Social Icons

Pages

Sunday 29 March 2015

நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court)




ஓர் ஜனநாயக நாட்டின் மூன்று முக்கிய துறைகளில் நீதியை நிர்வகித்தல் (Administration of Justice) என்பது நீதித்துறையின் கடமையாகும். அத்துடன் அத்துறை ஏனைய இரு அதிகாரம் மிக்க துறைகளான நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை என்பவற்றை மேற்பார்வை செய்து ஒழுங்கமைக்கும் அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இத்தகைய அரும் பணிகளை ஆற்றவேண்டிய நீதித்துறையின் பணிகளில் எவராவது எவ்வகையிலாவது தடங்கல்களை ஏற்படுத்தின் அது குறித்து தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வவசியம் தனி மனித நலனுக்காக அன்றி ஓர் நாகரீகமடைந்த முழு சமூகத்தின் தொடர்ச்சியான இருப்பின் பொருட்டு நியாயப்படுத்தப்படக் கூடியதாக அமைந்திருக்கும்.

நீதிமன்ற அவமதிப்பு என்பது நீதிமன்றத்தின் அதிகாரத்தை உதாசீனப்படுத்தல் அல்லது நீதியை அமுலாக்கலின் போது அவமரியாதை செய்தல் என்பவற்றுடன் வழக்கின் நடைமுறைகளின் போது வழக்காளிக்கோ, சாட்சிகளிற்கோ அல்லது வழக்கின் மீது எந்த வகையிலாவது தொடர்புடைய தரப்பினர்க்கோ குறிப்பிட்ட வழக்கின் பொருட்டு தடைகளை ஏற்படுத்துவதைக் குறிக்கும்.

OXFORD Dictionary of Law இன் ஆறாவது பதிப்பு பின்வருமாறு நீதிமன்ற அவமதிப்பை விளக்குகின்றது.

Disobedience to a court order or process such as breach of an injunction, in the defendant being imprisoned. Conduct that obstructs or tends to obstruct the proper administration of justice.

நீதிமன்ற அவமதிப்பு எனும் தத்துவார்த்தம்  ஆங்கில நீதிமன்ற நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் உருவாகிய ஒன்றாகும். நியதிச்சட்டங்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாகாத அந்த காலப்பகுதியில் இங்கிலாந்து நீதிமன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்துவோரை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காக இக்கோட்பாட்டை செயற்படுத்தின.

பதினேழாம் நுாற்றாண்டு காலப்பகுதியில் வளர்ச்சியடைந்த ஒப்புரவு நீதிமன்றங்கள் (Court of chancery) நீதிமன்ற அவமதிப்பை குடியியல் மற்றும் குற்றவியல் அவமதிப்புக்கள் என வகுப்பாக்கம் செய்து சிறைத்தண்டனை விதித்து வந்தன. (The Champion and the St.James evening post -1742). பின்னர் ஐக்கிய இராட்சியம் Contempt of Court Act 1981 ஊடாக நியதிச்சட்ட குற்றமாக நீதிமன்ற அவமதிப்பை அமைத்தது. மேலதிகமாக பிரித்தானியாவின் புகழ் பூத்த நீதிபதி டிப்லொக் பிரபு AG V Times Newspapers (1974) எனும் வழக்கில் எவ்வெவ் வழிகளில் நீதிமன்ற அவமதிப்பு நிகழும் என்ற பட்டியலை தனது தீர்ப்பில் வழங்கினார்.

இலங்கையின் நீதித்துறை வரலாற்றை பொறுத்த மட்டில் இன்றைய நீதியியல் முறைமைகள் பிரித்தானிய ஆட்சியின் போது 1801 ஆம் ஆண்டு மட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட உயர்நீதிமன்ற கட்டமைப்பை கொண்டு செயல்படுகின்றமை ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. இதன் பின்னர் உருவாக்கப்பட்ட 1833 ஆம் ஆண்டின் பட்டயத்திலும் நீதிமன்ற அவமதிப்பு சார்பாக நீதிமன்றங்கட்கு அதிகாரங்கள் அளிக்கப்படாத போதிலும் பிரித்தானிய நீதிமன்றத்தின் அதிகார நடவடிக்கைகளை பின்பற்றி இலங்கை நீதிமன்றங்களும் நீதிமன்ற அவமதிப்பை தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களாக வகையிட தொடங்கின. அவையாவன

01.நீதிபதியை நிந்தனை செய்தல்
02.நீதிமன்ற நடவடிக்கைகட்கு இடையூறு செய்தல்
03.நீதிமன்ற கட்டளைகட்கு மதிப்பளிக்காமை
04.நீதிமன்ற கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலர்கட்கு இடையூறு செய்தல்.

Shaw நீதிபதி இலங்கை வழக்கான அரசன் எதிர் சமரசீர (King V Samarawira) 1917 19 NLR 433 இல் இங்கிலாந்து நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்ற நீதிமன்ற அவமதிப்புக்களை விசாரிக்கின்ற அதிகாரம் ஆனது இலங்கை நீதிமன்றுக்கு உண்டு என தீர்ப்பளித்தார். குறிப்பாக மேல்நிலை நீதிமன்றங்கள் Facie Curiae மற்றும் exfacie Curiae ஆகிய நிலைகளில் அதிகாரத்தை கொண்டிருக்கும் எனவும் கீழ்நிலை நீதிமன்றங்கள் Facie Curiae நிலைகட்கு மட்டும் தமது அதிகாரத்தை இவ்விடத்தில் கொண்டிருக்கும் எனவும் விளக்குகின்றது.


மிக அண்மிய வழக்கான Somindra V Surasena (2000) எனும் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பின் வகைகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. இவை குடியியல் (Civil) மற்றும் குற்றவியல் (Criminal) எனும் வகுதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும்.

குடியியல் அவமதிப்பு என்பது நீதிமன்ற கட்டளைகளை உதாசீனம் செய்தல் மற்றும் நீதிமன்றிற்கு அளித்த உத்தரவாதங்களை மீறல் என்பன தொடர்பிலானதாகும். குற்றவியல் அவமதிப்பு என்பது நேரடியாக நீதிமன்ற நடவடிக்கைகட்கு ஊறு விளைவித்தல், பிரசுரங்களை வெளியிடல் என்பனவற்றை உள்ளடக்குவதாகும்.


நீதிமன்ற அவமதிப்பின் வகைகள் (வரிப்படம்)





இவற்றோடு இன்று “கருத்து வெளியிடும் சுகந்திரம்” (freedom of Expression)  என்பது வளர்ந்து வரும் ஓர் எண்ணக்கருவாகும். இது எமது இலங்கை அரசியல் அமைப்பிலும் ஓர் அடிப்படை உரிமையாக உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் சர்வதேச ரீதியிலும் பல மனித உரிமை உபகரணங்களில் ஓர் பாகமாக உள்ளது. இருப்பினும் மனித உரிமைகளிற்கான ஐரோப்பிய நீதிமன்றம் The Sunday Times V United Kingdom எனும் வழக்கில் பின்வருமாறு நீதிமன்ற அவமதிப்பை விளக்கியது. ”சர்வதேச மனித உரிமைகளை நிலை நிறுத்தும் பொருட்டு கருத்து வெளியிடும் சுகந்திரம் மற்றும் கொளரவமான நீதித்துறை என்பன பரிசீலிக்கப்பட வேண்டும். அப்பரிசீலிப்பானது எந்த எல்லையுடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதன் அளவுகோலால் கணிக்கப்படும்.




இலங்கையின் சட்ட ஏற்பாடுகள்

அரசியல் அமைப்பு (Constitution of Sri Lanka)
தற்கால இலங்கையின் மீயுயர் சட்டமான 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 105(3) ஆனது, இலங்கை உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு தாம் தகுந்ததென காணும் தண்டனையை நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வழங்க தத்துவார்த்தம் வழங்கியிருப்பதோடு இது King V Kannipakeda என்ற வழக்கு தீர்ப்பின் வாயிலாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 இல் தீர்க்கப்பட்ட வழக்கான Mettkanada V Kashan Fernando எனும் வழக்கும் மேற்குறிப்பிட்ட இரு நீதிமன்றுகட்கும் தம்மை அவமதித்தற்காகவும் மற்றும் ஏனைய நீதிமன்ற அவமதிப்புகட்கும் தண்டனை வழங்க தத்துவார்தம் உடையவை என்பது தெளிவாகின்றது.

Judicature Act No 2 of 1978
இச்சட்டத்தின் பிரிவு 18 ஆனது  மேல் நீதிமன்றத்திற்கு சுருக்க முறையிலான விசாரணை மூலம் நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டனை வழங்க தத்துவார்த்தம் அளிப்பதுடன் அதன் பிரிவுகளான 55(1) இன் படி சட்டத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட்ட அவமதிப்பிற்கோ இல்லது தமக்கு நேரடியாக இடம் அவமானப்படுத்தலுக்கோ உட்படின் மாவட்ட நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் ஆரம்பநீதிமன்றம் என்பன அவமதிப்பிற்கான தண்டனையை வழங்க முடியும்.

நீதிமன்ற கட்டளைச் சட்டம் (Courts Ordinance No 1 of 1889)
பிரிவு 51 இனுாடாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டனையை வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. (A.G V M.demel Laxapathy)

தண்டனைச் சட்டக்கோவை (Penal Code Ordinance No 2 of 1883)
இதன் பிரிவு 4 ஆனது இச்சட்டம் எந்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியும் நீதிமன்ற அவமதிப்பிற்கான தண்டனையை வழங்குவதை தடை செய்யவில்லை என கூறுகின்றது.
இவற்றோடு குடியியல் நடைமுறைக்கோவை (Civil Procedure Code) இன் பிரிவு 800 ஆனது நீதிமன்ற அவமதிப்பு எந்த நடைமுறைகளின் கீழ் விசாரிக்கப்பட்டு தண்டனையளிக்கப்பட வேண்டும் என கூறுகின்றது.

நிரூபிக்கும் தராதரம் என்பது (Burden of proof) எந்த ஒரு வழக்கீடு செயற்பாட்டிலும் முக்கியத்துவம் பெற்றதாகும். அவ்வகையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குற்றவியல் தளவெல்லைகளை சார்ந்திருப்பதால் அது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டிய தராதரத்தை கொண்டு காணப்படுகின்றது. (Beyond Reasonable doubt) இக்கோட்பாட்டை டெனிங் பிரபு Re Bramblewale Ltd எனும் வழக்கில் பின்வருமாறு கூறுகிறார்.
அல்லது நீதியை அமுலாக்கலின் போது அவமரியாதை செய்தல் என்பவற்றுடன் வழக்கின் நடைமுறைகளின் போது வழக்காளிக்கோ, சாட்சிகளிற்கோ அல்லது வழக்கின் மீது எந்த வகையிலாவது தொடர்புடைய தரப்பினர்க்கோ குறிப்பிட்ட வழக்கின் பொருட்டு தடைகளை ஏற்படுத்துவதைக் குறிக்கும்.

“A contempt of court is an offence of a criminal character. A man may be sent to prison for it. It must be satisfactorily proved. To use the time honored phrase, it must he proved beyond reasonable doubt”

இருப்பினும் Cross V Daberera மற்றும் Kumarihamy V Wimaladasa ஆகிய இருவழக்குகளிலும் நீதிமன்ற கட்டளைகட்கு கீழ்ப்படியாமை நீதிமன்ற அவமதிப்பாக காட்டப்பட்டுள்ளதோடு சுய விருப்பிலான நிராகரிப்பு (willfull Disobedience) தேவை என சுட்டிக் காட்டப்படுகின்றது. வெறுமனே மன்றின் கட்டளைப்படி செயற்படாமை (mere inaction) ஆனது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படமுடியாது என Dayawathi and Peris V Dr.S.D.M.fernando எனும் வழக்குத்தீர்ப்பும் எடுத்துக்கூறுகின்றது.

இறுதியாக இலங்கையின் சட்டப்பரப்பினுள் நீதிமன்ற அவமதிப்பு எனும் விடயத்திற்கு நியதிச்சட்ட மூலம் ஒன்று இல்லாதவிடத்து இக்கோட்பாடு பல்வேறு துணைநிலை சட்டங்களின் துணையுடன் நீதிமன்றங்களால் சமநிலைப்படுத்தப்பட்டு  வரும் கருதுகோளாகும். இக்கருதுகோள் நீதிமன்றின் வழக்கு தீர்ப்புக்களில் பெரும்பான்மையாக தங்கியுள்ளதோடு, ஆங்கில நீதிமன்றுகளின் தீர்ப்புகளையும் தன்னளவில் ஏற்று வளர்ந்து வருவதாகும்.

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது