள் பரந்தளவு சட்டத்தளத்தை மீறி நிவாரணங்களின் எல்லையை மிக குறுகியதாக்குவது அனுமதிக்கப்பட முடியாதது.

இலங்கையின் சட்டத்தளத்தை பொறுத்த மட்டில் பல்வேறு தெரிவுகள் சித்திரவதையால் பாதி்க்கப்பட்டவர்கட்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. யாப்படிப்டையிலான நிவாரணங்கள், நியதிச்சட்ட நிவாரணங்கள், பொதுச்சட்டத்தின் கீழ் குடியியல் மட்டான நிவாரணங்கள் மற்றும் சர்வதேச பொருத்தனைகளின் கீழான நிவாரணங்கள் என அவற்றை பட்டியலிட முடியும்.

அடிப்படை உரிமைகள் எனும் பதம் 1972ஆம் மற்றும் 1978ஆம் ஆண்டுகளின் அரசியல் யாப்புக்கள் மூலம் இலங்கையருக்கு அறிமுகப்டுத்தி வைக்கப்பட்டது. முதலில் 1972ஆம் ஆண்டு யாப்பானது இப்பதத்தை அதன் ஆறாவது பகுதியினுாடாக அறிமுகப்படுத்தி வைத்ததுடன் அதன் உறுப்புரை 18 இனுாடாக பின்வரும் இரண்டு விடயங்களை முன்வைத்தது எந்த ஒரு மனிதனும் சட்டத்தின் படியாலன்றி தனது உயிர்,சுகந்திரம் மற்றும் பாதுகாப்புரிமையை இழத்தலாகாது , எந்த ஒரு மனிதனும் சட்டத்தின் படியாலன்றி கைது செய்யப்படவோ தடுப்பில் வைத்திருக்கப்படவோ ஆகாது. இவையிரண்டும் சித்திரவதையை பற்றி நேரடியாக எடுத்தியம்பாவிடினும் சித்திரவதைக்கான முக்கிய படிகளை தடுக்கின்ற பொறிமுறையாக அறிமுகப்படுத்துபவையாக அமைந்துள்ளது. ஆனாலும் அப்பொறிமுறைமை இயக்கும் அமைப்பு ஒன்று அன்று ஸ்தாபிக்கப்படவி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தனியான நியாதிக்கமுடைய நீதிமன்று ஒன்று இன்மையும் ஆறு வருட முதன்மைத்துவத்தின் கீழ் ஒரே ஒரு பதிவி்டப்பட்ட வழக்கே[7] இன்று வரை உதாரணமாக உள்ளமையும் இவ்யாப்பின் வினைத்திறனற்ற தன்மையை காட்டுகின்றது.

அடுத்ததாக 1978இன் இரண்டாம் சுகந்திர இலங்கையின் அரசியலமைப்பு பகுதி மூன்றின் ஊடாக அடிப்படை உரிமைகளை மக்களுக்கு உடைமை ஆக்கியிருப்பதுடன் அதன் மீறுகைக்கான பரீகாரமளிக்கக்கூடிய நியாயாதிக்கமுடைய நீதிமன்றாக இலங்கையின் உயர்நீதிமன்று அறிமுகப்படுத்தப்பட்டது[8]. இப்பகுதி சித்திரவதை தடுப்பை நேரடியாகவே அதன் உறுப்புரை பதினொன்று மூலம் உறுதிப்படுத்துகின்றது. ஆனாலும் நிவாரணம் பெறும் உரிமை நிறைவேற்று துறைக்கெதிரானது மட்டுமே என மட்டுப்படுத்தப் படுவதும், உறுப்புரை பதினைந்து அடிப்படை உரிமைகளில் மட்டுப்பாட்டை விதிப்பதும், நிவாரண கோரலுக்கான காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளதும், விஷேட சந்தர்ப்பங்களை தவிர்த்து வழக்கெடுக்கையின் போதான சட்ட தொழினுட்ப தேவைப்பாடுகள் கட்டாயமாக்கப்படுவதும் நிவாரண விலக்கிகளாக காணப்படுகின்றன. உறுப்புரைகள் மூன்று மற்றும் நான்கு இலங்கை மக்களின் இறைமையையும் அதன் பிரதிபயனான அடிப்படை உரிமைகளை அரசின் மூன்று தொழிற்கரங்களும் மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்ற போதும் சட்டவாக்கத்துறை[9] மற்றும் நீதித்துறை[10] என்பன வழக்கெழுதலில் இருந்து விடுதலை பெறுவதானது யாப்படிப்படைவாதத்தின் தெளிவான மீறுகையை காட்டுவதாகின்றது. அதோடு உறுப்புரை 126 இன் படி பாதிக்கப்பட்டவரோ அல்லது அவர் சார்பான சட்டத்தரணியோதான் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்குதல் செய்ய முடியும். எனினும் இலங்கையில் சித்திரவதைக்குள்ளாகும் நபர்கள் குறிப்பிடத்தக்கவளவின் மேல் மரணத்தை தவிர்ப்பது சாத்தியமற்றது. பல வழக்குகளில் சித்திரவதைக்குள்ளான நபர் சிறுநீரக செயலிழப்பின் பெயரிலேயே மரணத்தை தழுவுவதாக சட்டவைத்திய நிபுணர்கள் பொலிசாரின் மேற்சுமையை விடுவிப்பினும் வைத்திய துறையின் வளர்ச்சி மற்றும் தொழில்சார் பற்றுறுதியுள்ள வைத்தியர்களின் தொடர் அழுத்தங்கள் என்பன கடுமையான சித்திரவதையின் பிரதிபயனான உச்சகட்ட பயத்தின் அதனோடு இணைந்த இயலாமைகளின் போது மனித உடல் உள்ளேயே வெளியிடும் மாறுபட்ட ஒழுங்கீமான இரசாயண பதார்த்தங்களின் செய்றபாடே சிறுநீரகத்தை உடனடியாக பாதிக்கின்றது இன்று நிறுவப்பட்டுள்ளது.  எனவே சித்திரவதைப்படுத்துவது தவறு அதற்கான மாற்றீடான கொலை பரிகாரம் எனும் நிலை சிராணி சில்வா வழக்கில் நீதியரசர் மார்க் பெர்ணாண்டோ வழங்கிய தீர்ப்பில் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அதில் உரிமை என்று ஒன்றிருந்தால் அதன் மீறுகைக்கு பரிகாரம் ஒன்று அளிக்கப்பட வேண்டும்[11] (Ubi Jus Ibi Remedium) எனும் கோட்பாட்டிற்கமைய இறந்தவரின் மனைவி வழக்காட நீதிமன்று தற்றுணிபில் அதிகாரம் அளித்திருப்பினும் இது அடிப்படை உரிமை வழக்காடல்களின் ஓர் மிகக்குறுகிய எல்லைக்குட்பட்ட விரிவாக்கமே தவிர வேறெதாகவும் காட்டப்பட முடியாது. ஆனாலும் நீதியரசர் அமரசிங்க வழக்கொன்றில்[12] “இன்று எமது நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல்களுக்கான நிவாரணத்தை தீங்கியற் சட்டவடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து மேலோங்கி நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பின் வழிகான நிவாரணமளிக்க ஏற்புடையவர்களாகவுள்ளோம்என்று குறிப்பிட்டார். மேலதிகமாக உயர்நீதிமன்று தட்சணாமூர்த்தி[13] வழக்கில் உறுப்புரை 126(4) இன் பிரயோகமானது விரிதாகவும் நீடிக்கப்பட்ட ஒன்றாகவும் கருதப்பட வேண்டும் என தீர்க்கப்பட்டது. ஆனாலும் இதில் கிடைக்கும் நிவாரணவியல் நீதி வெறுமனே அரசின் கையாளகு நிதியிலான செலவு என்ற நிலையிலிருந்து எதிர்காலத்தில் மீறுவர்கட்கு எச்சரிக்கையாக செயற்பட போதுமானதாக அமைய மாட்டாது[14].

அடுத்தாக இலங்கையின் பொதுச்சட்டமாகிய உரோம டச்சு சட்டம் சித்திரவதை பற்றி வெளிப்படையாக எதுவும் நிவாரண மட்டில் கூறாவிடினும் அக்கூலியன் வழக்கொன்றை மாவட்ட நீதிமன்றில் குடியியல் நடவடிக்கையாக தொடர்ந்து நஷ்டஈட்டை பெற முடியும். இதில் ஏற்பட்ட பாதிப்பிற்கான மருத்துவ செலவையும், ஏற்பட்ட மானநஷ்டத்திற்கான நட்டஈட்டையும் வருங்காலத்தில் ஏற்பட கணித்திருக்கும் மருத்துவ செலவையும், வருங்காலத்தில் உழைக்ககூடிய கணிப்பிட்ட உழைப்பானது இச்சித்திரவதை செயற்பாட்டால் பாதிக்கப்படுமாயின் அதற்காக தொகையினையும் பெறமுடியும். இதில் உள்ள நன்மை என பார்த்தால் பாதிக்கப்பட்டவர் தனது மாவட்ட மட்டிலேயே நிவாரணத்தை பெற முடியும். அடிப்படை உரிமைகளின் மேல் வழக்கை தொடர்ந்து நடாத்த கொழும்பில் பிரவேசமும் பெரும் தொகை சட்டவழிகாட்டலிற்கும் தேவைப்படும். அதோடு தீர்க்கப்பட்ட அடிப்படை மனித உரிமை வழக்குகளை பார்ப்பின் சித்திரவதைக்கான நிவாரணமாக புறத்தொதுக்க கூடிய இழப்பீட்டு தொகையையே உயர்நீதிமன்று வழங்கியிருப்பதானது உயர்மட்ட நீதியின் சிதைவை காட்டுகின்றது.

இலங்கை தண்டனைச் சட்டக் கோவை கட்டளைச்சட்ட இலக்கம் 3 இன் 1883 பல தண்டனைகளை வகைப்படுத்தியுள்ளது. இதன் பிரிவுகளின் கீழ் மாவட்ட நீதவான் நீதிமன்றுகளில் வழக்கிடுவதன் மேல் எதிராளிக்கான தண்டனையை வழங்க முடியும். உதாரணமாக காயப்படுத்தல்[15] (சாதாரண காயம் மற்றும் பெருங்காயம்), அடித்தல் மற்றும் குற்ற பலப்பிரயோகம்[16], சட்டத்தவறான தடுத்துவைப்பு[17] என்பவற்றை காட்டமுடியும்.

அடுத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை நாடலும் ஓர் தெரிவாக இருப்பினும் அதன் பயனுறுதித்தன்மை இன்றுவரை கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஓர் நிலையிலேயே காணப்படுகின்றது. இவ்வமைப்பானது இலங்கை பாராளுமன்றமானது இலங்கை அரசு சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக்கொண்ட மனித உரிமைகள் சம்மந்தமான பல கடமைப்பாடுகளின் நிறைவேற்றலை உறுதிப்படுத்தும் ஓர் அமைப்பின் தேவை உணர்ந்த போது பாரிஸ் கோட்பாடுகளை உள்ளடக்கி இல 21 இன் 1996 சட்டத்தின்[18] மூலம் தோற்றம் பெற்றது. கொழும்பில் தலைமை அலுவலகத்தையும் பிராந்திய அலுவலகங்களையும் கொண்டு இயங்கி வரும் ஓர் நிறுவகமாகும். இந்நிறுவகம் மனித உரிமை குற்றச்சாட்டுகளை ஏற்பதற்கு நியாயாதிக்கத்தை கொண்டிருப்பினும் குறிப்பாக 22 வைகாசி 2004 இல் இருந்து சித்திரவதையை தடுத்தல் மற்றும் மேற்பார்வை அமைப்பின் ஊடாக குற்றச்சாட்டு பதியப்பட்டு 24 மணி நேரத்தினுள் விசாரணைகளை ஆரம்பித்த போதிலும் பிணிக்கும் தகவுடைய எந்த ஒரு தளத்தையும் தன்னிருக்காதது அதன் ஒட்டு மொத்த செயற்றிறனையும் பாதித்து விடுகின்றது. ஆனாலும் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் படி  விரைவில் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இவ்வாணைக்குழுவிற்கு பிணிக்கும் தகைமையுள்ள தளத்தை வழங்கும் சட்டத்திருத்தம் வரவிருப்பது, வந்தால் வரவேற்கத்தக்கது.

சர்வதேச பொருத்தனைகள் என்ற ரீதியில் நோக்கின் அதில் குறிப்பிட்டு கூறக்கூடியது தனிநபர் குற்றச்சாட்டுக்களை சர்வதேச ரீதியில் முன்வைக்க ஏற்புடைமை செய்தமையாகும். இவ்வேற்பானது இலங்கையில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான முதலாவது விருப்பத்திற்குரிய வரைவேட்டை 1998 ஜனவரி 3ஆம் திகதி இலங்கை அரசு ஏற்றதின் பெயரில் வலிதுடைமையதகியது. ஆனாலும் இப்பரிகாரத்திற்கு உள்நாட்டு நிவாரணங்களின் பரிகாரமளிக்க இயலாமையை உறுதிப்படுத்திய பின்னரே ஏற்புடையதாக முடியும் என்பதோடு அவ்வாறான நிலைகளிலும் பாதிக்கப்பட்டவர் போதனாமுறைமைக்கு மட்டுமே நிவாரணமளிக்கப்படுவார் என்பதை நல்லரத்தினம் சிங்கராசா[19] வழக்கு எடுத்துக் கூறுகின்றது. இவ்வழக்கில் உயர்நீதிமன்று இலங்கையின் அதிஉச்ச நீதியியல் பொறிமுறை உயர்நீதிமன்றமே அன்றி வேறெந்த சர்வதேச அமைப்புக்களும் அல்ல என தெளிவாக யாப்பை பொருள் கோடலில் சுட்டிக்காட்டியது. ஆனாலும் யாப்பின் யாப்படிப்படைவாதத்தை வைத்து பொருள்கோடிட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை நீதித்துறை மறந்து செயற்பட்டமை கவலைக்குரியது.

அடுத்தாக சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான முறையில் நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பனவற்றுக்கு எதிரான சமவாயத்தின்[20] கீழான நிவாரணமாகும். இச்சமவாயத்தை பின்பற்றி இலங்கை பாராளுமன்றம் இயக்கமூல சட்டமொன்றை[21] நிறைவேற்றியதன் பொருட்டு சித்திரவதைக்குட்பட்ட நபர் பெறக்கூடிய நிவாரணவியற்தளம் விரிவாக்கம் பெற்றுள்ளது[22]. இச்சட்டமானது இலங்கை மேல்நீதிமன்றுகட்கு[23] நியாயாதிக்கத்தை வழங்குவதுடன் குற்றவாளிக்கு ஏழு முதல் பத்து வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்டவர்க்கு இழப்பீடாக[24] பத்தாயிரம் முதல் ஐம்பதினாயிரம் ரூபா வரையும் கிடைக்க வழி சமைக்கின்றது. இதில் குற்றாளிகள்[25] என்போர் குற்றத்தை புரிந்த, புரிய எத்தனிக்கின்ற , புரிவதில் ஒத்தாசை வழங்குகின்றவர்கள் என வரைவிலக்கணப்படுத்தப் படுகின்றனர். அத்தோடு இச்சட்டம் போர் மற்றும் மேலதிகாரியின் கட்டளை ஆகிய பாதுகாப்புக்களை எதிரி பயன்படுத்துவதிலிருந்து நீக்குகின்றது[26]. அதோடு மேலதிகமாக இச்சட்டம் சர்வதேச ரீதியில் சி்த்திரவதையை ஒழிப்பதற்காக இலங்கை அரசிற்கு சர்வதேச மட்டத்தில் உள்ள் கடப்பாடுகளையும் விளக்குகின்றது.

இவ்வளவான நிவாரண தளத்தை இலங்கை சட்ட முறைமை கொண்டிருப்பினும் இன்னும் சித்திரவதையை ஒழித்தல் என்பது சாத்தியமற்ற ஒன்று போலவே காட்டப்படுகின்றது. அதற்கான காரணமாக 1947 இன் Justice Sorrtsez’s ஆணைக்குழு முதல் 1995 ஆம் ஆண்டு Jayasinghe ஆணைக்குழு வரை சுட்டப்பட்ட காரணம் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் நிறுவகம் இன்மை என்பது தான் என்னைப் பொறுத்த வரை இன்றளவும் அவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமொன்றை என்னால் காண முடியவில்லை. அவ்ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பானது பொலிசாருக்கும் ஏனைய ஆயுதப்படைகட்கும் சித்திரவதை தமக்கான தனியுரிமை எனும் கடுந்திரையை நீக்க வல்லமை பெற்றதாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களையும் குற்றவாளிகளாக தண்டனைக்குட்படுத்த முடியும் என்பதை உணர்த்த கூடிய வல்லமை பெற்ற அமைப்பாகவும் இருக்க வேண்டும். ஆயினும் தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் எனும் தொனியில் குற்றத்தை அடக்கும் அதிகாரம் சித்திரவதைக்கான தனியுரிமை என்பது இன்று வேரூன்றப்பட்ட ஒன்றாகிவிட்டமை வேதனைக்குரியது.

மேலதிகமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோர் அதன் பின்னரான காலப்பகுதியை எவ்வாறு கழிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது அடுத்த தேடலாகும். இலங்கையை  பொறுத்த மட்டில் இத்தேடல் அரசு என்ற ரீதியில் முகத்தளவிலேயே அர்த்தம் அற்றதாகும். இன்று ஐக்கிய நாடுகள் சபை தனது வருடாந்த பாதீட்டின் போது சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக அவர்களின் மறுவாழ்விற்காக குறிப்பிடத்தக்க அளவு நிதியை அளிக்கின்றது. ஆனால் அது சரியான முறையில் பெறப்பட்டு சரியாக வழிமுறைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கட்கு அளிப்பது அவசியமாகும். ஏனெனில் இந்நிதி அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சுயவிருப்பிலான உதவி ஆதலால் முழு வெளிப்படைத்தன்மை கோரப்படுகின்றது. இது இலங்கை உட்பட்ட பல மூன்றாம் உலக நாடுகட்கு மிக சவாலான விடயமாக நிகழளவில் இருப்பதால் இவ்வுதவிகள் பல மறுக்கப்படுகின்றன.

ஆனாலும் இவ்வுதவிகள் மனிதாபிமான, சட்ட மற்றும் புனர்வாழ்விற்காக பாதிக்கப்பட்டவர்கட்கோ அல்லது அவரில் தங்கி வாழும் குடும்ப உறுப்பினர்கட்கோ பயன்பட முடியும். ஆயினும் தற்போது இலங்கை அரசு இலவச சட்ட சேவையை அளித்து வரினும் அச்சேவையின் தரம் பற்றி ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானது.

பொதுவாக அரசுகள் சித்திரவதையை பொதுமட்டளவில் அதற்கெதிரான குடிகட்கு எதிராக பாவிப்பது வழக்கமானது. அது எந்த வித அரசிற்கும் பொருத்தபாடானது எந்த அரசும் எப்போதுமே பாசிச வாதத்ததை கைவிட தயாராக இருந்ததில்லை. அவ்வாறு அது இருக்குமாயின் அதை கொண்டு செல்லுகின்ற அரசு என்கின்ற பொறிமுறையான அரசாங்கம் வெற்றிகரமாக இயங்காது. பாசிச வாதத்தை அறிய அது எத்தனை உயிர்களை பலி வாங்குகின்றது என்பதை விட அது எப்படி பலி வாங்குகின்றது என்பதே முக்கியமானது. அளவுகள் மாறினாலும் அதன் தொழிற்படு தாக்கம் மாற்றப்படுவதில்லை. அரசு தனது குடிகளை மௌனமாக்க நேரடியாகவோ அல்லது வேற்றுக்கூட்ட குடிகள் மீது மறைமுகமாக சித்திரவதையை பிரயோகித்து தம் குடிகளை அடக்க நினைக்கின்றது. ஏனெனில் குடிகளின் குரல் அரசாங்களூடாக அரசின் ஆட்சிப்புலத்தை அசைக்கும் வல்லமை படைத்தது. இலங்கை அனுபவத்திலும் அது நன்கு உணரப்பட்டுள்ளது. அதாவது வட கிழக்கு சிவில் யுத்தம் மற்றும் பயங்கரவாதம் என்பவையே சித்திரவதைக்கான காரணங்கள் என்பது தற்போது பிழை என ஏற்கப்பட்டுள்ளது. இன்றும் சித்திரவதை தொடர்கின்றது இது பயங்கரவாதம் எனும் தார்ப்பரியத்தை தாண்டி தொடர்கின்றது அவ்வளவே!.

தீர்வுகள் என நோக்கும் போது சுகந்திரமான நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள செயற்பாடுகள், பயிற்றப்பட்டதும், கட்டுப்பாட்டு விசாலம் மிக்கமையான ஒழுங்கமைக்கப்பட்ட சட்ட அமுலாக்க ஆளணி, அவ்வாளணியை மேற்பார்வை செய்து முகாமை செய்ய அதிகாரமுள்ள நிறுவன கட்டமைப்பு அதோடு சட்டத்தரணிகளின் ஜனநாயக ஆர்வம் மற்றும் சட்ட அறிவுப்பரவலாக்கம் பெற்றுள்ள குடிமக்கள் என்பனைவற்றை காட்ட முடியும்.

எனினும் இறுதியாக அரசுகள் சித்திரவதையை இயன்றவரை குறைக்க நடவடிக்கை எடுக்குமே தவிர அரசாங்கங்கள் அதை நிறுத்த ஒரு போதும் முயற்சி எடுப்பதில்லை. ஏஎனனில் நான் இக்கட்டுரையின் முதற்பாகத்தில் குறிப்பிட்டது போல மக்களை மௌனமாக்க சித்திரவதையை விட வேறு ஓர் அரிய உபகரணம் அரசுகளிற்கு கிடைப்பதில்லை.





[1] அரசின் மூன்று துறைகளான நிர்வாகத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை குறிப்பாக நிர்வாகத்துறையின் ஸ்தாபிப்புக்களான பொலிசு உட்பட்ட ஆயுதப்படைகள்
[2] SC App No 337/2003 17.05.2004
[3] உலக மருத்துவ ஒன்றியத்தின் 1975ம் ஆண்டின் டோக்கியோ பிரகடனத்தின் பிரித்தெடுப்பு.
[4] The Rehabilitation and Research Centre For Torture Victims in Denmark… RCT
[5] யோகலிங்கம் விஜிதா எதிர் திரு.விஜயசேகரவும் ஏனையோரும் S.C App.No.186/2001, 23-08-2002.
[6] நீதிக்கு புறம்பான சுருக்கமுறை அல்லது தன் விருப்பப்படியான நிறைவேற்றங்கள், விஷேட தொடர்பாளரின் அறிக்கை, பிலிக் அல்ஸ்டன் பிற்சேர்க்கை.
[7] குணரத்தின எதிர் மக்கள் வங்கி [1986] 1 SLR 338. இவ்வழக்கும் பெருவாரியாக தொழிற்சங்க உரிமை எனும் கோட்பாட்டை உள்வாங்கியே வழக்கெழு காரணத்தை வெளிப்படுத்தியது அடிப்படை உரிமை மீறல் தளத்தை அல்ல.
[8] 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 126.
[9] பாரத தேசத்தில் இந்திரா காந்தி எதிர் இந்தியா  எனும் வழக்கில் சட்டவாக்கத்துறையின் செயற்பாடுகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக வழக்கெழு காரணத்தின் பெயரில் வழக்கு விசாரிக்ப்பட்டது.
[10] குமாரசிங்க எதிர் சட்டமா அதிபர் SC Application 54/82
[11] வழக்கின் தொடுநர் தரப்பில் பிரசன்னமான வழக்கறிஞர் வெலிமட வின் நேரடி கலந்துரையாடலின் பெயரில் கிடைக்கப் பெற்ற சமர்ப்பணத்திலிருந்து
[12] சமன் எதிர் லீலாதாச (1989) 1 SLR pg.1 at p.35
[13] தட்சணாமூர்த்தி எதிர் சட்டமா அதிபர் FR S/C 126 at 142.
[14] ஜெயசென எதிர் ராமனாயக்கா மற்றும் ஏனையோர் (உ.நீ.ம 17/94)
[15] இலங்கை தண்டனை சட்டக்கோவை பிரிவுகள் 310 தொடக்கம் 329 வரை.
[16] இலங்கை தண்டனை சட்டக்கோவை பிரிவுகள் 340 தொடக்கம் 249 வரை.
[17] இலங்கை தண்டனை சட்டக்கோவை பிரிவுகள் 331 தொடக்கம் 336 வரை, பிரிவுகள் 377 மற்றும் 339.
[18] National Human Rights Commission Act No 21 of 1996
[19] நல்லரத்தினம் சிங்கராசா எதிர் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு CCPR/C/81/D/1033/2001.adoption of views, 21.7.04
[20] 1984 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் இல 39,46 தீர்மானங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்டதும் 1987 யூன் 26ஆம் திகதியிலிருந்து வலுவுள்ளதுமான உடன்படிக்கை
[21] இல 22 இன் 1994.
[22] இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் எதிர் மதிலியாவத்த ஜயலத்கே மே.நீ.வழக்கு இல HC 9775/99
[23] பிரிவு 4
[24] பிரிவு 2 இன் உப பிரிவு 4
[25] பிரிவு 2 இன் உப பிரிவு 2 இன் பிரிவுகள் (அ), (ஆ), (இ)
[26] பிரிவு 3
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது